சனி, 13 பிப்ரவரி, 2010

vஅரசு தனது கரங்களை யாழ்ப்பாணத்தில் பலப்படுத்தும் நடவடிக்கையில்..

ஆளும்கட்சியான பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள சுமார் 25க்கு மேற்பட்டவர்கள் அவசரமாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாணத்தில் நீதித்துறை, சட்டத்துறை, மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவார்கள். வேட்பாளர் தெரிவிற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஈழமக்கள் சனநாயக கட்சி ஈபிடிபி தனித்து வீணைசின்னத்தில் போட்டியிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ள நிலையில், அரசு தனது கரங்களை யாழ்ப்பாணத்தில் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் வன்னியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவது முடிவான நிலையில் தமிழ் புத்திஜீவிகளைக் கொண்ட சுயேற்சை குழுவினர் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளனர். அரசியல் கட்சிகளில் புதுமுகங்கள் பல தோன்றவுள்ளனர். 83க்கு முன்னர் இருந்த நிலைபோன்று தாம் விரும்பும் அரசியல்கட்சியில் ஈடுபட பலருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது. நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இவர்களும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். வன்னி தேர்தல் தொகுதி என்பது வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடகியது. வன்னியில் கல்விமான்கள் விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிடவர்களே சுயேற்சையாக போட்டியிட முன்வந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடலாம்

இராணுவத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் மற்றும் சட்டத்தரணியும் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படை மீறல் மனுவை விசாரித்த நீதியரசர்கள் அடங்கிய குழு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி உட்பட சில மேலதிக உரிமைகளை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. இந்த மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர் அசோக என். டி.சில்வா மற்றும் நீதியரசர்கள் சிரானி திலகவர்த்தன, சுந்தர எக்க நாயக்க தலைமையிலான நீதியரசர்கள் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனுவை விசாரணை செய்த நீதியரசர்கள் குழு தடுத்து வைக்கப் பட்டுள்ள பொன்சேகாவுக்கு மேலதிகமான சில உரிமைகளை வழங்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கமைய பொன்சோவின் சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினர் தடுத்து வைக் கப்பட்டுள்ள பொன்சேகாவை அடிக்கடி சென்று பார்வையிடுவதற்கும் அனுமதியை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தற்போது பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத் திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு அரச தரப்புச் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். எனினும் இக்கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அரச தரப்பினால்,கைது செய்யப்பட்டவரின் மனைவி மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என்றும் அவரின் சட்டத்தரணியே மனுவைத் தாக்கல் செய்யலாம். அத்துடன் அச் சட்டத்தரணி சத்தியப்பிரமாண ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்காததால் அவரும் தாக்கல் செய்ய முடியாது என்பதுடன் அது சட்டத்திற்கு முரணானது என்றும் அரச தரப்புச் சட்டத்தரணி சஞ்ஜய் இராஜரட்ணம் வாதிட்டார். எனினும் இதனை நீதியரசர்கள் குழு நிராகரித்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொன்சேகா போட்டியிட விரும்பினால் வேட்புமனுவில் கையயாப்பம் இடவும் ஏனைய ஆவணங்களைத் தயாரிக்கவும் இடமளிக்குமாறு உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து கருத்து வெளியிட்ட பொன்சேகாவின் சட்டத்தரணி சிரான் திலக, நீதியரசர்களின் இவ் உத்தரவு பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் நிறுத்தி விசாரணை செய்வதைத் தடுக்கும் என்றும் இது பொன்சேகாவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.

தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது:

வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தகவல் வழங்குகையில், கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.70 லட்சத்தினை கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வர்த்தகரின் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த அவருடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரின் மோட்டார் வாகனத்தை மறித்துள்ள மேற்படி கப்டன், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அவ்வியக்கத்துடனான தொடர்புகள் குறித்துமான விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்படி கைதினைத் தவிர்க்க வேண்டுமாயின் 70 லட்சம் ரூபாவினை கப்பமாக வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வர்த்தகரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வர்த்தகரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள கப்டன் உரிய பணத்தையும் எடுத்துக்கொண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபரான கப்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கப்டன் கண்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரமுகர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களின் போது பிரதான வீதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார். கைதான இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

சீமானின் 'நாம் தமிழர்' இயக்கம்!

வரும் 18 ம் திகதி, மதுரையில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குனருமான சீமான்.இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் நாம் சமூக இயக்கமாக செயற்பட்டு வந்த 'நாம் தமிழர்' அமைப்பு மதுரையில் மே 18-ந் தேதி நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுகிறது. உலக அளவில் சர்வதேச இனமான தமிழினம் பரவி விரிந்து கிடக்கிறது. தமிழர்களை தொடர்ந்து அடையாள படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அக்கட்சி செயல்படும்.சிவப்பு நிற பின்னணியில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. கொடியின் மத்தியில் `பாயும் புலி'யும், அதை சுற்றி கரு வட்டமும், அதில் இருந்து சூரியக் கதிர்கள் வெளிவருவது போலவும் அமைந்துள்ளது.முதலில் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உரிய நேரத்தில் தேர்தலில் போட்டியிடும்

தேசத்துரோகி கருணாவிற்கு சவால் விடுகின்றார் பொம்மை முதல்வர்

பொதுத்தேர்தலில் போட்டியிடத்தயங்குகிறார் கருணா என்று நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வைத்துக் கூறியுள்ளார் பொம்மை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன். 2010 ஜனாதிபதித் தேர்தலின் முன்பு தன்னை பொதுத்தேர்தலில் போட்டியிட வைக்காது கடந்த முறைபோல் இம்முறையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தருமாறு மகிந்தவிடம் கருணா மண்டியிட்டுக் கேட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டக்களப்பில் கருணாவை வைத்து பெரும் வெற்றி கண்டுவிடலாம் என கனவுகண்ட மகிந்த படு தோல்வியடைந்த நிலையில் இம்முறை கருணாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுப்பதில்லை என்று கூறியதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தேசியத்தலைவரைத் தாம் அழித்துவிட்டோம் என்று அரசாங்கம் கூறும் நிலையில் அவர்களின் கூட்டணிக்கட்சியகிய கெல உறுமய தற்போதுள்ள சூழலில் கருணாவின் ஆதரவு தேவையில்லை என்றும் இம்முறை அவருக்கு பாராளுமன்றத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்தமுறை கெல உறுமயவின் தேசியப்பட்டியல் மூலமே கருணா பாராளுமன்றத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தான் ஒரு பொம்மை முதல்வராக இருப்பதற்கு கருணா காரணம் என்று கருதும் பிள்ளையான் சென்ற தடவை போல் கருணா ஆளும் கட்சியிடம் மண்டியிட்டு பாராளுமன்றம் செல்லாமல் முடிந்தால் இம்முறை தேர்தலில் போட்டியிட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றால் தனது நிலை என்ன என்ற மனனிலையிலேயே கருணா தற்போது உள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நாடு செய்வோம்!

ஆடுகள் ஒருமேய்ப் பன்கீழ் ஆனநாம் வீழ்ந்து விட்டோம்! கூடுகள் கலைந்த தாகக் குலவுமண் சாம்பல் ஆகப் பாடுகள் பெற்றோம்! என்றே படுத்திருப் போமோ சொல்வீர்? நாடுகள் கடந்த நாடு நமக்கது வேண்டும் வெல்வீர்! துருக்கியக் கரையில் யூதர் துடிப்பொடு பசுமை செய்து பொருப்பிலே ஆற்றை ஏற்றிப் பூம்பொழில் அமைத்த போதில் கருக்கொடு நின்ற வையம் காணவே எரித்த பின்னும் நெருப்பிலே இஸ்ரேல் பூத்த நிகழ்வதை நெஞ்சிற் கொள்ளீர்! வயலெலாம் எரிந்த பின்னும் வளமெலாம் புகைந்த பின்னும் அயலெலாம் மக்கள் தீயில் அவலமாய்த் தொலைந்த பின்னும் வியட்னமின் சுதந்தி ரத்தை வீழ்த்தவா முடிந்த தப்பா? அயற்சிகொள் ளாதீர் ஈழ அரசொன்று புலத்திற் செய்வீர்! இராட்சதன் அவத ரித்த இந்தநூற் றாண்டு என்க இராசபக் சாவின் காலம் எழுதிய பின்னும் வையம் தராசிலே இட்ட தாமோ? தரணியின் அயினா! அந்தத் துரோகியைக் கட்டுப் போடத் துணிந்ததாய் இன்னும் காணேன்! இந்தியப் பருக்கை நாடு ஈழத்தை எரித்து விட்டு மந்திரிப் பதவிக் காய்ச்சல் மசக்கையில் கிடந்தார் எங்கள் வெந்தவோர் பிஞ்சைப், பெண்கள் வேதனைக் குரலைக் கேட்டும் அந்தகர் நொந்தா ரில்லை! அழுததும் கிடையா தப்பா! துச்சமாய் மனிதம் தீய்த்துத் துட்டராய் மகிந்த னாட்சிக் கச்சித மாகக் கொல்லக் கனித்தமிழ் மாந்தர் செத்தார்! அச்சமும் இல்லை யார்க்கும் அடிபணிந் தானும் இல்லை! உச்சனாய் இராச பக்சா உயிரொடு எரிக்கின் றானே! பிச்சையர் இல்லாச் சாதி பிச்சையர் ஆனார்! முட்டுக் குச்சிலே நூறு பேராய்க் கூட்டிலே யடைந்தார்! கொட்டும் நச்சுவேர் பரந்த பக்சர் நங்கையர்க் கிழிவு செய்தார்! மிச்சமாய்த் தமிழன் இன்றி முடிவது செய்தார் கெட்டார்! எரிந்திடும் வீட்டில் அள்ளி எடுத்தவர் வேண்டாம்! எம்மைக் கரந்தவர் காசை அள்ளிக் கடந்தவர் ஒருவர் வேண்டாம்! புரந்தனில் முடியே சூடிப் போனவர் வேண்டாம்! வேண்டாம்! சிரசிலே பொய்ம்மை இல்லார் சேருக நாடு செய்வோம்! அறப்புயல் எங்கள் தேசம்! அறவழி எங்கள் தர்மம் திறப்பது உண்மைத் தொண்டர் திருக்கரம் தானே காட்டும் கறப்பது மட்டும் காணக் கந்தல்கள் வருவார்! ஆயின் சிறப்பது கொள்ளத் தூய்மைச் சிந்தனை யாளர் வாரீர்! அரசொன்று செய்வீர்! இந்த அகிலமெல் லாமும் நெய்வீர்! முரசொன்று வைப்பீர்! லங்கா மூர்க்கனை எங்கும் தைப்பீர்! அரசியற் பாதை யோடு அகிலத்தை மீட்பீர்! நாளை சுரமிடும் சுதந்தி ரத்தின் தொடுகரம் நீங்கள் தானே!

B-52 .....?

B-52 வகைக் குண்டுவீச்சு விமானம் மிக நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிய ஒரு விமானமாகும். 1955 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் சேவையில் உள்ள இவ்வகைக் குண்டுவீச்சு விமானங்கள் காலத்திற்குக் காலம் விருத்திசெய்யப்பட்டு நவீன தொழிநுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் ஆறு சுழலி இயந்திரங்களைக் (turbo propeller) கொண்டிருந்த போதிலும் நவீன வடிவங்கள் தாரை இயந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. 32 000 கிலோக்கிராம் வெடிபொருட்களைக் காவிச்செல்லவல்ல இவ்வகை விமானங்கள், பனிப்போர் காலத்திலே அயுவாயுதத் தாக்குதல் நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட போதிலும், இவ்வகை விமானங்கள் இதுவரையான தாக்குதல் நடவடிக்கைகளில் சாதாரண வெடிகுண்டு வீச்சுக்களையே மேற்கொண்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விமானப்படையின் நடவடிக்கைக் கட்டளை மையம், இவ்வகையான நவீன குண்டுவீச்சு விமானங்களின் குணவியல்புகளை (characteristics) வரையறை செங்தது. அவ்வரையறையினடிப்படையில் இவ்வகை விமானங்கள் நீண்டதூர நடவடிக்கைகளைத் தனித்து செய்துமுடிக்கவல்லனவாக உருவாக்கப்பட்டன. இவ்விமானங்கள், மணிக்கு 480 கிலோமீற்றர் வேகத்தில் 10400 மீற்றர் உயரத்தில் 8000 கிலோமீற்றர் வரை தொடர்ச்சியான பறப்பை மேற்கொள்ளவல்லது. Boeing நிறுவனத்தினாற் பரிந்துரைக்கப்பட்ட இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் நேரான இறக்கைகளுடன் ஆறு சுழலி இயந்திரங்களைக் கொண்டதாகக் காணப்பட்டதுடன் 160000 கிலோக்கிராம் சுமையினைக் காவிச்செல்ல வல்லதாகவும் 5010 கிலோமீற்றர் துர்ரம் தொடர் பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் காணப்பட்டது. Boeing நிறுவனத்தாற் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆரம்ப வடிவத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ்வகை விமானங்கள் அமெரிக்க வான்படையின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து 1959 ஆம் ஆண்டிலே அமெரிக்க வான்படை அதனது சேவையிலிருந்து, ஆரம்பகால வடிவம் தவிர்ந்த, அனைத்து B-52 வகைக் குண்டுவீச்சு விமானங்களையும் நவீன கருவிகளுடன் மேம்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்திற்கமைய, சேவையிலிருந்த விமானங்கள் பின்வரும் நான்கு வடிவமைப்பு மாற்றங்களுக்கு (modification) உட்படுத்தப்பட்டன. அனைத்துவிதமான காலநிலை மற்றும் தாழ்வான உயரத்தில் (150 மீற்றர்) பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் சோவியத் ஒன்றியத்தின் வான்பாதுகாப்புப் பொறிமுறையை முறியடிக்க வல்லதாகவும் மாற்றியமைத்தல். AGM-28 Hound Dog அணுவாயுத ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல். ADM-20 Quail ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல். எதிரிப்படைகளின் இலத்திரனியற் கருவிகளைச் செயலிழக்கச் செய்யவல்ல கருவிகளைப் (Electronic Countermeasures) பொருத்துதல். B-52A வகை விமானங்கள் 1951 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்ட போதிலும் அவை பரிசோதனைப் பறப்புக்களில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து B-52B வகை விமானம் 1954 ஆம் ஆண்டு அதன் முதற்பறப்பை மேற்கொண்டது. ஆரம்ப நிலையிவ் இவ்விமானம் பல்வேறுபட்ட பின்னடைவுகளைச் சந்தித்தபோதிலும் படிப்படியான தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இவ்விமானம் இன்று பலமிக்கதொரு போராயுதமாகக் காணப்படுகின்றது. வியட்னாமிய யுத்தத்தின்போது இவ்வகை விமானங்கள் கணிசமானளவிற் பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிக்கும் பாரிய குண்டுவீச்சுக்களில் இவ்வகை விமானங்களே பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிப்பதற்காக இவை குண்டுகளை வீசின என்பதைவிட விதைத்தன என்பதே பொருத்தமாக இருக்கும். ஆம், B-52D வகை விமானங்கள் பெரும்தொகையான குண்டுகளைக் காடுகளுக்குள் கொட்டத்தக்க வகையில் அவற்றின் குண்டுகளைக் காவிச்செல்லும் பகுதிகள் மீள்வடிவமைப்புச் செய்யப்பட்டன. தொடர்ந்து பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் மீதான அணுவாயுதத் தாக்குதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வகை விமானங்கள் சோவியத்தின் அண்டையிலுள்ள அமெரிக்க சார்பு நாடுகளில் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 1991 இல் இந்நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாலைவனப் புயல் நடவடிக்கையில் இவ்வகை விமானங்களின் பங்கு பாரியளவிற் காணப்பட்டது. ஈராக்கியப் படைகள் மீது வீசப்பட்ட குண்டுகளின் 40 வீதமான குண்டுகள் இவ்வகை விமானங்களாலேயே வீசப்பட்டது. வளைகுடா யுத்தத்தின்போது இவ்வகை விமானமொன்று தொடர்ந்து 35 மணித்தியாலங்களாக 14000 கிலோமீற்றர் தூரத்திற்குப் பறந்து ஈராக்கியப் படைகள்மீது தாக்குதலை மேற்கொண்டது.

மூளையில் ‘சிப்’?

உலகில் முதல் முறையாக ஒரு வயது சிறுவனுக்கு மூளை அருகே ‘சிப்’ பொருத்தி காது கேட்கும் அறுவை சிகிச்சை செய்து மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: சென்னையை சேர்ந்த சிறுவன் கவுசிக் (2), பிறந்த போதே காதின் உள்நரம்பு இல்லை. லட்சத்தில் ஒரு குழந்தைக்குதான் இதுபோன்ற பாதிப்பு இருக்கும். இதற்கு ‘ஆடிட்டரி பிரெய்ன் ஸ்டெம் இம்பிளான்டேஷன்’ என்ற நவீன அறுவை சிகிச்சையில் தீர்வு காணலாம். ஆனால், இதுவரை 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை உலகில் முதல் முறையாக சிறுவன் கவுசிக்குக்கு செய்ய முடிவு செய்தோம். காதில் உள்நரம்பு இல்லாததால், ‘பல்சா டிவைஸ்’ என்ற ‘சிப்’, மூளையின் அடிப்பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இது காதின் வெளிப்புறத்தில் மாட்டப்பட்டிருக்கும் கருவி மூலம் இயங்கும். சிறுவன் ஒரு வயதாக இருக்கும்போது கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 9 மாதமாக மின்தூண்டல் மூலம் கேட்கும் திறன் பெற பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது கவுசிக்குக்கு முழு அளவில் காது கேட்கிறது. இந்த கருவியின் மதிப்பு ரூ.9.50 லட்சம்.

ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க

என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது. பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது. பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. 110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர். 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. 50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது

உயிர்காத்த வெப்கேம்...........

அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும். இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில் கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார், ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அந்த பெண்மணி வசித்து வருகிறார்.அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது. கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள ரிசார்ட்டுகளில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிப்பது கண்கொள்ள காட்சியாக புகழப்படுகிறது. இதற்காகவே வந்து குவியும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். சூர்ய அஸ்தமனம் அற்புதமானது என்றாலும் கொஞ்சம் ஆபத்தானது.சூரிய‌ன் ம‌றையும் நேர‌ம் நெருங்கிய‌துமே க‌ட‌ற்க‌ரையின் குண‌மே மாறிவிடும் என்று கூற‌ப்ப‌டுகிற‌து. திடிரென‌ இருள் சூழ்ந்து க‌ட‌ற்க‌ரையே க‌ண்ணுக்கு புல‌ப்ப‌டாம‌ல் போய்விடுமாம். அதிலும் க‌ட‌ற்க‌ரை ப‌னியில் உறைய‌த்துவ‌ங்குவ‌தால் நில‌மை மேலும் சிக்க‌லாகி விடுமாம். என‌வே சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் மாலை நேர‌ங்க‌ளில் க‌ட‌ற்க‌ரையில் அதிக நேர‌ம் செல‌விட‌ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுவ‌தும் உண்டு. ஆனால் சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌ அழகால் உந்தித‌ள்ள‌ப்ப‌டும் ப‌ல‌ர் ஆப‌த்தை பொருட்பாடுத்தாம‌ல் க‌ட‌ற்க‌ரையிலேயே காத்திருப்ப‌தும் உண்டு. இப்ப‌டிதான‌ ச‌மீப‌த்தில் 40 வ‌ய‌து ம‌னித‌ர் ஒருவ‌ர் சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌த்தை ப்ட‌ம் எடுப்ப‌த‌ற்காக‌ காமிராவோடு காத்திருந்தார். அந்த‌ அற்புத‌ காட்சியை கிளிக் செய்துவிட்டாலும் அத‌ன் பிற‌கு உரைந்து கிட‌ந்த‌ ப‌னிக்க‌ட்டி மீது சிக்கி கொண்டார். அங்கிருந்த‌ பார்த்தால் க‌ட‌ற்க‌ரை க‌ண்ணில் ப‌ட‌வே இல்லை.ப‌த‌றிப்போன‌ ம‌னித‌ர் உத‌விக்கு த‌வித்திருக்கிறார். ஆனால் அருகாமையில் யாருமே இல்லாத்தால் மேலும் த‌வித்து க‌டைசியில் த‌ன‌து காமிராவை கொண்டு பிளாஷ் அடித்து உத‌விக்கு செய்கை செய்துள்ளார். வெளிச்ச‌ம் ம‌ங்க‌த்துவ‌ங்கி விட்ட‌ ஆள‌ற்ற‌ க‌ட‌ற்க‌ரையில் உயிருக்கு போராடும் ஒருவ‌ர் காமிராவில் பிளாஷ் அடிக்கும் காட்சி எப்ப‌டி இருந்திருக்கும் நினைத்துப்பாருங்க‌ள். அவ‌ர‌து அப‌ய‌க்குர‌ல் யார் காதிலும் விழாம‌லேயே போயிருக்கும். ஆனால் ந‌ல்ல‌ வேளையாக‌ பெண்ம‌ணி ஒருவ‌ர் த‌ன‌து வீட்டில் அம‌ர்ந்த‌ ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் மூல‌ம் அந்த‌ சூர்ய அஸ்த‌ம‌ன‌க்காட்சியை க‌ண்டு க‌ளித்துக்கொண்டிருந்தார். ந‌க‌ர‌ நிர்வாக‌ம் வெப்கேம் மூல‌ம் க‌ட‌ற்க‌ரை காட்சியை ப‌திவு செய்து இண்ட்நெர்நெட் வ‌ழியே க‌ண‌ச்செய்து வ‌ருகிற‌து. சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌ அழ‌கில் மூழ்கியிருந்த‌ அந்த‌ பெண்ம‌ணி காமிரா பிளாஷ் வெளிச்ச‌ம் மீன்னுவ‌தை பார்த்து யாரோ அப‌ய‌க்குர‌ல் கொடுப்ப‌தை புரிந்து கொண்டு உட‌னே அதிகாரிக‌ளூக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார். அதிகாரிகளும் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ள‌ன‌ர்.

பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் கண் மூடித் தனமாக துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்க அல்பமா பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகமென்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு வெளியே இருந்து, உயிரியல் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரியல் பிரிவுத் தலைவர் மற்றும் இரண்டு பேராசிரியர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட பெண் பல்கலைக்கழக பேராசிரியர் பீட உறுப்பினர் எனவும், குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய நில நடுக்கம்.....

தெற்கு பசிபிக் கடல் பகுதியில் டோங்கா எனும் தீவு நாடு உள்ளது. இந்த நாடு 169 சிறிய, சிறிய தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. 500 மைல் சுற்றளவுக்குள் இந்த தீவு கூட்டங்கள் உள்ளன. இன்று காலை டோங்கா தீவின் தலை நகரில் இருந்து தென் கிழக்குப் பகுதியில் சுமார் 60 மைல் தொலைவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளியாக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கம் பூமியில் அதிக ஆழம் இல்லாமல் உருவாகி இருந்தது. இதனால் டோங்காவில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. டோங்கா தீவு கூட்டங்கள், அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் அபாயப் பகுதியில் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு 8 ரிக்டர் அளவு கோலுக்கு ஏற்பட்ட மிகப்பயங்கர நில நடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.

காதலர் தினத்துக்கு தடை

உலகம் முழுவதும் நாளை (14-ந்தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக காதலர்கள் அன்பு பரிசாக ரோஜாக்கள் மற்றும் இதய வடிவிலான பெட்டிகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பொம்மைகளை பரிசளித்து மகிழ்வார்கள். இவை கடைகளில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் காதலர் தின பரிசு பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காதலர் தின பரிசு பொருட்கள் விற்கப்படுகிறதா என சவுதி அரேபிய போலீ சார் பஜார் பகுதியில் ரோந்து சுற்றியபடி கண் காணித்து வருகின்றன. மேலும் எச்சரிக்கை போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. மேற் கத்திய கலாசாரம் என்பதால் இங்கு காதலர் தினத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறப்பு 2,30,000 ஆக அதிகரிப்பு

ஹெய்ட்டி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகி விட்டது. இன்னமும் அங்கு முழுமையாக மீட்பு பணிகள் நடந்து முடிக்கப்படவில்லை. இடிந்த கட்டிடங்களுக்குள் இப்போதும் உடல்கள் அழுகி துர்நாற்றம் அடித்தபடி உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இது வரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக ஹெய்ட்டி மந்திரி லாரன்ஸ் ஜெஸ்லின் கூறியுள்ளார். 3 லட்சம் பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்கப்படும் உடல்களை அடக்கம் செய்ய எவரும் முன் வராததால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே ஒன்றுசேர்ந்து பொது இடங்களில் அவற்றைப் புதைக்கின்றனர்.

இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக சிங்களவர் ஆர்ப்பாட்டம்

இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். தேர்தலில் மஹிந்த மோசடி செய்தார் எனவும், அதன் பின்னர் பொய்குற்ற சாட்டினை மேற்கொண்டு சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மஹிந்த என்றுமே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினராம். வெளி நாடு ஒன்றில் இதுவரை காலமும் மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். ஆனால் இப்போ சிங்களவர் மஹிந்தவுக்கெ எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு இருக்கின்ற பொலிசாருக்கு அதிசயமாக இருந்தது. இலங்கை தூதரக அதிகாரிகள் ரோமில் உள்ள பொலிசாருக்கும், ஊடகங்களிற்கும் இந்த விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர். இத்தாலியில் ரோம், நாப்பொலி, மிலான் ஆகிய பகுதிகளில் 30,000 மேற்பட்ட சிங்களவர்கள் இருக்கின்றனர். இவர்களில் கூடுதலானோர் படைகளில் இருந்து தப்பி ஓடியவர்கள்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

சிறீலங்காவின் ஆறாவது நிறைவேற்று சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் நீண்ட வன்முறைகளுடனும் சட்டவரம்பு மீறல்களுடனும் அதிகாரத்துஸ் பிரயோகத்தின் மத்தியிலும் நடந்து முடிந்துள்ளது தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக ஆறு மனித உயிர்கள் பலியெடுக்கப்பட்டதுடன் அறுபதுக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டு பல லட்சம் ரூபாய் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.இத்தேர்தலை நியாயமாக நோக்குமிடத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவே வெற்றிபெற்றதாகக் கருதமுடிகிறது. இருந்தும் தேர்தல் முடிவுகளின் படி ஜனாதிபதி மகிந்தவே வெற்றிபெற்றுள்ளார்.எது எப்படியோ தமிழ் மக்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. தமிழ் இனத்திற்கே தனித்துவ மான ஒரு குண இயல்பான நாம் எவரையும் அடக்கியாளவும் இல்லை. எவரையும் அடக்கியாள விட்டதும் இல்லை. என்பதை தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இத்தேர்தலின் மூலம் எடுத்துக்கா ட்டியுள்ளனர். குறிப்பாக தமிழர் தாயகமான வடக்குக் கிழக்குப்பகுதியில் இரண்டரை இலட் சத்திற்கு மேற்பட்ட படையினற்குள்ளும் எம்மினத் துரோகிகளான ஒட்டுக்குளுக்களின் இரும் புப் பிடிக்குள்ளும் இருக்கும் தமிழ் மக்கள் வீரத்தையும் விவேகத்தையும் வெளிக்காட்டி தமது தனித்துவத்தை நிலை நாட்டியுள்ளனர். அத்துடன் புதிதான தீர்மானமின்றி அற்ப சலுகை களுக்காக நேரடியாக ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்து அவருக்காக ஓட்டுக்கே ட்டு பிரச்சாரத்தில் இறங்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் காத்திரமான செய்தியைக் கூறியுள்ளனர்.பல்வேறு காரணங்களுக்காக உறங்கு நிலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் 2009ம் ஆண்டு இறுதிப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுக்கவேண்டிய முடிவுகள் தொடர்பில் கருத்துப்பரிமாற்றத்தை மேற் கொண்டபோது இரு பிரதான வேட்பாளர்களும் போர்குற்றவாளிகளாக இருப்பதனால் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்கமுடியாது ஆனாலும் மகிந்தவை எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்கக்கூ டாது என்றும் இருப்பினும் தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியுள்ளதனால் எதிர்வரும் தைப்பொங்கல் நாள்வரை உங்கள்முடிவுகளை இடை நிறுத்தி வைத்துவிட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்புவதனால் பெரும்பாலான தமிழ் மக்களினதும் புத்திஜீவிகளினதும் விருப்பத்துக்கு அமைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகக்கூறி அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யாது இரு பிரதான வேட்பாளர்களுக்குப் பின்னாலுள்ள கட்சிகளும் கடந்த அறுபது ஆண்டுகளிலும் தமிழ் மக்களுக்கு செய்த அனீதிகளையும் அழிவுகளையும் சொத்திழப்புக்களையும் விளக்கிப் பிரச்சாரம் செய்யுமாறு ஆலோசனை கூறியதாக அறியமுடிகிறது. தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தை உணர் ந்த தன் உயிரிலும் மேலாக தமிழ் மக்களை நேசிக்கும் அத்தளபதியின் ஆலோசனையை புறம் தள்ளிய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என்றே கூற வேண்டும் இனியாவது தமிழ் மக்களின் இதயத்துடிப்பை அறிந்து இரண்டு லட்சத்திற்கு மேலான உயிர்விலையைக் கொடுத்து பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் இழந்து தமிழ் மக்களின் உறுதியை நிலை நிறுத்திய எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்து மக்களின் தனித்துவத்தையும் தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றுமா என்பதே தமிழ் மக்களிடம் தற்போதுள்ள கேள்வியாகும். இதைவிட தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசிற்கு தோள் கொடுக்கும் ஒட்டுக் குழுக்களுக்கும் இத்தேர்தலை தங்கள் பல்வேறுபட்ட சுய நலங்களிற்காக எதிர் பார்த்திருந்த சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை இத்தேர்தல் மூலம் ஆணித்தரமாகக் கூறியுள்ளனர் என்றே கூறவேண்டும். அத்துடன் போர் வெற்றி அகங்காரத்திலிருந்த சரத்பொன்சேகாவிற்கும் மகிந்தவிற்கும் கொடுத்த தீர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்ததாகவே கூறவேண்டும். அதேவேளை தமிழ் மக்கள் சரத்பொன்சேகாவிற்குக் கொடுத்த ஆதரவு எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்ற அடிப்படையிலேயே வழங்கியுள்ளனர் என்றே கூறவேண்டும். விடுதலைப் புலிகளை போரின் மூலம் வெற்றி கொண்ட ஜாம்பவான் தானே எனக்கூறியவருக்கு ஆதரவளித்ததன் மூலம் விடுதலைப் புலிகளை போரின் மூலம் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றீர்களே கடந்த நான்கு வருட போரின் போதும் விடுதலைப் புலிகள் இவ்வளவு காலமும் சாதித்த சாதனைகள் எத்னையும் சாதிக்கவில்லையே நீதியின்பால் நில்லாது அனீதின்பால் நின்று சர்வதேசத்தின் சட்டதிட்டங்க்களுக்கு மதிப்பளிக்காது போரை வென்றதுபோல் நீதியின்பால் நீங்கள் இத்தேர்தலில் தோர்க்கடிக்கப்படவில்லை அனீதியின் பால் தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள் என்று உணர்த்தியுள்ளனர்.இதைவிட இவ்விரு கொலைகாரர்களுக்கும் நீங்கள் இருவரும் எங்களின் மேல் எவ்வளவு அடக்குமுறைகளை மேற்கொண்டாலும் எவ்வளவு வார்த்தைஞாலம் கொட்டினாலும் தமிழர் நாம் தனித்துவமாகத் தன்மானத்துடன் வாழ்வதையே விரும்புகின்றோம் என்பதையும் நாங்கள் உங்களை ஆதரிக்கவில்லை என்பதற்காக நீங்கள் எங்கள் மீது ஏவிவிட்ட எட்டப்பர்களுக்கு தமிழ் மக்கள் இத்தேர்த்லின் மூலம் கூறிய செய்தி என்னவெனில் நாம் கடந்த அறுபது வருடங்க்களாக எமது தனித்துவமான வாழ்விற்காக எத்தனையோ உயிர் விலைகளயும் எவ்வளவோ சொத்திளப்புக்களையும் கொடுத்துள்ளோம் நீங்க்கள் விலை போனபோதும் நாங்கள் இவ்வளவு காலமும் விலைபோகாது உள்ளோம் இனிமேலும் அப்படியே இருக்க விரும்புகின்றோம் இனியாவது உங்கள் சுயனலத்திற்காக எமது பாதையில் தடைக்கல்லாக நிற்காமல் விலகி நிற்கும்படி கூறியுள்ளனர்.இதன் பின்னராவது இவ் எட்டப்பர்கள் தமிழ் மக்களின் இம்முடிவினை உணர்ந்து செயற்படுவார்களா அல்லது அடுத்துவரும் தேர்தலிலும் மூக்குடைபடப்போகிறார்களா. சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் கூறிய செய்தியென்ன கடந்த அறுபது ஆண்டுகளும் ஏதோ ஒரு வகை யில் நீங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் எமது இனப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ளீர்கள் எத்தனையோ சந்தர்ப்பங்க்களில் உங்கள் சுயனலத்திற்காக ஆதரவாகவும் எதிராகவும் செயற்பட்டுள்ளீர்கள் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டபோது எமது உரிமையைப் பெற்றுத்தர காத்திரமான முடிவை எடுப்பீர்கள் என நம்பினோம்.நீங்கள் உங்கள் சுயனலத்திற்காக பயங்கரவாதமுத்திரை குத்தி எமது விடுதலைப் போராட்டத்தை அளித்ததுடன் இன்றுவரை பாராமுகத்துடனே உள்ளீர்கள்.இருந்தும் பெரும்பாலான நாடுகளின் எதிர்பார்ப்புக்கமைய இத்தேர்தலின் மூலம் எமது தேவைகளை வெளிப்படுத்தியுள்ளோம். எமது அபிலாசைகளைப் புரிந்து கொள்ளுமாறு சர்வதேசத்திற்கும் குறிப்பாக பிராந்தியவல்லரசுக்கும் எடுத்துக்காட்டியுள்ளதுடன் எமது அடிப்படையான உரிமைப்பிரச்சனையைத் தீர்க்காதவரை நீங்கள் பொருளாதார நலன் கருதி எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் விளலுக்கிறைத்த நீர் போலத்தான் ஆகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். எது எப்படியோ தமிழ் மக்கள் கடந்த அறுபதுவருடப் போரட்ட காலத்திலும் எமது தோல்விக்குப் புறக்காரணிகளாக அமைந் துவிட்ட பணமும் பலமும், அறிவும் ஆற்றலும்,ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஒன்று சேராதவரை யிலும் எமக்கு இவ்வாறான பின்னடைவுகள் ஏற்பட்டவ்ண்ணமே இருக்கும். அத்துடன் தமிழ் மக்களின் தோல்விக்கு இன்னுமொரு புற்க்காரணியாக அமைந்துவிட்ட உலக மயமாக்கலும் அதன் நலன்சார்பு நிலையும் பிராந்திய நாடுகளும் அதன் வல்லாதிக்கப்போட்டிகளையும் புரிந்துணராத வரையிலும் உலக நாடுகளின் ஒற்றுமையை உணராதவரையிலும் தமிழ் மக்களின் நினைவு பகல் கனவு தான் என்பதுதான் உண்மை

சர்வதேச மட்டத்தில் தமிழர் களுக்கு இழைக்கப்படும் அநீதி

சர்வதேச மட்டத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை முடக்குவதற்கு வழி அவர்களது சர்வதேச பலத்தை நிரூபிப்பதே ஆகும். இந்திய அதிகாரத்தின் சுற்றுவட்டாரங்களிலிருந்து புலப்படுவது யாதெனில், எத்தனை வழிகளில் தமிழ் மக்கள் தமது விடுதலை வேட்கையைப் புலப்படுத்தினாலும், இந்தியாவும் இராஜபக்சே அரசும் தாங்கள் தமக்குத் தெரிந்த “சமாதானத்” திட்டத்தின்படியே இரகசியமாக நகர்வர். தமிழர்களின் சுதந்திரத்தை எதிர்ப்பதற்கு மேல்மட்ட சர்வதேசிய அரசியல் அமைப்புகளிடையே ஓர் புரிந்துணர்வு இருப்பதாக, அறிந்த தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன. மனோரீதியாக ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தில் எல்லோரும் எதிர்த்த போதிலும், எப்படி எமது இலக்கை எட்டுவது என்றும் மக்கள் உள்ளே அடைபட்டுக் கிடக்கும்போதும் சுதந்திரத்தைக் கோருவதில் என்ன பயன் என்றும் கேள்விகள் எழலாம். சர்வதேச அரசியல் அமைப்புகளால் தமிழ் மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் புரியப்பட்டால், தமிழர் எழுச்சி ஒன்றே அவர்களது சர்வதேச மேலாண்மையை நிரூபிப்பதாகும். இந்தப் பொறுப்பு தமிழ் நாட்டையே சாரும். ஒரு குற்றம் புரிவதிலும் பார்க்க, அப்படிப் புரிந்ததை மறுப்பதும், அதனால் பாதிக்கப்பட்டவர்களை நீதி கோருவதிலிருந்து தடுப்பதும் பாரதூரமான விடயங்களாகும். இதனால்தான், வௌ;வேறு பரிமாணத்தில் குற்றங்களைப் புரிந்த நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டி அதற்கூடாக முழு உலகுக்கும் தமது புதிய “உலக அமைப்பையும்” வெளிக்கொணர முயல்கின்றன. இந்த முயற்சியில் முதற்படியானது, தமிழரின் தேசியத்தை மறுப்பதும், அவர்களின் தேசிய உணர்ச்சியை மழுங்கடிப்பதும் ஆகும். இலங்கைத் தீவில், இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதுடன், அத்தோடு ஆயிரக்கணக்கான அடிப்படையற்ற நியாயங்களையும் “வளர்ச்சி” எனக் கூறப்படும் சூழ்ச்சிகரமான திட்டங்களையும் பயமுறுத்தலுடனும் சிறைப்பிடித்தலுடனும் திணிக்கப்பட்ட அதே நேரத்தில், வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசியவாதிகளைச் செயலிழக்க வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இனஅழிப்பு, ஒரு சரீர சம்பந்தமான குற்ற நடவடிக்கையாக இருந்து அரசியல் குற்றமாக மாறிவரும் வேளையில், புற அமைப்புகள் இலங்கையின் உள்ளும் வெளியேயும் உள்ள தமிழ் மக்களை ஓர் தொட்டும் தொடாத போக்கில் இழுத்துச்செல்ல முனைகின்றன. இரு தசாப்தங்களாக இலங்கையில் போர்க்குற்றங்களைப் புரிந்தும், கடந்த வருடம் அவற்றை ஊக்குவித்தும் வந்த இந்தியாவானது, தற்போது தமிழருடைய தேசிய பிரச்சனையை அங்கீகரிக்காது, தமிழ் அரசியலில் பாலம் அமைக்க முயல்வது, ஒரு கர்வத்தின் வெளிப்பாடு எனத் தமிழ் வட்டாரங்களில் நோக்கப்படுகின்றது. “பாதுகாப்பு” என்ற போர்வையில் இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் அமைப்புகளுக்குச் செலவிடப்பட்ட பணத்தொகை பற்றியும், முன்னும் பின்னுமாகக் கொண்டு செல்லப்பட்ட நாடுகடந்த பிரமுகர்களைப் பற்றியும் ஈழத்தமிழ் வட்டாரங்கள் அறியாமல் இல்லை. இந்தியா செய்த அத்தனை பிழைகளுக்கும், இந்தியாவின் எதிரிகளையும் போட்டியாளர்களையும் அதன் வாசட்படிக்குக் கொண்டு வந்தது ஈழத்தமிழர்கள் அல்ல என்பதை இந்திய மக்கள் உணர வேண்டும். 1935 டொனமூர் அரசியலமைப்பின் ஆசியாவிலேயே நீண்ட இரட்டைவேட ஜனநாயகத்தின்கீழ் இனஅழிப்புவரை அனுபவித்த ஈழத்தமிழர்கள் கேட்டது, பிரித்தானியா அவர்களிடமிருந்து 1948-ல் பறித்துக் கொடுத்த இறையாண்மை ஒன்றே ஆகும். இந்தப் பிரச்சனையை நோக்குவதற்குள், இன்று இப்பிரதேசத்தில் மூக்கை நுழைக்கும் எல்லா சக்திகளும் கொழும்பு அரசாலும் இந்தியாவில் உள்ள சாணக்கியர்களின் தவறான கொள்கைகளாலும் கொண்டு வரப்பட்டவை எனலாம். இந்தியா தமிழ் மக்களின் தேசியத்தையும் இறையாண்மையையும் ஏற்க மறுக்கும்வரை, இந்திய அரசால் கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் ஈழத்தமிழர்களால் ஏற்கப்பட மாட்டாது, இந்தியாவிற்கு உள்நாட்டிலும் வெளியிலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்பது சொல்லாமலே தெளிவாகும் விடயமாகும். தமிழ் அரசியலைத் தீர்க்க முற்படும் இந்திய மகிந்தக் கூட்டணியால் உடணடியாகப் பாதிக்கப்படுபவர்கள், மகிந்தாவிற்குப் போரில் உதவிய கூட்டணியினராகத்தான் இருக்கும். தமது சொந்த மக்களுக்குத் தமது சுதந்திரமான அடிப்படையில் தீர்வு காணாத எல்லோருக்கும் இது நடைபெறும் ஒரு விடயமாகும். ஆனால் அதிலிருந்து பாடம் படிக்க யார் தயார்? கொழும்பு அரசுக்கும் டெல்லிக்கும் எதிரான தமிழ் உணர்வுகளைப்பற்றிக் கூறியதால் மற்றவையாவும் புறந்தள்ளப்பட்டுவிட்டன எனக்கூற முடியாது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் வெறுப்பூட்டத்தக்க நுழைவுகளிலும் மேலாகத் தமிழ் மக்கள் முக்கியமாகக் கவலைப்படுவது, மேற்கு நாடுகளின் நிலைப்பாடே ஆகும். இலங்கையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குக் கடுமையான தண்டனை விதித்த அமெரிக்கா, அதன் அதிகாரத்தில் உள்ளவர்கள் உட்பட எவரும் தமிழ் மக்கள் மீது நடத்திய போர்க்குற்றங்கள் மீது அத்தகைய அக்கறை காட்டவில்லை. மேற்கு நாடுகள் இலங்கையில் நடைபெறும் போர்க் குற்றங்களுக்கும் இனஅழிப்பிற்கும் தீர்வு கண்டு நீதியான அரசியத் தீர்வு காண்பதற்கு எத்தகைய ஆர்வம் காட்டப்போகின்றார்கள் என்பதுதான் தமிழ் வட்டாரங்களின் மனதில் எழும் கேள்வியாகும். தமிழ் மக்கள், தமது சொந்த சுதந்திரமான போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைப்பதன் மூலம் சரித்திரப் பூர்வமான பதிவுகளைச் சரிப்படுத்தக்கூடும். தமிழ்த் தேசியப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், அதை இல்லாதொழிக்கும் வரையில், ஓர் மேல்மட்ட தரப்பில் எல்லாச் சக்திகளுக்குமிடையில் ஓர் புரிந்துணர்வு இருக்கிறது எனத் தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவுடன் சேர்ந்து மேல்வாரியான கொள்கையை அவர்களும் கடைப்பிடிப்பதில் கடுமையாக உழைப்பது, ஓர் இரகசிய விடயமல்ல. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், போர்க்காலத்தில் அது திணிக்கப்பட்டது என்று கூறிய ஒரு தமிழர், தற்போதும் “யதார்த்த நிலைமை! என்ற போர்வையில் “தமிழர்களுக்குச் சுயாட்சி கிடைப்பதென்பது யதார்த்தத்தால் திணிக்கப்படுவது” எனக் கூறியுள்ளார். முன்பு, தமிழ்த் தேசியம் என ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை எனவும், நடைபெற்றது பயங்கரவாதம் மட்டுமே என்றும் கூறிய சில சர்வதேச ஊடகங்கள், தற்போது தமிழ்த் தேசியம் பலவீனமடைந்துள்ளது எனக்கூற முற்படுகின்றன. இன்று, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தமது முழுமையான சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் போராடும் உறுதிப்பாட்டைக் கண்டு, மேற்குநாடுகள் திகைப்படைந்துள்ளன. சிங்கள அறிவாளிகள் இனப்போர் முடிவடைந்து விட்டது எனவும், தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல எனவும் – ஆனால் நிரந்தரச் சிறுபான்மையினர் மாத்திரமே என்றும் எண்ணுகின்றனர். அவர்களின் கவலை பிரதான அரசியல் வர்க்கங்களிடையே இருக்கும் பிரிவினையாகும். இலங்கையில், தமிழர்களின் எதிர்காலம் பற்றிக் கூறுகையில், ஜெயதேவா உயங்கொட “இராணுவ வெற்றி இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திவிட்டது. சிறுபான்மையினரின் போராட்டங்களுக்குத் தற்போது, முன்புபோல் அல்லாது பிரதேசவாரியாகவோ உலகளவிலோ நம்பகமான நண்பர்கள் இல்லை. அரசியல் இருப்புக்குச் சிங்கள அரசியல் கட்சிகளுடன், அரசுகளுடன் யதார்த்தமான ஒத்துழைப்புத் தேவையென எதிர்காலத்தில் அவர்கள் கவனத்தில் எடுப்பார்கள்” எனக் கூறினார். ஒரு வருடத்திற்குமுன் தமிழ் மக்கள் சிங்களவரின் “தாராள மனப்பான்மை” யிலேயே தங்கியிருக்க வேண்டும் எனக்;கூறினார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்பின் இலங்கையில் அரசியல் ஆதாயம் தேடும் தமிழரின் விடயங்களில் எவரும் பெருந்தன்மையாக நடக்க முடியாது என்பது வெளிப்படை. தமிழரின் சுதந்திரத்திற்கு எதிரான சிங்கள அரசும், கொழும்பில் பணம் திரட்ட முயலும் தமிழர்களை ஊக்குவிக்கும் சக்திகளும், தமிழர்களுடைய விடுதலையைத் திட்டமிடப்பட்ட மனோவியல் யுத்தத்தைப் பாவித்து அதைரியப்படுத்த முனைகின்றார்கள். தமிழரின் சில ஊடகங்கள், தமிழரின் சுதந்திரத்திற்கு அடித்தளம் வகுப்தற்குப் பதிலாக, மகிந்தா-பொன்சேகா இழுபறியில் எவ்வளவு நேரத்தை விரயமாக்கினார்கள் என்பதைத் தமிழ் வட்டாரங்கள் நன்கு அறியும். இனிமேலும், அவர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் (செவ்வாயன்று பிரகடனப்பட்டதன் பேரில்) மீண்டும் நேரத்தை வீணடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். சிங்கள முக்கிய அரசியல் வர்க்கங்களிடையே பிரிவினை ஏற்படுவதும் அவர்கள் அநீதியான முறையில் மற்றவர்களில் தங்கி அடைந்த வெற்றிக்கு ஈடாக தொடர்ந்தும் விலைகொடுக்க வேண்டிவரும் என்பதும் இயற்கையானதொன்றே. தமிழ் மக்களை நிர்வாணமாகக் கொன்றபின், நல்லூர் கந்தசாமி கோவிலில் அரைநிர்வாணமாக வணங்குவதில் பலன் ஏற்படாது. மேலோங்கிய வர்க்கங்கள் தமிழர்க்கு ஒன்றும் கொடுக்கப்; போவதில்லை என்பதால், இலங்கை அரசுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனக் கூப்பாடு போடும் மேலாதிக்கவாதிகளின் கூக்குரலை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்கள் தமது நேரத்தையும் சக்தியையும் வீணாக்காது பாவிக்க வேண்டும். எல்லாரும் எதிர்த்து நிற்கும்போது, எப்படி விடுதலையை அடையமுடியும் எனப் பல தமிழர்கள் குழப்பமடையலாம். ஆனால் ஏன் எல்லோரும் அவர்களை எதிர்க்கின்றார்கள்? சுpங்களவர்களில் விருப்பமும் தமிழரில் வெறுப்பும் அடைந்துள்ளார்களா? என்ற கேள்விகளை நோக்க வேண்டும். முன்பு, “பயங்கரவாதம்” எனும் அப்பட்டமான பொய் எமக்குக் கூறப்பட்டது. ஆனால், இப்போது உண்மை வேறு, என எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர். வெளிப்படையான காரணமென்னவெனில், தமிழ் மக்கள் தங்கள் பிரதேசங்களில் சிங்களவரிலும் ஆறு மடங்குக்கும் மேலான தொகையைக் கொண்டிருந்தபோதும், தமது பிரதேச வலுவைப் பாவிக்காதவிடத்து, சிங்களவர்கள் அவர்களது பிரதேசத்திலிருந்த பூகோள அரசியல் வலுவை நீண்ட காலமாகப் பாவித்து வந்தனர். இனிமேல், சுதந்திரம் தமிழர்களுக்கு வேண்டுமானால், அதனை இந்தியக் கடலின் இருபுறமும் இருக்கும் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இணைந்துதான் பெற முடியும். தமிழ்நாட்டின் அரசுகள் டெல்லியின் கோணலான அரசியல் கொள்கைகளைத் தட்டிக்கேட்காது, விட்டமையால் இந்தப் பூகோள அரசியலை நிலைநாட்டாத பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். ஆனால், இவ்விடயத்தில் சரித்திரத்தில் பதியப்பட வேண்டிய பெருந்தவறை இழைத்த பொறுப்பு முற்றாகக் கருணாநிதியையே சாரும். கருணாநிதி ஒரு முக்கிய தருணத்தில் இப்பூகோள அரசியல் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தத் தவறியதோடு, தமிழீழக் கொள்கையைச் சட்டசபையில் எதிர்த்ததன் மூலம், தமிழர் விடுதலையையும் அதன் சர்வதேச அங்கீகாரத்தையும் நாசம் செய்தார். அவர் தமிழ் மக்கள் தமிழீழ அங்கீகாரத்தைக் கோரும் வேளை அமைதி காத்துவிட்டு, ஆயுதப்போர் தோல்வியடைந்த வேளையில் அதை மறுத்ததன் மூலம் தமிழரின் பூகோள அரசியல் வலிமையை முற்றாக ஒழித்தார். இலங்கையில், தமிழ் மக்கள் விடுதலை பெறும் சூழ்நிலையில் தற்போது இல்லாதபோது, தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழீழம் பற்றிப் பேசுவதில் என்ன பயன் எனச் சில தமிழ்வட்டாரங்கள் சிந்திக்கின்றன. இதில் அவர்கள் தவறிழைக்கின்றார்கள். பூகோள அரசின் நிலையால்தான் இக்கதி ஏற்பட்டதால் அதை மாற்ற வெளிநாட்டிலிருந்தே அழுத்தம் கொடுத்து இந்தப் பூகோள அரசியல் சமன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திர இறையாண்மையுள்ள தமிழீழத்தை அங்கீகரிக்கும் மீள்வாக்கெடுப்பினை நடாத்தியுள்ளார்கள். இத்தகைய ஜனநாயக முயற்சியினால் பூகோள அரசியலை நிலை நிறுத்துவதிலும் அரசியல் அமைப்புக்கு அத்திவாரம் இடுதலிலும் ஏற்படும் விளைவுகள் பல தரப்பட்டவையாகும். இத்தகைய குரலும், பூகோள அரசியலுக்குக் கொடுக்கப்படும் உறுதிப்பாடும் உலகளாவிய எல்லாத் தமிழர்களாலும் திடமாகப் பிரதிபலிக்கப்பட வேண்டும். உலக அரசியல் எனும் பெயரில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இனஅழிப்புக் குற்றங்கள் நடைபெற்று இருப்பதால், தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தமிழகத்தின் அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்து தங்களது முழு ஆற்றலைத் திரட்டி ஜனநாயக வழியில் போராடுவதற்கு இதுவே தக்க தருணம் ஆகும். வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரளா உட்பட தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து இத்தகையப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லும் தலையாயப் பொறுப்பு தமிழகத்திடம் உள்ளது. அடக்குமுறையின் கீழ் இருந்தபோதும், இலங்கைத் தீவில் இருக்கும் அரசியல்வாதிகள் கூட்டாச்சிச் சதிகளிடமிருந்து விலகித் தமது அரசியலமைப்பை வழிநடாத்தும் ஒரு சரித்திர முக்கியத்துவம் பெறும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. சில அடிப்படைவாதிகளும் உணர்வாளர்களும் எல்லாத் தமிழ் பேசும் மக்களை ஓருமைப்படுத்தவும், தமிழ் தலைநகரத்தைக் கொழும்பிலிருந்து அகற்றவும், எமது சமூக நலன் கருதி, குடியேற்றம் புரிபவர்களையும் அவரது ஆதரவாளர்களையும் எதிர்த்து நம்பகமான ஜனநாயகக் கட்டுமானங்களை வளர்க்கவும் முன் வருகின்றனர். இன்று, தெற்கில் யதேச்சதிகாரம் நிலவும் நிலையில், சிங்களர்கள் தமிழர்களால் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும், எமது அரசியல் அத்திவாரங்கள், “யாதும் ஊரே: யாவரும் கேளிர்” என்ற அடிப்படையிலேயே அமைக்கப்பட வேண்டும்.

பலி கேட்கும் தமிழ்க் கண்ணீர்..!

ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எத்தனை தமிழ்ப் பெண்கள் துடித்துக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள்..! இலங்கைத் தீவைச் சற்றியுள்ள அலைகளில் கடல்நீரைக் காட்டிலும் அவர்களின் கண்ணீரல்லவா அதிகம் கலந்திருக்கிறது! ராஜபக்ஷேவின் உத்தரவைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழரின் உயிரையும் மானத்தையும் வேட்டையாடித் தீர்த்த சரத் ஃபொன்சேகா கைதானதைத் தொடர்ந்து, அவர் மனைவி அனோமா 'வலியறிந்து' கண்ணீர் வடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது, இரக்கமுள்ள கண்கள்கூட ஈரப்படாமல் இருப்பதும் நியாயம்தானோ?! தன் தலைமையிலான ராணுவத்தின் சித்ரவதைகளில் சிக்கி மாண்ட தமிழ் மக்களின் சாபமோ என்னவோ... தான் தலைமை அதிகாரியாக கோலோச்சிய அதே ராணுவக் கூடாரத்தில் கைதியாக அமர வைக்கப் பட்டிருக்கிறார் ஃபொன்சேகா. சட்டத்தின் பெயரால் சதித்தனம் மட்டுமே அரங்கேற்றும் அதிபர் ராஜபக்ஷே, அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறார் என்பது திகில் நிறைந்த பரபரப்பு! 'வடக்கை மீட்போம்' என்ற கோஷத்துடன் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப் போரினை, இலங்கையின் ராணுவத் தளபதி யான ஃபொன்சேகாதான் முன்னின்று நடத்தியவர். போர் முடியும் வரை ஓருடல் ஈருயிராக இருந்தவர்கள்தான் அதிபர் ராஜ பக்ஷேவும், ஃபொன்சேகாவும். ஆனால், போரில் வெற்றி கிடைத்த மாத்திரத்திலேயே இரு தரப்பும் முட்டிக் கொள்ளத் தொடங்கின. ஒருகட்டத்தில் அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ஃபொன்சேகா களமிறங்கினார். இறுதியில் அமோக வெற்றி பெற் றார் ராஜபக்ஷே. அப்போதே ஃபொன்சேகாவை குறிவைத்த அதிபர் தரப்பு, கடந்த 8-ம் தேதி இரவு அதிரடியாக அவரை வளைத்திருக்கிறது. இலங்கையின் பத்திரிகையாளர்கள் சிலரிடத்தில் பேசினோம். ''தேர்தல் முடிந்த பிறகு ஃபொன்சேகாவை கைது செய்வதற்கு வசதியாக அவரின் மீது பல்வேறு வழக்குகளை சத்தமில்லாமல் பதிந்து வந்தனர் ராணுவ போலீஸார். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஃபொன்சேகா சொன்னபோதே, அவர் மீது ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக ஒரு வழக்கு ரகசியமாகப் பதிவானது. அவரது அலுவலகத்துக்கு சோதனை என்ற பெயரில் சென்றது பிரிகேடியர் நந்தன ராஜகுரு தலைமையிலான ராணுவப் புலனாய்வுப் பிரிவு. அப்போது அங்கு மோதல் ஏற்பட... ஃபொன்சேகா ராணுவ வீரர்களைத் தாக்கியதாகவும் ராணுவ ரகசியங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் வழக்குப் பதிவானது. தேர்தல் சமயத்தில் ராணுவத்திலிருந்து பணியாற்றி விலகிய மேஜர் ஜெனரல் ஜனக வல்கம என்பவர் நாட்டின் பல பகுதிகளிலும் ராணுவத்திலிருந்து ஓடிய, விலகிய 1,200-க்கும் மேற்பட்ட வீரர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்தார். தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு மல்வத்தை பௌத்த விகாரையில் இந்தக் குழுவினரால் பெருந்தொகையி லான ஆயுதக் குவியலொன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக எம்.ஐ.எஸ். மற்றும் டி.எம்.ஐ. ஆகிய இலங்கையின் புலனாய்வு நிறுவனங்கள் மிக அவசரகால அலர்ட் ஒன்றை அரசுக்கு அனுப்பியது. அதன் படி பிரிகேடியர் சுசில் உடு மல்லகல்லே தலைமையில் ராணுவத்தின் விஷேச அதிரடிப்படை அந்த விகாரையில் சோதனை நடத்தி, அந்த ஆயுதக் குவியலைக் கைப்பற்றியது. இந்த விஷயத்தை வெளியே கசிய விடாத அரசுத் தரப்பு, அப்போதே ஃபொன்சேகாவின் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்து வாரண்டும் வாங்கி விட்டது. இந்த சமயத்தில்தான், ஒருவேளை தேர்தலில் தான் தோற்க நேர்ந்தால் தன் வசமிருக்கும் கமாண்டோ படை வீரர்களின் உதவியுடன் அதிபர் குடும்பத்தை கொன்று, ராணுவ ஆட்சியை அமல்படுத்த ஃபொன்சேகா திட்ட மிட்டிருந்தார் என்று புகார்கள் கிளம்பியது. இதற்காகவே அலரி மாளிகை செல்லும் வழியில் இருக்கும் சினமன் லேக் வியூ ஹோட்டலில் 100 அறைகளை புக் செய்து அங்கு 400 வீரர்களையும் ஃபொன்சேகா தங்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. இதற்கிடையில், போர்க்காலத்தில் ஃபொன்சேகாவால் விரட்டப்பட்ட 57-வது டிவிஷனின் முதல் தளபதியான மேஜர் ஜெனரல் சுமீத் மானவடுகேயை கையிலெடுத்த கோத்தபய, அவரைப் போன்ற 32 அதிருப்தி ராணுவ அதிகாரிகளை ஒருங்கிணைத்தார். அடுத்த கட்டமாக ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக ராணுவத்தில் இருந்த முக்கிய அதிகாரிகள் சுமார் 60 பேரின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது அரசு. இதில் சிலரை கட்டாய ஓய்வில் அனுப்பியது. சுமார் 17 அதிகாரிகளை கைது செய்த ராணுவ போலீஸார், அவர்களை மலபே என்ற இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது ராணுவத்தின் 211-வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிகொலன அளித்த வாக்குமூலத்தில் பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கே, த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரது கொலைகள் ஃபொன்சேகாவின் உத்தரவின்படியே நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது. அப்போதே இரண்டு கொலை வழக்குகளும் பொன்சேகா மீது பதியப்பட்டுள்ளன...'' என விரிவாகச் சொன் னார்கள். ஃபொன்சேகா கைது செய்யப்பட்ட சமயத்தில் அவரது அலுவலகத்தில் இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனிடம் பேசினோம். ''அரசின் குற்றச்சாட்டுகளை எல்லாம் அடியோடு மறுத்த ஜெனரல், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடிவெடுத்தார். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, கறுப்புப் பட்டியலில் வைத்தது அரசு. கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்புதான், 'அரசாங்கம் என் மீது குற்றம்சாட்டும் எந்த விஷயத்திலும் உண்மையில்லை. அதனால்தான் என்னை இதுவரை கைது செய்யவில்லை!' என மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார் ஃபொன்சேகா. அதோடு சரணடைய வந்த விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற அவரது குற்றச்சாட்டுக்கு அன்றைய தினம்தான் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்தா சமரசிங்கே தலைமையில் இலங்கை குழுவினர் ஐ.நா-வில் விளக்கம் அளிக்கச் சென்றிருந்தனர். அது தொடர்பாகவும் பேசிய ஜெனரல், 'போரில் நான் பார்த்த, கேள்விப்பட்ட நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன. அவற்றை எந்த சமயத்திலும், எங்கு வேண்டுமானாலும் வெளியிடத் தயார். நடந்த உண்மைகளைச் சொல்வதைத் தேசத் துரோகம் என்று சொல்வது சரியில்லை...' என பேசியிருந்தார். அதோடு, ஐ.நா-விடத்திலும் சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள ஜெனரல் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். அதைத் தடுக்கவே ஜெனரலை வளைத்திருக்கிறது அரசு...'' என்றார் மனோ கணேசன். கைது காட்சிகளைக் கண்ட இன்னொரு வரான ரவூப் ஹக்கீம் நம்மிடம், ''ஜெனரல் அலுவலகத்தின் முதல் மாடியில்தான் விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது மேஜர் ஜெனரல் சுமீத் மானவடுகே தலைமையில் ஒரு படை மேலே வந்தது. பாதுகாவலர்களிடம் இருந்த எல்லா ஆயுதங்களையும் பிடுங்கிய அவர்கள், ஜெனரலை கைது செய்வதாகக் கூறினர். ஜெனரல் சில வார்த்தைகளைச் சொல்ல, அதில் கடுப்பான சுமீத் மானவடுகே, 'இழுத்து வாருங்கள் அந்த நாயை!' என சப்தம் போட்டார். உடனே வெறிநாய்கள் கணக்காக 10-க்கும் மேற்பட்டோர் ஜெனரலின் மீது பாய்ந்து, அவரை குண்டுக்கட்டாகத் தூக்கினார். ஜெனரல் திமிறவும், அவரது பிடரியில் ஓங்கி அடித்தான் ஒருவன். பின்னர் அவரைத் தரதரவென கீழே இழுத்து வந்து, விலங்கு மாட்டினார்கள். இப்படியரு வெறித்தாண்டவம் மூலமாக ஜனநாயகத்தையே புதைத்து விட்டார் ராஜபக்ஷே!'' என்றார் கொந்தளிப்பாக. ஃபொன்சேகாவை விடுவிக்கக் கோரி, இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்ஷேவின் நடவடிக் கைகள் நாட்டைப் பிளவுபடுத்தவே செய்யும் என்றும் கண்டித்திருக்கிறார். இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் இணைந்து கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பெரும் கலவரம் வெடித்திருக்கிறது. ஃபொன்சேகா விஷயத்தில் ராஜ பக்ஷே அடுத்தகட்டமாக எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்துப் பேசும் கொழும்புப் புள்ளிகள் சிலர், ''1957-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை ராணுவச் சட்டத்தின்படி ஃபொன் சேகா மீது சுமத்தப்பட்டிருக்கும் நான்கு முக்கியக் குற்றச்சாட்டுகளை மூன்றே வாரத்துக்குள் விசாரித்து முடித்து, ஆயுள் அல்லது தூக்கு தண்டனையை நிறை வேற்ற சாத்தியம் இருக்கிறது. இந்த விஷயத்தில் சர்வதேச அழுத்தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் ராஜபக்ஷே, ஃபொன்சேகாவை ஆயுள் தண்டனைக்கு உள்ளாக்கவே விரும்புகிறார். ஆனால் அவருடைய தம்பியான கோத்தபய, 'இதோடு ஃபொன்சேகாவுக்கு நிரந்தர முடிவு கட்டிவிட வேண்டும்' என்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்' என்கிறார்கள். இலங்கையின் முக்கியஸ்தர்களோ, ''அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஃபொன்சேகாவுக்குமிடையே மோதல்கள் உருவாகியிருந்தது. ரணில் சில கருத்துகளை வலியுறுத்த, ஃபொன்சேகாவோ 'கூட்டணியை மாற்றக் கூடாது, தன்னையே பிரதான வேட்பாளராக அறிவிக்க வேண்டும், அன்னப் பறவை சின்னத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தினார். இதனால் கூட்டணியே உடைகிற சூழல் உண்டானது. இந்த சமயத்தில்தான் ஃபொன்சேகாவை வளைத்திருக்கிறது அதிபர் தரப்பு. எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடையவிருந்த நேரத்தில், கைது நடவடிக்கையால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஓரணியில் இணைந்துள்ளன!'' என்கிறார்கள். ஃபொன்சேகாவின் கைதை, ஐ.நா உள்ளிட்ட பன்னாட்டு அரசுகளும் கண்டிக்கும் சம்பிரதாயமும் அரங்கேறி யிருக்கிறது. மொத்தத்தில், தமிழர்களை கதறச் செய்த ஃபொன் சேகாவின் கொடுவினைகள் இப்போது மொத்தமாக சேர்ந்து வந்து பலி கேட்கிறது! அம்புக்கு இன்று தண்டனை... எய்த அதிபருக்கு என்று வரும் அந்த நாள்?! ஃபொன்சேகா கைது செய்யப்பட்டதும் அன்றே அவரது இளைய மகள் அபர்ணா ஆரம்பித்திருக்கும் வலைப் பக்கம், இணைய தளத்தில் பெரிய தாக்கத்தை வீசி வருகிறது. http://thissidesrilanka.blogspot.com என்ற முகவரியில் இயங்கும் அந்த வலைப் பக்கத்தின் தலைப்பே 'ஜெனரல் ஃபொன்சேகாவின் மகள்' என்றுதான் இருக்கிறது. 'எங்கே என் அப்பா?' என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் பதிவில், ''தாய் நாட்டுக்காக 40 ஆண்டு காலம் உழைத்தவர். வாரண்டோ சரியான காரணமோ சொல்லாமல் என் தந்தையை கைது செய்தார்கள். மேஜர் ஜெனரல் சுமீத் மானவடுகே என்கிறவர்தான் என் தந்தையின் கைதில் முக்கிய ரோல் வகித்திருக்கிறார். சிறந்த ஆர்மி கமாண்டர் என்கிற விருது பெற்றிருக்கும் என் தந்தையை பற்றி அரசாங்கம் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே அபாண்டம்!'' என்றும் அந்தப் பதிவில் சீறியிருக்கிறார் அபர்ணா. ''நீதிமன்றம் என் கணவரைக் காப்பாற்றும்!'' ஐ.தே. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.ஜயலத் ஜயவர்தன மூலமாக அனோமா ஃபொன்சேகாவுக்கு சில கேள்விகளை மெயிலில் அனுப்பினோம். அதில் ஐந்து கேள்விகளுக்கு மட்டும் அனோமா தரப்பிலிருந்து பதில்கள் வந்தன... ''ஃபொன்சேகாவின் கைதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' ''எனது கணவர் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டிருக்கிறார். 30 வருட தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த எனது கணவரை, இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். நடந்த எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள்.'' ''உங்கள் கணவரை சந்தித்தீர்களா?'' ''கைதுக்கு மறுதினம் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. அதற்கு மறுதினம்தான் அனுமதித்தனர். கடற்படை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் ஒரு மாடியில் அவரை வைத்திருந்தனர். நான் அவரை சந்திக்கும்வரை அவர் நீரோ, உணவோ அருந்தாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரம் பசியுடன்தான் இருந்தார். நானும், எங்களது வழக்கறிஞருமான விஜயதாஸ ராஜபக்ஷேவும்தான் அவரைச் சந்தித் தோம். விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்கு தலில் சிக்கி உயிர் பிழைத்ததிலிருந்து, ஒவ்வொரு ஆறு மணி நேரத்துக்கும் அவர் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். ஆனால், மருந்துகள் அவருக்கு வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அவரைப் பார்ப்பதற்கு அனுமதித்திருக்கின்றனர்.'' ''கணவரை மீட்க என்ன செய்யப் போகிறீர்கள்?'' ''இந்த நாட்டில் ஜனநாயகம் மறைந்து போயிருந்தாலும், நீதிமன்றத் தின் மீது எங்களுக்கு நம்பிக் கையிருக்கிறது. அதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறோம். இதுவு மில்லாமல் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு இலங்கையில் ஜனநாயகத்தை வென்றெடுத்து எனது கணவரை மீட்போம்.'' ''நீங்கள் தேர்தலில் களமிறங்கப் போகிறீர்களாமே?'' ''இப்போதைக்கு எனது கணவரை விடுவிக்க வைப்பதுதான் எனது நோக் கம். இருந்தாலும் எனது கணவரின் அரசியல் நடவடிக்கைகள் அவர் கைது செய்யப்பட்டதால், தொய்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது எனது கடமை. அதற்கான வேலைத் திட்டங்களில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன்.'' ''லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த பாவம்தான் உங்களது கணவரை இப்போது பழிவாங்குவதாக தமிழர்கள் தரப்பில் பேச்சிருக்கிறதே?'' ''எனது கணவர் யாரையும் கொன்று குவிக்கவில்லை. அவர் ஒரு ராணுவத் தளபதியாக நின்று கடமையை நிறைவேற்றி னார். நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்த தீவிர வாதிகளைத்தான் ஒழித்தார். அப்பாவி தமிழ் மக்களை அவர் ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் தேர்தல் சமயத்தில்கூட தமிழ் மக்களுக்காக 13-வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று தீர்வு காணத் தயார் என்று அறிவித்தார். தேர்தலிலும் தமிழ் மக்கள்தான் எங்களுக்கு வாக்களித்தனர். அதனால் அவர்கள் கண்ணீர் எங்களைப் பழிவாங்குவதாக நான் நினைக்கவில்லை!''

கருணா அரச விடுதியில்! பொன்சேகா சிறையிலா? - தென்பகுதியில் களைகட்டும் ஆர்ப்பாட்டம்

ஜெனரல் சரத் பொன்சேகா சட்ட ரீதியற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் நீதிமன்றத் தெருக்களில் சட்டத்தரணிகள் நேற்று ஒரு ஆர்ப்பாட்ட ஊர் வலத்தை நடத்தியுள்ளனர். இதேவேளை யஹாரணவிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். பல்வேறு சுலோகங்களுடன் கூடிய அட்டைகளைத் தாங்கிய வண்ணம் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முன்னர் தேசிய வீரர் இப்போது துரோகியா? கருணா அரச விடுதியில் ஜெனரலோ சிறை யில், ஜெனரலே நாங்கள் உங்களோடுதான் போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர் கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அமைப் புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஐக்கிய தேசியக் கட் சியின் யஹாரண அமைப்பாளர் ரவி ஜெய வர்த்தன , பேராசிரியர் விமல் குணவர்த்தன , பி.டி.அபேவர்த்தன ஆகியோர் இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜெனரல் பொன்சேகாவை கைது செய்தவர்களுக்கு இடி விழட்டும் எனக் கூறி பொதுமக்கள் தேங் காய்களை உடைத்துள்ளனர்.இதேவேளை அநுராதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை இனந்தெரியாதவர்கள் தாக்கிக் கலைக்க முற்பட்டுள்ளனர்.

லண்டனிலுள்ள முருகதாசின் கல்லறையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வர்ணகுலசிங்கம் முருகதாஸ் லண்டனிலிருந்து சுவிஸ் சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொழுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளாண நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது. இருபதிற்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளோடு இணைந்து இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அபயக்குரல் எழுப்பினர். அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருந்தனர் . தாய்த் தமிழகத்தில் மாணவர்கள் கல்லூரியை மூடிவிட்டு தெருவில் இறங்கி போராடினர். தமிழ்சமுதாயம் மனிதசங்கிலி கோர்த்து ஈழத்தில் தமிழ் மக்களுக்கெதிரானப் போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பரித்தனர் . ஆனால், சிங்கள பேரினவாத அரசை தடுப்பதற்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை. இந்த நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அங்கத்தினர் நாடுகளும் அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலையை அலட்சியப்படுத்தின . வெகுண்டு எழுந்தனர் தமிழ் இளைஞர்கள். இந்திய அரசையும் சர்வதேச நாடுகளையும் ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரி, தங்களது தேக்கு மர உடலை தாங்களே தீமூட்டி தீக்கிரயாகினார்கள். முத்துக்குமார் தொடங்கி முருகதாசன் வரை தமிழகம், மலேசியா மற்றும் பிரித்தானியா வரை வாழும் 19 வீரமிக்க தமிழ் இளைஞர்கள் தமிழின படுகொலையை நிறுத்தக்கோரி தங்களது உயிரைக் காணிக்கையாக்கினார்கள் . அப்பாவித் தமிழ் மக்களின் இனஅழி;ப்பை தடுக்க இயலாத ஐ.நா.சபைக்கு முன்பாக உயிர்க்கொடை கொடுத்த , முருகதாசனின் தியாகம் உலகம் முழுவதையுமே உலுக்கிய ஒரு சக்தியாக மாறியதோடல்லாது, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தமிழீழத்தில் புரிந்த கொடுமைகளை, தமிழின அழிப்பை, இனப்படுகொலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது . முருகதாசன் உடல் எரிந்திருக்கலாம். ஆனால் அம்மாவீரனது உயிரும் உணர்வுகளும் உலகம் முழுதும் வாழும் ஒன்பது கோடித் தமிழர்களது ஒவ்வொரு நெஞ்சத்திலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது . முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை செய்த உயிர்த்தியாகமானது இன்று உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது. இலண்டனில், இன்று முருகதாசனின் கல்லரையில் கூடிய பிரித்தானியாவாழ் தமிழர்கள் அனைவரும், ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினத்தின் இனப்படுகொலைக்கு , சர்வதேச நீதி விசாரனைக் கிடைக்கும்வரை போராட உறுதி பூண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

நோர்வே-அமெரிக்க நாடுகளின் மறுப்பை ஏற்றார் வெளியுறவு அமைச்சர்

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுக்கு நோர்வே தூதரகமும் அமெரிக்கத் தூதரகமும், அளித்த மறுப்பை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை குறித்த இரண்டு நாடுகளின் தூதரகங்களும் கடுமையான தொனியில் நிராகரித்திருந்தன. அத்துடன் அந்த தூதரகங்கள் இரண்டும், நிராகரிப்பு ஆவணத்தை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கையளித்திருந்தன. இந்தநிலையில் குறித்த நிராகரிப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, இந்த விடயத்தை தொடர்ந்தும் விவாதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சரத் பொன்சேகாவை, கைது செய்தமைக்காக தகுந்த காரணங்கள் உள்ளதாக ரோஹித்த போகல்லாகம, நேற்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய இராணுவச் சட்டப்படி, இராணுவ சட்டம் இலக்கம் 17,1949 ஆம் ஆண்டுக்கமைய சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தில் இருந்து விலகி ஒன்றரை வருடங்களுக்கு இராணுவ சட்டத்தின் மூலம் வீரர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இந்தநிலையில், இராணுவ நீதிமன்றத்தில் பிரதிவாதியான சரத் பொன்சேகா தமக்காக வழக்காட எத்தனை சட்டத்தரணிகளையும் நியமிக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது இராணுவ நீதிமன்ற ஒழுங்கில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவை கைதுசெய்த அதிகாரி மரணப்பயத்தில் உள்ளார்

இராணுவத்தினரால் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்காவை அவரது அலுவலகத்திலிருந்து பலவந்தமாக இழுத்துச் சென்ற இராணுவக் காவல்துறைப் பிரிவிற்கு கட்டளைப் பிறப்பித்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரண பயத்தில் காணப்படுவதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மானவடு தனது வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து வருவதாகவும் அலுவலகத்தை விட்டு வெளியே வராது தமது அலுவலகத்திற்குள்ளே இருப்தாகவும், அதிகாரிகளின் உணவகத்திற்குக் கூட அவர் செல்வதில்லை எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவம் மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள மானவடு, இராணுவத்தில் எந்தவொரு பணியில் பங்கேற்பத்தைத் தவிர்த்துவருவதுடன் இராணுவத்திலுள்ள படைச் சிப்பாய்களை எதிர்கொள்வதிலும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அலுவலகப் பணியொன்றுக்காக இராணுவ அதிகாரியொருவர் மானவடுவைச் சந்திக்க வேண்டுமாயின் அந்த அதிகாரிகள் ஆயுதங்கள் இன்றியே வரவேண்டும் என மானவடுவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 40 இராணுவத்தினரைத் தனது பாதுகாப்புக்கு வைத்துள்ள மானவடு மேலதிக துருப்பினர் எவரும் தனது அலுவலகத்திற்கு வருவதைத் தடைசெய்துள்ளார். இராணுவத்திற்குள்ளிருந்து எவராயினும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தம்மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக்கிடைத்ததை அடுத்து மானவடு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.