செவ்வாய், 21 டிசம்பர், 2010

சங்கானையில் தொடரும் துப்பாக்கிமுனை கொள்ளைகள்.

சங்கானைப் பகுதியில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியுடனேயே இரவுப்பொழுதைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு சங்கானை, பிரதான வீதி யில் 7 ஆம் கட்டைப் பகுதியில் செல்லத்துரை திருஞானம் என்ப வரது வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் 15 பவுணுக்கும் மேற்பட்ட நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
அன்றைய தினம் இரவு குறித்த வீட்டில் கணவன், மனைவி ஆகிய இருவர் மட்டுமே தங்கியிருந்தனர். நள்ளிரவு நெருங்கும் சமயத் தில்  இரவு 11.15 மணியளவில்  துப்பாக்கிகளோடு அங்கு வந்த நால்வர் வீட்டின் கதவைப் பலமாகத் தட்டி, வீட்டில் உள்ளோரை எழுப்பியுள்ளனர். எனினும் நிலைமையில் விபரீதத்தை உணர்ந்த வீட்டார் கதவைத் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமுற்ற கொள்ளையர்கள் முன்பக்கமாகவுள்ள நான்கு ஜன்னல்களையும் உடைத்து, அதனூடாகத் துப்பாக்கிகளை நீட்டி, ""கிட்டடியில ஐயருக்கு நடந்தது தெரியும் தானே?' என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன வீட்டார் தம்மிடமுள்ள தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுணுக்கும் அதிகமான நகைகளைக் கொள்ளையரிடம் ஜன்னல் ஊடாகக் கொடுத்தனர்.
கொள்ளையர்கள் அங்கிருந்து அகன்றவுடன் மானிப்பாய் பொலிஸாருக்கு கொள்ளைச் சம்பவம் பற்றி தொலைபேசி ஊடாக அறிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அண்மையில் சங்கானைப் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அந்தணர் ஒருவர் கொல்லப்பட்டு சில நாள்கள் செல்வதற்கு இடையில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கி முனைக் கொள்ளையால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக