சனி, 13 பிப்ரவரி, 2010

B-52 .....?

B-52 வகைக் குண்டுவீச்சு விமானம் மிக நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிய ஒரு விமானமாகும். 1955 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் சேவையில் உள்ள இவ்வகைக் குண்டுவீச்சு விமானங்கள் காலத்திற்குக் காலம் விருத்திசெய்யப்பட்டு நவீன தொழிநுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் ஆறு சுழலி இயந்திரங்களைக் (turbo propeller) கொண்டிருந்த போதிலும் நவீன வடிவங்கள் தாரை இயந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. 32 000 கிலோக்கிராம் வெடிபொருட்களைக் காவிச்செல்லவல்ல இவ்வகை விமானங்கள், பனிப்போர் காலத்திலே அயுவாயுதத் தாக்குதல் நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட போதிலும், இவ்வகை விமானங்கள் இதுவரையான தாக்குதல் நடவடிக்கைகளில் சாதாரண வெடிகுண்டு வீச்சுக்களையே மேற்கொண்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விமானப்படையின் நடவடிக்கைக் கட்டளை மையம், இவ்வகையான நவீன குண்டுவீச்சு விமானங்களின் குணவியல்புகளை (characteristics) வரையறை செங்தது. அவ்வரையறையினடிப்படையில் இவ்வகை விமானங்கள் நீண்டதூர நடவடிக்கைகளைத் தனித்து செய்துமுடிக்கவல்லனவாக உருவாக்கப்பட்டன. இவ்விமானங்கள், மணிக்கு 480 கிலோமீற்றர் வேகத்தில் 10400 மீற்றர் உயரத்தில் 8000 கிலோமீற்றர் வரை தொடர்ச்சியான பறப்பை மேற்கொள்ளவல்லது. Boeing நிறுவனத்தினாற் பரிந்துரைக்கப்பட்ட இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் நேரான இறக்கைகளுடன் ஆறு சுழலி இயந்திரங்களைக் கொண்டதாகக் காணப்பட்டதுடன் 160000 கிலோக்கிராம் சுமையினைக் காவிச்செல்ல வல்லதாகவும் 5010 கிலோமீற்றர் துர்ரம் தொடர் பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் காணப்பட்டது. Boeing நிறுவனத்தாற் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆரம்ப வடிவத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ்வகை விமானங்கள் அமெரிக்க வான்படையின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து 1959 ஆம் ஆண்டிலே அமெரிக்க வான்படை அதனது சேவையிலிருந்து, ஆரம்பகால வடிவம் தவிர்ந்த, அனைத்து B-52 வகைக் குண்டுவீச்சு விமானங்களையும் நவீன கருவிகளுடன் மேம்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்திற்கமைய, சேவையிலிருந்த விமானங்கள் பின்வரும் நான்கு வடிவமைப்பு மாற்றங்களுக்கு (modification) உட்படுத்தப்பட்டன. அனைத்துவிதமான காலநிலை மற்றும் தாழ்வான உயரத்தில் (150 மீற்றர்) பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் சோவியத் ஒன்றியத்தின் வான்பாதுகாப்புப் பொறிமுறையை முறியடிக்க வல்லதாகவும் மாற்றியமைத்தல். AGM-28 Hound Dog அணுவாயுத ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல். ADM-20 Quail ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல். எதிரிப்படைகளின் இலத்திரனியற் கருவிகளைச் செயலிழக்கச் செய்யவல்ல கருவிகளைப் (Electronic Countermeasures) பொருத்துதல். B-52A வகை விமானங்கள் 1951 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்ட போதிலும் அவை பரிசோதனைப் பறப்புக்களில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து B-52B வகை விமானம் 1954 ஆம் ஆண்டு அதன் முதற்பறப்பை மேற்கொண்டது. ஆரம்ப நிலையிவ் இவ்விமானம் பல்வேறுபட்ட பின்னடைவுகளைச் சந்தித்தபோதிலும் படிப்படியான தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இவ்விமானம் இன்று பலமிக்கதொரு போராயுதமாகக் காணப்படுகின்றது. வியட்னாமிய யுத்தத்தின்போது இவ்வகை விமானங்கள் கணிசமானளவிற் பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிக்கும் பாரிய குண்டுவீச்சுக்களில் இவ்வகை விமானங்களே பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிப்பதற்காக இவை குண்டுகளை வீசின என்பதைவிட விதைத்தன என்பதே பொருத்தமாக இருக்கும். ஆம், B-52D வகை விமானங்கள் பெரும்தொகையான குண்டுகளைக் காடுகளுக்குள் கொட்டத்தக்க வகையில் அவற்றின் குண்டுகளைக் காவிச்செல்லும் பகுதிகள் மீள்வடிவமைப்புச் செய்யப்பட்டன. தொடர்ந்து பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் மீதான அணுவாயுதத் தாக்குதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வகை விமானங்கள் சோவியத்தின் அண்டையிலுள்ள அமெரிக்க சார்பு நாடுகளில் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 1991 இல் இந்நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாலைவனப் புயல் நடவடிக்கையில் இவ்வகை விமானங்களின் பங்கு பாரியளவிற் காணப்பட்டது. ஈராக்கியப் படைகள் மீது வீசப்பட்ட குண்டுகளின் 40 வீதமான குண்டுகள் இவ்வகை விமானங்களாலேயே வீசப்பட்டது. வளைகுடா யுத்தத்தின்போது இவ்வகை விமானமொன்று தொடர்ந்து 35 மணித்தியாலங்களாக 14000 கிலோமீற்றர் தூரத்திற்குப் பறந்து ஈராக்கியப் படைகள்மீது தாக்குதலை மேற்கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக