செவ்வாய், 21 டிசம்பர், 2010

யாழ்நகரில் நடைபெறவிருந்த மனித உரிமைகள் மாநாடு EPDP யால் தடுக்கப்பட்டது !

யாழ்.பொது நூலகத்தில் நடத்தப்படவிருந்த மனித உரிமைகள் தொடர்பான மாநாடு கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலையும் விசனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருந்த பேராளர்கள் இந்த மாநாடு நிறுத்தப்பட்டது தொடர்பாக கடும் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். மனித உரிமைகள் இல்லமும் சிந்தனைக் கூடமும் இணைந்து கடந்த 18,19 ஆம் திகதிகளில் யாழ்.பொது நூலகத்தில் இந்த மாநாட்டை நடத்தவிருந்தன.
இந்த இருநாள் கருத்தரங்கிலும் யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மனித உரிமைகள் இல்லத்தின் அதிகாரிகள், பொருளியலாளர்கள், புவியியலாளர் ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற புலமைசார் நிபுணர்களும் மதகுருமாரும் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்கவிருந்தனர். மே 19 இற்குப் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி யாருடையது? அதற்காகக் கொடுக்கப்படும் விலை என்ன? என்ற தொனிப் பொருளில் இந்த மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டது.
கடந்த பல மாதங்களாகத் திட்டமிடப்பட்ட இந்த மாநாட்டை 18,19 ஆகிய இரு தினங்களும் யாழ்.பொது நூலகத்தில் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே யாழ்.மாநகர சபையிடம் இதற்கான அனுமதி பெறப்பட்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இறுதி நேரத்தில் மாநகரசபையில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அன்றைய தினம் பொது நூலகத்தில் வேறொரு நிகழ்வு நடைபெறவிருப்பதாகக் கூறியே இம் மாநாட்டுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து கவலையடைந்துள்ள ஏற்பாட்டாளர்கள் இதன் பின்னணியில் ஏதாவது சக்திகளின் தலையீடு இருந்திருக்கலாமென்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான கருத்துகளை வெளியிடுவதற்கும் அது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் உயர் தரப்புக்கள் விரும்பாத நிலைமையே இந்த மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணமாயிருக்கலாமென இதில் கலந்துகொள்ளவிருந்த பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக