செவ்வாய், 21 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் செய்தி-இலங்கை மறுப்பு

இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானது என்று இலங்கை அரசு கூறியுள்ளது. கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வெளியானாதாகக் கூறி விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள ராஜதந்திர தகவல் பறிமாற்றங்களில், இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை செய்தது, அல்லது அவ்வாறான நடவடிக்கைக்கு துணையாக இருந்தது என்கிற தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு கூறப்படும் பொய்கள் என்று கூறியுள்ள இலங்கை அரசு, இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரீஸ், அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் பட்ரீஷியா புட்டனிஸை செவ்வாய்க்கிழமை(21.12.10) அன்று சந்தித்து பேசிய போதே, கடந்த வியாழக்கிழமை விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள தகவல் பொய்யானது என்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறார்கள் அடிமைகளாக விறக்கப்படுகிறார்கள், சிறுவர்கள் முகாம்களில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள், சிறுமிகள் பாலியல் வலையமைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, பேராசிரியர் பீரீஸ் இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு பரப்பபடும் பொய்யுரைகள் என்று வர்ணித்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர், இது தேவையற்ற ஒன்று எனவும், இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் செய்யப்பட்டவை என்றும் கூறியுள்ளார். இந்த மாதத்தின் முற்பகுதியில் இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியாவதை அமெரிக்கா கடுமையாக கண்டித்திருந்தது.
இந்த ராஜாங்க தகவல் பறிமாற்றங்களில் இருக்கும் தகவல்கள் வெளிப்படையான மிதிப்பீடுகளேயன்றி அவை அமெரிக்க அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை என்று கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்தது. இலங்கை தொடர்பாக கசிந்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல்கள் 2007 ஆம் ஆண்டு முதலானவை என்றும், அதில் இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த கண்டனங்கள் இருந்தன என்றும், அவை தூதரகத்திலிருக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டன எனவும் விக்கிலீக்ஸ் கூறியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக