புதன், 29 டிசம்பர், 2010

கப்பம் கோரி கடத்தப்பட்ட சாவகச்சேரி இளைஞன் சடலமாக மீட்பு

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை கனகம் புளியடியில் உள்ள வீட்டிற்குச் சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் சென்றவர்கள் செல்வத்தின் நண்பர்கள் என தாம் நம்பியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
 

குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நவாலி , சங்கானை, சித்தன்கேணி , தொட்டிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே,வழங்கி வருகின்றனர்

யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே, நேரடியாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். சர்ச்சைக்குரியவகையினில் நடந்து முடிந்த, தேசிய அனர்த்த தினத்தினில் முன்னதாக தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தினைப் பாட தாம் முடிவெடுத்திருந்ததாக தமிழ் அதிகாரியொருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சிங்கள மொழியில் ஆரம்பித்து அடுத்த வரிகளை தமிழென மாறிமாறி பாடவே மாணவர்கள் பயிற்றப்பட்டிருந்தனர். 

யாழ்.குடாநாட்டில் மீண்டும் குருதியுறையும் “பயப்பீதி’ நோய்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் குருதி உறைந்து போகும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. வன்னி யுத்தத்திற்குப் பின்னர் புறவய அமைதி காணப்பட்ட போதிலும் அப் புறவய அமைதி நீண்டகாலம் நிலைக்கவில்லை.மீண்டும் அளவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த ஆரம்பம் சங்கானையில் அந்தணச் சிவாச்சாரியரை பலியடுத்தும் அவரின் இரண்டு புதல்வர்களைக் காயப்படுத்தியும் தனது தாண்டவத்தின் ஒத்திகையைக் காட்டி நின்றது.

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்: இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய உறுப்பினரும் கைதியுமான சதீஸ் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதப்புர சிறைச்சாலைக்கு மாற்றியதை கண்டித்து வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியா இராணுவத்தினர் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மன்னார், வவுனியா, மதவாச்சி பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டவர்களை பார்வையிடச் சென்ற உறவினர்களையும் அனுமதிக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது

தமிழ் இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

பொறியிலாளரான வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 25 வயதுடைய அமரசிங்கம் சுஜன் என்பவராவர்.ஒரு வருடத்திற்கு முன்னர் புலமைபரிசில் பெற்று அங்கு சென்றிருந்த இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவு கொள்ளையர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பெற்றோர் தெரிவித்தார். மேற்படி இளைஞரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.