புதன், 10 மார்ச், 2010

ஜேர்மனியில் தமிழர்கள் கைது: உணருமா தமிழினம்?

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள சிறிலங்கா தூதரகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. ஜேர்மனிக்கான சிறிலங்கா பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள். இது சிறிலங்காவின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது” என்று கூறியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்ததற்காக ஜேர்மனியின் புலனாய்வுச் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தகவல்களை வழங்கி இந்தக் கைதின் பின்னணியில் தாமே இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். சிறிலங்கா இராணுவத்தின் 57வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், வன்னிப் போரில் முக்கிய பங்கு வகித்தவர். போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசினால், பிரதித் தூதுவராக பேர்லினுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையி்ல் - வாகீசன், சசிதரன், சிவநாதன், செந்தில், மகிழன், ராகுலன் ஆகிய இந்த ஆறு பேரின் கைது நடவடிக்கை தொடர்பாகத் தெரிவித்துள்ள ஜேர்மன் காவல் துறை வட்டாரங்கள் - இந்த ஆறு பெரும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக நிதி சேகரித்தார்கள் என்று கூறியுள்ளன. அது தொடர்பான பல முறைப்பாடுகள் மக்களிடம் இருந்து தமக்குக் கிடைக்கப் பெற்றதை அடுத்தே தாம் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக