வெள்ளி, 29 அக்டோபர், 2010

எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும்.....

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு ஒவ்வொரு வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி கொண்டாடங்களைப் புறக்கணித்து வாழும் தமிழக செக்கடிக்குப்பத்து மக்கள்
ஆனால் புலத்திலோ எந்திரன் படத்திற்கு வரிசையில் நிற்கின்றது புலன் பெயர்ந்த ஈனத்தமிழினம்
“எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும் ஒரு காலத்தில் இருந்தது. ஊரில் ஆறு ஓடாத குறையை சாராய ஆறு நிவர்த்தி செய்தது. மது மயக்கத்தில் எங்கள் சமூகம் அழிந்துகொண்டு வருவதைக் கண்டு மனம் வெறுத்துப் போனோம். தொடர்ச்சியான பிரச்சாரம் மூலமாகவே மனமாற்றத்தைக் கொண்டுவந்தோம். போதைப் பழக்கத்தால் உயிரிழந்த எங்கள் ஊர்க்காரர்களின் சோகக்கதைகளை இளைஞர்களுக்கு பரப்பினோம். மது, சிகரெட் பழக்கங்கள் உடல்நலத்தை கெடுப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். எங்கள் இளைஞர்கள் இப்போது பத்தரைமாற்றுத் தங்கங்கள்” என்கிறார் ஊர்ப்பெரியவரான மா. அர்ச்சுனன்.






விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டவர்கள் செக்கடிக்குப்பத்துக் காரர்கள். அறுபதுகளில் மேல்மலையனூருக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய பெரியார் வந்தார். செஞ்சிக்கு அண்ணா வந்தார். இவர்களது சிந்தனைகளை மேடைவாயிலாக உணர்ந்த ஒரு இளைஞர் கூட்டம், தங்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்பிக் கொண்டது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, தமிழுணர்வுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.