ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

எரித்திரியா எமக்கு கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளது

எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. எரித்திரியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நாம் அங்கு தூதரகத்தை அமைப்பதற்கு முற்பட்டிருந்தோம். ஆனால் எரித்திரியா தற்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவது மிகவும் பின்னடைவான விளைவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றது. எரித்திரியா தொடர்பில் நாம் சில கசப்பான அனுபவங்களை பெற்றுள்ளோம். எரித்திரியாவில் விடுதலைப் புலிகள் பலமான வலையமைப்பை கொண்டுள்ளதை நாம் அறிவோம். ஆனால் ஊடகங்கள் எமது நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் எம்மால் எரித்திரியாவின் ஆதரவை பெறமுடியவில்லை. தற்போது நாம் மீண்டும் அவர்களுடன் உறவை ஏற்படுத்த முயன்று வருகின்றோம். பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பல்வேறு வகையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அது அந்த நாடுகளுக்கு தெரியாது. நாம் தான் அதனை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.சில நாடுகளின் பெயர்களை குறிப்பிடுவது பயனற்றது, ஏனெனில் அவர்கள் அதனை விரும்புவதில்லை. சில நாடுகள் தமது நாடுகளில் விடுதலைப் புலிகள் செயற்படுகின்றனர் என தெரிவிப்பதை விரும்புவதில்லை. இது தொடர்பில் எமக்கு உள்ள சிறந்த உதாரணம் எரித்திரியாவாகும். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு மேற்குலக நாடுகள் எம்முடன் ஒத்துழைப்பதில்லை. அதற்கு காரணம் அங்குள்ள மிகப்பெரும் புலம்பெயர் தமிழ் சமூகமாகும். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அழுத்தங்களை மீறி எம்மால் மேற்குலக நாடுகளை (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை) எமது பக்கம் திரும்ப முடியவில்லை. இந்த நாடுகளின் உதவிகள் இன்றி விடுதலைப் புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது என்பது கடினமானது. இராணுவ மோதல்கள் மூலம் பெறமுடியாததை, சில நாடுகளின் உதவிகளுடன் அடைந்துவிட விடுதலைப் புலிகள் முயன்று வருகின்றனர். எனினும் பெரும்பாலான தமிழ் சமூகம் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் சிறீலங்காவுக்கு மீண்டும் வந்து வாழ விரும்புகின்றனர். குமரன் பத்மநாதனை நாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை. அவர் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பயனுள்ளவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு .....

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரைப் பதவியில் அமர்த்துவதற்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை அள்ளி வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்த நாடுகள் மறுத்துள்ள போதும்- அதை இலங்கை அரசாங்கம் பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. மேற்குலகின் செல்லப்பிள்ளையாக வளரவிருந்த மற்றொரு ஜியா- உல்- ஹக் தான், சரத் பொன்சேகா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரையே தூக்கி உள்ளே போட்டிருக்கிறது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம். ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து கண்டனம் தெரிவிக்க முடியாதபடி இருக்கிறது மேற்குலகம். சரத் பொன்சேகா அமெரிக்க வதிவிட உரிமை பெற்ற ஒருவர். ஆனாலும் அவரை விடுதலை செய் என்று கோர முடியாமல் தவிக்கிறது அமெரிக்கா. ஐ.நாவும் சரி- வேறெந்த நாடும் சரி அவரை விடுவிக்குமாறு கோரவில்லை. அப்படிக் கோர முடியாத வகையில்- அவரைக் கைது செய்திருக்கிறது அரசாங்கம். இராணுவத் தளபதியாக இருந்த போது அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சதி செய்தார்- ஊழல்களில் ஈடுபட்டார் என்று அவர் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியதில்லை. இராணுவத்தில் இருந்தபோது செய்த தவறுகள் என்பதால்- அவர்களே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. இதனால் வெளிநாடுகள் வாயைத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்து- குட்டையக் குழப்பி வந்த சர்வதேசத்தின் முகத்தில் கரியைப் பூசுகின்ற வகையிலான இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதோ- சரத் பொன்சேகா தோல்வியுற்றதோ பெரிய விடயமல்ல. ஆனால் தமிழ்மக்களில் பெரும்பான்மையினர் தமக்கும் இந்தத் தேர்தலுக்கும் தொடர்பே இல்லை என்ற செய்தியைக் கூறியது தான் முக்கியமானது. இது சர்வதேசத்துக்குக் கொடுக்கப்பட்ட அடி. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலகம் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை விரும்பியது. மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றால் தமது கைக்குள் நிற்கமாட்டார் தமது சொற்படி ஆடமாட்டார் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதற்கு பெரும் முயற்சிளை எடுத்தது மேற்குலகம். ஆனால் விடுதலைப் புலிகள் அதை விரும்பவில்லை. ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் சமாதானம்... சமாதானம்...என்று பேசிப்பேசிக் காலத்தைக் கடத்தியே போராட்டத்தை அழித்து விடுவார் என்பது அவர்களின் கணிப்பு. எனவே சண்டைக்காரனான மகிந்தவை ஆட்சியில் ஏற்றி தமது படைபலத்தின் மூலம் மேலாதிக்கத்தை அடைந்து விடலாம் என்று கணக்குப் போட்டது விடுதலைப் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக் வேண்டும் என்று வலியுறுத்தியதை மேற்குலகத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் ரணில் விக்கிரமசிங்க குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போது மேற்குலம், தமிழ்மக்களின் வாக்குகளைக் கணக்குப் போட்டுப் பார்ததது. இவர்கள் அத்தனை பேரும் வாக்களித்திருந்தால் நிச்சயம் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார் என்று கருதியது. அந்த வாய்ப்பை இழக்க செய்து-தேர்தல் முடிவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட புலிகள் இயக்கத்தை தண்டிக்க முடிவு செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதித்தது. இந்தத் தடையின் விளைவாகப் புலிகள் இயக்கம் சமாதான முயற்சிகளில் இருந்து புறம் தள்ளப்பட்டு- அதில் நம்பிக்கையிழந்து போகும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு வகையில் நான்காவது கட்ட ஈழப்போருக்கு புலிகளை உந்தித் தள்ளியதற்கு காரணமாக இருந்தது மேற்குலகம் தான். புலிகள் போரின் மீது விருப்புக் கொண்டிருந்தார்களா என்பதை விட சாதானத்தின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழப்பதற்கு காரணமாக இருந்தது மேற்குலகமே. இன்று அதே மேற்குலகம் விரும்பிய சரத் பொன்சேகாவை மகிந்த ராஜபக்ஸ தோற்கடித்திருக்கிறார். அதுவும் முன்னரைப் போன்று இல்லாமல் 18 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தோல்வி. இதிலிருந்து மேற்குலகுக்கு இரண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது- தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்ற எந்த வேட்பாளரையும் சிங்கள மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பது. அடுத்தது- கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல என்பது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருந்தால் கூட ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இந்தமுறை தமிழ்மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்குப் புலிகள் இருக்கவில்லை. ஆனாலும் பெருமளவிலான தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பைப் புறக்கணித்தார்கள். ஏனென்றால் இது சிங்களதேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்தற்கான தேர்தலே என்ற கருத்தில் இருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை. இந்தக் கருத்து இப்போதைய விட, 2005 இல் மிகவும் வலுவானதாக இருந்ததை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. எனவே தமிழ் மக்களிடம் புலிகள் வாக்களிப்பைப் புறக்கணக்குமாறு கோரா-திருந்தாலும் கூட- ரணிலுக்கு அவர்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இது மேற்குலகுக்கு இப்போது ஓரளவுக்கேனும் புரிந்திருக்கும். அதாவது 2005 ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணித்த விவகாரத்துக்கு புலிகள் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல. அடுத்து இந்தமுறை சரத் பொன்சேகாவின் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற- அவர்களுடன் கூட்டு வைக்கத் தயாராக இருக்கின்ற-எவரையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு சிங்கள மக்கள் தயாராக இல்லை. இது இப்போது தெளிவாகப் புரிந்திருக்கிறது. இதுபோலவே கடந்த முறை ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கப் போவதாக சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருந்தால் நிச்சயம் சிங்களப் பேரினவாதம் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கும். அது ரணிலுக்குத் தென்னிலங்கையில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து விட்;டிருக்கும். வடக்கு,கிழக்கில் ரணிலுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப் போவதாக உணர்ந்திருந்தால் சிங்கள மக்கள் மகிந்தவின் பக்கம் முற்றாகச் சாய்ந்திருப்பர். இந்தக் கட்டத்தில் ரணிலின் வெற்றி ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது. தாம் விரும்பியது போன்று ரணில் ஜனாதிபதியாகவில்லையே என்ற ஆத்திரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அப்போது எடுத்த தான் தோன்றித்தனமான முடிவு தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டிருப்பதை இப்போதாவது உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ்மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை.

அணு ஆயுத பாதுகாப்பு கூட்டம் ,

அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களின் கூட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட்டி இருக்கிறார். இது ஏப்ரல் 12-ந் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அணு ஆயுத கடத்தலை தடுப்பது போன்றவை பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். `அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அணு ஆயுத பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் அணு ஆயுதங்கள், தீவிரவாதிகளின் கையில் சிக்காமல் தவிர்க்க முடியும்' என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

சிலியில் பயங்கர பூகம்பம்!

சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 85 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலை (சுனாமி) 9 அடி உயரத்திற்குக் கிளம்பி சிலி நாட்டைத் தாக்கியதாக பசுபிக் பெருங்கடலிலுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. ஆனால், ஆழிப்பேரலை 40 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தாக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நேர் கிழக்காக சிலியின் கடலோரம் அமைந்துள்ள மாலே எனும் சிறு நகரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதோ அல்லது 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலாலும் பேரழிவு ஏற்பட்டுள்ளதென அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியிருந்தது. அதைவிட ஒரே ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தோனிஷிய பூகம்பத்தில் மூன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டில் வீடுகள் தரைமட்டம்: பூகம்பசாவு 300ஆக உயர்வு தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று அதிகாலை 3.34 மணியளவில் திடீர் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்த இந்த பயங்கர பூகம்பத்தால் சிலியில் முக்கிய நகரமான கான்செப்சியன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. தலைநகரம் சான்டியா கோவிலும் பூகம்பம் தாக்கியது. இதில் கான்செப்சியன் நகரம் மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. அங்கு பெரும்பாலான கட்டிடங்கள், வீடுகள், இடிந்து விழுந்தன. இந்த நகரை சுற்றி பல சிறிய நகரங்கள் உள்ளன. அங்கும் அதோ போன்ற பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை 3.34 மணி என்பதால் மக்கள் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர். பூகம் பம் ஏற்பட்டதை உணர்ந்து தப்பி ஓட செல்ல முடியாமல் ஏராளமானோர் இடி பாட்டுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களில் 300 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாட்டுக்குள் இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி கிடக்கின்றனர். அவர்களிலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் மையம் கடலை ஒட்டிய பகுதியில் இருந்தது. எனவே சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராவீன்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்த தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதம் அடைந்தன. இங்கு உயிர் சேதம் எதுவும் இல்லை. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியதும் அமெரிக்காவின் ஹவாய் தீவு, ஜப்பான், நியூசிலாந்து, ரவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள 16 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். எச்சரிக்கை விடுத்தது போல பூகம்கம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை தாண்டி வந்தன. ஆனால் முன் எச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சில குட்டி தீவுகளிலும் சுனாமி ஏற்பட்டது. அங்கும் சேதம் எதுவும் இல்லை. நியூசிலாந்து, ஜப்பானில் எதிர்பார்த்தபடி சுனாமி தாக்கவில்லை. எனவே இங்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இங்கும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. சிலி நாட்டில் 15 பிராந்தியங்கள் உண்டு. இதில் 6 பிராந்தியங்கள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான பாலங்களும் இடிந்து விழுந்து விட்டன. இதனால் சிலி நாட்டில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் நாடே துண்டு துண்டாகி கிடக்கிறது. பூகம்பத்தில் 15 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலி மந்திரி மாரினோ பெர்னாண்டோ கூறினார். பல இடங்களில் மின் கோபுரங்கள், டெலிபோன் கோபுரங்கள் சரிந்து விழுந்து விட்டன. இதனால் தலைநகரம் சான்டியாகோ உள்பட நாட்டில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெலிபோன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. கான்செப்சியன் நகரில் பூகம்பம் ஏற்பட்டதும் 12 கட்டிடங்கள் தீப்பற்றி கொண்டது. அதில் 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்று. அங்கிருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நில நடுக்கத்துக்கு பிறகு அடுத்தடுத்து 51 தடவை அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 4.9ல் இருந்து 6.9 புள்ளிகள் வரை இருந்தது. 2-வது தடவை ஏற்பட்ட அதிர்வு 6.1 ரிக்டர் ஸ்கேல் அளவாக இருந்தது. அப்போது சிலியின் பக்கத்து நாடான அர்ஜென்டினாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்கு 2 பேர் பலியானார்கள்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் புயல்

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கடுமையான புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட முடியவில்லை.கடந்த வாரம் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மாடயிரா தீவில் வீசிய புயலுக்கு பலர் பலியாகினர். இந்த நிலையில் இங்கு தற்போதும் புயல் வீசுகிறது. மரங்கள் வேரோடு சாய்கிறது. அதில் ஒரு சிறுவன் உயிர் இழந்தான். ஸ்பெயினில் கனேரி தீவுகளில் புயல் தாக்கியது. அங்குள்ள லா பால்மா, குரேன் கனேரியா, டெனேரிப் ஆகிய இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன. இங்கும் வீடு இடிந்ததில் ஒரு பெண் பலியானார். பிரான்ஸ் நாட்டிலும் இப்புயலின் தாக்கம் இருந்தது. புயல் காரணமாக மழை பெய்தது. தெற்கு பைரென்ஸ் பகுதியில் மரம் விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார். மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்புக் கோரினார்

ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் சிறார்கள், அவர்களின் பெற்றோர்களுக்கே பல சந்தரப்பங்களில் தெரியாமல், ஆஸ்திரேலியா போன்ற அதன் முந்தைய காலனிகளுக்கு, அனுப்பப்பட்ட ஒரு திட்டத்துக்காக , பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் முழுமையாகவும், நிபந்தனையற்ற வகையிலும் மன்னிப்பு கோரியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த, குழந்தை குடி அகல்வோர் திட்டம் என்ற இந்த திட்டத்தின் அடிப்படையில், ஏழைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு மேலும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற உறுதிமொழியில் அனுப்பப்பட்டனர். ஆனால், இவ்வாறு அனுப்பப்பட்ட குழந்தைகளில் பலர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு உள்ளானார்கள். இந்தச் சம்பவம் மிகவும் அவமானகரமான விஷயம் என்று வர்ணித்த பிரவுன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறார்களது குழந்தைப்பருவம் அபகரிக்கப்பட்டது என்றார். இதே போன்ற ஒரு மன்னிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அவர்களும் நவம்பர் மாதத்தில் கோரினார்.