வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஊருக்கு வரும் போது கைதாவீர்கள்....

ஊருக்கு வரும் போது கைதாவீர்கள்: வெளிநாட்டில் சிங்களவரை மிரட்டும் சிறிலங்கா தூதரகங்கள் [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 23:06 GMT ] [ கி.வேணி ] வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக - வோசிங்டன் மற்றும் இத்தாலியில் உள்ள சிறிலங்கா தூதுவர்களே புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தை இவ்வாறு மிரட்டி உள்ளனர் என புலம்பெயர்ந்த சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒருவர் லங்கா ஊடகத்தில் எழுதியுள்ளார். அவர் மேலும் எழுதியுள்ளதாவது: விடுதலைப் புலிகள் மீதான போரின் போது அமைதியை விரும்பிய அனைத்து சிறிலங்கா மக்களும், புலம் பெயர்ந்த சிங்கள சமூகமும் விடுதலைப் புலிகளை சிறிலங்கா மண்ணில் இருந்து அகற்றி அமைதியை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இதுவரை இல்லாத வகையில் திரளாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். இதன் விளைவாகவே பல நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், சிறிலங்கா அரசால் மிகத் திறமையாக விடுதலைப் புலிகளின் நவீன ஆயுதங்களுடன் போராடி வெற்றி பெற முடிந்தது. அரசின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் விதத்தில் நிதி திரட்டும் பிரச்சாரங்கள், சிறிலங்கா விழிப்புணர்வு பிரச்சாரம், ஆர்பாட்டங்கள், மறுப்பு தெரிவிக்கும் கூட்டங்கள் போன்றவற்றை புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் நடத்தியது. புலம் பெயர்ந்தவர்களின் இந்த செயல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் , இனவெறியர்களுக்கும் உண்மையான ஒற்றுமையின் வலிமையை தெரிவித்ததுடன் அவர்களும் பங்கு பெற வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. ஆனால், ஒற்றுமையுடன் இருந்த புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் - தற்போது பொன்சேகாவின் கைதை ஒட்டிப் பிரிந்து விட்டது. இது மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பும் தென்படவில்லை. பல வெளிநாட்டு தலைநகரங்களில் பொன்சேகா கைதை ஒட்டி அரசுக்கு மறுப்பு தெரிவிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் பொன்சேகா சிறிலங்கா தேசத்தின் சின்னம் அல்லது நம்பிக்கை நட்சத்திரம் என்றே கூறலாம். சதித்திட்டம் தீட்டி அரசு பொன்சேகாவைக் கைது கைது செய்திருப்பதைத் தொடர்ந்து அனைவரும் தங்கள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்பவர்கள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் கேவலமான முறையில் சிறிய கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அரசியல்வாதிகளின் உண்மையான முகங்கள் வெளிச்சத்திற்கு வருவதால் இனி சிறிலங்கா அரசியல்வாதிகளின் தேசப்பற்று நாடகங்களை புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஆட்சியைப் பிடிக்கும் ஒரே நோக்கத்தில் அரசு எந்த விளைவுகளையும் பற்றி சிந்திக்காமல் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருவதாகவும் முன்னணி பௌத்த மத அமைப்புக்கள் கண்டித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசின் செயல்பாடுகளால் அரசுக்கும் புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்திற்குமான உறவு அறுந்து விட்ட இந்த நிலையில் சர்வதேச விவகாரங்களில் அரசுக்கு இனி பாதிப்பே ஏற்படும். இனி மீண்டும் புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தின் இதயத்தில் அரசு இடம் பிடிப்பதென்பது மிகக் கடினமான ஒன்று. நாட்டின் தூதுவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு விடுதலை புலிகளுடன் போராடவோ சர்வேதேச அரங்கத்தில் அரசின் நிலையை நிலைநாட்டவோ முடியாது. அதற்கு புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு மிகவும் அவசியம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பலரைக் கொன்று குவித்த கருணா மன்னிக்கப்பட்டிருக்கும் போது, சிறிலங்கா மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அகற்றப் பாடுபட்ட பொன்சேகாவை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் அரசின் இரட்டை நிலைபாடுகளையும் புலம் பெயர்ந்த இச் சிங்கள சமூகம் வன்மையாக கண்டித்துள்ளது. சிறிலங்கா அரசு பொன்சேகாவிற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசின் இந்த வெறிச் செயல் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் அரசியல் கருத்து வேறுபாடுகளையும் மட்டுமே காட்டுவதாகவும் அரசு இன்னொரு தீவிரவாத இயக்கம் போல் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது. இதைப் போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதை போன்றது என்றும் புலம் பெயர்ந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் லங்கா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக