வெள்ளி, 23 ஏப்ரல், 2010

எண்ணெய்த் தோண்டும் இயந்திரம் தீப்பிடித்ததால் பதற்றம்

மெக்சிகோ நாட்டின் ஹொரிசன் பகுதியிலுள்ள லூசியானா கடலில் எண்ணெய்த் தோண்டும் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டது. மேற்படி எண்ணெய்த் தோண்டும் பணியில் சுமார் 130 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு 8.51 மணியளவில் எண்ணெய்த் தோண்டும் 'ரிக்' இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 115 பேர் 17 ஹெலிகொப்டர்கள் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்களில் பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எரிந்து கொண்டிருந்த இயந்திரம் கடலில் விழுந்து மூழ்கியது. மீட்கப்பட்டவர்கள் போக மீதமிருந்த 11 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் படகுகள் மூலம் அவர்களித் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெண்கள் விடுதலை பெற்று வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம்


பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளிலில் இருந்தும் யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது சிறிதாக விடுதலை பெற்று வருவதாக Inter Press Service – IPS தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் பெண்களில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்களில் ஒன்றான இவ்வூடகத்தின் செய்தியாளர் Feizal Samath மனித உரிமைகளுக்கான இல்லத்தின் (Home for Human Rights) பணிப்பாளரான Shereen Xavier ஐச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவதற்காக நடாத்தப்பட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்திருந்தாலும், பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என காலாதி காலமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளைக் கடந்து யாழ்ப்பாணப் பெண்கள் தமக்கான புதிய வாய்ப்புக்களையும், வழிகளையும் தேடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என Shereen Xavier கூறியதாக இச்செய்திக் கட்டுரை தெரிவித்துள்ளது. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். இதனைவிட, தமக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்ட துன்பங்கள் காரணமாகவும் யாழ்ப்பாணப் பெண்கள் சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடந்து தமக்கான புதிய வாய்ப்புக்களைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்கியுள்ளனர். சிறிலங்காப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற வேளையில் யாழ் குடாநாட்டிலும், ஏனைய பிரசேங்களிலும் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டியிருந்ததாக Shereen Xavier தெரிவிக்கின்றார். ‘தமது கணவன்மார் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். போர் நடைபெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்ததால், குடும்பத்திற்குத் தேவையான வெளி வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் சூழல் காரணமாக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போர் இடம்பெற்ற காலங்களில் சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையினரால் ஆண்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டதால், பல ஆண்கள் விடுதலை இயங்கங்களோடு இணைந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இக்காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைக் கையாண்டார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் கீழ்வருமாறு விபரிக்கிறார்கள். ‘இவர்களிடம் இரட்டைச் சுமை. குடும்பத்தினை நிர்வகிப்பதோடு, குடும்பம் தொடர்பான தேவையான முடிவுகளைகளையும் எடுக்க வேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே பெரும்பாலான பெண்கள் காலம் காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள்.’ இந்நிலையில், யாழ்ப்பாணப் பெண்கள் புதிய வாய்ப்புக்களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தவர்களின் நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகிய விடயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுத்து வருகின்றார்கள். யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்து, இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், பெண்கள் கூட தம்முடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கே உரிய வெட்கம் போன்ற இயல்புகளைக் கொண்ட கிராமத்துப் பெண்களை இலட்சியத்துக்காக ஆயுதங்களை ஏந்த வைத்து ஜீன்சுடனும், சேர்ட்டுடனும் இயங்கும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டியிருந்தார்கள். ‘சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளைப் ஒதுக்கிவிட்டு பெண் விடுதலை என்ற இலட்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடாத்தப்படும் நாளுக்காக காத்திருந்தார்கள். இப்பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் வழங்கினார்கள்’ என Shereen Xavier கூறுகின்றார். கணவருடன் இருந்தாலும் பால் சமத்துவம் மற்றும் பெண் விடுதலை தொடர்பில் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் தங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கம் செயற்பட்ட வேளையில் அவரது பாரியாரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததாக Shereen Xavier குறிப்பிடுவதாக இவ்வூடகம் தெரிவித்துள்ளது

அகதியின் ஆதங்கம்!

நாங்கள்


அடிமைகள் அல்ல

அகதிகள் !

ஒன்று தெரியுமா ?

நேற்றைய அதிபதிகள்,

இங்கு அகதிகள்!

உங்கள் நாட்டிற்கு வந்தது

அதிகாரத்தில் பங்கு

கேட்டு வரவில்லை.

உங்கள் அன்பான உறவுகளை

கேட்டு வந்திருக்கிறோம்.இன்றைய நிலைக்கொண்டு ,

எங்க ஏழ்மையை கண்டு ,

எங்கள் வாழ்க்கையை

ஏலம் போடாதிர்கள்!

சோற்றுக்கு கையேந்தும்

பிறவிகள் அல்ல நாங்கள்,

எங்கள் சோகத்திருக்கு

வரலாறு உண்டு .

விடியலை நோக்கும்

விடுதலைக் கதிர்கள்.

எங்களுக்காக எங்களையே

இழப்பத்ருக்கு தயங்காதவர்கள்.

எங்கள் இறப்புக்கூட

மற்றவர்களை காயம்படுத்தக் கூடாது

என்ற எண்ணம் கொண்டவர்கள்.

எங்கள் எண்ணம் எதிரியை நோக்கி,

தவிர அப்பாவி மக்களை அல்ல.

நாங்கள் தீவிரவாதி இல்லை!

பழமைவாதி அல்ல!

சீர்திருத்தவாதியும் அல்ல!

விடியலை நோக்கி

மண்ணுக்காக போராடும்

விடுதலைவாதி!

புத்திஜீவி பிள்ளையான் தமிழ் மக்களுக்கான அறிவுரை ........!


வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. பிள்ளையானின் பிள்ளைத்தனமான கருத்தைக் கேட்கும் போது அவர் மீது அனுதாபம்தான் மேலிடுகின்றது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக அணிதிரண்டு, பிரதேச வாதம் பேசியபோது கிழக்கு மக்கள் உண்மையிலேயே கருணா மற்றும் பிள்ளையான் குழுவினர் தமக்கு நல்லதொரு வழிகாட்டுவார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஏனென்றால் கருணாவும் பிள்ளையானும் தமது பிரதேசத்திற்காக - பொதுமக்களுக்காகப் பாடுபடுவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் எண்ணினார்கள். அவர்கள் ஆரம்பத்தில் கூறியதுபோன்று, கிழக்கு மாகாணத்தை வளப்படுத்தத்தான் போகின்றார்கள் என உண்மையாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால் இந்த இரண்டுபேருமே, அரசாங்கத்தின் அடிவருடிகளாக மாறி, ஜனாதிபதிக்கும் அவரது குடும்ப அரசியல்வாதிகளுக்கும் வக்காளத்து வாங்கும் மலினமான அரசியல் நடத்துவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாநகரசபைக்கான தேர்தலிலும், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலிலும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றியும் அந்த மாகாணத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடுவது பற்றியும் இந்தப் புதிய தலைவர்கள் காட்டிய கற்பனைப் படங்களையும் கலர் கலரான எதிர்காலக் கனவுகளையும் எப்படியும் தாங்கள் அடைந்துவிடுவோம் என்ற நப்பாசை மக்கள் மத்தியில் ஏற்படத்தான் செய்தது. இதனால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மாநகரசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் நகர மேயர் சிவகீதா பிரபாகரன் பதவிக்கு வந்ததும், தேர்தல் காலத்தில் வாக்களித்ததைப் போன்று, நகரத்தை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டவில்லை. ஏதோ அரசாங்க ஊழியரைப்போன்று அரசாங்கம் சொல்லியதைச் செய்து கொண்டு. ஜனாதிபதிக்கு நல்லபிள்ளையாக வலம் வந்தார். திடீரென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவர் இணைந்தார். பின்னர் அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார். பிள்ளையானும் கருணாவும் சுயநல அரசியல் செயற்பாடு காரணமாக ஓரணியில் இருந்தும் வாக்குவாதப்பட்டார்கள். மோதிக்கொண்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை உலகத்தின் முதல்தரமான பயங்கரவாதம் என படம் காட்டி அதனை அனைத்துலக சக்திகளின் உதவியோடு ஒழித்துக் கட்டுவதில் வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தங்களில் யார் அதிக விசுவாசமிக்கவர் என்பதைக் காட்டுவதற்காகப் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்கள். இதனால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. மக்கள் என்ன நினைப்பார்கள் - என்ன நினைக்கின்றார்கள் என்பதை நாடிப்பிடித்துப் பார்த்துச் செயற்படத் தவறிப் போனார்கள். தாங்கள் சொல்வதே வேதவாக்கு. அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது - இருக்கக் கூடாது என்ற மனப்பாங்கில் செயற்பட்டதன் விளைவையே நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் அவர்கள் அறுவடையாகப் பெற்றுள்ளார்கள். கிழக்கு மாகாண மக்களின் தலைவர்களாகத் தோற்றம் பெற்ற கருணாவும், பிள்ளையானும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கத்தக்க வகையில் என்ன செய்திருக்கின்றார்கள், எந்த அளவிற்கு சேவையாற்றியிருக்கின்றார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. கிழக்கு மாகாண மக்களின் மனங்களை எந்த அளவிற்கு இவர்கள் வென்றிருக்கின்றார்கள் என்பதையும் இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன என்றாலும் மிகையாகாது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் இணைந்து முரண்படாத வகையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் எத்தனை பிரச்சினைகளை கருணாவினாலும், பிள்ளையானாலும் தீர்க்க முடிந்திருக்கின்றது என்பதை இவர்களால் கூறமுடியுமா? கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் அடையக் கூடிய இலக்குகளில் எத்தனையை பிள்ளையான் என்ற சந்திரகாந்தனால் அடைய முடிந்திருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? பொதுமக்கள் மத்தியில் இருந்து அவர்களுக்காகப் பாடுபட்டு. அவர்களில் ஒருவராக இருந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, சூழ்நிலை காரணமாக அரசியலில் புகுந்து மக்கள் மத்தியில் தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, எப்போதும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாகவும், மக்களின் நலன்களை இலக்கு வைத்துச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறுகின்றவர்கள் எவராக இருந்தாலும், மக்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்களாகத் திகழ முடியாது. இதுதான் நடைமுறை அரசியலாக இருந்து வருகின்றது. ஆயுதக்குழுக்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களாயினும் சரி, பாரம்பரிய அரசியல் கட்சிகளில் இருந்து அரசியல் நடத்தியவர்களாயினும் சரி அவர்கள் தமது தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருக்க முடியாமல் மக்களினால் தூக்கி எறியப்பட்ட எத்தனையோ உதாரணங்களைக் கடந்த கால அரசியல் வரலாற்றில் கண்கூடாகக் காண முடியும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது நேற்று தற்செயலாக அரசியலுக்கு வந்த பிள்ளையான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் இல்லையென்பதை பிள்ளையான் கருணா போன்றவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் எந்தவிதமான முரண்பாடுகளுமின்றி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் எமது முன்னோர்களான அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் விரும்பினார்கள். அதற்காகத் தம்மாலியன்ற விட்டுக்கொடுப்புகளைச் செய்து எத்தனையோ வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அவர்கள் தமது அரசியல் அனுபவத்தின் மூலம் சிங்களப் பேரினவாதத்தின் மோசமான வஞ்சகம் நிறைந்த பிற்போக்குத் தனமான அரசியல் செயற்பாடுகளையே கண்டார்களே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்றத்தை ஆக்கபூர்வமாகக் காணவே முடியவில்லை. தந்தை செல்வா முதல், அமரர் அமிர்தலிங்கத்திலிருந்து அனைத்து மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்களினதும் அரசியல் அனுபவம் இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் தான் ஆயுதப் போராட்ட வழிமூலம் இலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களை வழிக்குக் கொண்டு வரலாம் என தமிழ் இளைஞர்கள் ஆயுதக்குழுக்களில் இணைந்து செயற்பட்டார்கள். அவர்களின் அளப்பரிய தியாகங்களை கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்து சரணாகதி அரசியலில் இறங்கியிருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் அடையப்போவது எதுவுமே இல்லை என்பதை அவர்கள் இதுகால வரையில் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய வடக்கு கிழக்குத் தாயகப் பிரதேசத்தைப் படிப்படியாகக் கபளீகரம் செய்து, தமிழ் மக்களின் கலை கலாசாரம், பொருளாதார நிலைமைகளைத் தவிடு பொடியாக்கி அவர்களைக் கையேந்தி நிற்கின்ற ஒரு நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு, உறுதியாகவும் இராஜதந்திர ரீதியிலும் சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். இந்தப் பேரினவாத அரசியல் போக்கைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரிந்து கொள்ளாதவர்களைப் போல செயற்படுகின்ற கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தலைவர்களாக இருக்க முடியாது. இதனைத் தமது வாக்களிப்பின் மூலம் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். எதிர்ப்பு அரசியல், இணக்கப்பாட்டு அரசியல், சரணாகதி அரசியல் என்ற மூன்று விதமான அரசியல் சாணக்கியச் செயற்பாடுகளின் விளைவாக ஏற்பட்டு வந்துள்ள அரசியல் சூழ்நிலைகள் - அரசியல் சூறாவளிகளில் வடக்கு கிழக்கு மக்கள் சிக்கி இன்ப துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார்கள். இந்த அரசியல் போக்குகளில் அவர்கள் அளப்பரிய அனுபவங்களை அடைந்துள்ளார்கள். சொல்லொணாத துயரங்களையும், சோகங்களையும், அவமானங்களையும், அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சரியான தலைவர்களை அடையாளம் காண்பதில் அவர்கள் பல்வேறு சிரமங்களையும், சங்கடங்களையும் சந்தித்து வருகின்றார்கள். இதன் மூலம் பழுத்த அனுபவசாலிகளாக அவர்கள் மாறியிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் தமது முன்னால் வருகின்ற கோமாளிகள், வஞ்சகர்கள், தில்லுமுல்லு நிறைந்தவர்கள், நேர்மையானவர்கள், கபடம் நிறைந்தவர்கள், அமைதியான ஆதரவான தோற்றம் கொண்ட அரசியல் சாணக்கியம் நிறைந்த சண்டியர்கள் என பலதரப்பட்டவர்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மக்கள் அனைவருமே இத்தகைய தேர்தல் சந்தர்ப்பங்களில் சிலர் தெளிவானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும் இருந்து தமது வாக்குகளை அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அண்மைக்கால தேர்தல்களின் வாக்களிப்பு வீதத்தைப் பார்த்தால், இவர்களில் பலர் இந்த நாட்டின் அரசியல் போக்குகளில் மனம் கசந்து சலிப்புற்று அக்கறையற்றவர்களாக மாறி தமது அதி உன்னத வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்தவர்களாக இருப்பதை மிக மிகத் தெளிவாகக் காண முடியும். மொத்தமாகச் சொல்லப்போனால், வடக்கு கிழக்கு மக்கள் சிங்களப் பேரினவாதிகளினாலும், அவர்களது அடிவருடிகளின் ஊடாகவும் திட்டமிட்ட வஞ்சகமான அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். இதுதான் யதார்த்தம். வடக்கு கிழக்கு மக்கள் அடைய முடியாதவற்றைக் கேட்கவில்லை. அடைய முடியாதவற்றை இலக்காக வைத்துக் கொண்டு ஆசைப்படவும் இல்லை. சுதந்திரமாக, கௌரவத்தோடு, கண்ணியமாகத் தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமது நிர்வாகக் கடமைகளைத் தாங்களே செய்து வாழ வேண்டும் என்பதைத்தான் அவர்கள் கேட்கின்றார்கள். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இது சாத்தியப்படமாட்டாது என்று எவரும் கூறமுடியாது. இது அடைய முடியாத இலக்கு அல்ல என்று எவரும் கூறமுடியாது. இவ்வாறான ஒரு நிலைமைக்கு வடக்கு கிழக்கு மக்கள் ஆசைப்படக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் அருகதையும் கிடையாது. எனவே வடக்கு கிழக்கு மக்களைப் பார்த்து, “நீங்கள் விழிப்படையவில்லை. அடைய முடியாத இலக்குகளுக்கு ஆசைப்படுகின்றீர்கள்” என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறுவது சிறுபிள்ளைத் தனமாதே தவிர வேறொன்றுமில்லை.

இலங்கையர்களை அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றிச் சென்ற படகு மலேசியாவில் கைது

இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாட்டில் ஏதிலியாக தஞ்சம் அடைய சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட 75 ஈழத்தமிழர்கள் சென்ற படகை இன்று அதிகாலை மலேசியா கடலில் வைத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வருகின்ற போதிலும், தாங்கள் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்பதால் தரையிறங்க மறுத்த ஈழத்தமிழர்கள் தங்களை ஏதிலிகளாக ஏற்று கொள்ளக்கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு மலேசிய பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் நம் உறவுகளுக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

கப்பம், கடத்தலுடன் தொடர்பு; மானிப்பாயில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் கப்பம் கோரி கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவர் பொலிஸாரால் நேற்று விடுவிக்கப்பட்டதுடன், கடத்தலுடன் தொடர்புடையவ ர்களென சந்தேகிக்கப்படும் மூவர் மானிப்பாய் பொலி ஸாரினால் கைது செய்யப்பட் டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- யாழ். மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துனர் ஒருவரும் கடந்த 20ஆம் திகதி இனந்தெரியாத கும்பலொன்றி னால் கப்பம் கோரி கடத் தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுப்பிரமணியம் மகேந்திரன் மற்றும் டி. மகேஸ்வரன் ஆகியோரை விடுவிப்பதாயின் 50 இலட்சம் ரூபா பணம் அல்லது 25 பவுண் நகையுடன் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக தர வேண்டுமெனவும் அக்கும்பல் கேட்டுள்ளது. குடும்பத்தார் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் தீட்டிய திட்டத்தின் படி கப்பம் வழங்குவது போல சென்று சந்தேகநபர்கள் மூவ ரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

எங்கே? போயினர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்

தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறையில் சிக்கி அழிந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தமிழினத்தையும் மறுபிறவி எடுக்கவைத்து தமிழர்களை தரணியெங்கும் தலை நிமிரவைத்த தமிழ் இனத்தின் தேசியத் தாய்க்கு,தமிழக இந்திய அரசுகளால் இழைக்கப்பட்ட இந்த வக்கிரமான கொடுமையை கண்டிக்கத்தவறியது ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுடைய பொறுப்பில் இருந்துகொண்டு இந்தியத் தூதரகங்கள் முன் இதற்க்கான எதிர்ப்புக்களைக் காட்டத் தவறியது ஏன்? இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன்கூட இவர்கள் எதிர்ப்புக்களைக் காட்டி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கத் தவறியதன் காரணம் என்ன? சரி திருகோணமலையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கூட இந்திய மத்திய அரசிற்கோ தமிழ் நாட்டு அரசிற்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கத் தவறியது ஏன் தமிழீழத் தேசியத் தாய்க்கு நடந்த கொடுமைக்கு கூட ஒரு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத நீங்கள் தமிழ் இனத்தின் ஏகப்பிரதிநிதிகளா நீங்கள் தமிழ் இனத்தின் தலைமைகளா? இவற்றுக்கும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டப்போகிறீர்களா? அல்லது இதுவும் இராஜதந்திரம் என்று எம் இனத்தின் காதுகளில் சந்தணம் பூசப் போகிறீர்களா? இந்த ஏகப்பிரதிநிதிகள் சொல்வதை கேட்பவர்கள் கேனயனாக இருந்தால் சம்பந்தரின் தலையில் சண் தொலைக்காட்சி தெரியுமாம், கிணத்துத் தவளைபோல பதவி மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்றுகொண்டு சிங்கள இனவெறி அரசையும் இந்தியப் பாதக அரசையும் இராஜதந்திரமான முறையில் அணுகுவதாகக் கூறி எம் மக்களை ஏமாற்றிக்கொண்டு, இனவெறி பிடித்த அரசுகளிடம் அடிபணிந்து தன்மானத்தை விற்று, இதுவரை காலமும் எந்த உரிமைகளுக்காக, எமது சந்ததி அகிம்சை வழியிலும் ஆயுதம் ஏந்தியும் உயிராயுதங்களாகவும் களத்திலே போராடி வெடியாக வெடித்துக் களப்பலியாகி, எம் தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனார்களோ! அந்த வித்துக்களை பிடுங்கி எறிந்து, அந்த மான மாவீரர்களின் இலட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்து, அவர்களின் தாயகக் கனவுகளையெல்லாம் கலைத்து, தாய்மண்ணின்காவல்த் தெய்வங்களுக்கும், எம்தேசியத்தலைமைக்கும்,ஏன்ஒட்டுமொத்த தமிழ் இனத்திர்க்குமே நம்பிக்கைத் துரோகம் செய்து, தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட இவர்களா? தமிழர்களின் ஏகப்பிரதி நிதிகள்! இவர்கள்தான் தமிழினத்தின் உரிமைகளை வென்று தரப்போகிறவர்களா? ஒட்டுமொத்த தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக சிந்தித்து செயற்பட்ட தவறிய இவர்கள் கடந்த காலங்களில் இந்திய இலங்கை அரசுகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் பணத்திற்காக கொடுத்த வாக்குறுதிகள் காரணமாக தற்போது சுயமாக எந்த முடிவுகளும் எடுக்க இயலாத இவர்கள்! இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறார்கள்? சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர,சம்மந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பத்திரிகை அறிக்கையும்,வானொலிக்கு வழங்கிய பேட்டியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளது அவர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து? பி,பி,சீ,தமிழ் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இருந்து சில,இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கி எமக்கு வாக்களித்துள்ளனர் அவர்களின் ஆணையை நிறைவேற்ற இனி வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட விரும்புகிறோம்! இரா சம்மந்தரின் பத்திரிக்கை அறிக்கை? தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையை நிறைவேற்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக இருக்கிறது,பிளவு படாத இலங்கைக்குள்,(தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட)தமிழ் மக்களுக்கென ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும்,அவ்வாறான செயற்ப்பாடு தமிழ் மக்களின் நலனை மட்டுமல்ல முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும் என்று திருமலையில் நடந்த மாநாட்டின் பின்னர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார், இந்த அறிக்கைகளில் இருந்து ஒவ்வெரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டியது, இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்ப்பாடுகளில் எமக்கு ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கும், இவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உரிமைகளை விற்று விற்றுப் பிழைப்பு நடத்தப் பிறப்பெடுத்தவர்கள் , இவர்கள் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர், வன்னி யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வாழுகின்ற எம் மக்களின் மீள் குடியேற்றத்தை காரணம் காட்டி, அவர்களுக்கு உதயுவதற்கு என்ற போர்வையில் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து பெருமளவான பணத்தினைப் பெற்று, அந்தப்பணத்தில் கூட்டமைப்பின் முக்கியமானவர்கள் ஒருசிலர் ஏப்பம் விடத் துணிந்துவிட்டனர் அவர்களை இனம்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்! தமிழன் என்று சொல்லடா தலைவன் வழி நில்லடா தன்மானமுள்ள தமிழனாக வாழடா! இன்று தமிழர் பிரதேசம் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தமிழ் மக்களின் சுதந்திரமான நிம்மதியான சுயகவுரவத்துடன் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும் என்ற இலச்சியத்தை நெஞ்சில் நிறுத்தி அந்த மண்ணிலே மக்களுக்காக செத்து மடிந்து வித்தாகிப்போன மாவீரர்களின், வீரமறவர்களின் துயிலும் இல்லங்கள் நினைவுச் சின்னங்கள் தூபிகள் அனைத்தும் சிங்கள இனவெறி காடையர்களால் அடித்து உடைத்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்க அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களும் அரசியல்த் தலைவர்களும் தமக்கும் அந்தக் கல்லறைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லாதது போன்று வாய்பொத்தி கண்மூடி கைகட்டி சூடுசொரணை அற்ற தன்மானமற்ற நன்றிமறந்த மானங்கெட்ட சுயநல வாழ்வில் என்னசந்தோசம் காண்கிறார்களோ தெரியவில்லை தமிழன் தமிழனாக மட்டும் வாழ வேண்டும் பச்சோந்திகளாக அல்ல !

நம்பிக்கை ஒளி ......RAY OF HOPE

432, Alexandra Avenue, Rayners lane, Harrow, Middlesex, HA2 9TW, Phone: 0044 2033769352


Email: info@rohmay2009.com

23.04.2010

இலங்கைத்தீவில் தமிழினம் கொடும் யுத்தத்தினால் காலம் காலமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மே 2009 இல் நடைபெற்ற யுத்த அழிப்பினால் காலகாலங்களுக்கும் மாறமுடியாத பேரழிவைத் தமிழினம் சுமந்து கொண்டிருக்கிறது.

தற்போது உறவினர்களை இழந்தும் உடமைகளை இழந்தும் தமிழினம்> சீர்குலைக்கப்பட்டு சிதைந்துள்ளது. இவ்வாறு சிதைக்கப்பட்டு முகாம்களிலும்> வைத்தியசாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெறாமலும்> மீளக்குடியமர்த்தப்படாமலும் தங்கள் சொந்த நிலங்களில் உணவு> உடை> வாழ்விடம்> மற்றும் வாழ்வாதார நம்பிக்கைகள்> தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லாமல் வாழ்கின்றனர்.

“இவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தியாக்கவும், உளவளத்தினை மேம்படுத்தவும், சிதைந்து, பிரிந்த உறவுகளைத் தொடர்புபடுத்தவும் புலத்தில் உருவாக்கம்பெற்றுள்ள நிறுவனமே நம்பிக்கை ஒளி (RAY OF HOPE).”



இதன் முதலாவது திட்டம்

“ஒரு குடும்பம் ஒரு தேசம்”(CONNECTING FAMILIES) என்னும் திட்டம் உருவாக்கம் பெற்றுள்ளது. போரின் பேரவலத்திலிருந்து தம்மை மீட்டு வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உடனடி உதவிகளை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தற்போது தமிழர் தாயகத்தில் உள்ளனர்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்லும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது .

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கான உதவியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

திட்ட முன்னோட்டம்

புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள குடும்பம் ஒன்றுடன் தாயகத்தில் உள்ள ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தை இணைத்து விடுவதன் மூலம் எமது உறவுகளுக்கான, உதவிகளை நேரடியாக வழங்குவதுடன் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள், மற்றும் உதவிகளை வழங்குதலே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

முகாம்களில் இருந்தும் மருத்துவமனைகளில் இருந்தும் வெளியேறியுள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளத் தொடங்குவதற்கான ஒரு வழிமுறையாக இதைப் பார்க்கலாம்.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் போரினால் தமது குடும்ப அங்கத்தவர்கள் பலரை இழந்தவர்களாகவும், குடும்பத்தலைவர்களை இழந்தவர்களாகவும், போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களாகவும், தமது சொத்து உடைமைகளை இழந்து நிர்க்கதியாக உள்ளவர்களாகவும் உள்ளனர்.

தகவல் சேகரிப்பு

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு. அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சமூக சேவையாளர்களினால் நடாத்தப்படும் நலன்புரிச் சங்கங்கள், சமய சார்பான பராமரிப்பு இல்லங்கள், மற்றும் மூதாளர் காப்பகங்கள், தனிநபர்கள் ஊடாக பெறப்படும் பயனாளிகளின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு ஒரு பொதுவான தொடுப்பில் இடப்பட்டு மையப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இத்திட்டத்திற்கு உதவிசெய்ய விரும்பும் அமைப்புக்கள், தனிநபர்கள் நம்பிக்கை ஒளியின் அந்தந்த நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடாக உதவி தேவைப்படும் குடும்பத்தின் தகவல்களை இத்தொடுப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உதவி செய்ய விரும்பும் குடும்பம் நேரடியாக தாயகத்தில் உள்ள குடும்பத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து உதவியை வழங்கலாம்.

நிர்வாக ஒழுங்கு

நம்பிக்கை ஒளி நிறுவனம் அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்களுடனும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் இணைந்து செயற்படும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பங்காக:-

• இத்திட்டத்தில் பொதுவான தகவற் தொடுப்பில் இருந்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களையும் விபரங்களையும் எடுத்து தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள உதவிசெய்ய விரும்பும் குடும்பத்திடம் வழங்குதல்.

• உதவி வழங்கிவரும் ஒருவரால் தொடர்ந்து உதவி செய்ய இயலாதவிடத்து அதை மீளத் தொடுப்பில் இணைத்துக் கொள்ளுதல்.

• இந்த முயற்சிக்கு முழுமையான பங்களிப்பையும் வழங்கி உதவி வழங்குபவர்களையும் பெறுபவர்களையும் இணைத்து விடுதல்.

உதவி வழங்குவதற்கான தகுதிகள் என்ன?

• 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.

• மாதாந்தம் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி கொடுக்கக் கூடியவராக இருத்தல்.

• பணம் பெற்றுக் கொள்ளும் குடும்பத்தைச் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்வதற்கான தொலைபேசித் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடியவராக இருத்தல்.









ஐயங்களும் பதில்களும்

நாங்கள் தெரிவு செய்யும் குடும்பத்திற்கு எவ்வாறு உதவி புரியலாம் ?

நீங்கள் தெரிவு செய்த குடும்பத்தின் நிலை, அக்குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேவை (உணவு, உடை, உறையுள், வைத்திய செலவு) போன்றவற்றினைப் பொறுத்து மாதாந்தம் ஒரு தொகையை வழங்கலாம்.

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

தாயகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமானது.

• உறவுகளை இழந்த சிறுவர்கள்

• மாற்றுவலு உள்ளோர்

• கணவனை இழந்தோர்

• ஆதரவு இல்லாத முதியவர்கள்

• வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்

உதவிப் பணம் வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதலுக்கு எந்த நிறுவனம் இடை நிலையில் இருக்கிறது?

உதவிப் பணக் கொடுப்பனவில் பயன்பெறுவொருக்கு இடையில் எந்த நிறுவனமோ அல்லது தனி மனிதரோ இருக்கப் போவதில்லை. உதவிப் பணம் கொடுப்பவரும் உதவி பெறுபவரும் நேரடித் தொடர்பின் மூலம் இவ் உதவியினைப் பரிமாறிக் கொள்வர்.

இந்தத் திட்டத்தில் யார் பங்குபற்றுகின்றனர்?

புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், ஊர்ச்சங்கங்கள், தமிழ் பாடசாலைகள், பழைய மாணவர் சங்கங்கள், சமய அமைப்புகள், மாணவர் அமைப்புகள், விளையாட்டு ஒன்றியங்கள் போன்றவை இத்திட்டத்தில் நம்பிக்கை ஒளியுடன் இணைந்து செயலாற்றும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை “நம்பிக்கை ஒளி” எவ்வாறு அடையாளம் காண்கின்றது?

தாயகத்தில் உள்ள நலன்புரிச் சங்கங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்கள், தனிநபர்களின் உதவியோடு பெறப்படும் உதவி நாடுவோரின் விபரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தி மத்திய தரவுத் தொடுப்பில் இணைக்கப்படும்.

நாங்கள் உதவி செய்து கொண்டிருக்கும் போது சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து எங்களால் உதவ முடியாது போனால் என்ன செய்யலாம்?

அப்படியான சூழ்நிலை வரும்போது மீண்டும் அக்குடும்பம் சர்வதேச ரீதியில் ஒருங்கமைக்கப்பட்ட தகவல் தொடுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பதியப்படும். உங்களைப் போன்ற யாராவது பின்னர் அக் குடும்பத்தினைத் தெரிவு செய்யலாம்.

எனது குழந்தைக்கு 4 வயது. அதே வயதுள்ள ஒரு குழந்தை உள்ள ஒரு குடும்பத்துக்கான உதவியை நான் செய்வதற்கு விரும்புகின்றேன். இது சாத்தியமா?

நீங்கள் எத்தகைய குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்னும் விபரத்தை அந்தந்த நாடுகளில் இத்திட்டத்தினை முன்னெடுக்கும் அமைப்புக்களில் நீங்கள் கொடுத்தால் அதற்கு ஒத்த குடும்பத்தைத் தெரிவு செய்து எம்மால் வழங்க முடியும்.

இத் திட்டத்தில் இணைந்து உதவி வழங்குவதால் சட்டச் சிக்கல்கள் ஏதும் ஏற்படுமா?

நீங்கள் செய்யப் போகும் உதவி உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவி போன்றது. நீங்களே நேரடியாகத் தொடர்பு கொண்டு அந்தக் குடும்பத்துக்கு உதவப் போகின்றீர்கள். எந்தவித சட்டச் சிக்கல்களும் இதில் வருவதற்கில்லை.

நிதி உதவி ஒவ்வொரு மாதமும் உரியவர்களைச் சென்றடையும் என்பதை நம்பிக்கை ஒளி எவ்வாறு உறுதிப்படுத்தும்?

மேற்குறிப்பிட்ட பொதுநல அமைப்புக்களைச் சேர்ந்தோர் தாயகத்தில் உதவிபெறும் மக்களிடம் நேரடியாக மாதாந்தம் உதவி சென்றடைவதை உறுதி செய்து கொள்வார்கள். அப்படி உதவி சென்றடையாதவிடத்து அவ்விடத்தில் உள்ள இவர்கள் மூலம் தகவல் எமக்குத் தெரிவிக்கப்படும்.

நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் ஊடாகப் பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விபரங்களிலிருந்து எவ்வளவு பேர் பயன்பெற்றுள்ளனர் ?

தற்போது 418 பயனாளிகள் புலத்தில் உள்ள குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து எத்தனை காலத்துக்கு நிதியுதவியை மாத்திரம் மக்களுக்குக் கொடுப்பது என்பது இந்தத் திட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது?

தற்போது எமது மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தங்களுக்கென்று எந்தவித வருமானமுமின்றி உள்ளார்கள். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நிலையாகப் பார்க்கலாம். தொடர்ந்து எமது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சுயதொழில் அல்லது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதே எமது எதிர்காலத்திட்டமாகும்.

புலம்பெயர்ந்து வாழும் அனைத்து உறவுகளும் இத்திட்டத்தில் இணைந்து எம்முறவுகளுக்கு நம்பிக்கையொளியேற்றுவோம்.

நிர்வாகம் நம்பிக்கைஒளி

தொடர்புகளுக்கு

0044 2033769352

Email - iniyavan@rohmay2009.com

Email - kavian@rohmay2009.com

திட்ட ஒருங்கிணைப்பு –

K.J.அருள்நேதன்

kj.nathan@rohmay2009.com

T.P – 001 416 670 4220

நாடுகள் வாரியான தொடர்பாளர்கள்

கனடா – A.காந்தன் T.P - 001 416 659 5196

kanthan@rohmay2009.com

பிரித்தானியா – B.சிறீகாந்த் 0044 79479 52773

யேர்மனி – S.சிறீசங்கர் – 0049 176 248 37466

பிரான்ஸ் - P.தனம் visu@rohmay2009.com

ஹொலன்ட் – S.ஜஸ்லின் 0031 634397002

அனைத்து நாடுகளிலிருந்தும் நம்பிக்கை ஒளி நிறுவனத்தோடு இணைந்து செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.