வியாழன், 18 பிப்ரவரி, 2010

சிங்களவர்களிற்குள் பிளவு !

இலங்கையில் சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, "குற்றங்களை முன்வைத்தே எவரையாவது கைது செய்ய முடியும். இது தான் சட்டம். அரசியலமைப்பும் இதனையே வலியுறுத்துகிறது. ஆனால், இவையனைத்தையும் மீறி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும். இன்று அவரது மருமகனின் தாயாரைg கைது செய்துள்ளனர். எதிர்காலத்தில் இறந்து போன அவர்களது உறவினர்களின் புதை குழிகளையும் தோண்டினாலும் அது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல. எமது நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும். இவை போன்ற சம்பவங்கள் மியான்மாரில் இடம்பெற்றன. இன்று எமது நாட்டிலும் நடைபெறுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இனங்களிடையே அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது. முதன் முறையாக சிங்கள மக்களை, மகா சங்கத்தினரை, படையினரை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. தாய்நாட்டை பாதுகாத்தவரை தேசத் துரோகியாக முத்திரை குத்தி நாட்டை காட்டிக் கொடுத்த கே.பிக்கு தேசப்பற்றாளன் முத்திரையை அரசாங்கம் குத்தியுள்ளது. நாட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மகா சங்கத்தினர் விமர்சிக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒழுக்கம் சீர்குலைந்து போய்விட்டது. ஜெனரல் பொன்சேகா நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாத்தார். அவர் தேசிய வீரர். எனவே தேர்தலின் போது அவருக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் அனைவரும் அவரின் விடுதலைக்கான மகஜரில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும். இது ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான போராட்டமுமாகும். இந்த நாட்டை மியன்மாராக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம். எனவே மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்." இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சோமவன்ச அமரசிங்க "ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு 10 லட்சம் கையெழுத்துக்கள் அல்ல, அதனையும் தாண்டி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற வேண்டும். அவரின் விடுதலைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் இன்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்திடம் அதிகாரம் இருக்கின்றது. ஆனால், புத்திசாலித்தனம் கிடையாது. அண்மையில் லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பால் சீல் உடைக்கப்பட்டது. அதேபோன்று அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் சென்றார்கள். குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இத் தீர்ப்பு வெளியாகி அரை மணித்தியாலத்தில் ஊடகவியலாளர்களைக் கைது செய்யும்போது தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு அரசாங்கம் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது. இதனால் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும் பறிபோயுள்ளது." திஸ்ஸ அத்தநாயக்க "ஜெனரல் பொன்சேகாவை எதுவிதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியலமைப்புக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்." இந்நிகழ்வில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, தவிசாளர் ருக்ஷன் சேனாநாயக்க, பிரதித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் ஆர். யோகராஜன், எம். சச்சிதானந்தன், மேல் மகாண சபை உறுப்பினர்களான முஸம்மில், முஜிபுர் ரஹ்மான், எஸ். சதாசிவம் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்

சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன. வறுமையில் வாடும் தமிழ் மக்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு அதிகளவு பணங்களை கொடுத்து அவர்களின் நிலங்களை பெரும்பாலான சிங்களவர்கள் வாங்கிவருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் வடபகுதி எங்கும் அதிகளவான சிங்களவர்கள் குடியேறிவிடுவர். அதன் பின் அவர்களுக்காக சிங்கள பாடசாலைகளும், பெளத்த விகாரைகளும் எங்கும் முளைக்கும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுபோகும். அத்தோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் சிங்களவர்களும் போட்டியிட்டு தேர்வாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கவே இது போன்ற நடவடிக்கைகள் வழிகோலும் என்பதில் ஐயமில்லை. எனவே இலங்கை வாழ் தமிழர்கள் என்ன நிலை ஏற்படினும் தமது நிலங்களையோ, சொத்துக்களையோ ஒரு சிங்களவருக்கு கூட விற்கக்கூடாது. முடிந்தவரையில் தாமே அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டு. அதையும் மீறிய தேவைகள், கஷ்டங்கள் ஏற்படுமிடத்து நிலங்களை விற்பதாயின் அதனை தமிழர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தமிழர்கள் தமது பூர்வீக தாயக நிலங்களை பாதுகாப்பாக தமிழர் நிலங்களாகவே பாதுகாக்க முடியும். அத்தோடு புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழீழ தமிழர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இனிவருங் காலங்களிலாவது தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டு தமது முதலீடுகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடியளவு செலவிடவேண்டும் என்பதும் இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இதுவரை காலமும் தமிழர் தாயகப்பகுதிகளில் கணிசமான அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தையும், நில அபகரிப்புக்களையும் செய்து வந்த சிங்கள பேரினவாத அரசு தற்போது மிகவும் புத்திசாலித்தனமாக தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள நிலங்களை தமிழர்களின் விருப்புடனேயே அவர்களின் வீடுகளையும், காணிகளையும் பணத்தைக்கொடுத்து வாங்கும் தந்திரத்தை அரங்கேற்றி வருகிறது. இந்த சதிவலைக்குள் சிக்கி தமிழர் தாயக நிலப்பரப்புக்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரதும் இன்றைய வரலாற்றுக் கடமையாக உள்ளது. இந்த மண்ணையும், மக்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றி சுதந்திர தமிழீழத்தை உருவாக்கி அதில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே 33,000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களும் போராடி தமது விலைமதிப்பற்ற இன்னுயிர்களை தமிழீழ விடுதலைக்காக உரமாக்கி விதைகுழிகளில் விதைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு வினாடியும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஆயுதப்போராட்டம் நடாத்திய போதும் சரி, பேச்சுவார்த்தைகள் என்று பல நாடுகளுடன் ஈடுபட்டிருந்த போதிலும் சரி தமிழரின் உரிமையையோ, தமிழீழக்கோட்பாட்டையோ விட்டுக்கொடுக்காது தமது பிரதிநிதித்துவத்தை சரிவர செயற்படுத்தி வந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் துணையோடு சிறீலங்கா அரச இயந்திரம் மிக மூர்க்கமான தாக்குதல்களையும், சர்வதேசங்களினால் தடைசெய்யப்பட்ட போர் ஆயுதங்களையும் பயன்படுத்தி தமிழர் நிலங்களையும், தமிழ் மக்களையும் அழித்து தமிழினம் என்றும் கண்டிராத மிகப்பெரும் இனப்படுகொலையை சந்தித்த போது சர்வதேச நெருக்கடிகளை கருத்திற்கொண்டும், சர்வதேசம் தமிழர் பிரச்சனையில் அணுகமுனையும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டும் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்தனர். இது அனைவரும் அறிந்த உண்மையே! ஆனால் ஆயுதங்களை மெளனித்ததின் பின்னர் எத்தனை போராளிகள் மிகக்கொடூரமாக கொன்றழிக்கப்பட்டனர். தமது மண்ணினதும், தம் மக்களினதும் மானம் பெரிதென போராடியவர்கள் உடல்கள் கிழிக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தியும், பல துண்டுகளாக்கப்பட்டும் மனிதநேயமற்ற முறையில் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக பார்த்தும், கேட்டும் அதன் பின்னரும் உணர்வுள்ள தமிழராய் ஒன்றிணையாது தமிழர்களிடையே பிளவுகளை அதிகரித்துக்கொண்டே இருப்போமானால் தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம். இதை விடுத்து இன்னொருவரை தாக்குவதிலும், நான் பெரிதா? நீ பெரிதா? என முட்டி மோதிக்கொள்வதிலும் எந்த பலனும் இல்லை. தமிழ்த் தேசியத்தையும், தமிழர் நலன்களையும் விட்டு விலகி சலுகைகளுக்காக அரசியல் செய்வோரை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை மக்கள் புறம்தள்ளி அவர்களின் கருத்தை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்கள் தமது பலத்தைக் கட்டிக்காப்பதோடு உட்பூசல்களை தவிர்த்து உறுதியான தமிழர் பிரதிநிதிகளின் வழியில் தமிழீழத்தை அடையமுடியும். அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் தாயக நிலப்பரப்புகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட போராளிகளையும், அனாதைகளாக, அடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களையும் காப்பதே இன்று ஒட்டுமொத்த தமிழர்கள் (தமிழ் அமைப்புக்கள்) முன்னும் உள்ள மிக முக்கிய செயற்திட்டங்களாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

பர்மாவில் பிக்குகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்று மகிந்த எச்சரிக்கை

பெளத்த பிக்குகளின் சங்க சம்மேளனக் கூட்டம் நடத்தப்பட்டால் பௌத்தர்கள் வாழும் பர்மாவில் ஏற்பட்ட சம்பவம் இலங்கையிலும் ஏற்படக் கூடும் எனவும் இந்த நிலைமையில் பௌத்த தேரர்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் அரச தலைவர் மகிந்த நேற்று முற்பகல் மல்வத்தை மாநாயக்க தேரருக்கு அறிவித்திருந்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சங்க சம்மேளக் கூட்டம் நடைபெற்றால் அங்கு புகுந்து பாரிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு பெருமளவிலான பிக்குகள் தயாராகியிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் அரசதலைவர் மகாநாயக்கருக்கு கூறியுள்ளார். பர்மாவில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படாது தடுக்க மாநாயக்க தேரர்கள் முனைப்பு காட்டவேண்டும் எனவும் மகிந்த வலியுறுத்தியுள்ளார். இதனைத்தவிர மேலும் பல பௌத்த தேரர்கள் ஊடாகவும் மாநாயக்க தேரர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்திய மகிந்த, ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் மாநாயக்க தேரர்களின் சங்க சம்மேளனத்திற்கு எதிராக பெருமளவில் ஊடகப் பிரசாரங்களை கடந்த சில தினங்களில் மேற்கொண்டிருந்தார். இந்த நிலைமையில் நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு கண்டி மாமலுவ பிரதேசத்தில் நடைபெறவிருந்த சங்க சம்மேளக் கூட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள மாநாயக்க தேரர்கள், பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள், தலதா மாளிகையின் கௌவரம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு கூட்டத்தை ஒத்திவைத்ததாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வெற்றிக்கிண்ண சின்னத்தில் போட்டியிட முடிவு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையின் கீழ் 'ஜனநாயக தேசிய முன்னணி' என்ற புதிய கட்சியின் கீழ் ஜே.வி.பியினர் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, வெற்றிக்கிண்ண சின்னத்தின் கீழ் இரு பிரதான தரப்பினரும் தேர்தலில் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் கூட்டாக அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கே தொடர்ந்து விருப்பம் தெரிவித்ததால், ஜெனரல் சரத் பொன்சேகா ஜனநாயக தேசிய முன்னணி என்ற கட்சியின் பேரில் வெற்றிக்கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவார் என்று பொன்சேகா தரப்பு செய்திகள் முன்னர் தெரிவித்தன. இந்நிலையில், இந்த புதிய கட்சியின் தலைவராக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அதன் பொதுச் செயலாளராக ஜே.வி.பியின் விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பொன்சேகாவின் பின்னால் அணிதிரண்டுள்ள ஜே.வி.பியினர் இம்முறை தமது மணி சின்னத்தில் போட்டியிடாமல் வெற்றிக்கிண்ண சின்னத்திலேயே போட்டியிடவுள்ளனர். இந்தக் கட்சியின் அலுவலகத்தின் முகவரியாக கொழும்பு ரோயல் கல்லூரி மாவத்தையிலுள்ள ஜெனரல் பொன்சேக்காவின் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக தமது இறுதித் தீர்மானம் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இரகசியமான கடிதமொன்றை அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு......

ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி த.தே.கூட்டமைப்பிற்குக் கிடையாது என்று புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அடித்துக் கூறுகின்றார்கள். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் உரை நிகழ்த்திய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரிவினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காண்பிக்கும் சிலர், த.தே.கூட்டமைப்பு ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து வெளிவரும் இணையத் தளங்கள், பத்திரிகைகள் சம்பந்தன் அவர்களைத் துரோகி என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தீண்டத்தகாத ஒரு அமைப்பு என்றும் குற்றம் சுமத்தி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. த.தே.கூ. தாம் தனி நாடு கோரவில்லை என்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தது சரியா? இது தனிநாடு கோரி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட போராளிகள், பொதுமக்களுக்கு த.தே.கூ. இளைக்கின்ற துரோகம் இல்லையா? த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி என்று நாம் கூறுவதில் என்ன தவறு? இன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் தேசியவாதிகள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள். ஒருவன் துரோகியா இல்லையா என்கின்ற முடிவினை எடுப்பதற்கு முன்னர், அவன் வாழுகின்ற சூழ்நிலையையும், அவனைப் பற்றிய உண்மையையும் நாம் புரிந்துகொண்டு அதன் பின்னரே நாம் அந்த முடிவினை எடுக்கவேண்டும். உணர்சிவசப்பட்டு, ஒரு முடிவினை எடுத்துவிட்டு ஒவ்வொருவரையும் துரோகியாக நாம் தீர்த்து, தீர்த்துத்தான், எமது விடுதலைப்பாதையில் துரோகிகளின் முகாம்களுக்கு பலரை நாம் அனுப்புகின்ற கைகங்காரியங்களை வெற்றிகரமாகச் செய்துவிட்டிருக்கின்றோம். முதலாவது, இலங்கை மண்ணின், சிறிலங்கா பேரினவாதத்தின் கொடுரமாக இரும்புக்கரங்களுக்கு நடுவில் நின்று, இன்றைக்கு யாருமே தமிழீழம் தனி நாடு என்று இலகுவாகக் கூறிவிட முடியாது. அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்கின்ற- உலகிலேயே மிகவும் கொடுரமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற சிறிலங்காவில், வெள்ளைவான் கடத்தல்கள், படுகொலைகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்ற அந்த மண்ணில், நீதிக்குப் புறம்மான ஆட்கடத்தல்கள், சட்டமே மேற்கொள்ளுகின்ற பயங்கரவாதங்கள் பரவலாகவே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அந்த தேசத்தில்- நின்றுகொண்டு, தமிழீழம்தான் எங்கள் ஒரே முடிவு என்று ஒரு தலைவன் கூறினால், அவரனது உயிருக்கு அடுத்த கனம் என்ன நடக்கும் என்று யாருமே உத்தரவாதம் கொடுக்க முடியாது. நாம் இங்கு புலம்பெயர்ந்த மண்ணில் நின்றுகொண்டு எதுவும் பேசலாம். வீரம் கதைக்கலாம் ஆனால் சிறிலங்கா போன்ற ஒரு இரக்கமற்ற தேசத்தில் இது முடியாது. இல்லை, அது முடியும் என்று கூறுபவர்கள் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் அல்லது தமிழீழம் என்று எழுதப்பட்டு டீசேர்டுடன் ஒருதடவை சிறிலங்காவிற்கு சென்று பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இலங்கைக்கு உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்குக் கூட, ’வெள்ளைப் புலி’ முத்திரைகளைக் குத்துவதற்குத் தயங்காத தேசம்தான் சிறிலங்கா. ஒரு தேர்தலில் போட்டியிட்டு 41 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற எதிர்கட்சி வேட்பாளரின் நிலையை எண்ணிப்பாருங்கள். அந்தத் தேசத்தின் தலைநகரில் நின்றுகொண்டு எங்களுக்குத் தனிநாடுதான் தேவை, நாங்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று த.தே.கூட்டமைப்பால் இலகுவாகக் கூறிவிடமுடியாது. „இல்லை அது முடியும்“ என்று கூறுபவர்கள், தயவுசெய்து அங்கு சென்று அதனைச் செய்யுங்கள். உங்களை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையாக நாங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் பின் அணிதிரள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இந்த இடத்தில் சில புலம்பெயர் ஊடகங்கள் முன்வைக்கின்ற மற்றொரு குற்றச்சாட்டுப்பற்றிப் பார்பது அவசியம். „தமிழீழம் கேட்கத் துனிவில்லாவிட்டால், பின்னர் எதற்காக த.தே.கூட்டமைப்பினர் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்? – என்று சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இந்தக் கேள்விக்கான பதிலை நாம் பார்பதானால், முதலில் இலங்கையின் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் பற்றி ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கை மிகவும் உட்சகட்டமாக முன்வைக்கப்ட 80களின் ஆரம்பத்தில், தமிழீழத்தை சட்டரீதியாகத் தடைசெய்யும் நோக்கத்தில் ஜே.ஆர் அரசு, ஒரு முக்கிய திருத்தச் சட்டத்தை சிறிலங்காவின் அரசியல் யாப்பில் இணைத்துக்கொண்டது. இலங்கையின் அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச்சட்டம் 1983ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைமுறைக்கு வந்தது. இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்பது, இலங்கையின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு முக்கியமான சட்டம். இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்ன கூறுகின்றதென்றால், இலங்கையில் யாருமே பிரிவினை கோரமுடியாது. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக யாருமே கோரிக்கை முன்வைக்க முடியாது. அப்படிக் கோரிக்கை முன்வைத்தால், அது சட்ட விரோதமானது என்று இந்த இலங்கையின் ஆறாவது திருத்தச் சட்டம் கூறுகின்றது. இதை இன்னும் தெளிவாகக் கூவதானால் இலங்கையில் யாருமே தனிநாடு கோரமுடியாது. அப்படிக் கோரினால் சட்ட ரீதியாக அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களைத் தண்டிக்க முடியும். இந்த ஆறாவது திருத்தச் சட்டத்திற்கு இன்னும் ஒரு விசேஷமும் இருக்கின்றது. இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை மீறமாட்டோம்- அதாவது தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை எழுத்து மூலம் வழங்கித்தான் எவரும் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்லமுடியும். நாடாளுமன்றம் செல்ல மாத்திரம் அல்ல, பிரிவினையை மறுதலிக்கும் இந்த 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டபின்னர்தான் இலங்கையில் எவருமே எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமுடியும். இதுதான் சட்டம். இதுதான் இலங்கையில் இருக்கின்ற நடைமுறை. ’இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று கூறித்தான் 1983ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அந்தநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும், அவருடன் சேர்த்து - தற்பொழுது த.தே.கூட்டமைப்பு தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட 16 தமிழர் விடுதலைக் கூட்டனி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளைத் துறந்து, வெளியேறியிருந்தார்கள். அதாவது தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுவதாக ஒப்புக்கொள்ளும் 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறித்தான் அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலான த.வி.கூட்டனியினர் தமது நாடாளுமன்றக் கதிரைகளைத் துறந்தார்கள். ஆனால் அதனைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அரசியல் செய்த அனைவருமே இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக் கையொப்பம் இட்டுத்தான் அரசியல் செய்தார்கள். இன்னும் தெளிவாகக் கூறுவதானால், தமிழீழக் கோரிக்கையை உத்தியோகபூர்வமாக, பகிரங்கமாகக் கைவிட்டே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் இலங்கையில் அரசியல் செய்தார்கள். மாமனிதர் ஜேசப் பரராஜசிங்கமாக இருந்தாலும் சரி, மாமனிதர் ரவிராஜாக இருந்தாலும் சரி மாமனிதர் சந்திரநேருவாக இருந்தாலும்சரி, வல்வைச் சிங்கம் சிவாஜிலிங்கமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சிகளில் த.தே.கூட்டமைப்பை வாங்கு வாங்கென்று வாங்கித்தள்ளுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியாக இருந்தாலும் சரி, யாழ்பாணத்தில் இருந்து 40ஆயிரம் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சூழுரைத்த கஜேந்திரனாக இருந்தாலும்சரி - இவர்கள் அனைவருமே தமிழீழத் தனியரசுக்; கோரிக்கையை கைவிட்டுத்தான் இலங்கையில் அரசியல் செய்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் நாடாளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களுமே, தாம் தனிநாடு கோரமாட்டோம் என்று கையொப்பம் இட்டுவிட்டுத்தான் அரசியல் செய்திருந்தார்கள். இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம். இலங்கையை அரசியலைப் பொறுத்தவரையில் தமிழீழம் கோரி யாரும் நாடாளுமன்றம் செல்வது கிடையாது. அப்படி தமிழீழம் கோரிக்கொண்டு நாடாளுமன்றம் செல்லவும் யாராலும் முடியாது. தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் ஈழத் தனியரசை நிறுவுவதற்காக அல்ல. அவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்காகத்தான். தமிழ் மக்களின் தேவைகளை உலக அரங்கிற்கு நாசுக்காகக் கொண்டு செல்வதற்காக...சர்வதேச நாடுகளிடம் இருந்து தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை தேடிக்கொள்வதற்காக...சிறிலங்காவின் கோர முகத்தை, அதன் ஜனநாயக விரோத முகத்தை, அது மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்துவதற்காக...-இதுபோன்ற இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளுவதற்காகத்தான் தமிழ் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்: தவிர தமிழீழம் கோருவதற்கு எந்தத் தமிழ் தலைவர்களும் பாராளுமன்றம் செல்வது கிடையாது. இன்றைய காலகட்டத்தில், த.தே.கூட்டமைப்பும் தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்காகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் வழிகளை தேடுவதற்காகவுமே, சிறிலங்கா தேசத்தில் அரசியல் செய்யத் தலைப்படுகின்றார்கள். எனவே சிங்கள மண்ணில் நின்றுகொண்டு கட்டப்பொம்மன் பாணியில் தமிழீழம் அது இது என்று அவர்கள் வீர வசணங்கள் பேசவேண்டும் என்று புலம்பெயர்ந்து பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எதிர்பார்ப்பது நல்லதல்ல என்றே நான் கருதுகின்றேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வினைச் செய்யவேண்டிய நிலையில் இருக்கின்ற ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமையான த.தே.கூட்டமைப்பு, தனது வியூகங்களுக்கு ஏற்றாற் போன்று வெளிப்படையான சில பேச்சுக்களைப் பேசித்தான் ஆகவேண்டும். உலகிற்காக என்று நிலைப்பாடுகளையும் எடுத்தத்தான் ஆகவேண்டும். தமிழீழத்தை தாம் கோரவில்லை என்று அவர்கள் உலகிற்குக் கோருவது, உலகை நம்ப வைப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஆதாயப்படுத்துவதற்கும்தான். பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வீறுநடைபோடுவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதுதான் - தற்போது தமிழ் இனம் செய்யவேண்டிய முக்கிய நகர்வு.

சதாசிவம் கனகரட்ணம் பொதுசன ஐக்கிய முன்னணியில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார் சனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஊடாகத்தான் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் மக்களுடைய தேவைகளையும் நிவர்த்தி செய்ய முடியும் எனவேதான் ஆளும் கட்சியில் இணைந்துதான் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறினார் .இன்று செவ்வாய் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான புதியவகுப்பறைகளை தொடங்கிவைக்கும் வைபவத்திலும் திரு கனகரட்ணம் கலந்து கொண்டார் இந்த வைபவத்தின் பின்னர் செய்தியாளர்கள் கேட்டகேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்

கப்பம் கேட்டு மிரட்டல்......

யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழில் வலிகாமம் பகுதியில் அராலி கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற துணைஇராணுவக் குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என கோரி மிரட்டல்களை விடுத்துள்ளனர். தமக்கு இரண்டு மில்லியன் (20 இலட்சம்) ரூபாய்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்த ஆயுதக்குழுவினர் அவரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இரண்டு கைக்குண்டுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு வீசியுள்ளனர். அவற்றுள் ஒரு குண்டு வெடித்துள்ளது. அதனை தொடர்ந்து பொதுமகனை தொலைபேசியில் தொடர்புகொண்ட துணை இராணுவக்குழுவினர் பணத்தை தரமறுத்தால் படுகொலை செய்யப்படுவார் என மிரட்டியுள்ளனர். உந்துருளிகளில் வந்தவர்களே கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று கடந்த புதன்கிழமை (17) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் முன்னர் பல தடவைகள் பணம் கேட்டு மிரட்டப்பட்ட போதும், அவர் பணத்தை வழங்க மறுத்துவிட்டார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அவர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் யாழில் உள்ள வர்த்தகர்கள், சட்டவாளர்கள், கல்விமான்கள் மற்றும் ஏனைய நிதிவசதி உள்ள மக்களை மிரட்டி பணத்தை கப்பமாக பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளவதில்லை என அவை மேலும் தெரிவித்துள்ளன.

ஊருக்கு வரும் போது கைதாவீர்கள்....

ஊருக்கு வரும் போது கைதாவீர்கள்: வெளிநாட்டில் சிங்களவரை மிரட்டும் சிறிலங்கா தூதரகங்கள் [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 23:06 GMT ] [ கி.வேணி ] வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக - வோசிங்டன் மற்றும் இத்தாலியில் உள்ள சிறிலங்கா தூதுவர்களே புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தை இவ்வாறு மிரட்டி உள்ளனர் என புலம்பெயர்ந்த சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒருவர் லங்கா ஊடகத்தில் எழுதியுள்ளார். அவர் மேலும் எழுதியுள்ளதாவது: விடுதலைப் புலிகள் மீதான போரின் போது அமைதியை விரும்பிய அனைத்து சிறிலங்கா மக்களும், புலம் பெயர்ந்த சிங்கள சமூகமும் விடுதலைப் புலிகளை சிறிலங்கா மண்ணில் இருந்து அகற்றி அமைதியை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இதுவரை இல்லாத வகையில் திரளாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். இதன் விளைவாகவே பல நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், சிறிலங்கா அரசால் மிகத் திறமையாக விடுதலைப் புலிகளின் நவீன ஆயுதங்களுடன் போராடி வெற்றி பெற முடிந்தது. அரசின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் விதத்தில் நிதி திரட்டும் பிரச்சாரங்கள், சிறிலங்கா விழிப்புணர்வு பிரச்சாரம், ஆர்பாட்டங்கள், மறுப்பு தெரிவிக்கும் கூட்டங்கள் போன்றவற்றை புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் நடத்தியது. புலம் பெயர்ந்தவர்களின் இந்த செயல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் , இனவெறியர்களுக்கும் உண்மையான ஒற்றுமையின் வலிமையை தெரிவித்ததுடன் அவர்களும் பங்கு பெற வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. ஆனால், ஒற்றுமையுடன் இருந்த புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் - தற்போது பொன்சேகாவின் கைதை ஒட்டிப் பிரிந்து விட்டது. இது மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பும் தென்படவில்லை. பல வெளிநாட்டு தலைநகரங்களில் பொன்சேகா கைதை ஒட்டி அரசுக்கு மறுப்பு தெரிவிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் பொன்சேகா சிறிலங்கா தேசத்தின் சின்னம் அல்லது நம்பிக்கை நட்சத்திரம் என்றே கூறலாம். சதித்திட்டம் தீட்டி அரசு பொன்சேகாவைக் கைது கைது செய்திருப்பதைத் தொடர்ந்து அனைவரும் தங்கள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்பவர்கள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் கேவலமான முறையில் சிறிய கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அரசியல்வாதிகளின் உண்மையான முகங்கள் வெளிச்சத்திற்கு வருவதால் இனி சிறிலங்கா அரசியல்வாதிகளின் தேசப்பற்று நாடகங்களை புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஆட்சியைப் பிடிக்கும் ஒரே நோக்கத்தில் அரசு எந்த விளைவுகளையும் பற்றி சிந்திக்காமல் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருவதாகவும் முன்னணி பௌத்த மத அமைப்புக்கள் கண்டித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசின் செயல்பாடுகளால் அரசுக்கும் புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்திற்குமான உறவு அறுந்து விட்ட இந்த நிலையில் சர்வதேச விவகாரங்களில் அரசுக்கு இனி பாதிப்பே ஏற்படும். இனி மீண்டும் புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தின் இதயத்தில் அரசு இடம் பிடிப்பதென்பது மிகக் கடினமான ஒன்று. நாட்டின் தூதுவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு விடுதலை புலிகளுடன் போராடவோ சர்வேதேச அரங்கத்தில் அரசின் நிலையை நிலைநாட்டவோ முடியாது. அதற்கு புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு மிகவும் அவசியம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பலரைக் கொன்று குவித்த கருணா மன்னிக்கப்பட்டிருக்கும் போது, சிறிலங்கா மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அகற்றப் பாடுபட்ட பொன்சேகாவை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் அரசின் இரட்டை நிலைபாடுகளையும் புலம் பெயர்ந்த இச் சிங்கள சமூகம் வன்மையாக கண்டித்துள்ளது. சிறிலங்கா அரசு பொன்சேகாவிற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசின் இந்த வெறிச் செயல் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் அரசியல் கருத்து வேறுபாடுகளையும் மட்டுமே காட்டுவதாகவும் அரசு இன்னொரு தீவிரவாத இயக்கம் போல் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது. இதைப் போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதை போன்றது என்றும் புலம் பெயர்ந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் லங்கா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை பொன்சேகா ஊக்குவித்தார்

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சரத் பொன்சேகா செயல்பட்டதாக இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா கூறியுள்ளார். இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா யாபா இலங்கை அரசு டி.வி.க்கு அளித்த பேட்டி ஒன்றில் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது: சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் இருந்தன. அவரது அறிக்கை இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக மக்களை திருப்பும் வகையில் இருந்தன. விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணி, அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறியதால்தான் தமிழ் தேசிய கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. இதன் பிறகு பொன்சேகா விடுதலைப்புலி ஆதரவு இயக்கங்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டார். இது விடுதலைப்புலிகளை மீண்டும் தலை தூக்க உதவும் வகையில் இருந்தது. அதிபர் ராஜபக்சே கடுமையாக போராடி தீவிரவாதத்தை ஒழித்து இருக்கிறார். ஆனால் பொன்சேகா அறிக்கைகள் தீவிரவாதத்தை மீண்டும் உருவாக்குவதாக இருக்கிறது. பொன்சேகாவுக்கு அரசியல் அனுபவம் இல்லை. இதனால்தான் என்ன பேசுவது என்றே அவருக்கு தெரியவில்லை என்றார்

இணையத்தளம் முடக்கப்படும் சாத்தியம்

இலங்கை அரசுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரானவை என சில இணையத்தளங்களை இலங்கை அரசு குறிப்பிட்டுவருகிறது. அந்த தளங்களை இலங்கையில் முடக்குவது குறித்து தகவல்தொடர்பு ஆணையம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. ஆனால் பொதுத்தேர்தல் நடந்து அதன் முடிவு வெளியாகும்வரை இவ்வாறான இணையங்களை முடக்கும்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் இந்த ஆண்டின் ஒரு செய்தித்தளத்தை 2,00,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்று நிரூபித்தால் மட்டுமே அரச தகவல் திணைக்களத்தில் ஊடக அனுமதியை அந்த செய்தித்தளத்துக்கு வழங்குவதென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிர்வுக்குக் கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இதேபோன்ற ஒரு ஒழுங்குமுறையை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தபோதும் அது கடுமையாக பின்பற்றப்படவில்லையாம். எனவே இப்போதைய ஒழுங்குமுறைகளுக்கு அமையாத செய்தித்தளங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஊடக அனுமதியை ரத்துசெய்யும்படி ஊடக திணைக்களத்துக்கு உத்தரவு கிடைத்துள்ளது. அத்தோடு இலங்கையில் இத் தளங்களைப் பார்வையிட முடியாது. மேலும் புலனாய்வுப் பிரிவுகளால் கூகிள் தளத்தை கண்காணிக்க முடியவில்லை என்ற காரணத்தால் இலங்கையில் கூகிள் வலைத்தள தேடுபொறியை முடக்கும் எண்ணத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ளன. சீனாவும் கூகுள் தளத்தை தனது நாட்டில் கட்டுப்படுத்திவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் அமெரிக்க கம்பனி என்பதால் சீனா இதன் மீது நம்பிக்கை இல்லை என்ற தோற்றப்பாட்டை வெளுக்கொண்டுவர முயல்வதாகச் சொல்லப்படுகிறது. ஆக மொத்தத்தில் இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. எதை மக்கள் பார்க்கலாம் பார்க்கக் கூடாது என்பதை அரசாங்கமே முடிவு எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.

'பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்' 'பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்'

ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்ந்து தன் எஜமானருக்கு வழங்கிய சேவை காரணமாக, அவரை ஆட்டுவித்த இந்தியா, வரதராஜப்பெருமாளை இப்போதும் பாதுகாப்பாகப் பராமரித்துவருகின்றது. இந்த நிலையில், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, அதனால் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களை சிங்கள தேசம் கைவிட்டுவிடவா போகின்றது? ஈழத் தமிழர்கள்மீது கொடூரமான இன அழிப்பு யுத்தத்தை நடாத்திப் பேரழிவுகளை நடாத்தியதுடன் சிங்கள அரச பயங்கரவாதம் அதில் தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களை முள்வேலி முகாம்களுக்குள் முடக்கிச் சித்திரவதைகள் புரிந்த போதும் கூட எஜமான விசுவாசத்துடன் தொடர் பணியாற்றிய இவர்களை சிங்கள இனவாத அரசு கைவிட்டு விடுமா? டக்ளசை அமைச்சராகவும், கருணாவை அமைச்சர் 10 கட்சியின் உப தலைவராகவும், பிள்ளையானை கிழக்கின் சொந்தக்காரனாகவும் உயரத் தூக்கி வைத்திருக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இந்தத் தேர்தலில் இவர்கள் தேறுவார்களா என்ற நியாயமான அச்சம் தோன்றியுள்ளது. ராஜபக்ஷக்களின் தமிழின அழிப்பு யுத்தத்தை சிங்கள மக்கள் பெரும்பாலும் ஏகமனதாக அங்கீகரித்து, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை அமோக வெற்றியீட்ட வைத்தபோதும், தமிழர் தாயகம் ராஜபக்ஷக்களைத் தண்டிக்கவே முயன்றுள்ளனர். மகிந்த சகோதரர்களின் கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் போட்டி போட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் வித்தை காட்டியபோதும் அவை எவையும் எடுபடவில்லை என்ற கவலை கொண்டுள்ள மகிந்த சகோதரர்களைத் திருப்திப்படுத்த, புதியவிதமான வித்தைகளைக் காட்டும் முயற்சியில் டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் தத்தமக்கு இருக்கும் மூளையைக் கசக்கிப் பிழிந்தபடி உள்ளனர். கடந்த யாழ். மாநகர, வவுனியா நகர சபைகளின் தேர்தல்களில் மகிந்தவின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டி போட்ட டக்ளஸ் அணியால், ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு வாக்குக்களைத் திரட்டிக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்' என்று தன் ஒட்டுக்குழுத் தனத்தை நியாயப்படுத்த முயன்ற டக்ளசால் மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு - கிழக்கு பிரிப்பையும், அதனை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்ற வக்கிர வசனங்களையும் ஈழத் தமிழ் மக்களிடையே போணியாக்க முடியவில்லை. இந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவின் வெற்றிலைச் சின்னம் தமிழ் மக்களிடம் எடுபடப் போவதில்லை என்பதால், தனித்து வித்தை காட்டும் முடிவை எடுத்துள்ளார். கிழக்கைப் பொறுத்தவரை கருணா எஜமானாக இருந்தாலும், களத்தில் வித்தை காட்ட வேண்டிய பொறுப்பு பிள்ளையானுக்கே உண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குக்களை அள்ளிக் கொடுக்கலாம் என்று நம்பியிருந்த பிள்ளையானால் கிள்ளிக்கூடக் கொடுக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் மகிந்த மேற்பார்த்து என்ற விலாசத்தில் சென்றால், தனது இருப்பும் கேள்விக்குறியாகிப் போய்விடும் என்ற அச்சம் பிள்ளையானையும் தனி ஆட்டம் ஆடத் தூண்டியுள்ளது. ஆக மெத்தத்தில், தமிழினத்தைக் காட்டிக்கொடுத்துப் பதிவி சுகம் கண்டவர்கள், இந்த நாடாளுமன்றத் தேர்தல் தமக்கு சங்கு ஊதிவிடுமோ என்ற அச்சத்தில் அவசர அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாட்கள் நெருங்க நெருங்க ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா போல் மகிந்த சகோதரர்கள்மீது குற்றப்பத்திரிகை வாசித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. டக்ளசின் நாடாளுமன்ற வாழ்க்கை ஐக்கியதேசியக் கட்சியின் அரசிலேயே ஆரம்பமாகியது. கருணாவின் குத்துக்கரணமும் ரணிலின் காலத்திலேயே நடந்தேறியது. 'பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்' என்பது ஒட்டுக்குழுக்களுக்கு நன்றாகவே தெரியும். மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகத் Nதுர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், கருணாவின் பதவிக்கும், வரவுக்கும் இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. கருணாவை வெகு சீக்கிரம் கைவிடும் நிலையில் ராஜபக்ஷ சகோதரர்களும் இல்லை. ஆனால், டக்ளஸ் குழுவும், பிள்ளையான் குழுவும் அங்கே போவதற்கான பாதையின் திறப்பு தற்சமயம் தமிழ் மக்களிடம் இருப்பதுதான் அவர்களுக்கு உதறலாக உள்ளது. ஒருவேளை நியாயமான தேர்தலுக்கான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால், திட்டமிட்ட கள்ள வாக்குக்களும் கிடைக்காமல் போய்விடலாம் அன்ற அச்சத்தோடு, தமிழ் மக்களிடம் புதிய வித்தைகள் காட்டும் அவசியமும் அவர்களுக்கு உள்ளதை மறுத்துவிட முடியாது.

அரசியல் வியாபாரிகளை தமிழ் வேட்பாளர்களாக கொழும்பிலே நிறுத்தவேண்டாம்

அரசியல் வியாபாரிகளை ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் துன்புறும்பொழுது அவர்களுக்கு ஒருபோதும் துணையிருந்திராத சில தமிழ் அரசியல் வியாபாரிகளை ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு மனோ கணேசன் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தலைநகர தமிழ் மக்களுக்கு கவசமாக எமது கட்சி இருந்துகொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து வீதியில் இறங்கி போராடியவர்கள் நாங்கள். எங்கள் குரல் ஓங்கி ஒலித்து சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பியிருக்காவிட்டால், தலைநகரத்திலே நடந்திருந்த கடத்தல், காணாமல் போதல், வர்த்தக சமூகத்திடம் கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் ஆகிய அநீதிகள் கட்டுப்பாட்டிற்கும், முடிவிற்கும் வந்திருக்காது. இதனாலேயே எமக்கு இன்றைய அரசாங்கத்துடன் பாரிய முரண்பாடு ஏற்பட்டது. இன்று தனது பாதுகாப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையிலும்கூட, தனது தனிப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலைமையில் எமது தலைவர் மனோ கணேசன் இருக்கின்றார். போராட்டங்களின் மூலமாக பெருவாரியான அரசியல் இலாபங்களை எதிர்க்கட்சி கூட்டணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பெற்றுக்கொண்டுள்ளன. இது இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்டது. இந்நிலையில் எமது மக்கள் துன்பமடையும் பொழுது எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தமது சொந்த வியாபாரங்களை கவனித்துகொண்டிருந்த நபர்களை தமது நேரடி தமிழ் வேட்பாளர்களென பெயர் சூட்டி கொழும்பு மாவட்ட தேர்தலில் நிறுத்த நினைப்பது எமது கட்சிக்கும், தலைநகர தமிழ் மக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி செய்கின்ற துரோகமாகும். இத்தகைய துரோக முயற்சிகளை ஐதேக தேர்தல் காலத்திலே செய்யுமானால் நாங்கள் மாற்று வழியை நாடவேண்டிவரும். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் விரோதிகளையும் அம்பலப்படுத்தி நடுவீதிக்கு கொண்டுவரவேண்டிவரும். அதுமட்டுமல்லாமல் நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ் வாக்காளர்களையும் அழைத்துக்கொண்டே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதை தவிர்ப்பது என்பது, நாளை (19-02-2010) எமக்கிடையே நடைபெறும் இறுதிப் பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது.