செவ்வாய், 21 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் செய்தி-இலங்கை மறுப்பு

இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானது என்று இலங்கை அரசு கூறியுள்ளது. கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வெளியானாதாகக் கூறி விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள ராஜதந்திர தகவல் பறிமாற்றங்களில், இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை செய்தது, அல்லது அவ்வாறான நடவடிக்கைக்கு துணையாக இருந்தது என்கிற தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு கூறப்படும் பொய்கள் என்று கூறியுள்ள இலங்கை அரசு, இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

ஆயுததாரி பிள்ளையானால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும்

ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம் தமிழ் மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் ஊடாக முறையிட்டுள்ளனர் .ஆயுததாரி பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைசெயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான மேலதிக விபரங்களையும் ஆதாரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவையினர் எதிர்பார்க்கின்றனர். ஆயுததாரியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆயுததாரி பிள்ளையான் தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் டென்மார்க் காவல்துறையின் விசேட பிரிவினரிடம் தங்கள் பதிவுகளை நேரடியாக மேற்கொள்ள டென்மார்க் தமிழர் பேரவையினரை தொடர்புகொள்ளவும்.
ஆயுததாரி பிள்ளையான் மற்றும் அவனுடன் டென்மார்க் வந்துள்ள சகாக்கள் தொடர்பான விபரங்களையும் ஆயுததாரிகள் டென்மார்க்கில் தங்கியிருக்கும் விபரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவைக்கு தெரிவித்து ஆயுததாரிகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டென்மார்க் வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :
மின்னஞ்சல்:
forum@dansktamilskforum.dk

ஐ நா குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும்: ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்

ஐ நா தலைமைச் செயலர் பான் கீ மூனால் அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூற அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரை மட்டுமே சந்திக்கும் நோக்கில் அங்கு சென்றால் அது பயனற்றதாக இருக்கும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

யாழ்நகரில் நடைபெறவிருந்த மனித உரிமைகள் மாநாடு EPDP யால் தடுக்கப்பட்டது !

யாழ்.பொது நூலகத்தில் நடத்தப்படவிருந்த மனித உரிமைகள் தொடர்பான மாநாடு கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலையும் விசனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருந்த பேராளர்கள் இந்த மாநாடு நிறுத்தப்பட்டது தொடர்பாக கடும் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். மனித உரிமைகள் இல்லமும் சிந்தனைக் கூடமும் இணைந்து கடந்த 18,19 ஆம் திகதிகளில் யாழ்.பொது நூலகத்தில் இந்த மாநாட்டை நடத்தவிருந்தன.

போர்க்குற்றங்கள் தொடர்பில் தெளிவான விசாரணை அவசியம்: வில்லியம் ஹேக்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "ஸ்கை நியூஸ்' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறுவலியுறுத்தியுள்ளார்.                                                                                                                                                              

சங்கானையில் தொடரும் துப்பாக்கிமுனை கொள்ளைகள்.

சங்கானைப் பகுதியில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியுடனேயே இரவுப்பொழுதைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு சங்கானை, பிரதான வீதி யில் 7 ஆம் கட்டைப் பகுதியில் செல்லத்துரை திருஞானம் என்ப வரது வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் 15 பவுணுக்கும் மேற்பட்ட நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் பம்மாத்து .பெரும்பாலானவை புனரமைப்புக்குள்ளேயே அடங்கும்.

புதுடில்லி முன்னர் தெரிவித்தது போன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட மாட்டா என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு என 300 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்துக் கொடுப்பதற்கே வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 5,000 வீடுகள் மட்டுமே புதிதாக அமைத்துக் கொடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏனைய 45,000 வீடுகளும் புனரமைப்பு மட்டுமே செய்யப்பட உள்ளன எனவும் அது தெரிவிக்கிறது.  30 வருடங்களாகப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவும் திட்டத் தின் கீழ் இந்தியா 50,000 வீடுகளைக் கட்டித்தரும் என்று பிரதமர் மன் மோகன்சிங் அறிவித்திருந்தார். இந்தியாவின் இந்தத் திட்டம் நேரடியாக ஈழத் தமிழர்களுக்கு வழங் கப்படும் என்றும் திட்டப் பயனாளிகள் நேரடியாக இந்தியாவாலேயே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் நேரில் உறுதியளித்திருந்தார்.