வியாழன், 18 பிப்ரவரி, 2010

கப்பம் கேட்டு மிரட்டல்......

யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழில் வலிகாமம் பகுதியில் அராலி கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற துணைஇராணுவக் குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என கோரி மிரட்டல்களை விடுத்துள்ளனர். தமக்கு இரண்டு மில்லியன் (20 இலட்சம்) ரூபாய்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்த ஆயுதக்குழுவினர் அவரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இரண்டு கைக்குண்டுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு வீசியுள்ளனர். அவற்றுள் ஒரு குண்டு வெடித்துள்ளது. அதனை தொடர்ந்து பொதுமகனை தொலைபேசியில் தொடர்புகொண்ட துணை இராணுவக்குழுவினர் பணத்தை தரமறுத்தால் படுகொலை செய்யப்படுவார் என மிரட்டியுள்ளனர். உந்துருளிகளில் வந்தவர்களே கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று கடந்த புதன்கிழமை (17) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் முன்னர் பல தடவைகள் பணம் கேட்டு மிரட்டப்பட்ட போதும், அவர் பணத்தை வழங்க மறுத்துவிட்டார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அவர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் யாழில் உள்ள வர்த்தகர்கள், சட்டவாளர்கள், கல்விமான்கள் மற்றும் ஏனைய நிதிவசதி உள்ள மக்களை மிரட்டி பணத்தை கப்பமாக பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளவதில்லை என அவை மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக