செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகா கைது விவகாரம் சர்வதேச நாடுகள் தலையிட முடியாது

சரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிட முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமையவே இக்கைது இடம்பெற்றிருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள். ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்பதற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர். தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார்.

எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது” என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டார். எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம் செய்ய எப்போதும் நினைத்ததில்லை. கைது செய்யப்படுவதாகக் கூறப்படுகின்ற போதும் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை” என திருமதி பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

மகிந்த போன்றவர்களை தெரிவு செய்தது மக்களின் தவறு

சரத் பொன்சேக்கா போன்ற நாட்டை விடுவித்த ஒரு யுத்த வீரனுக்கு இழைக்கப்பட்டுள்ளது ஒரு பெரிய அநியாயம் என்றும் இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கர் தெரிவித்துள்ளார். அதே போல உண்மையை அறிவது மக்களின் உரிமை என்றும் அதை எழுதுதுவது ஊடகவியலாளரின் கடமை என்றும் அதை மறைக்கவும் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை சகலரும் கண்டிக்க வேண்டும் என்றும் மகாநாயக்கர் கேட்டுள்ளார். இது குறித்து நீங்கள் ஆட்சியாளருக்கு எடுத்துச் சொல்ல முடியாதா என்று கேட்டதற்கு நாம் சொல்வதைக் கேட்பவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இல்லையென்றும் இது போன்றவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறு என்றும் மகாநாயக்கர் தெரிவித்தார். பௌத்தி பீடங்களின் அதிஉயர் பதவியான மகாநாயக்கர் பதவியிலுள்ள தேரரின் இந்தக் கூற்று அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் கைது

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களித்தமைக்காக நன்றி கூறும் கையேடுகளை விநியோகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சரத் பொன்சேகாவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு கட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகத்தின் முன்னால் இருந்தே கையேடுகளை விநியோகித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவனும் மாணவியும் சடலங்களாக மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிகப்பீடத்தின், முதலாம் வருட மாணவனும் மாணவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையைச் சேர்ந்த 21 வயதான ஆர். விக்டர் அருள்தாஸ், மட்டக்களப்பைச் சேர்ந்த 21 வயதான வேலாயுதம் திருவிழி ஆகியோரே இவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த இருவரும்வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது அவயவங்களை இழந்த நிலையில் வவுனியா இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்து அண்மையிலேயே வெளியேறி யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட குளக்கட்டு பகுதியில் இருந்து இவர்களால் எழுதப்பட்டதாக கருதப்படும் கடிதம் ஒன்றும், இவர்களது அடையாள அட்டைகளும் கையடக்கத்தொலைபேசியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தாம் போர்க் காலத்தில் பலதை இழந்துள்ளோம். தற்போது சாதாரண மக்கள் போல் எங்களால் வாழ முடியவில்லை எனவும், அகதி முகாமில் முடங்கியுள்ள தமது பெற்றோரை எண்ணி கவலையடைவதாகவும், தாம் எவ்வளவு காலத்துக்கு நிவாரணங்களையும் கொடுப்பனவுகளையும் நம்பி கல்வி கற்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துயர சம்பவம் யாழ் பல்கலைக்கழக சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

உலகத் தமிழர்களுக்காக புதிய அமைப்பு உதயம்

புதிய அமைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி. கோவை வ.உ.சி. திடலில் ஞாயிற்றுக்கிழமை நிறைவுப்பெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழீழ விடுதலைப் போரில் உயர்நீத்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், முத்துக்குமார் மற்றும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த 19 தியாகிகளுக்கும் இந்த மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது. 2. தங்களது சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் 60 ஆண்டுகளாகப் போராடும் ஈழத்தமிழர்கள் மீது இனப்போரை ஏவி தமிழின அழிப்பை நடத்திய ராஜபக்சே அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 3. வன்னிப்போரில் ஒரே நாளில் 35 ஆயிரம் தமிழர்களை கொலை செய்து மொத்த போரில் ஒரு லட்சம் தமிழர்களை பலியாக்கி, 3.5 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் வதை செய்யும் ராஜபக்சே அரசை கண்டிக்காமல் அதற்கு துணையாக இருக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். 4. இலங்கையில் நடந்த போர் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் குறிப்பிட்டு நடவடிக்கையில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் மெத்தனப் போக்கை கண்டிக்கிறோம். 5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகுவதை இம் மாநாடு வரவேற்கிறது. அது இன்றைய காலத்தின் கட்டாயம் என இம்மாநாடு கருதுகிறது. 6. மலேசியத் தலைமை அமைச்சரது சிறப்பு அதிகாரியின் சமீபத்திய சுடுசொற்கள் தமிழர்களின் குடியுரிமை பறிப்பதாகவும், தமிழர்களை பிச்சைக்காரர்களாக இழிவுபடுத்திய இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 7. மலேசியாவில் வழிபாட்டுத்தலங்கள், தாக்கப்படுவதும், இழிவுப்படுத்தப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 8. மலேசிய மலைத்தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் நிலங்கள், பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 9. மலேசியாவில் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானியர்களால் வலுக்கட்டாயமாக சயாம் மரண ரயில் பாதைப் பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொலையுண்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ஜப்பான் நாடு நட்ட ஈடு கொடுக்க வேண்டும். 10. மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியர் பிரிவில் தமிழ் பகுதி தலைவர் நீக்கம் பெற்று மலாய்க்காரர் பதவியேற்றுள்ளார். தேசியப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கியம் படித்தால் சான்றிதழ்களில் இடம்பெறாது என மலேசிய அரசு அறிவித்துள்ளதை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 11. மலேசியாவில் இயங்கி வந்த 1,500 தமிழ்ப் பள்ளிகள், இன்று 524 பள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தமிழ்க் கல்வி மறுப்பு மாற்றப்பட்டு தேவையான தமிழ்ப் பள்ளிகளை உருவாக்க வேண்டும். 12. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்திய தூதரகங்களில் தமிழர்களை தூதர்களாக நியமிக்க வேண்டும். 13. தமிழ்நாட்டில் விளைநிலங்களை மொத்தமாக ஆலைகளுக்கு வாங்கி தரிசாக்குவதும், தமிழ் நிலங்களை மாற்றாரது வணிகக் குழுமங்களுக்கு சொந்தமாக்குவதுமான அபாயம் நடைபெற்று வருகிறது. இதை கணக்கெடுத்து உடனடியாக நிறுத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். 14. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நியாயமாக சேர வேண்டிய நீரை பெற்றுத்தருவதில் தமிழக ஆட்சியாளர்களின் பலவீனத்தை பயன்படுத்தி மத்திய அரசு துரோகம் இழைக்கிறது என இம் மாநாடு கண்டிக்கிறது. 15. தமிழ்நாட்டின் சொத்தான கச்சத்தீவை திரும்பப்பெற 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் தாரைவார்ப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 16. 1983 முதல் இன்றுவரை 25 ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்த சிங்கள கடற்பகுதியினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 17. தமிழக இளைஞர்களை திசை திருப்பி வரும் போதைப்பழக்கம், திரைப்படபித்து, லாட்டரி மோகம் ஆகியவற்றை அனுமதிக்கும் ஆபத்தான போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். 18. இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழ்மொழியை ஆக்க வேண்டும். 19. அண்மைகாலங்களில் தமிழ்நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக்கு எதிராக அரங்குக் கூட்டங்களுக்குக்கூட அனுமதி மறுக்கும் காவல்துறையின் போக்கு உள்ளது. இதனால் நீதிமன்றம் சென்றுதான் உரிமைகளைப் பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலநிலை நிறுத்தப்படாவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென இம் மாநாடு எச்சரிக்கிறது. 20. இந்திய நாட்டிலேயே பெங்களூரு, மும்பை, தலைநகர் தில்லி போன்ற நகரங்களில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதை நிறுத்தி தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 21. இம் மாநாடு நிறைவுப்பெற்ற தேதிக்குப்பின் 100 நாட்களுக்குள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யக்கூடாது. இல்லையெனில் தமிழகத்தில் இருந்து 1 லட்சம் இளைஞர்கள் இலங்கை நோக்கி புறப்படவுள்ளோம். 22. உலகம் முழுவதும் 80 நாடுகளில் வாழும் தமிழர்களை பாதுகாக்க உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் என்னும் புதிய அமைப்பை 2 மாதங்களில் உருவாக்குவது என்றும் இதன் செயற்குழு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மலேசியா நாட்டின் பினாங்கு மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது

பாவம் புத்தபிக்குகள் தலதா மாளிகையில் இருந்து வெங்கடாஜலபதியை பொறாமையுடன் பார்க்க வேண்டிய நிலை

சிங்கள மாத்தயா சரத் பொன்சேகாவின் பிடரியில் அடித்தது இராணுவச் சிப்பாய். டாக்டர் பட்டத்துடன் வந்து சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து மகிழ்ந்தார்.. திருப்பதி வெங்கடாஜலபதியின் மகிமையோ மகிமை.. விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்துவிட்டது என்ற தகவல் அறிந்ததும் சிரியாவில் இருந்து வந்து இறங்கி விமான நிலைய தரையை முத்தமிட்டு வெற்றி வீரனானார் மகிந்த ராஜபக்ஷ. இப்போது ரஸ்யாவில் இருந்து வந்திறங்கி மறுபடியும் தரையை முத்தமிட்டுள்ளார். இப்போது அவருடைய முன்னாள் தளபதி கைது செய்யப்பட்டுள்ள செய்தி அவரை வரவேற்றுள்ளது. விமான நிலையத்தில் வந்திறங்கும் போதெல்லாம் வெற்றி வீரனாக வந்திறங்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் கனவு மீண்டும் அரங்கேறியுள்ளது. தனது கனவுகளை நிறைவேற்ற வேண்டுமென திருப்பதி வெங்கடாஜல பதிக்கு யாகம் செய்தார் மகிந்த. பின் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, இப்போது டாக்டர் பட்டத்தையும் தலையில் சூடி நாடு திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது பிரதான எதிரியை தேர்தலில் தோற்கடித்தும் கோபம் தணியாமல், இப்போது பிடரியில் அடித்து சிறைக்குள் போட்டுள்ளார். திருப்பதி வெங்கடாஜலபதிக்கு செய்த யாகத்தின் மகிமைக்கு இன்னொரு சான்று. பாவம் புத்தபிக்குகள் தலதா மாளிகையில் இருந்து வெங்கடாஜலபதியை பொறாமையுடன் பார்க்க வேண்டிய நிலை. இது மட்டுமா… இந்த நிகழ்வு மேலும் பல பழைய சம்பவங்களை நினைவிற்குள் கொண்டு வருகிறது. அன்று காட்டிக் கொடுத்ததாக விடுதலைப் புலிகள் தமது தளபதியான தமிழ் மாத்தயா மகேந்திரராஜாவை கைது செய்தது போல இன்று காட்டிக் கொடுத்ததாக சிங்கள மாத்தயாவான சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ. அன்று மாத்தயா பின்னால் இந்தியா இருந்ததாக குற்றம் சாட்டினார்கள் புலிகள், இன்று சரத்தின் பின்னால் மேலை நாடுகள் இருந்தாக குற்றம் சாட்டுகிறார்கள் சிங்கள ஆட்சியாளர். வரலாறு ஒரு மாற்றமில்லாத தொடர்கதையாக சுழல்கிறது. அன்று புலிகளின் இராணுவத்தளபதி கருணாவை அவர்களிடமிருந்து பிளவுபடுத்தி விடுதலைப் புலிகளை தாமே உடைத்ததாக ரணிலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்டது. இப்போது அதே ரணில்தான் சிங்கள அரசின் இராணுவத் தளபதியை பிளவு படுத்தி அரசுக்கு எதிராகவே விட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிபர் தேர்தல் முடிந்ததும் செத்த நாயில் இருந்து உண்ணி கழன்றது போல ரணிலும், மற்றவர்களும் கழன்று போக சரத் வெறுங்கையுடன் இராணுவப் பாதுகாப்பு இல்லாமலே வீடு போன சம்பவம் நடைபெற்றது. நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தவரும் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது இடம் பெற்றவருமான ஒருவரை அவருடைய இராணுவமே பிடரியில் அடித்து, நாயை இழுப்பது போல இழுத்து கைகளில் விலங்கு பூட்டிச் சென்று சிறையில் அடைத்தது சாதாரண நிகழ்வல்ல. அன்று இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ் மாத்தயாவிற்கும் அவரது இராணுவமே பிடரியில் அடித்து இழுத்து சென்றது போன்ற இன்னொரு சம்பவம் இதுவாகும். இந்தக் கைது நிகழ்வு இரகசியமான முறையில் நடைபெறவில்லை. மனோ கணேசன், ரவூப்கக்கீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா இருந்த வீட்டின் முதலாவது மாடியின் அறைக்கதவுகளை உடைத்துத் தகர்த்துக் கொண்டு நுழைந்த இராணுவம் சரத்தை கதறக்கதற இழுத்து சென்றுள்ளது. தனது கணவன் முறைப்படி கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார் என்று சரத் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகளை செய்ய நேரும் என்பது அரசியலின் இயங்கியல் விதியாகும். அதிகாரத்தை கையில் வைத்திருக்காதவருக்கு சிறீலங்காவில் சிறைக்கம்பிகள்தான் பரிசு. அன்று சரத் பொன்சேகா உன்மத்தமேறி அடித்து, சுட்டு, துவம்சம் செய்து சிறையில் போட்ட தமிழ்க் கைதிகளுடன் இன்று சிறையில் இருக்கிறார். சரத்தை கவலை தோய்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள் சிறைக்குள் இருக்கும் தமிழ்க் கைதிகள். உண்ணாவிரதமிருந்தாலும், வழக்கே இல்லாது கம்பி எண்ணி கம்பங்களி சாப்பிடும் வேதனையை பகிர்ந்து கொள்ள இப்போது சரத்திற்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. அன்று சரத்தின் இராணுவத்தால் கிரிசாந்தி கற்பழித்து, புதைக்கப்பட்டபோது கதறியழுத தாயின் கண்ணீரைப் பார்த்து மௌனமாக இருந்த சரத் பொன்சேகாவின் மனைவி, இன்று கண்ணீருடன் கதறியழுகிறார். கிரிசாந்திகள் வடித்த கண்ணீர் சிங்கள தேசத்திற்குள் பாயத் தொடங்கியுள்ளது. இதைவிட மேலும் பல காட்சிகள் அரங்கேறப்போகின்றன.. தவறு செய்யும் எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் சறுக்கி விடுகிறார்கள். சரத் பொன்சேகாவின் புதல்விகள் அமெரிக்காவிற்கு சென்ற வாரமே போய்விட்டார்கள். புதுமாத்தளனில் கடைசியாக நடைபெற்ற மர்மங்களை அவர்கள் வெளியிட வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் தாங்க இரண்டு ஆட்சி முறைகள் உள்ளன.. 1. பர்மீய ஜிந்தா ஆட்சி 2. றொபேட் முகாபேயின் சிம்பாப்பே ஆட்சி சிறீலங்கா என்ற நாணயத்திற்கு இரண்டே இரண்டு பக்கங்களே இருப்பது தெரிகிறது. தமிழர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இனி நாணயத்தின் எந்தப் பக்கம் விழுந்தாலும் அது சிங்கள இனத்திற்கே பரிசாக அமையப்போகிறது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கும், இந்திய நடுவண் அரசுக்கும் தமிழர்கள் ஒரு ஜே போடலாம்..

ஈரானுக்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்க மேற்குலக நாடுகள்

ஈரானக்கு எதிராக கடுமையான தடைகளை விதிப்பதற்கு மேற்குலக நாடுகள் ஆயத்தமாகி வருவதாக பி.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. யுரேனியம் உற்பத்தி தொடர்பில் ஈரான் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலோஸ் சார்கோசி மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் ஆகியோர் பாரிஸ் நகரில் ஈரானிய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஈரானின் நடவடிக்கைகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. ஈரானில் அணு உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனை ஓர் சாதகமான நிலையாகக் கருத முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதென மேற்குலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்கனவே மூன்று தடவைகள் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நிலநடுக்கம் : மக்கள் அலறியடித்து ஓட்டம்

அமெரிக்கா அருகே உள்ள ஹைதி தீவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 2 லட்சம் பேர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் அமெரிக் காவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோ மாநிலத்தில் உள்ள ஒசாகா மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். 5 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்தது. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.9 புள்ளியாக இருந்தது. ஒசாகாவுக்கு 23 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் அமைந்திருந்தது. அமெரிக்காவில் கடந்த வாரமும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலை: கவிதை

விடுதலை என்பது விடுகதை அல்ல வெற்றியும் எளிதல்ல எலியாக நாம் வளை தேடவில்லை புலியாகி பகைவெல்ல புறப்பட்டுவிட்டோம் தடையினை உடைப்போம் தலைவனை மதிப்போம் மனதெங்கும் நிறைவான மாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் எடுபடையெனவே படுகளம் ஆடும் பகையது கொன்று புதியதோர் சரித்திரம் படைப்போம் வீரர் நாம் வேகம்தான் எம் மூச்சு மண்ணின் மைந்தர் நாம் மானம்தான் பெரிது கரிகாலன் வளர்த்தெடுத்த கரும்புலிகள் நாங்கள் கணப்பொழுதில் விடியல் காண்போம் கடலன்னை தத்தெடுத்த கடற்புலிகள் நாங்கள் கடலதிலும் காண்போம் விடுதலை வான்மகவு ஈன்றெடுத்த வான்புலிகள் நாங்கள் விண்ணேறிப் பெறுவோம் வியத்தகு விடுதலை தேசத்தின் குரலால் தினம் வளர்ந்தவர்கள் - நாங்கள் தேசம் அதிர தேசியவிடுதலை காண்போம்.

அமைதி காக்க பான் கோரிக்கை

பொன்சேகாவைக் கைது செய்துள்ளதற்கு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அமெரிக்க அரசு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். இவர் முழுக்க முழுக்க ராஜபக்சேவின் ஆதரவாளராக மாறி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் கருத்து தெரிவிக்கையில், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது. அவரது கைது ராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது. அவரது கைது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல். அவர் கைது செய்யப்பட்டுள்ளதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பல தரப்பினருடனும் நான் பேசி வருகிறேன். சில ராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் இந்தக் கைது நடவடிக்கை. அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும். ராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்பது சட்ட விரோதமானது. நள்ளிரவில் ஒருவரை கைது செய்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உலகம் முழுவதிலிருந்தும் இதற்கு கண்டன்ம் எழுப்பப்படும். ஓய்வு பெற்ற ராணுவத் தளபதியை ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது. போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால் சாட்சியம் அளிக்க தயார் என சரத் பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்கு காரணமாக இருக்கலாம் என்றார். இலங்கை பிளவுபடும்- அமெரிக்கா பொன்சேகாவின் கைது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் போர் வெற்றிக்குப் பின்னர் பெரும் பிளவுகளுக்கு வழி ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறோம். அமெரிக்கா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம், ஜனநாயக நெறிமுறைகளுக்கு இடம்கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை தேவையற்ற ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிரீன் கார்ட் வைத்திருப்பவர் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்னஸ்டி கண்டனம்.. லண்டனில் உள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபையான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலும் பொன்சேகா கைதைக் கண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல் படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும். சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை. ராஜபக்சே, தேர்தல் வெற்றியின் பின்னரும் விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும். பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்று அது கூறியுள்ளது. எல்லோரும் அமைதி காக்க வேண்டும்- பான் இலங்கையின் கொடும் போர்க் குற்றங்கள் குறித்து உலகமே காட்டுக் கத்தலாக கத்தியபோதும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் இருந்து வரும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இந்த கைது நடவடிக்கையைக் கண்டிக்கவில்லை. மாறாக அனைவரும் அமைதி காப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பான் கி மூன் கூறுகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக் கூடாது. இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியை கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் முக்கியமானது. தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறினார் பான் கி மூன்.

நீர் விமானம், வரும் 20ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட உள்ளது

கடலுக்கு அடியில் பாய்ந்து செல்லும், "நெக்கர் நிம்ப்' என்ற நீர் விமானம், வரும் 20ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. கடலில் செல்லும் கப்பல், படகு, நீர்மூழ்கி கப்பலை அறிந்தும், பலர் பயணித்தும் இருக்கும் பட்சத்தில், சாதாரண ஜெட் விமானம் போல் தோற்றமளிக்கும், நீர் விமானம் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மொபைல்போன், விமான சேவை உட்பட, பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும், "வெர்ஜின்' குழுமத்தின் தலைவர் பிரான்சன், நீரில் செல்லும் விமானத்தை தயாரித்துள்ளார். இவ்விமானத்தில் ஒரு பைலட், மூன்று பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். தோற்றத்தில் ஜெட் விமானம் போல் காட்சியளித்தாலும், பிற விமானங்களைப் போல், ரன்வேயில் பயணிப்பது போல், நீர் விமானம், கடலின் ஆழத்தில் பயணிக்கக் கூடியது. இவ்விமானம் மூலம், கடலில் பல வகை உயிரினங்கள், ஆழ்கடல் ஆகியவற்றையும், சிதைந்த கப்பலின் சேதங்கள் என பலவற்றையும் காணலாம். இவ்விமானம் மணிக்கு, ஐந்து கடல் மைல் வேகத்தில், 100 அடி ஆழம் வரை, இரண்டு மணிநேரம் நீரில் இயங்கும். விமானத்தில் பயணிக்க விரும்புவோர், ஓட்டுனருக்குரிய விசேஷ ஆடைகள், முகமூடி போன்றவற்றை அணிந்து, பாதுகாப்பாக தான் பயணிக்க முடியும்; விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சியும் பெற வேண்டும். விமான வாடகையாக, ஒரு வாரத்திற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்படும். ஆனால், விமானம் வேண்டுவோர், பிரான்சனின் விருந்தினராக வேண்டும்; அதற்கு தனியாக 44 லட்ச ரூபாய் கட்டவேண்டும். இவ்விமானம், வரும் 20ம் தேதி, வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, "நெக்கர் நிம்ப்' விமானத்தை விட, கடலில் 35 ஆயிரம் அடி வரை பயணிக்கத்தக்க விமானம் தான், பிரான்சனின் கனவு திட்டமாக உள்ளது

பிரித்தானியாவுக்கு சட்டபூர்வ விசாவுடன் சென்ற மாணவன் நாடு கடத்தப்பட்டார்!

பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்வதற்காக கொழும்பில் இருந்து சட்டபூர்வ விசா பெற்று லண்டனுக்கு வருகைதந்த இலங்கை மாணவன் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய விசா ஆவணங்களுடன் மேற்படி இளைஞன் வந்தபோதும் அந்த மாணவனை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். கொழும்பில் இருந்து வந்த மேற்படி மாணவன் விமான நிலையத்தை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததை அறிந்த அவரது உறவினர்கள் இமிக்கிறேசன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மிக நீண்ட நேரமாகியும் மேற்படி இளைஞன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வராததை தொடர்ந்து சட்டஆலோசகரை அழைத்துக்கொண்டு குடிவரவு அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள முயன்றபோதே மாணவன் கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டுவிட்டார் என்ற தகவல் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய அரசு மாணவர்களுக்கான விசா அனுமதியில் கடுமையான சட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இன்னும் சட்டம் அமுல்படுத்த முன்னரே இவ் மாணவன் நாடு கடத்தப்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை – கண்டி மாவட்டங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலி

திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். திருமலை – மணலாறு எல்லையில் உள்ள தென்னமரவாடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா ஊர்காவல் படைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். இதேபோன்று, கண்டியில் அமைந்திருக்கும் மின்சார உற்பத்தி நிலையம் முன்பாக நேற்று காவற்கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சிறீலங்கா படைக் காவலர் மின்சாரம் பாய்ந்ததில் பலியாகியுள்ளார்

நாயைப் போன்று இழுத்துச் செல்லப்பட்டார் பொன்சேகா: மனோ கணேசன்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த இலங்கை ராணுவ போலீஸார், அவரை ஒரு நாயைப் போன்று தரதரவென இழுத்துச் சென்றதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். பொன்சேகா, அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது உடனிருந்த மனோ கணேசன் எம்.பி., நடந்த சம்பவம் குறித்து கூறியதாவது, நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து பொன்சேகாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு ராணுவத்தினர் புகுந்தனர். எவ்வித கேள்வியும் இன்றி பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் பயங்கரவாதிகள் என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர். நாங்கள் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைது செய்வதானால் சிவில் போலீஸ் மூலம் கைது செய்யும்படி பொன்சேகா கூறியதைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் போலீஸார் வராமல் நான் வரமாட்டேன் என்று பொன்சேகா கூறியதும், வந்திருந்த இராணுவத்தினர் பாய்ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர். இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் செல்ல முயன்ற போது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்ததையும் கூடக் கண்டேன். அவரைத் தரதரவென இழுத்துச் சென்ற சமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர். இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிக மிகக் கேவலமானது; அநாகரிகமானது. பொன்சேகாவுடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்க்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்து விட்டனர். அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணி நேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன், ரவூஃப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ) இராணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர். பின்னரே வெளியேற அனுமதித்தனர் என்று மனோ கணேசன் கூறியுள்ளார்