செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

பாவம் புத்தபிக்குகள் தலதா மாளிகையில் இருந்து வெங்கடாஜலபதியை பொறாமையுடன் பார்க்க வேண்டிய நிலை

சிங்கள மாத்தயா சரத் பொன்சேகாவின் பிடரியில் அடித்தது இராணுவச் சிப்பாய். டாக்டர் பட்டத்துடன் வந்து சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து மகிழ்ந்தார்.. திருப்பதி வெங்கடாஜலபதியின் மகிமையோ மகிமை.. விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்துவிட்டது என்ற தகவல் அறிந்ததும் சிரியாவில் இருந்து வந்து இறங்கி விமான நிலைய தரையை முத்தமிட்டு வெற்றி வீரனானார் மகிந்த ராஜபக்ஷ. இப்போது ரஸ்யாவில் இருந்து வந்திறங்கி மறுபடியும் தரையை முத்தமிட்டுள்ளார். இப்போது அவருடைய முன்னாள் தளபதி கைது செய்யப்பட்டுள்ள செய்தி அவரை வரவேற்றுள்ளது. விமான நிலையத்தில் வந்திறங்கும் போதெல்லாம் வெற்றி வீரனாக வந்திறங்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் கனவு மீண்டும் அரங்கேறியுள்ளது. தனது கனவுகளை நிறைவேற்ற வேண்டுமென திருப்பதி வெங்கடாஜல பதிக்கு யாகம் செய்தார் மகிந்த. பின் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, இப்போது டாக்டர் பட்டத்தையும் தலையில் சூடி நாடு திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது பிரதான எதிரியை தேர்தலில் தோற்கடித்தும் கோபம் தணியாமல், இப்போது பிடரியில் அடித்து சிறைக்குள் போட்டுள்ளார். திருப்பதி வெங்கடாஜலபதிக்கு செய்த யாகத்தின் மகிமைக்கு இன்னொரு சான்று. பாவம் புத்தபிக்குகள் தலதா மாளிகையில் இருந்து வெங்கடாஜலபதியை பொறாமையுடன் பார்க்க வேண்டிய நிலை. இது மட்டுமா… இந்த நிகழ்வு மேலும் பல பழைய சம்பவங்களை நினைவிற்குள் கொண்டு வருகிறது. அன்று காட்டிக் கொடுத்ததாக விடுதலைப் புலிகள் தமது தளபதியான தமிழ் மாத்தயா மகேந்திரராஜாவை கைது செய்தது போல இன்று காட்டிக் கொடுத்ததாக சிங்கள மாத்தயாவான சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ. அன்று மாத்தயா பின்னால் இந்தியா இருந்ததாக குற்றம் சாட்டினார்கள் புலிகள், இன்று சரத்தின் பின்னால் மேலை நாடுகள் இருந்தாக குற்றம் சாட்டுகிறார்கள் சிங்கள ஆட்சியாளர். வரலாறு ஒரு மாற்றமில்லாத தொடர்கதையாக சுழல்கிறது. அன்று புலிகளின் இராணுவத்தளபதி கருணாவை அவர்களிடமிருந்து பிளவுபடுத்தி விடுதலைப் புலிகளை தாமே உடைத்ததாக ரணிலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்டது. இப்போது அதே ரணில்தான் சிங்கள அரசின் இராணுவத் தளபதியை பிளவு படுத்தி அரசுக்கு எதிராகவே விட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிபர் தேர்தல் முடிந்ததும் செத்த நாயில் இருந்து உண்ணி கழன்றது போல ரணிலும், மற்றவர்களும் கழன்று போக சரத் வெறுங்கையுடன் இராணுவப் பாதுகாப்பு இல்லாமலே வீடு போன சம்பவம் நடைபெற்றது. நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தவரும் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது இடம் பெற்றவருமான ஒருவரை அவருடைய இராணுவமே பிடரியில் அடித்து, நாயை இழுப்பது போல இழுத்து கைகளில் விலங்கு பூட்டிச் சென்று சிறையில் அடைத்தது சாதாரண நிகழ்வல்ல. அன்று இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ் மாத்தயாவிற்கும் அவரது இராணுவமே பிடரியில் அடித்து இழுத்து சென்றது போன்ற இன்னொரு சம்பவம் இதுவாகும். இந்தக் கைது நிகழ்வு இரகசியமான முறையில் நடைபெறவில்லை. மனோ கணேசன், ரவூப்கக்கீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா இருந்த வீட்டின் முதலாவது மாடியின் அறைக்கதவுகளை உடைத்துத் தகர்த்துக் கொண்டு நுழைந்த இராணுவம் சரத்தை கதறக்கதற இழுத்து சென்றுள்ளது. தனது கணவன் முறைப்படி கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார் என்று சரத் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகளை செய்ய நேரும் என்பது அரசியலின் இயங்கியல் விதியாகும். அதிகாரத்தை கையில் வைத்திருக்காதவருக்கு சிறீலங்காவில் சிறைக்கம்பிகள்தான் பரிசு. அன்று சரத் பொன்சேகா உன்மத்தமேறி அடித்து, சுட்டு, துவம்சம் செய்து சிறையில் போட்ட தமிழ்க் கைதிகளுடன் இன்று சிறையில் இருக்கிறார். சரத்தை கவலை தோய்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள் சிறைக்குள் இருக்கும் தமிழ்க் கைதிகள். உண்ணாவிரதமிருந்தாலும், வழக்கே இல்லாது கம்பி எண்ணி கம்பங்களி சாப்பிடும் வேதனையை பகிர்ந்து கொள்ள இப்போது சரத்திற்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. அன்று சரத்தின் இராணுவத்தால் கிரிசாந்தி கற்பழித்து, புதைக்கப்பட்டபோது கதறியழுத தாயின் கண்ணீரைப் பார்த்து மௌனமாக இருந்த சரத் பொன்சேகாவின் மனைவி, இன்று கண்ணீருடன் கதறியழுகிறார். கிரிசாந்திகள் வடித்த கண்ணீர் சிங்கள தேசத்திற்குள் பாயத் தொடங்கியுள்ளது. இதைவிட மேலும் பல காட்சிகள் அரங்கேறப்போகின்றன.. தவறு செய்யும் எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் சறுக்கி விடுகிறார்கள். சரத் பொன்சேகாவின் புதல்விகள் அமெரிக்காவிற்கு சென்ற வாரமே போய்விட்டார்கள். புதுமாத்தளனில் கடைசியாக நடைபெற்ற மர்மங்களை அவர்கள் வெளியிட வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் தாங்க இரண்டு ஆட்சி முறைகள் உள்ளன.. 1. பர்மீய ஜிந்தா ஆட்சி 2. றொபேட் முகாபேயின் சிம்பாப்பே ஆட்சி சிறீலங்கா என்ற நாணயத்திற்கு இரண்டே இரண்டு பக்கங்களே இருப்பது தெரிகிறது. தமிழர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இனி நாணயத்தின் எந்தப் பக்கம் விழுந்தாலும் அது சிங்கள இனத்திற்கே பரிசாக அமையப்போகிறது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கும், இந்திய நடுவண் அரசுக்கும் தமிழர்கள் ஒரு ஜே போடலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக