புதன், 29 டிசம்பர், 2010

கப்பம் கோரி கடத்தப்பட்ட சாவகச்சேரி இளைஞன் சடலமாக மீட்பு

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை கனகம் புளியடியில் உள்ள வீட்டிற்குச் சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் சென்றவர்கள் செல்வத்தின் நண்பர்கள் என தாம் நம்பியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
 

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவர் காணமல் போயிருந்தார். எனினும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பில் தனது மகன் மகேந்தரன் செல்லம் கடத்தப்பட்டு இருப்பதாகவும் 80 லட்சம் ரூபா கப்பம் வழங்கினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என கடத்தல்காரர்கள் கோரியதாக தந்தையார் தெரிவிக்கிறார். கப்பத்தை கொடுக்க மறுத்த குடும்பத்தினர் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர். ஆயினும்; அவரது சடலம்  இரவு மீசாலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தற்போது யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிய குளோபல் தமிழ்ச் செய்திகள் முற்பட்ட போதிலும் பொலிசார் தகவல்கள் தர மறுத்து விட்டனர். ஏற்கனவே கடந்த வருடம் சாவகச்சேரியில் கபிலநாத் என்ற பாடசாலைச் சிறுவன் கப்பம் கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக