சனி, 13 பிப்ரவரி, 2010

லண்டனிலுள்ள முருகதாசின் கல்லறையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வர்ணகுலசிங்கம் முருகதாஸ் லண்டனிலிருந்து சுவிஸ் சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொழுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளாண நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது. இருபதிற்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளோடு இணைந்து இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அபயக்குரல் எழுப்பினர். அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருந்தனர் . தாய்த் தமிழகத்தில் மாணவர்கள் கல்லூரியை மூடிவிட்டு தெருவில் இறங்கி போராடினர். தமிழ்சமுதாயம் மனிதசங்கிலி கோர்த்து ஈழத்தில் தமிழ் மக்களுக்கெதிரானப் போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பரித்தனர் . ஆனால், சிங்கள பேரினவாத அரசை தடுப்பதற்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை. இந்த நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அங்கத்தினர் நாடுகளும் அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலையை அலட்சியப்படுத்தின . வெகுண்டு எழுந்தனர் தமிழ் இளைஞர்கள். இந்திய அரசையும் சர்வதேச நாடுகளையும் ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரி, தங்களது தேக்கு மர உடலை தாங்களே தீமூட்டி தீக்கிரயாகினார்கள். முத்துக்குமார் தொடங்கி முருகதாசன் வரை தமிழகம், மலேசியா மற்றும் பிரித்தானியா வரை வாழும் 19 வீரமிக்க தமிழ் இளைஞர்கள் தமிழின படுகொலையை நிறுத்தக்கோரி தங்களது உயிரைக் காணிக்கையாக்கினார்கள் . அப்பாவித் தமிழ் மக்களின் இனஅழி;ப்பை தடுக்க இயலாத ஐ.நா.சபைக்கு முன்பாக உயிர்க்கொடை கொடுத்த , முருகதாசனின் தியாகம் உலகம் முழுவதையுமே உலுக்கிய ஒரு சக்தியாக மாறியதோடல்லாது, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தமிழீழத்தில் புரிந்த கொடுமைகளை, தமிழின அழிப்பை, இனப்படுகொலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது . முருகதாசன் உடல் எரிந்திருக்கலாம். ஆனால் அம்மாவீரனது உயிரும் உணர்வுகளும் உலகம் முழுதும் வாழும் ஒன்பது கோடித் தமிழர்களது ஒவ்வொரு நெஞ்சத்திலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது . முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை செய்த உயிர்த்தியாகமானது இன்று உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது. இலண்டனில், இன்று முருகதாசனின் கல்லரையில் கூடிய பிரித்தானியாவாழ் தமிழர்கள் அனைவரும், ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினத்தின் இனப்படுகொலைக்கு , சர்வதேச நீதி விசாரனைக் கிடைக்கும்வரை போராட உறுதி பூண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக