சனி, 13 பிப்ரவரி, 2010

பலி கேட்கும் தமிழ்க் கண்ணீர்..!

ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எத்தனை தமிழ்ப் பெண்கள் துடித்துக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள்..! இலங்கைத் தீவைச் சற்றியுள்ள அலைகளில் கடல்நீரைக் காட்டிலும் அவர்களின் கண்ணீரல்லவா அதிகம் கலந்திருக்கிறது! ராஜபக்ஷேவின் உத்தரவைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழரின் உயிரையும் மானத்தையும் வேட்டையாடித் தீர்த்த சரத் ஃபொன்சேகா கைதானதைத் தொடர்ந்து, அவர் மனைவி அனோமா 'வலியறிந்து' கண்ணீர் வடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது, இரக்கமுள்ள கண்கள்கூட ஈரப்படாமல் இருப்பதும் நியாயம்தானோ?! தன் தலைமையிலான ராணுவத்தின் சித்ரவதைகளில் சிக்கி மாண்ட தமிழ் மக்களின் சாபமோ என்னவோ... தான் தலைமை அதிகாரியாக கோலோச்சிய அதே ராணுவக் கூடாரத்தில் கைதியாக அமர வைக்கப் பட்டிருக்கிறார் ஃபொன்சேகா. சட்டத்தின் பெயரால் சதித்தனம் மட்டுமே அரங்கேற்றும் அதிபர் ராஜபக்ஷே, அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறார் என்பது திகில் நிறைந்த பரபரப்பு! 'வடக்கை மீட்போம்' என்ற கோஷத்துடன் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப் போரினை, இலங்கையின் ராணுவத் தளபதி யான ஃபொன்சேகாதான் முன்னின்று நடத்தியவர். போர் முடியும் வரை ஓருடல் ஈருயிராக இருந்தவர்கள்தான் அதிபர் ராஜ பக்ஷேவும், ஃபொன்சேகாவும். ஆனால், போரில் வெற்றி கிடைத்த மாத்திரத்திலேயே இரு தரப்பும் முட்டிக் கொள்ளத் தொடங்கின. ஒருகட்டத்தில் அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ஃபொன்சேகா களமிறங்கினார். இறுதியில் அமோக வெற்றி பெற் றார் ராஜபக்ஷே. அப்போதே ஃபொன்சேகாவை குறிவைத்த அதிபர் தரப்பு, கடந்த 8-ம் தேதி இரவு அதிரடியாக அவரை வளைத்திருக்கிறது. இலங்கையின் பத்திரிகையாளர்கள் சிலரிடத்தில் பேசினோம். ''தேர்தல் முடிந்த பிறகு ஃபொன்சேகாவை கைது செய்வதற்கு வசதியாக அவரின் மீது பல்வேறு வழக்குகளை சத்தமில்லாமல் பதிந்து வந்தனர் ராணுவ போலீஸார். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஃபொன்சேகா சொன்னபோதே, அவர் மீது ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக ஒரு வழக்கு ரகசியமாகப் பதிவானது. அவரது அலுவலகத்துக்கு சோதனை என்ற பெயரில் சென்றது பிரிகேடியர் நந்தன ராஜகுரு தலைமையிலான ராணுவப் புலனாய்வுப் பிரிவு. அப்போது அங்கு மோதல் ஏற்பட... ஃபொன்சேகா ராணுவ வீரர்களைத் தாக்கியதாகவும் ராணுவ ரகசியங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் வழக்குப் பதிவானது. தேர்தல் சமயத்தில் ராணுவத்திலிருந்து பணியாற்றி விலகிய மேஜர் ஜெனரல் ஜனக வல்கம என்பவர் நாட்டின் பல பகுதிகளிலும் ராணுவத்திலிருந்து ஓடிய, விலகிய 1,200-க்கும் மேற்பட்ட வீரர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்தார். தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு மல்வத்தை பௌத்த விகாரையில் இந்தக் குழுவினரால் பெருந்தொகையி லான ஆயுதக் குவியலொன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக எம்.ஐ.எஸ். மற்றும் டி.எம்.ஐ. ஆகிய இலங்கையின் புலனாய்வு நிறுவனங்கள் மிக அவசரகால அலர்ட் ஒன்றை அரசுக்கு அனுப்பியது. அதன் படி பிரிகேடியர் சுசில் உடு மல்லகல்லே தலைமையில் ராணுவத்தின் விஷேச அதிரடிப்படை அந்த விகாரையில் சோதனை நடத்தி, அந்த ஆயுதக் குவியலைக் கைப்பற்றியது. இந்த விஷயத்தை வெளியே கசிய விடாத அரசுத் தரப்பு, அப்போதே ஃபொன்சேகாவின் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்து வாரண்டும் வாங்கி விட்டது. இந்த சமயத்தில்தான், ஒருவேளை தேர்தலில் தான் தோற்க நேர்ந்தால் தன் வசமிருக்கும் கமாண்டோ படை வீரர்களின் உதவியுடன் அதிபர் குடும்பத்தை கொன்று, ராணுவ ஆட்சியை அமல்படுத்த ஃபொன்சேகா திட்ட மிட்டிருந்தார் என்று புகார்கள் கிளம்பியது. இதற்காகவே அலரி மாளிகை செல்லும் வழியில் இருக்கும் சினமன் லேக் வியூ ஹோட்டலில் 100 அறைகளை புக் செய்து அங்கு 400 வீரர்களையும் ஃபொன்சேகா தங்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. இதற்கிடையில், போர்க்காலத்தில் ஃபொன்சேகாவால் விரட்டப்பட்ட 57-வது டிவிஷனின் முதல் தளபதியான மேஜர் ஜெனரல் சுமீத் மானவடுகேயை கையிலெடுத்த கோத்தபய, அவரைப் போன்ற 32 அதிருப்தி ராணுவ அதிகாரிகளை ஒருங்கிணைத்தார். அடுத்த கட்டமாக ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக ராணுவத்தில் இருந்த முக்கிய அதிகாரிகள் சுமார் 60 பேரின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது அரசு. இதில் சிலரை கட்டாய ஓய்வில் அனுப்பியது. சுமார் 17 அதிகாரிகளை கைது செய்த ராணுவ போலீஸார், அவர்களை மலபே என்ற இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது ராணுவத்தின் 211-வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிகொலன அளித்த வாக்குமூலத்தில் பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கே, த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரது கொலைகள் ஃபொன்சேகாவின் உத்தரவின்படியே நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது. அப்போதே இரண்டு கொலை வழக்குகளும் பொன்சேகா மீது பதியப்பட்டுள்ளன...'' என விரிவாகச் சொன் னார்கள். ஃபொன்சேகா கைது செய்யப்பட்ட சமயத்தில் அவரது அலுவலகத்தில் இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனிடம் பேசினோம். ''அரசின் குற்றச்சாட்டுகளை எல்லாம் அடியோடு மறுத்த ஜெனரல், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடிவெடுத்தார். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, கறுப்புப் பட்டியலில் வைத்தது அரசு. கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்புதான், 'அரசாங்கம் என் மீது குற்றம்சாட்டும் எந்த விஷயத்திலும் உண்மையில்லை. அதனால்தான் என்னை இதுவரை கைது செய்யவில்லை!' என மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார் ஃபொன்சேகா. அதோடு சரணடைய வந்த விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற அவரது குற்றச்சாட்டுக்கு அன்றைய தினம்தான் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்தா சமரசிங்கே தலைமையில் இலங்கை குழுவினர் ஐ.நா-வில் விளக்கம் அளிக்கச் சென்றிருந்தனர். அது தொடர்பாகவும் பேசிய ஜெனரல், 'போரில் நான் பார்த்த, கேள்விப்பட்ட நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன. அவற்றை எந்த சமயத்திலும், எங்கு வேண்டுமானாலும் வெளியிடத் தயார். நடந்த உண்மைகளைச் சொல்வதைத் தேசத் துரோகம் என்று சொல்வது சரியில்லை...' என பேசியிருந்தார். அதோடு, ஐ.நா-விடத்திலும் சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள ஜெனரல் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். அதைத் தடுக்கவே ஜெனரலை வளைத்திருக்கிறது அரசு...'' என்றார் மனோ கணேசன். கைது காட்சிகளைக் கண்ட இன்னொரு வரான ரவூப் ஹக்கீம் நம்மிடம், ''ஜெனரல் அலுவலகத்தின் முதல் மாடியில்தான் விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது மேஜர் ஜெனரல் சுமீத் மானவடுகே தலைமையில் ஒரு படை மேலே வந்தது. பாதுகாவலர்களிடம் இருந்த எல்லா ஆயுதங்களையும் பிடுங்கிய அவர்கள், ஜெனரலை கைது செய்வதாகக் கூறினர். ஜெனரல் சில வார்த்தைகளைச் சொல்ல, அதில் கடுப்பான சுமீத் மானவடுகே, 'இழுத்து வாருங்கள் அந்த நாயை!' என சப்தம் போட்டார். உடனே வெறிநாய்கள் கணக்காக 10-க்கும் மேற்பட்டோர் ஜெனரலின் மீது பாய்ந்து, அவரை குண்டுக்கட்டாகத் தூக்கினார். ஜெனரல் திமிறவும், அவரது பிடரியில் ஓங்கி அடித்தான் ஒருவன். பின்னர் அவரைத் தரதரவென கீழே இழுத்து வந்து, விலங்கு மாட்டினார்கள். இப்படியரு வெறித்தாண்டவம் மூலமாக ஜனநாயகத்தையே புதைத்து விட்டார் ராஜபக்ஷே!'' என்றார் கொந்தளிப்பாக. ஃபொன்சேகாவை விடுவிக்கக் கோரி, இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்ஷேவின் நடவடிக் கைகள் நாட்டைப் பிளவுபடுத்தவே செய்யும் என்றும் கண்டித்திருக்கிறார். இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் இணைந்து கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பெரும் கலவரம் வெடித்திருக்கிறது. ஃபொன்சேகா விஷயத்தில் ராஜ பக்ஷே அடுத்தகட்டமாக எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்துப் பேசும் கொழும்புப் புள்ளிகள் சிலர், ''1957-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை ராணுவச் சட்டத்தின்படி ஃபொன் சேகா மீது சுமத்தப்பட்டிருக்கும் நான்கு முக்கியக் குற்றச்சாட்டுகளை மூன்றே வாரத்துக்குள் விசாரித்து முடித்து, ஆயுள் அல்லது தூக்கு தண்டனையை நிறை வேற்ற சாத்தியம் இருக்கிறது. இந்த விஷயத்தில் சர்வதேச அழுத்தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் ராஜபக்ஷே, ஃபொன்சேகாவை ஆயுள் தண்டனைக்கு உள்ளாக்கவே விரும்புகிறார். ஆனால் அவருடைய தம்பியான கோத்தபய, 'இதோடு ஃபொன்சேகாவுக்கு நிரந்தர முடிவு கட்டிவிட வேண்டும்' என்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்' என்கிறார்கள். இலங்கையின் முக்கியஸ்தர்களோ, ''அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஃபொன்சேகாவுக்குமிடையே மோதல்கள் உருவாகியிருந்தது. ரணில் சில கருத்துகளை வலியுறுத்த, ஃபொன்சேகாவோ 'கூட்டணியை மாற்றக் கூடாது, தன்னையே பிரதான வேட்பாளராக அறிவிக்க வேண்டும், அன்னப் பறவை சின்னத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தினார். இதனால் கூட்டணியே உடைகிற சூழல் உண்டானது. இந்த சமயத்தில்தான் ஃபொன்சேகாவை வளைத்திருக்கிறது அதிபர் தரப்பு. எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடையவிருந்த நேரத்தில், கைது நடவடிக்கையால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஓரணியில் இணைந்துள்ளன!'' என்கிறார்கள். ஃபொன்சேகாவின் கைதை, ஐ.நா உள்ளிட்ட பன்னாட்டு அரசுகளும் கண்டிக்கும் சம்பிரதாயமும் அரங்கேறி யிருக்கிறது. மொத்தத்தில், தமிழர்களை கதறச் செய்த ஃபொன் சேகாவின் கொடுவினைகள் இப்போது மொத்தமாக சேர்ந்து வந்து பலி கேட்கிறது! அம்புக்கு இன்று தண்டனை... எய்த அதிபருக்கு என்று வரும் அந்த நாள்?! ஃபொன்சேகா கைது செய்யப்பட்டதும் அன்றே அவரது இளைய மகள் அபர்ணா ஆரம்பித்திருக்கும் வலைப் பக்கம், இணைய தளத்தில் பெரிய தாக்கத்தை வீசி வருகிறது. http://thissidesrilanka.blogspot.com என்ற முகவரியில் இயங்கும் அந்த வலைப் பக்கத்தின் தலைப்பே 'ஜெனரல் ஃபொன்சேகாவின் மகள்' என்றுதான் இருக்கிறது. 'எங்கே என் அப்பா?' என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் பதிவில், ''தாய் நாட்டுக்காக 40 ஆண்டு காலம் உழைத்தவர். வாரண்டோ சரியான காரணமோ சொல்லாமல் என் தந்தையை கைது செய்தார்கள். மேஜர் ஜெனரல் சுமீத் மானவடுகே என்கிறவர்தான் என் தந்தையின் கைதில் முக்கிய ரோல் வகித்திருக்கிறார். சிறந்த ஆர்மி கமாண்டர் என்கிற விருது பெற்றிருக்கும் என் தந்தையை பற்றி அரசாங்கம் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே அபாண்டம்!'' என்றும் அந்தப் பதிவில் சீறியிருக்கிறார் அபர்ணா. ''நீதிமன்றம் என் கணவரைக் காப்பாற்றும்!'' ஐ.தே. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.ஜயலத் ஜயவர்தன மூலமாக அனோமா ஃபொன்சேகாவுக்கு சில கேள்விகளை மெயிலில் அனுப்பினோம். அதில் ஐந்து கேள்விகளுக்கு மட்டும் அனோமா தரப்பிலிருந்து பதில்கள் வந்தன... ''ஃபொன்சேகாவின் கைதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' ''எனது கணவர் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டிருக்கிறார். 30 வருட தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த எனது கணவரை, இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். நடந்த எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள்.'' ''உங்கள் கணவரை சந்தித்தீர்களா?'' ''கைதுக்கு மறுதினம் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. அதற்கு மறுதினம்தான் அனுமதித்தனர். கடற்படை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் ஒரு மாடியில் அவரை வைத்திருந்தனர். நான் அவரை சந்திக்கும்வரை அவர் நீரோ, உணவோ அருந்தாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரம் பசியுடன்தான் இருந்தார். நானும், எங்களது வழக்கறிஞருமான விஜயதாஸ ராஜபக்ஷேவும்தான் அவரைச் சந்தித் தோம். விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்கு தலில் சிக்கி உயிர் பிழைத்ததிலிருந்து, ஒவ்வொரு ஆறு மணி நேரத்துக்கும் அவர் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். ஆனால், மருந்துகள் அவருக்கு வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அவரைப் பார்ப்பதற்கு அனுமதித்திருக்கின்றனர்.'' ''கணவரை மீட்க என்ன செய்யப் போகிறீர்கள்?'' ''இந்த நாட்டில் ஜனநாயகம் மறைந்து போயிருந்தாலும், நீதிமன்றத் தின் மீது எங்களுக்கு நம்பிக் கையிருக்கிறது. அதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறோம். இதுவு மில்லாமல் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு இலங்கையில் ஜனநாயகத்தை வென்றெடுத்து எனது கணவரை மீட்போம்.'' ''நீங்கள் தேர்தலில் களமிறங்கப் போகிறீர்களாமே?'' ''இப்போதைக்கு எனது கணவரை விடுவிக்க வைப்பதுதான் எனது நோக் கம். இருந்தாலும் எனது கணவரின் அரசியல் நடவடிக்கைகள் அவர் கைது செய்யப்பட்டதால், தொய்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது எனது கடமை. அதற்கான வேலைத் திட்டங்களில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன்.'' ''லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த பாவம்தான் உங்களது கணவரை இப்போது பழிவாங்குவதாக தமிழர்கள் தரப்பில் பேச்சிருக்கிறதே?'' ''எனது கணவர் யாரையும் கொன்று குவிக்கவில்லை. அவர் ஒரு ராணுவத் தளபதியாக நின்று கடமையை நிறைவேற்றி னார். நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்த தீவிர வாதிகளைத்தான் ஒழித்தார். அப்பாவி தமிழ் மக்களை அவர் ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் தேர்தல் சமயத்தில்கூட தமிழ் மக்களுக்காக 13-வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று தீர்வு காணத் தயார் என்று அறிவித்தார். தேர்தலிலும் தமிழ் மக்கள்தான் எங்களுக்கு வாக்களித்தனர். அதனால் அவர்கள் கண்ணீர் எங்களைப் பழிவாங்குவதாக நான் நினைக்கவில்லை!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக