ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

சிலியில் பயங்கர பூகம்பம்!

சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 85 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலை (சுனாமி) 9 அடி உயரத்திற்குக் கிளம்பி சிலி நாட்டைத் தாக்கியதாக பசுபிக் பெருங்கடலிலுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. ஆனால், ஆழிப்பேரலை 40 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தாக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நேர் கிழக்காக சிலியின் கடலோரம் அமைந்துள்ள மாலே எனும் சிறு நகரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதோ அல்லது 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலாலும் பேரழிவு ஏற்பட்டுள்ளதென அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியிருந்தது. அதைவிட ஒரே ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தோனிஷிய பூகம்பத்தில் மூன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டில் வீடுகள் தரைமட்டம்: பூகம்பசாவு 300ஆக உயர்வு தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று அதிகாலை 3.34 மணியளவில் திடீர் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்த இந்த பயங்கர பூகம்பத்தால் சிலியில் முக்கிய நகரமான கான்செப்சியன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. தலைநகரம் சான்டியா கோவிலும் பூகம்பம் தாக்கியது. இதில் கான்செப்சியன் நகரம் மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. அங்கு பெரும்பாலான கட்டிடங்கள், வீடுகள், இடிந்து விழுந்தன. இந்த நகரை சுற்றி பல சிறிய நகரங்கள் உள்ளன. அங்கும் அதோ போன்ற பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை 3.34 மணி என்பதால் மக்கள் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர். பூகம் பம் ஏற்பட்டதை உணர்ந்து தப்பி ஓட செல்ல முடியாமல் ஏராளமானோர் இடி பாட்டுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களில் 300 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாட்டுக்குள் இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி கிடக்கின்றனர். அவர்களிலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் மையம் கடலை ஒட்டிய பகுதியில் இருந்தது. எனவே சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராவீன்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்த தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதம் அடைந்தன. இங்கு உயிர் சேதம் எதுவும் இல்லை. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியதும் அமெரிக்காவின் ஹவாய் தீவு, ஜப்பான், நியூசிலாந்து, ரவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள 16 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். எச்சரிக்கை விடுத்தது போல பூகம்கம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை தாண்டி வந்தன. ஆனால் முன் எச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சில குட்டி தீவுகளிலும் சுனாமி ஏற்பட்டது. அங்கும் சேதம் எதுவும் இல்லை. நியூசிலாந்து, ஜப்பானில் எதிர்பார்த்தபடி சுனாமி தாக்கவில்லை. எனவே இங்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இங்கும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. சிலி நாட்டில் 15 பிராந்தியங்கள் உண்டு. இதில் 6 பிராந்தியங்கள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான பாலங்களும் இடிந்து விழுந்து விட்டன. இதனால் சிலி நாட்டில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் நாடே துண்டு துண்டாகி கிடக்கிறது. பூகம்பத்தில் 15 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலி மந்திரி மாரினோ பெர்னாண்டோ கூறினார். பல இடங்களில் மின் கோபுரங்கள், டெலிபோன் கோபுரங்கள் சரிந்து விழுந்து விட்டன. இதனால் தலைநகரம் சான்டியாகோ உள்பட நாட்டில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெலிபோன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. கான்செப்சியன் நகரில் பூகம்பம் ஏற்பட்டதும் 12 கட்டிடங்கள் தீப்பற்றி கொண்டது. அதில் 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்று. அங்கிருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நில நடுக்கத்துக்கு பிறகு அடுத்தடுத்து 51 தடவை அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 4.9ல் இருந்து 6.9 புள்ளிகள் வரை இருந்தது. 2-வது தடவை ஏற்பட்ட அதிர்வு 6.1 ரிக்டர் ஸ்கேல் அளவாக இருந்தது. அப்போது சிலியின் பக்கத்து நாடான அர்ஜென்டினாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்கு 2 பேர் பலியானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக