செவ்வாய், 27 ஏப்ரல், 2010

இலங்கை அரசாங்கம் காழ்ப்புணர்ச்சிகளை காட்டி வருகிறது – பிரித்தானியா கன்சவேட்டிவ் கட்சி

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இன்று வரையில் இலங்கை அரசாங்கம் பல இனப்படுகொலைகளையும், இன காழ்ப்புணர்ச்சிகளையும் காட்டி வருவதாக பிரித்தானிய கன்சவேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஹரோவ் மேற்கு, கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சல் ரோய்ஸ் தாம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், அமுல்படுத்தப்பட்ட சட்ட மூலங்கள் அனைத்தும் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகவே அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் நூலகம் தீக்கிரைக்கப்பட்டதும் கூட தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதுவும் ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கையே என அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தமிழ் மக்கள் கடத்தப்படுதல், காணாமல் போதல், படுகொலை செய்யப்படல் என்பனவும் இலங்கை அரசாங்கம் இன சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே மேற்கொண்டுள்ளது.

அத்துடன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் வடக்கில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமையும், கடந்த காலங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பலர் பல வருடங்களாக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை என்பனவும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளாகவே கருத வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



ஊடக தர்மமும் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும்!


‘ஊடகங்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது கண்’ என்றே போற்றப்பட்டு வருகின்றது. நீதியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் நீதித் துறை, சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம் என்ற ஜனநாயகத்தின் இரு கண்களுக்கும் அடுத்து ஊடகத் துறை நோக்கப்படுகின்றது. எங்கே தவறு நேர்ந்தாலும், எங்கே மக்களுக்குப் பாதிப்புக்கள் நேர்ந்தாலும், எங்கே நீதி தவறினாலும் அவற்றையெல்லாம் தட்டிக் கேட்கவும், அந்தத் தகவல்களையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களுக்கான நீதியைக் கோரவுமான ஊடகங்களின் தளங்கள் விரிந்தே செல்கின்றன. இந்த ஊடக தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் இன்று வரை எண்ணற்ற ஊடகவியலாளர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். சிங்கள தேசத்தின் இனவாதத்திற் கெதிரான தமிழீழ மக்களின் நியாயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் தார்மீகப் பணியில் தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தினால் வேட்டையாடப்பட்டார்கள். 2004 முதல் 2009 வரையிலான காலப் பகுதியில் 31 தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தால் பலி கொள்ளப்பட்டுள்ளதாக ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களின் பங்கு மகத்தானது. சிங்கள தேசத்தின் அத்தனை ஊடக அடக்குமுறைக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் எத்தனையோ தமிழ் ஊடகவியலாளர்கள் தமது நியாயமான கருத்துக்களைத் துணிவோடு பதிவு செய்துள்ளார்கள். அதனால், அவர்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டார்கள். பலர் நீண்ட சிறைவாசம் அனுபவித்தார்கள். ஆனாலும், இன்றுவரை நேர்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் நீதிக்காகப் போராடியே வருகின்றார்கள். அதற்காக, எதையும் இழக்கத் துணிந்தே வருகின்றார்கள் என்ற நம்பிக்கையை உதயன் – சுடரொளி நாழிதழ்களின் ஆசிரியர் திரு. வித்தியாதரன் ஏற்படுத்தியுள்ளார். சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு யுத்தம் உதயன் – சுடரொளி ஊடகத்தையும் விட்டு வைக்கவில்லை. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு அந்த ஊடகம் தனது 10 ஊழியர்களைப் பலி கொடுத்ததுடன், ஏராளமான அழிவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தனை இழப்புக்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாத இந்த ஊடகத்தின் பிரதம ஆசிரியர் திரு. வித்தியாதரன் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். உலக நாடுகளின் அழுத்தங்களால் அவர் விடுவிக்கப்பட்ட போதும் தொடர் அச்சுறுத்தல்களுக்கிடையேதான் தனது ஊடகப் பணியைத் தொடர்ந்து வருகின்றார். இந்நிலையில்தான், சிங்கள நாடாளுமன்றத் தேர்தல் வடிவில் அவரது ஊடகப் பணிக்கு ஆபத்து உருவாகியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதற்கு உதயன் ஊடகத்தைப் பயன்படுத்தும் நோக்கத்தில் திரு. வித்தியாதரனை வேட்பாளராக்க முயன்றனர். இரு தடவைகள் அவரது வீட்டிற்குச் சென்ற மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோளை வைத்த போதும், ”10 ஊடகவியலாளர்களை களப்பலி கொடுத்து, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் ஊடகமாகத் தொடர்ந்து பணியாற்றும் உதயன் நாழிதழை ஒரு கட்சியின் பத்திரிகையாக மாற்றுவதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்” என மறுத்துவிட்டார். புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியையும், தமிழீழ மக்களது நம்பிக்கையீனத்தையும் மூடி மறைத்து, வெற்றி பெறுவதற்கு ஊடக ஆடை தேவைப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது அடுத்த அஸ்திரத்தை உதயன் – சுடரொளி நிர்வாகிமீது தொடுத்தது. திரு. வித்தியாதரன் அவர்களது மைத்துனரும், முற்று முழுதான வர்த்தகருமான திரு. சரவணபவன் கும்பிட்ட கைகளுடன் மறுப்பேதும் இன்றிக் களத்தில் இறங்கினார். இந்தச் செய்தி, திரு. வித்தியாதரன் அவர்களது காதுக்கு எட்டியதும், அவர் முக்கியமான தனது முடிவை எடுத்துவிட்டார். தான் கட்டிக் காத்த ஊடக தர்மம் நொருக்கப்பட்டு, உதயன் பத்திரிகை ஒரு கட்சிப் பத்திரிகையாக வீழ்ச்சி அடையும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாத வித்தியாதரன் அந்த ஊடகத்துக்கான தனது அத்தனை பொறுப்புக்களிலுமிருந்து விலகிக் கொள்வதாக நிர்வாகத்திற்கு அறிவித்துவிட்டார். உதயன் நாழிதழின் நிhவாகியான திரு. சரவணபவன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் களம் இறங்கிய செய்தி வெளிவந்த போதே, தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களது மனதில் வலியும் தோன்றியது. யாழ். குடாநாட்டின் முன்னணி ஊடகமாக வெளிவந்து கொண்டிருந்த உதயன் நாழிதழ் கட்சிப் பத்திரிகையாகக் கீழிறங்கிவிட்டால், யாழ். மக்கள் இருட்டினுள் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும் கூடவே எழுந்தது. ஆனாலும், ஒரு ஊடகவியலாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திரு. வித்தியாதரன் அவர்கள் உதாரணமாகிவிட்டார். இதே காலப் பகுதியில், லங்காசிறி என்ற இணையத்தளம் இதே காரணத்தோடு தன்னைக் கட்சி இணையத்தளமாக மாற்றிக் கொண்டு தாழ்ந்து விட்டதையும் நாம் வேதனையுடன் நினைவு கூரவேண்டியவர்களாகவே உள்ளோம். தமிழ்த் தேசியம் என்ற மக்கள் பக்கத்தில் நின்று செயலாற்ற வேண்டிய ஊடகங்கள், தனி மனித விருப்புக்களுக்கும், ஆசைகளுக்குமாகத் தம்மைத் தரம் தாழ்த்திக் கொள்வது மன்னிக்க முடியாத தேசியத் துரோகமாகவே நோக்கப்படுகின்றது. இன்னொரு புறத்தில், தமக்கான வரலாற்றுக் கடமையிலிருந்து தப்பிக் கொள்வதற்காக ‘தமிழ் நாதம்’, ‘புதினம்’ ஆகிய தமிழ்த் தேசிய இணையத்தளத்தினை மூடிவிட்டு, தலைமறைவாகிய ஊடக உரிமையாளரையும் தமிழீழம் மன்னிக்காது என்பதையும் இதில் பதிவு செய்ய விரும்புகின்றோம். முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை, விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில், தமிழ்த் தேசியத்திற்காக வருமானத்திற்காகவேனும் மாய்ந்து மாய்ந்து எழுதிய பல ஊடகவியலாளர்களை, தமிழீழம் அவலங்களுக்குள் புதைந்துள்ள காலத்தில் கண்டு பிடிக்கவே முடியாது போய்விட்டது. பல ஊடகவியலாளர்கள் பயத்தினால் மௌனமாகிப் போக, சிலர் தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதற்காக முழு மூச்சோடு செயற்பட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக முன்நின்று உழைத்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தால் படுகொலை செய்யப்பட, அதையே காரணமாகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய சிதைவையே குறியாகக் கொண்டு கட்டுரைகளையும் வானொலி நிகழ்ச்சிகளையும் நடாத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக, சுவிஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர் திரு. இரா. துரைரட்ணம் அவர்களது தமிழ்த் தேசிய கருத்துச் சிதைவு முயற்சிகள் ஊடகங்களின் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது. ஊடகவியலாளர் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள், புலம்பெயர் தேசத்தின் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை மிகக் கேவலமாக விமர்சிப்பதன் மூலம் தனது தமிழ்த் தேசியத் துரோகத்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றார். முள்ளிவாய்க்காலின் பின்னர் எல்லாமே முடிந்து விட்டதாக எண்ணி, ஊடகவியலாளர்கள் சிலர் தப்புத் தாளங்கள் போட்டுவரும் அவலங்கள் நிரம்பிய இந்த நாட்களிலும், தமிழ்த் தேசியத்திற்காகவும், ஊடக தர்மத்திற்காகவும் தனது பதவியையும், வசதிகளையும், உறவுகளையும் இழக்கச் சித்தமான ஊடகவியலாளர் திரு. வித்தியாதரனைப் பாராட்டாமல் இருக்க முடியாது

"விலைமாதரைக் கொடுத்து" இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம்: துணைபோகும் இந்தியம்....?


இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy - IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது.

ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழா ஐஃபா விருது வழங்கு விழாவாகும். இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 110 நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஐஃபா விருது விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்ட விழாவாகும்.

2000வது ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும், 2001இல் தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டியிலும், 2002இல் மலேசியாவிலும், 2003இல் தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கிலும், 2004இல் சிங்கப்பூரிலும், 2005இல் ஆம்ஸ்டர்டாமிலும், 2006இல் துபாயிலும், 2007இல் இங்கிலாந்தின் யார்‌க்சயர் நகரிலும், 2008இல் பாங்காக்கிலும், 2009ஆம் ஆண்டு மக்காவிலும் ஐஃபா விருது விழா நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வந்த நாளில் இருந்தே இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், கொழும்புவில் இதை நடத்துவதற்கான பின்னணிக் குறித்தும் பல விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம், ஐஃபா விருது விழாவை நடத்த அயர்லாந்து அரசும், தென் கொரியாவும், ஜப்பானும், இங்கிலாந்தும் ஐஃபா அமைப்பை மிகவும் நெருக்கின. இதற்குக் காரணம் இந்த விழா நடைபெறும் நகரம், அந்த நாட்டு அரசிற்கு மிகப் பெரிய நிதிச் செலவு ஏதுமின்றி, ஐஃபா விழா நடப்பதாலேயே அந்த நகரை உலகின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இது அந்த நாட்டிற்கு சுற்றுலா வருகையை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவதாக, இந்த விழாவில் பங்கேற்கவும், பார்க்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிற்கு வருகின்றனர்.

சிங்கப்பூரில் ஐஃபா விழா நடக்கும்போது 30,000 சுற்றுலா பயணிகள் கூடுதலாக அந்நாட்டிற்கு வந்தனர். மூன்றாவதாக, இந்த விழாவின்போது ஏற்படும் வணிக ஒப்பந்தங்கள். பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நான்காவதாக, விழா நிக்ழ்ச்சி தொலைக்காட்சியின் மூலம் 50 முதல் 60 கோடி பேர் வரை கண்டுகளிப்பதால் அந்நாட்டி‌ன் சுற்றுலா மையங்களையும், இயற்கை எழிலையும் காட்டி, அதன் மூலம் திரைப்படப் படபிடிப்புகளுக்கு வாய்ப்பை மேம்படுத்தலாம்.

இதுவே இவ்விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று முன்னேறிய நாடுகள் கூட அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா அதற்காக ஐஃபாவிற்கு ரூ.50 கோடி அளிப்பதாகக் கூட உறுதியளித்திருந்து என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், சற்றும் எதிர்பாரா வண்ணம் இந்த விழாவை கொழும்புவில் நடத்த இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும், அதற்கு என்ன பின்னணி என்றும் கேள்வி எழுந்தது.

இந்தியப் பின்னணி!
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்க அரசு நடத்தி முடித்திட்ட இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து இன்று வரை சிறிலங்க அரசிற்கு உலகளாவிய அளவில் அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்கடி அதிகரித்து வருகிறது.


தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு தட்டிக்கழித்த காரணத்தினால், அந்நாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு அளித்துவந்த இறக்குமதி வரிச் சலுகையை நிறுத்துவதென முடிவெடுத்து அறிவித்தது.

அயர்லாந்து தலைநகரில் கடந்த ஜனவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் நடந்த உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம், தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்றும், வன்னி முகாமில் நடந்த மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை மெய்‌ப்பிக்கின்றது என்றும் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, அந்நாட்டிற்கு எதிரான தமிழினப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

நா.வின் நிதிச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக உள்ளவரும், தனது வாழ்வில் காந்தியின் அகிம்சை கொள்கையை கடைபிடித்து வருவதற்காக விருது பெற்ற பிரான்சுவா ஹூடார்ட் தலைமையிலான நிரந்தரத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஊடகங்கள் பெரும் செய்தியாக்கியதன் காரணமாக, அதுவரை அசையாமல் இருந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன், போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்தார்.

தனது நாட்டு மக்களின் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய சிறிலங்காவை உலக நாடுகள் தனிமைப்படுத்தி வரும் நிலையில்தான், அந்த நாட்டின் ‘பெருமை’யை கூட்ட, இந்திய அரசின் உந்துதலால் ஐஃபா விருது விழா கொழும்புவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்க அரசிற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இந்திய அரசின் ‘முயற்சி’யே என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட் துணை போகிறதா?
சிறிலங்க அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போருக்கு எல்லா விதத்திலும் துணை போனது இந்திய அரசு என்பது உலகளாவிய உண்மையாகிவிட்ட நிலையில், அதனை மறைப்பதற்கு இந்த விழாவை நடத்த இந்திய அரசின் திட்டத்திற்கு பாலிவுட் துணை போகிறதே என்பதுதான் தமிழகத்தில் எழுந்துள்ள அதிர்ச்சியலையாகும்.


‘இலங்கை ஒரு அமைதியான, அழகிய தீவு’ என்றும், அருமையான சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்றும் கூறி, அந்நாட்டை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அங்கு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மறைக்க நடக்கும் முயற்சியே இந்த விழா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திய அரசின் துணைகொண்டு தமிழினப் படுகொலை செய்து முடித்த சிறிலங்க அரசிற்கு, அதனை மறைக்க உதவவே ஐஃபா விருது வழங்கு விழாவை அங்கு தள்ளியுள்ளது டெல்லி அரசு. இல்லையென்றால் லண்டன், சியோல், டோக்கியோ ஆகிய நகரங்கள் தொங்கிக்கொண்டு பின்னால் வர, உலக நாடுகளின் சினத்திற்கு ஆளாகி நிற்கும் இலங்கையை ஐஃபா எதற்குத் தேர்ந்தெடுக்கிறது?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இரண்டரை ஆண்டுகள் நடந்த அந்த இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாய விசாரணையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உலகின் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுவரும் சூழலில், இனப்படுகொலைக்கு காரணமான அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக தங்கிக்கொண்டு விழா அறிவிப்பை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை.

இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டது அமிதாப் பச்சனுக்கோ அல்லது இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கோ தெரியாதா? சிறிலங்க கடற்படையினரால் 400க்கும் அதிகமான தமிழ்நாட்டின் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மறைத்து அந்நாட்டோடு உறவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் இந்திய அரசின் மனிதாபிமற்ற நடவடிக்கைக்கு பாலிவுட் திரையுலகம் துணை போகலாமா?

தன்னை வரவேற்ற நடன மாதர்களின் புன்னகையை பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சன், “அவர்களின் புன்னகையில் சிறிலங்காவின் ஆளுமையும் தெரிகிறது” என்று பேசியதைக் கேட்டபோது, அந்தப் புன்னகையைக் காட்டி சிறிலங்க அரசு மறைக்க நினைக்கும் இனப்படுகொலைக்கு இவரும் துணை போகிறாரே என்றே வருந்தம் தோன்றுகிறது. சினிமா உலகம் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கிறது என்று அமிதாப் பச்சன் பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு இணைப்பு தமிழ், இந்தி திரையுலகங்களுக்கு இடையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ்நாட்டி‌ல் பல நட்சத்திரங்களும், தொழல்நுட்ப நெறிஞர்களும் பாலிவுட்டில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அவர்கள் மனதில் தமிழினப் படுகொலை ஆறாத இரணமாக நிலைத்துள்ளது என்பதை பாலிவுட் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழினப் படுகொலையை கண்டித்துப் போராடியது தமிழ்த் திரைப்படவுலகம் என்பதை மறந்துவிட்டு பாலிவுட் கொழும்புவில் விழா நடத்துமானால் அது தமிழனையும், தமிழ்த் திரையுலகத்தை தனிமைப்படுத்துவதாக ஆகாதா?


உள்நாட்டுப் போரினால் அங்கு ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் தங்கள் குடும்ப உறவுகளையும், வாழ்ந்த இடங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக‌த் திரிகின்றனர் என்பதை அறிந்துதான் அந்த விழாவை அங்கு நடத்த ஐஃபா முடிவெடுத்ததா? அல்லது எதையுமே அறியாத ஒரு கனவுலகில் அமிதாப்பும் பாலிவுட்டும் மிதக்கின்றனவா? புரியவில்லை.

தங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் துயரத்தில்தான் உள்ளனர். சிறிலங்க கடற்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களின் மீனவர்களின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய இரணம் இன்னமும் ஆறவில்லை. அதற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏங்கித் தவிக்கிறது. இதனைப் புரியாத பாலிவுட், கொழும்புவில் விருது விழாவை நடத்தச் செல்லுமானால், அது இதுநாள் வரை போற்றப்படும் உறவிற்கு பாதமாகவே முடியும்.


தமிழகத்திலிருந்து கட்டுரையாளர் ஆதிரையன் இன்போதமிழ் குழுமம்




தமிழக அரசியல் சாக்கடைக்குள் சிக்கித் தவிக்கும் பார்வதி அம்மாள்

தமிழக அரசியல் சாக்கடைக்குள் சிக்கி தவிக்கும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் : தமிழ் ஈழ மக்களை பகடைக்காயாக வைத்து அரசியலும், பண வருவாயும் சேர்த்து கொள்ள கடந்த 40 வருங்களாய் தமிழக தேசியவாதிகளும் இங்குள்ள சில ஊடகங்களும் ஈடுபட்டுவருகின்றன. இதனால், 2008-ல் ஈழத்தில் மக்களை ஒன்றாய் ஒரு குறுகிய இடத்தில் குவித்து கொத்துக் கொத்தாய் குண்டு போட்டு கொன்றான் சிங்களவன். அப்போதும், தமிழக தேசியவாதிகளாய் நோக்கப்பட்டுவரும் நெடுமாறன், வைகோ, திருமா, வீரமணி போன்றவர்கள் ஈழ மக்களின் துயரை வைத்து அரசியல் சித்து விளையாடியும், அதற்காக பணங்களை கறந்ததும் நடந்தது. ஈழ துடைத்தெடுக்கப்பட்டும், இன்றும் இந்த தேசியவாதிகள் திருந்துவதாய் இல்லை. மாறாய் இன்னும் ஈழ மக்களை வைத்து கறக்க முடியுமா என்றும், தமிழக அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள அறிக்கைகளும், சிறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இன்றைய துருப்புச் சீட்டாய் இவர்களுக்கு கிடைத்த செய்தி தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த வயதான மூதாட்டி பார்வதி அம்மாள். மக்களோடு தன்னுடைய வயதான பெற்றோரையும் வைத்து கடைசி வரை போராடி, தானும் மக்களின் துயரங்களிலும் பங்கெடுத்து வந்தவர் தான் தேசிய தலைவர். அவர் அன்று நினைத்திருந்தால், குறைந்தபட்சம் தன்னுடைய வயதான பெற்றோர்களை தப்பி வைத்திருக்கலாம். அப்படி எண்ணாமல், தன் மக்களுக்கு நேர்ந்த கதிதான் தன்னுடைய பெற்றோருக்கும் என இயங்கி வந்தால் அந்த மாபெரும் தலைவன். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பிறகு, சிங்கள காடையர்களின் பிடியில் இருந்து, பிரபாகரனின் தந்தை இறந்து போனார். இனியும் வயதான பிரபாகரனின் அன்னையை வைத்திருந்தால், தங்களின் அரசியலுக்கு இடஞ்சல் வருமென எண்ணிய சிங்கள இராசபட்சே அரசு, இவரை வெளியேற அனுமதித்தது. அப்போது, கனடாவில் உள்ள பிரபாகரனின் ஒரு சகோதரிக்கு தெரிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்தார். சிவாஜி லிங்கம் 2008 முதல் தமிழகத்தில் தங்கியிருந்து பல தமிழ் தேசியவாதிகளிடம் நப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தார். அதில் முக்கியமானவர்தான் பழ.நெடுமாறன். பழ.நெடுமாறன் இவருடைய நட்புக்காக தமிழகம் சிவாஜி லிங்கம் வரும் போதெல்லாம், உலகத் தமிழர் பேரமைப்பின் கோட்டூர்புர அலுவலகத்தை கொடுத்து உதவினார். (கோட்டூர்புர அலுவலகமும் ஒரு அவுஸ்த்திரேலிய தமிழர் உலகத் தமிழ் பேரமைப்பிற்கு கொடுத்தது….). இந்த நன்றி மறவா சிவாஜி லிங்கம், நெடுமாறனுக்கு கைத்தடியானார். (சிவாஜி லிங்கம் பெரும்பாலும் தமிழகத்தில் 2008 முதல் 2009 மே வரை தங்கி இருந்ததற்கான இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அது அவருடைய தனிபட்ட வாழ்க்கை என்றாலும், பொதுவாழ்வில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய நேர்மையின்மையை கருதி இங்கு இன்று வரை வெளிவராத செய்தியை தருகிறோம். தமிழர்கள் எல்லாம் மதித்துக் கொண்டிருக்கும் தமிழினப் போராளிகளான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை…இவர்களை ஈழம் பற்ற அறிந்த எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். இந்த மாபெரும் முன்னாள் போராளிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்த பிறகு இன்று அவர்களுடைய குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது பற்றி தமிழக தேசியவாதிகள் மறந்து விட்டனர். மறப்பதில் நமது தமிழக மக்களையும் இணைத்துக் கொள்ளலாம். இப்படி மறக்கப்பட்ட மேற்சொன்ன ஒரு போராளியின் – இங்கு போராளியின் பெயரை குறிப்பிடுவது போராளியின் தியாகம் கருதி கொடுக்கப்பட வில்லை – சென்னையில் உள்ள குடும்ப துயர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உதவுவது போன்று, போராளியின் மனைவியை எம்.பி என்ற தைரியத்தில் வலைவிரித்து விழ வைத்ததால்தான், சிவாஜி லிங்கம் அதிக நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்தார் என்பதுதான் இன்னொரு கதை.) முதலில் பிரபாகரனின் தாயாரை மாலத்தீவுக்கு அனுப்பிய பின்னர், மலேசியவுக்கு வந்து சேர்ந்தார். சிகிச்சைக்காக சென்னை செல்லலாம் என சிவாஜி லிங்கத்திடம் கேட்கப்பட்டதும், சிவாஜி லிங்கம் பத்து நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு விமானத்தில் வந்தார். ஆனால், அப்போதே சென்னை விமான நிலையத்தினுள் இந்திய அரசு அனுமதி மறுத்து திரும்ப கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், சிவாஜி லிங்கம் நெடுமாறனையும், வைகோவையும் தொடர்பெடுத்து, பார்வதி அம்மாளை கவனித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். இதுதான் தக்கசமயம் என எண்ணிய நெடுமாறன் மற்றும் வைகோவும், தங்களின் ஈழச்சரிவுக்கு ஒரு முட்டு கொடுக்கவும், கருணாநிதியின் அரசியல் செல்வாக்குக்கும் தமிழக மக்களிடத்தில் கெட்ட பெயரை ஏற்படுத்த எண்ணி காய்களை நகர்த்தினர். முதல்வர் கருணாநிதியின் ஈழ துரோகம் தமிழ் மக்களால் என்றும் மறக்க கூடியது அன்று. இதற்காக பல குட்டிகர்னங்களை மே 2008 பின்னர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு 100 கோடி ரூபாய் நலத்திட்டங்கள். அவர்களின் வீட்டிற்கு ஒரு டி.வி. அகதிகள் இருக்கும் இடத்தில் கழிப்பிடங்கள், ரோடுகள், அகதிகள் அனைவரையும் இந்திய குடியுரிமை அளிக்கும் திட்டம் என திட்டங்களை வாரி இரைத்து வருகிறார். ஆனாலும், கருணாநிதியின் துரோகம் புலம் பெயர் மக்களால் மறக்க முடியவில்லை. இப்படி 60, 70 ஆண்டுகளாய் அரசியல் செய்து வரும் கருணாநிதியின் குணம் நன்றாய் தெரிந்திருந்தும், நெடுமாறனும், வைகோவும் பிரபாகரனின் தாயாரை அழைத்து வர விமான நிலையம் சென்றனர். ஆனால், மலேசியாவில், விசா பெற்றுக் கொண்ட பார்வதி அம்மாளின் செய்திகளை அறிந்து கொண்ட இந்திய உளவுத்துறை, கருணாநிதியிடம் யோசனை கேட்டது. கருணாநிதி, பார்வதி அம்மாள் யாருடைய பின்புலத்தில் தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற வருகிறார் என கேட்டுள்ளார். அப்போது, உளவுத்துறை உண்மையை கக்கியது. முதியர் ஒருவர் வந்தாலும், நெடுமாறன்-வைகோ மூலம் வருவது கருணாநிதியால் அனுமதிக்க முடியாது. ஏனெனில், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இவர்கள் இருவரும் நாள்தோறும் அரசியல் செய்வார்கள் என நினைத்தே, சென்னைக்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். பின்னர் அதற்கான காராணத்தை ஜெயலலிதா மீதும் போட்டு தானும் தப்பித்து கொண்டார். இந்நிகழ்வை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள திருமா, வீரமணி, சீமான் போன்றோர் அறிக்கை விட்டு தங்களின் அரசியல் லாபத்தை கூட்டி கொள்ள நினைத்தனர். திரும்பவும், ஈழத்திற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை போன்றவைகளை கையிலும் எடுக்கின்றனர். மனித நேயங்களை மறந்து திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், சாவு வீட்டில் பிணமாகவும் இருக்க நினைக்கும், தமிழக அரசியல் வாதிகளும், தேசிய வாதிகளிடையே சிக்கி தவிக்கும் அந்த மாபெரும் தலைவனை பெற்றெடுத்த அந்த தாயை, இப்போது கருணாநிதி தன்னால் தான் தமிழகத்தில் வர முடிந்தது என்றும், இன்னும் அவர் இங்கு வருவாரேயானால், அவருக்கு தன்னுடைய பொறுப்பிலேயே சிகிச்கை அளிக்கவும் முடிவு செய்துள்ளார். எது எப்படியாயினும், ஈழத்தை வைத்து அரசியல் நடத்தி பணம் பார்க்கும் சுயலாபம் சேர்த்துக் கொள்ள தமிழக அரசியல் வாதிகளும் இயக்க வாதிகளும் முடிவுடன் உள்ளனர். அதற்கு சில ஈழ ஊடகங்களும் துணை நிற்பதுதான் வேதனையிலும் வேதனை!

ஐ.நாவுக்கு தமிழர்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் குப்பையில்.. ?


ஐ.நா. வானது ஐக்கிய நாடுகளாக இருப்பதாலேயே அதற்கு மக்கள் கடிதங்களை எழுதுகிறார்கள். நடவடிக்கையெடுக்குமாறு அவர்கள் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அநேகமான கடிதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது; தற்போதைய உதவிச் செயலாளர் நாயகம் வெளிப்படையாகப் பேசுகிறார். பின்னணியை மட்டும் அவர் பேசவில்லை. இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பிய மின்னஞ்சல் பற்றி அவர் குறிப்பிட்டார். "அவற்றை நான் நீக்கி விட்டேன்" என்று அவர் தெரிவித்தார். ஆனால், இன்னர்சிற்றி பிரஸ் இதனை அறிக்கையிட்டபோது அவர் ஆத்திரமடைந்தார். ஆனால், இந்த ஆட்களின் நேரம் ஏன் விரயமாக்கப்படுகிறது? ஐ.நா. விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது. அண்மையில் பத்திரிகைச் சுதந்திரத்திற்கான அமைப்பான இன்ரர் அமெரிக்கன் பிரஸ் அசோசியேசன் பான் கீ மூனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது. வெனிசூலாவில் ஊடகங்கள் மற்றும் நிருபர்கள் மீதான அடக்குமுறை குறித்து எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தைப் பற்றிதான் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவில்லையென்று பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கி கூறினார். பின்னர் அந்தக் கடிதம் கிடைத்திருப்பதாக அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார். இப்போது இக்கடிதம் கிடைத்திருக்கிறது. பான் கீ மூன் ஏதாவது பிரதிபலிப்பை வெளிப்படுத்துவாரா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. இல்லை என்று கூறிய நீசேர்க்கி, யுனெஸ்கோவிடம் நீங்கள் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். சுதந்திரப் பத்திரிகைக் குழுவின் உப தலைவர் கொன்சலோ மரோகுயின் ஐ.நா.வுக்கு வருகைதந்தபோது இந்த விடயம் குறித்து யுனெஸ்கோ அறிந்திராமல் இருந்தது வெளிவந்தது. பான் கீ மூனிடம் இந்தக் குழுவினர் ஏதாவது உதவியைக்கூட எதிர்பார்க்க முடியாமல் இருந்தது என்பது வெளிப்படையான விடயமாகும். டி.சி.யைத் தளமாகக் கொண்ட சட்டத்துறை மாணவர்களின் அண்மைய நிகழ்வொன்றில் அரேபிய தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இன்னர்சிற்றி பிரஸைக் கடிந்துகொண்டார். ஐ.நா.வின் ஊழலை வெளிக்கொணர்ந்ததற்காக அவர் கடிந்தார். கதைகள் எல்லாம் உண்மை என்றும் உண்மையில் அவை யாவும் பிரத்தியேகமானவை எனவும் அவர் கூறினார். ஆனால், தனது பிராந்தியத்தில் அவர் எகிப்தைச் சேர்ந்தவர் மக்கள் ஐ.நா. மீது தமது எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பாலஸ்தீனம் மற்றும் தெற்கு லெபனான் தொடர்பாக அவர்கள் உதவி கோரி வருகிறார்கள். ஊழல்களை வெளிப்படுத்துவதானது அவர்களுக்கான வாய்ப்புகள் எதிர்பார்ப்புகளை பாதிக்கச் செய்கிறது என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறுகிறது. ஆனால், சிலசமயம் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக விசனம் ஏற்படலாம். சிலசமயம் அவர்கள் தமது நேரத்தை வீணாக்கியிருக்கலாம். ஐ.நா. உண்மையில் செயற்படும் என்று சிந்தித்திருக்கலாம். ஆனால், ஐ.நா.வின் தூரவிலகியிருக்கும் தன்மை வருடாந்தம் விரிவுபட்டு வருவதை பார்க்க முடியும். அமைதி காக்கும் குழுவின் சடுதியான வெளியேற்றம் (ஆபிரிக்காவில் கூட) மற்றும் கடிதங்கள்,மின்னஞ்சல்கள் என்பன புறக்கணிக்கப்பட்டு நீக்கப்படுவதைப் பார்த்தால் ஐ.நா. வின் தூரவிலகி நிற்கும் தன்மையை அவதானிக்க முடியும் என்று இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது