புதன், 29 டிசம்பர், 2010

யாழ்.குடாநாட்டில் மீண்டும் குருதியுறையும் “பயப்பீதி’ நோய்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் குருதி உறைந்து போகும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. வன்னி யுத்தத்திற்குப் பின்னர் புறவய அமைதி காணப்பட்ட போதிலும் அப் புறவய அமைதி நீண்டகாலம் நிலைக்கவில்லை.மீண்டும் அளவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த ஆரம்பம் சங்கானையில் அந்தணச் சிவாச்சாரியரை பலியடுத்தும் அவரின் இரண்டு புதல்வர்களைக் காயப்படுத்தியும் தனது தாண்டவத்தின் ஒத்திகையைக் காட்டி நின்றது.
‘களவு’ என்ற பெயர் சூட்டலோடு அரங்கேறி உள்ள இந்த நாடகம் எங்கு போய் முடியுமென்பது அந்த இறைவனுக்குத்தான் தெரியும். இருந்தும் சங்கானையில் அந்தணச்சிவாச் சாரியர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான போது, யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அவர்கள் அந்த சம்ப வத்திற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார்.சமாதானத்திற்கான விருதைப் பெற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு யாழ்ப்பாணம் கத்தோலிக்கப் பாதுகாவலன் மண்டபத்தில் பாராட்டு விழா நடந்த போதே அவர் இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார்.
யாழ்.கட்டளைத் தளபதியின் மன்னிப்புக் கோரல் யாழ்.குடாநாட்டு மக்களால் மிக உயரிய இடத்தில் வைத்து நோக்கப்பட்டது. அந்தணச்சிவாச்சாரியருக்கு ஏற்பட்ட அவலத் திற்காக யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மன்னிப்புக் கேட்டமை அவரின் பெருந்தன்மையையும், இந்து மதத்திற்கு அவர் வழங்கிய மதிப்பையும் வெளிப்படுத்தியதாகக் கருதி அவரின் மன்னிப்புப் பெறுமதியானதெனவும் மக்கள் பேசிக் கொண்டனர். அது மட்டுமன்றி இதுபோன்ற சம்பவங்களுக்கு யாழ்.குடாநாட்டில் இனிமேல் இடமில்லை என்ற நம்பிக்கையையும் மக்கள் கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த நம்பிக்கைகளை உடைத்து எறியும் வகையில் இரவு உரும்பிராயில் வைத்து வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஐயா! யாழ்ப்பாண மக்களின் குருதி உறைந்து போகிறது. மீண்டும் பயந்த வாழ்க்கை. என்னே! கொடுமை.களவுக்காக இப்படியான கொலையா? அல்லது கொலைக்காகக் களவு என்ற பெயர் சூட்டலா? யாரறிவார் அச்சோவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக