செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

உலகத் தமிழர்களுக்காக புதிய அமைப்பு உதயம்

புதிய அமைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி. கோவை வ.உ.சி. திடலில் ஞாயிற்றுக்கிழமை நிறைவுப்பெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழீழ விடுதலைப் போரில் உயர்நீத்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், முத்துக்குமார் மற்றும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த 19 தியாகிகளுக்கும் இந்த மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது. 2. தங்களது சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் 60 ஆண்டுகளாகப் போராடும் ஈழத்தமிழர்கள் மீது இனப்போரை ஏவி தமிழின அழிப்பை நடத்திய ராஜபக்சே அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 3. வன்னிப்போரில் ஒரே நாளில் 35 ஆயிரம் தமிழர்களை கொலை செய்து மொத்த போரில் ஒரு லட்சம் தமிழர்களை பலியாக்கி, 3.5 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் வதை செய்யும் ராஜபக்சே அரசை கண்டிக்காமல் அதற்கு துணையாக இருக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். 4. இலங்கையில் நடந்த போர் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் குறிப்பிட்டு நடவடிக்கையில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் மெத்தனப் போக்கை கண்டிக்கிறோம். 5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகுவதை இம் மாநாடு வரவேற்கிறது. அது இன்றைய காலத்தின் கட்டாயம் என இம்மாநாடு கருதுகிறது. 6. மலேசியத் தலைமை அமைச்சரது சிறப்பு அதிகாரியின் சமீபத்திய சுடுசொற்கள் தமிழர்களின் குடியுரிமை பறிப்பதாகவும், தமிழர்களை பிச்சைக்காரர்களாக இழிவுபடுத்திய இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 7. மலேசியாவில் வழிபாட்டுத்தலங்கள், தாக்கப்படுவதும், இழிவுப்படுத்தப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 8. மலேசிய மலைத்தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் நிலங்கள், பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 9. மலேசியாவில் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானியர்களால் வலுக்கட்டாயமாக சயாம் மரண ரயில் பாதைப் பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொலையுண்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ஜப்பான் நாடு நட்ட ஈடு கொடுக்க வேண்டும். 10. மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியர் பிரிவில் தமிழ் பகுதி தலைவர் நீக்கம் பெற்று மலாய்க்காரர் பதவியேற்றுள்ளார். தேசியப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கியம் படித்தால் சான்றிதழ்களில் இடம்பெறாது என மலேசிய அரசு அறிவித்துள்ளதை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 11. மலேசியாவில் இயங்கி வந்த 1,500 தமிழ்ப் பள்ளிகள், இன்று 524 பள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தமிழ்க் கல்வி மறுப்பு மாற்றப்பட்டு தேவையான தமிழ்ப் பள்ளிகளை உருவாக்க வேண்டும். 12. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்திய தூதரகங்களில் தமிழர்களை தூதர்களாக நியமிக்க வேண்டும். 13. தமிழ்நாட்டில் விளைநிலங்களை மொத்தமாக ஆலைகளுக்கு வாங்கி தரிசாக்குவதும், தமிழ் நிலங்களை மாற்றாரது வணிகக் குழுமங்களுக்கு சொந்தமாக்குவதுமான அபாயம் நடைபெற்று வருகிறது. இதை கணக்கெடுத்து உடனடியாக நிறுத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். 14. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நியாயமாக சேர வேண்டிய நீரை பெற்றுத்தருவதில் தமிழக ஆட்சியாளர்களின் பலவீனத்தை பயன்படுத்தி மத்திய அரசு துரோகம் இழைக்கிறது என இம் மாநாடு கண்டிக்கிறது. 15. தமிழ்நாட்டின் சொத்தான கச்சத்தீவை திரும்பப்பெற 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் தாரைவார்ப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 16. 1983 முதல் இன்றுவரை 25 ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்த சிங்கள கடற்பகுதியினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 17. தமிழக இளைஞர்களை திசை திருப்பி வரும் போதைப்பழக்கம், திரைப்படபித்து, லாட்டரி மோகம் ஆகியவற்றை அனுமதிக்கும் ஆபத்தான போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். 18. இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழ்மொழியை ஆக்க வேண்டும். 19. அண்மைகாலங்களில் தமிழ்நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக்கு எதிராக அரங்குக் கூட்டங்களுக்குக்கூட அனுமதி மறுக்கும் காவல்துறையின் போக்கு உள்ளது. இதனால் நீதிமன்றம் சென்றுதான் உரிமைகளைப் பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலநிலை நிறுத்தப்படாவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென இம் மாநாடு எச்சரிக்கிறது. 20. இந்திய நாட்டிலேயே பெங்களூரு, மும்பை, தலைநகர் தில்லி போன்ற நகரங்களில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதை நிறுத்தி தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 21. இம் மாநாடு நிறைவுப்பெற்ற தேதிக்குப்பின் 100 நாட்களுக்குள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யக்கூடாது. இல்லையெனில் தமிழகத்தில் இருந்து 1 லட்சம் இளைஞர்கள் இலங்கை நோக்கி புறப்படவுள்ளோம். 22. உலகம் முழுவதும் 80 நாடுகளில் வாழும் தமிழர்களை பாதுகாக்க உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் என்னும் புதிய அமைப்பை 2 மாதங்களில் உருவாக்குவது என்றும் இதன் செயற்குழு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மலேசியா நாட்டின் பினாங்கு மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக