செவ்வாய், 21 டிசம்பர், 2010

ஐ நா குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும்: ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்

ஐ நா தலைமைச் செயலர் பான் கீ மூனால் அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூற அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரை மட்டுமே சந்திக்கும் நோக்கில் அங்கு சென்றால் அது பயனற்றதாக இருக்கும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் ஆசிய பசிபிப் பகுதிக்கான இயக்குநர் பிராட் ஆடம்ஸ் இதை பிபிசியிடம் உறுதி செய்துள்ளார்.இந்த வடயத்தைத் தான் நாம் ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய நாடுகள் சபைக்கு கூறி வந்துள்ளோம் என்றும் பிராட் ஆடம்ஸ் கூறுகிறார்.ஐ நா வின் அந்தக் குழு இலங்கைக்கு செல்லுமாயின் அது நேர்காணல்களையும் விசாரணைகளையும் நடத்த வேண்டும் என்பது தமது எமது நிலைப்பாடாக இருக்கிறது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.அப்படி நடைபெறுமாயின் சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தாமாக விசாரணைகளை நடத்தாமல் அரச ஆணைக் குழுவுடன் மட்டுமே பேசிவிட்டு அவர்கள் திரும்பினால், ஐ நா நிபுணர்கள் வநதார்கள், விசாரித்துவிட்டு சென்றார்கள், அதில் என்ன குறையும் இல்லை என்று இலங்கை அரசு பின்னர் தெரிவிக்கும் நிலை ஏற்படும் என்றும் பிராட் ஆடம்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
அவர்களின் விஜயம் விசாரணைக்காத்தானே தவிர ஒரு கூட்டத்துக்காக அல்ல என்பதை ஐ நா உறுதிப்படுத்த வேண்டும். அப்படியான விசாரணைகள் இலங்கையில் தான் இடம் பெறவேணுமே தவிர வேறு எங்கும் நடைபெறக் கூடாது என்றும் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் ஆசிய பசபிக் பகுதிக்கான இயக்குநர் கூறுகிறார்.
இந்தக் குழு இலங்கையின் படிப்பினை மற்றும் நல்லணிக்க ஆணைக் குழுவை இலங்கையில் சந்திக்குமா அல்லது வேறு இடங்களில் சந்திக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஐ நா வின் தலைமைச் செயலரின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக