வியாழன், 18 பிப்ரவரி, 2010

வெற்றிக்கிண்ண சின்னத்தில் போட்டியிட முடிவு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையின் கீழ் 'ஜனநாயக தேசிய முன்னணி' என்ற புதிய கட்சியின் கீழ் ஜே.வி.பியினர் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, வெற்றிக்கிண்ண சின்னத்தின் கீழ் இரு பிரதான தரப்பினரும் தேர்தலில் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் கூட்டாக அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கே தொடர்ந்து விருப்பம் தெரிவித்ததால், ஜெனரல் சரத் பொன்சேகா ஜனநாயக தேசிய முன்னணி என்ற கட்சியின் பேரில் வெற்றிக்கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவார் என்று பொன்சேகா தரப்பு செய்திகள் முன்னர் தெரிவித்தன. இந்நிலையில், இந்த புதிய கட்சியின் தலைவராக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அதன் பொதுச் செயலாளராக ஜே.வி.பியின் விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பொன்சேகாவின் பின்னால் அணிதிரண்டுள்ள ஜே.வி.பியினர் இம்முறை தமது மணி சின்னத்தில் போட்டியிடாமல் வெற்றிக்கிண்ண சின்னத்திலேயே போட்டியிடவுள்ளனர். இந்தக் கட்சியின் அலுவலகத்தின் முகவரியாக கொழும்பு ரோயல் கல்லூரி மாவத்தையிலுள்ள ஜெனரல் பொன்சேக்காவின் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக தமது இறுதித் தீர்மானம் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இரகசியமான கடிதமொன்றை அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக