வியாழன், 8 ஏப்ரல், 2010

பிரேசிலை உலுக்கும் பெருமழையும் நிலச்சரிவும்

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது,இதனால் அங்குள்ள ஏரிகள் ,குளங்கள் அனைத்தும் பொங்கி வழிகின்றன. பலத்த மழையின் காரணமாக நிலச் சரிவும் ஏற்பட்டு ரோடுகள் அடித்துச் செல்லப்பட போக்குவரத்து வசதி துண்டிக்கப் பட்டது. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 180 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 10000 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.இந்த பெருமழையால் பிரேசிலின் கியோ டி ஜெனரியோ நகரம் தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. வெள்ளத்தால் 100 பேர் உயிரிழந்தனர்.50 ௦பேர் படுகாயமடைந்தனர்.ஏராளமானோர் காணாமல் போனார்கள்,காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பதைக் குறித்த விவரங்கள் தெரியவில்லை.மீட்ப்புப்பணியில் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். கடந்த ஜனவரியிலும் இதே போன்றதொரு வெள்ளப்பெருக்கு பிரேசிலில் ஏற்பட்டது,அப்போது பிரேசிலின் ரியோ, சாபாலோ, மினாஸ் ஜெராய்ஸ் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 76 பேர் பலியானார்கள் . கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ரியோவிலும் துறைமுக நகரமான சாந்தோசிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டு அங்கு பலர் இறந்தனர். பிரேசிலில் வரும் 2014 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டியும் 2016 இல் ஒலிம்பிக் போட்டியும் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பலத்த மழையும் ,நிலச்சரிவும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருப்பதோடு வரும் ஆண்டுகளில் அறிவிக்கப் பட்டபடி சர்வதேசப் போட்டிகள் அங்கு நடத்தப்படுமா எனும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.போட்டிகளை ரத்து செய்வதா அல்லது தாமதப்படுத்தலாமா எனும் ஆலோசனையில் பிரேசில் அரசு தற்போது மூழ்கியுள்ளது.

அணு ஆயுத குறைப்பு புதிய ஒப்பந்தம்

உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்களிடையே உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மேலும் 30 விழுக்காடு குறைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. செக்கோஸ்லாவிய நாட்டின் அதிபர் மாளிகையில் நடந்த முக்கிய சந்திப்பில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இரஷ்ய அதிபர் திமித்ரி மெத்விடேவும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிடமும் தற்போது கைவசமுள்ள 2,200 அணு ஆயுதங்களில் 30 விழுக்காட்டைக் குறைத்து 1,550 என்ற அளவிற்கு வரும் 2012ஆம் ஆண்டிற்குள் குறைத்துக்கொள்ள வழிவகுக்கிறது. 1991ஆம் ஆண்டு அணு ஆயுதங்கள் குறைப்பு உடன்படிக்கையில் (Strategic Arms Reduction Treaty - START) அமெரிக்காவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. அதன் பயனாக இரு நாடுகளும் பல ஆயிரக்கணக்கில் தங்களிடையே குவித்து வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்தன. அதில் பொருத்தப்பட்டிருந்த அணு வெடி பொருளை எடுத்து அணு மின் உலைகளில் பயன்படுத்த மற்ற நாடுகளுக்கு வழங்கின. அந்த 20 ஆண்டுக்கால ஒப்பந்தம் கடந்த டிசம்பரில் நிறைவு பெற்றதையடுத்து, அதற்கு மாற்றாக, அணு ஆயுதங்கள் குறைப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றை உருவாக்கி அதில் தற்போது இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அணு ஆயுதங்கள், நீண்ட தூர ஏவுகணைகள் ஆகியன செயலிழக்கச் செய்யப்படும். ஏவுகணை தடுப்பு ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தின் கீழுள்ள அணு ஆயுத ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்திற்கு உட்பட்டதல்ல என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் பிறகு பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, “ஒரு நீண்ட பயணத்திற்கான முதல் படி இது” என்று கூறியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்றம் தேர்தல்முறையை மாற்றுமா?

பொதுத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வியே இப்போது பரவலாக எழுந்துள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 150 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும். தற்போதைய நிலையில் 140 இடங்கள் கிடைப்பது உறுதி என்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறியிருக்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும. அதேவேளை, களனிப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் 145 இடங்கள் வரையே ஆளும்கட்சிக்கு கிடைக்கலாம் என்று கூறியுள்ளது. அதாவது ஆளும்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கப்போவதில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட எதையும் செய்கின்ற அதிகாரம் ஆளும்கட்சிக்கு வந்து விடும். அது கடைக்காத பட்சத்தில் அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் எதிர்க்கட்சி மீது பழியைப் போட்டுக்கொண்டு அரசாங்கம் செயற்படப்போவது உறுதி. அதேவேளை ஆளும்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி ஒரு காரியம் மட்டும் விரைவில் நடைபெறப்போகிறது. அது தற்போதைய தேர்தல் முறை மாற்றியமைப்பதாகும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிருப்திகள் எழுந்துள்ளன. குறிப்பாக விருப்பு வாக்கு முறையினால் பிரதான கட்சிகள் உள்முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. அதுமட்டுமன்றி இன்றைய நிலையில் தொகுதி வாரியான தேர்தல் முறை நடைமுறையில் இருக்குமேயானால் 1977ம் ஆணடு பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரகட்சிக்கு ஏற்பட்டது போன்ற நிலைக்கு ஐதேகவை தள்ளிவிடலாம் என்று ஆளும்கட்சி நினைக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் காரணமாகவே சிறுபான்மையினர் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெறுவதாகவும் ஒரு கருத்து உள்ளது. இதுபோன்ற பல காரணங்களுக்காக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை முற்றாக இல்லாதொழித்து மீளவும் தொகுதிவாரியான தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் யோசிக்கிறது. தொகுதிவாரித் தேர்தல் முறையின் படி தற்போது 168 தேர்தல் தொகுதிகளே உள்ளன. ஆனால் நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே எஞ்சியோரை எப்படித் தெரிவு செய்வது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஏற்கனவே பலரும் பல்வேறு ஆலோசனைகளைக் கூறியிருந்தனர். இரட்டைஅங்கத்தவர் தொகுதி முறை மூலமும் எஞ்சிய உறுப்பினர்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழும் தெரிவு செய்யலாம் என்பது இந்த ஆலோசனைகளில் முக்கியமானது. அதாவது முற்றுமுழுதாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இருந்து இலங்கையினால் விலகிக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை மாற்றியமைக்கப்பட்டு தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும் போது நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பலம் குறைந்து போகும் வாய்ப்புகள் உள்ளன. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே மூதூர், பொத்துவில், நுவரெலியா போன்ற தொகுதிகள் பலவும் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தமுறை மீளவும் ஏற்படுத்தப்படுமா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும். முன்னரைப் போலன்றி இப்போது வேறும்பல தொகுதிகளில் சிறுபான்மையினரின் பலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கும். இவையெல்லாம் தற்போதைய நிலையில் கருத்தில் கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை. இப்போதைக்கு ஆளும்கட்சிக்கு இருக்கின்ற ஒரே பிரச்சினை விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை- குறிப்பாக விருப்புவாக்கு முறையை ஒழிப்பது தான். அது ஆளும்கட்சிக்கு தீராத தலைவலியாக உருவெடுத்துள்ளது. விருப்பு வாக்குகளுக்காக அதன் முக்கிய தலைவர்களே மோதிக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் கட்சித் தலைமை தள்ளாடுகிறது. இதுபோல ஜதேக போன்ற ஏனைய கட்சிகளுக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஏன் யாழ்ப்பாணத்தில் கூட ஆளும்கட்சிக் கூட்டணிக்குள் இந்தப் பிரச்சினை மோதல்களாக வெடித்திருக்கிறது. அரசாங்கம் தனது பக்கத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறதே தவிர- சிறுபான்மையின மக்களின் நலன்களில் கவனம் செலுத்துமா என்பது சந்தேகமே. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு எந்தவொரு எம்.பியாவது மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் இல்லை என்பதே. அதாவது மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்படும் எம்.பிக்கள் தமது பொறுப்புகளை தட்டிக் கழிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துள்ளது. தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையில் தெரிவாகியிருந்தால் அந்தத் தொகுதி மக்கள் அந்தத் தொகுதி எம்.பிக்களிடம் தமது பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு காணமுடியும். ஆனால் விருப்புவாக்கு முறை அதற்கான வாய்ப்பை இல்லாது செய்துள்ளது. இன்னொரு பக்கத்தில் இப்போது வடக்கு-கிழக்கில் எங்கிருந்தோ எல்லாம் வேட்பாளர்கள் வந்து போட்டியிடுகிறார்கள். பெயர் ,ஊர் தெரியாதவர்கள் கூட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் போட்டியிடுகிறார்கள். ஏன் பிரதேசசபைத் தேர்தல்களில் இப்படியானவர்கள் தெரிவாகிக் கூட உள்ளனர். இதுபோன்ற நிலை தொடராமல் செய்வதற்கு மீளவும் தொகுதிவாரியான தேர்தல் முறை அவசியம் என்ற கருத்தும் உள்ளது. அடுத்த நாடாளுமன்றம் புதிய பல விடயங்களை சந்திக்கப் போகிறது. அதில் நிச்சயம் நடந்தேறப் போகும் நிகழ்வு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கேற்ப விருப்பு வாக்குமுறைமை ஒழிக்கப்படும். இந்தத் தெரிவுமுறையை பிரதான கட்சிகள் வெறுப்பதனால் நிச்சயம் இந்த மாற்றம் நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த மாற்றங்களின் போது சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தேகமே.