வியாழன், 18 பிப்ரவரி, 2010

அரசியல் வியாபாரிகளை தமிழ் வேட்பாளர்களாக கொழும்பிலே நிறுத்தவேண்டாம்

அரசியல் வியாபாரிகளை ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் துன்புறும்பொழுது அவர்களுக்கு ஒருபோதும் துணையிருந்திராத சில தமிழ் அரசியல் வியாபாரிகளை ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு மனோ கணேசன் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தலைநகர தமிழ் மக்களுக்கு கவசமாக எமது கட்சி இருந்துகொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து வீதியில் இறங்கி போராடியவர்கள் நாங்கள். எங்கள் குரல் ஓங்கி ஒலித்து சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பியிருக்காவிட்டால், தலைநகரத்திலே நடந்திருந்த கடத்தல், காணாமல் போதல், வர்த்தக சமூகத்திடம் கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் ஆகிய அநீதிகள் கட்டுப்பாட்டிற்கும், முடிவிற்கும் வந்திருக்காது. இதனாலேயே எமக்கு இன்றைய அரசாங்கத்துடன் பாரிய முரண்பாடு ஏற்பட்டது. இன்று தனது பாதுகாப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையிலும்கூட, தனது தனிப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலைமையில் எமது தலைவர் மனோ கணேசன் இருக்கின்றார். போராட்டங்களின் மூலமாக பெருவாரியான அரசியல் இலாபங்களை எதிர்க்கட்சி கூட்டணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பெற்றுக்கொண்டுள்ளன. இது இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்டது. இந்நிலையில் எமது மக்கள் துன்பமடையும் பொழுது எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தமது சொந்த வியாபாரங்களை கவனித்துகொண்டிருந்த நபர்களை தமது நேரடி தமிழ் வேட்பாளர்களென பெயர் சூட்டி கொழும்பு மாவட்ட தேர்தலில் நிறுத்த நினைப்பது எமது கட்சிக்கும், தலைநகர தமிழ் மக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி செய்கின்ற துரோகமாகும். இத்தகைய துரோக முயற்சிகளை ஐதேக தேர்தல் காலத்திலே செய்யுமானால் நாங்கள் மாற்று வழியை நாடவேண்டிவரும். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் விரோதிகளையும் அம்பலப்படுத்தி நடுவீதிக்கு கொண்டுவரவேண்டிவரும். அதுமட்டுமல்லாமல் நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ் வாக்காளர்களையும் அழைத்துக்கொண்டே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதை தவிர்ப்பது என்பது, நாளை (19-02-2010) எமக்கிடையே நடைபெறும் இறுதிப் பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக