செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

நாயைப் போன்று இழுத்துச் செல்லப்பட்டார் பொன்சேகா: மனோ கணேசன்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த இலங்கை ராணுவ போலீஸார், அவரை ஒரு நாயைப் போன்று தரதரவென இழுத்துச் சென்றதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். பொன்சேகா, அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது உடனிருந்த மனோ கணேசன் எம்.பி., நடந்த சம்பவம் குறித்து கூறியதாவது, நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து பொன்சேகாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு ராணுவத்தினர் புகுந்தனர். எவ்வித கேள்வியும் இன்றி பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் பயங்கரவாதிகள் என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர். நாங்கள் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைது செய்வதானால் சிவில் போலீஸ் மூலம் கைது செய்யும்படி பொன்சேகா கூறியதைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் போலீஸார் வராமல் நான் வரமாட்டேன் என்று பொன்சேகா கூறியதும், வந்திருந்த இராணுவத்தினர் பாய்ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர். இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் செல்ல முயன்ற போது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்ததையும் கூடக் கண்டேன். அவரைத் தரதரவென இழுத்துச் சென்ற சமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர். இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிக மிகக் கேவலமானது; அநாகரிகமானது. பொன்சேகாவுடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்க்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்து விட்டனர். அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணி நேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன், ரவூஃப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ) இராணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர். பின்னரே வெளியேற அனுமதித்தனர் என்று மனோ கணேசன் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக