புதன், 10 மார்ச், 2010

ஜேர்மனியில் தமிழர்கள் கைது: உணருமா தமிழினம்?

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள சிறிலங்கா தூதரகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. ஜேர்மனிக்கான சிறிலங்கா பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள். இது சிறிலங்காவின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது” என்று கூறியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்ததற்காக ஜேர்மனியின் புலனாய்வுச் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தகவல்களை வழங்கி இந்தக் கைதின் பின்னணியில் தாமே இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். சிறிலங்கா இராணுவத்தின் 57வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், வன்னிப் போரில் முக்கிய பங்கு வகித்தவர். போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசினால், பிரதித் தூதுவராக பேர்லினுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையி்ல் - வாகீசன், சசிதரன், சிவநாதன், செந்தில், மகிழன், ராகுலன் ஆகிய இந்த ஆறு பேரின் கைது நடவடிக்கை தொடர்பாகத் தெரிவித்துள்ள ஜேர்மன் காவல் துறை வட்டாரங்கள் - இந்த ஆறு பெரும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக நிதி சேகரித்தார்கள் என்று கூறியுள்ளன. அது தொடர்பான பல முறைப்பாடுகள் மக்களிடம் இருந்து தமக்குக் கிடைக்கப் பெற்றதை அடுத்தே தாம் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அழைக்கிறார் எலும்பு சூப்ப,அமைச்சர் விநாயகமூர்த்தி(கருணா)

அமைதியாக வாழ்வதற்கு விரும்புகிற, நியாயமான தீர்வை தமிழர்களுக்கு கிடைக்க விரும்பும் முந்தைய போராளிகளை இணைந்து பணியாற்ற கருணா அழைப்பு விடுத்திருக்கிறார் . ராஜபக்ஷே அரசில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சராக இருப்பவர் கருணா. இவர் முன்பு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வலதுகரமாக இருந்தவர். பின், அவரிடமிருந்து பிரிந்து விட்டார். அப்போது அவர், அம்மான் அல்லது விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்பட்டார். கொழும்பில் நேற்று நடந்த புலிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவிலும், என்னைப் போல் அமைதியான தீர்வை விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்வர். அரசும், அதிகாரிகளும் அந்த அமைதி விரும்பிகளை வரவேற்று அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பிரச்னைகளுக்கான தீர்வைக் காண வாய்ப்பளிக்க வேண்டும். இப்போது, தமிழர்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களது வறுமையைப் போக்கும் செயல்களில்தான் அரசின் கவனம் இருக்க வேண்டும். இவ்வாறு கருணா தெரிவித்தார்.

இரண்டு சுங்க அதிகாரிகள் கைது,,,,

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏமாற்றத்துடன் பெற்றோர் திரும்பினர்,,,

இன்று ஊனமுற்ற போராளிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியதனால் பெற்றோர்கள் அவர்களை பொறுப்பெடுக்க சென்றனர். ஆனால் இன்று முன்னர் கூறியது போன்று விடுவிக்கப்படவில்லை. முகாமில் இருந்த அனைத்து போராளிகளும் தம்மையும் விடுவிக்க வேண்டும் என ரகளை செய்ததாகவும். இதனாலேயே விடுவிக்கப்படவில்லை என்றும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். பொராளிகள் தமக்குள்ளேயே அடிபட்டதாகவும் அத்துடன் அனைவரையும் ஒன்றாக விடுவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் அங்கிருக்கின்ற அதிகாரிகள் இவ்வாறு சண்டை பிடித்தால் பூசாவுக்கே அனுப்பபடுவீர்கள் என எச்சரித்துள்ளனர். மேலும் இந்த சண்டைகளை அங்கு இருக்கின்ர அதிகாரிகளே மூட்டி விட்டதாகவும் இப்போது சண்டை பிடிக்காது விடில் உங்களை விடமாட்டார்கள் ஆகவே ஊனமுற்ற போராளிகளுடன் உங்களையும் விடுவிக்கும்படி போராடுமாறு கூறியதாக அங்கு இருக்கின்ற போராளிகள் கூறியுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் ஊனமுற்ற போராளிகள், அங்கவீனமான போராளிகளை விடுவிப்பதனை ஏனையோர் தடுக்க கூடாது என போராளிகளை பொறுப்பெடுக்க சென்ற பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் அணி வாகன விபத்து நால்வர் பலி

நமல் இராசபக்‌ஷவின் தேர்தல் அணியினர் சென்றுகொண்டிருந்த வாகன அணி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் கொல்லப்பட்டனர். இலங்கை நில அளவை திணைக்களத்தின் வீல் கப் வாகனம், இலங்கை தொழில் துறை திணைக்களத்தின் பிக் அப் வாகனம், மஹிந்தவின் துணைவியாரின் டொயோட்டா பிராடோ வகை பஜெரோ வாகனம் ஆகியனவே விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் மஹிந்தவின் துணைவியார் சிரானி அவர்க்ளின் மைத்துனரும் படுகாயமடைந்துள்ளார். அரச சொத்துக்களை மஹிந்த அணி தேர்தலிற்கு பயன்படுத்தியமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக எதிரணி குற்றம் சாட்டியுள்ளது. HB 5095 and 52 – 2281, 65 – 2877 ஆகிய வாகனக்களே விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

கனடாவில் தமிழர்களும் பெரும்பான்மையினராகும் நிலை

கனடாவின் இரண்டு பிரதான நகரங்களில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் 2031 ஆம் ஆண்டில் பெரும்பான்மையினராக மாறும் நிலை உள்ளதாக கனடிய புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் உட்பட்ட பாகிஸ்தானியர், இந்தியர் ஆகியோர் பெரும்பான்மையினராக மாறும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியிலான பல்லின மக்களை தமது நாட்டிற்கு வரவேற்கும் கனடிய மக்கள், இதன் மூலம் தமது பெரும்பான்மைத் தன்மையை இழக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு கனடாவின் ஐந்து சதவீதமான சுமார் 10 லட்சம் மக்கள் மட்டுமே சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை, 2031 ஆம் ஆண்டின் போது 53 லட்சமாக அதிகரிக்கும் என சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டுவரை கனடாவில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்கள் 13 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2031 ஆம் ஆண்டு 41 லட்சமாக அதிகரிக்கும் எனவும் அந்த புள்ளிவிபரத்தில் மேலும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் பிறப்பு வீதத்தின் அடிப்படையிலேயே இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தால், தமிழ் மக்களின் பாதிப்பை நன்கு உணர்ந்த, அந்த காலகட்டத்தில் கனடிய பிரதமராக கடமையாற்றியவர் இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அந்தஸ்து வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் செயற்பட்டார். இதற்கு ஏற்ற வகையில் கனடிய யாப்பில் உரிய சட்டரீதியான திருத்தங்களையும் அவர் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய "ரோ" அமைப்பு மகிந்தவிற்கு எதிராக செயற்பட்டதாம்

கடந்த ஜனவரி 26 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ரோ எனப்படும் இந்திய வெளிதொடர்பு புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார் ரோ எனப்படும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகம், மற்றும், வெளித்தொடர்பு புலனாய்வு அமைப்பு என்பன ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலஙகைக்கு, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியை சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்திய அரசு மகிந்தவுக்கு ஆதரவு அழிப்பதாகவும் ரோ அமைப்பு மகிந்தவிற்கி எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம்

கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவிலான உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதானது அங்குள்ள வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமெனக் கூறப்படுகிறது. அதிகளவிலான உல்லாசப் பயணிகளின் வருகையையடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு வடக்கிலுள்ள புராதன நகரங்கள் மற்றும் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய இடங்களை அழகுபடுத்துமாறும் திருத்தியமைக்குமாறும் உல்லாசத்துறை அமைச்சு அதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் அவ் வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.