புதன், 7 ஏப்ரல், 2010

பொய்ப் பரப்புரையில் ஈடுபடும் தமிழ்வின் இணையத்தளம்

தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக்கூறும் “தமிழ்வின்” இணையத்தளம், கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். பிலிப்பையா ஜோன்சன் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களால் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில், தமது அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழ்வின் இணையத்தளம் பொய்ப்பரப்புரையை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன், மற்றும் பிலிப்பையா ஜோன்சன் ஆகியோர் கூட்டாகக் கூறியுள்ளனர். தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி விட்டார்கள் என்பது உட்பட, இவ்வாறான பல பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனையும் மீறி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு பெருகி வருவதால், தமிழ்வின் இணையத்தளம் இவ்வாறான அடாவடித்தனமான பொய்ப் பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையான ஊடக தர்மத்துடன் இந்த இணையத்தளம் இயங்கினால் இருவரிடமும் கருத்துக்கேட்டு அதனை உறுதி செய்திருக்க வேண்டும் என, இரண்டு வேட்பாளர்களும் கண்டனம் வெளியிட்டனர். கெளரிமுகுந்தனும், ஜோன்சனும் பிளவுபட்டுள்ளதாகக் கூறும் தமிழ்வின் இணையத்தளம், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இணைந்திருக்கும் நிழற்படத்தை, தங்களுக்குத் தெரியாமலே வெளியிட்டுள்ளமைதான் மிகவும் நகைப்பிற்கிடமான விடயமாகும். தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையத்தளங்களின் உரிமையாளரான சுவிசில் வசிக்கும் சிறிகுகனின் சகோதரரான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஒருபக்க செய்திகளையும், இவ்வாறான விசமப் பரப்புரைகளையும் அந்த இணையத்தளம் மேற்கொண்டு வருவதாகக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

நெஞ்ச நிமித்துக் கொண்டு போகிறார்.

1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வீதிகளில் எங்கும் யாரும் போகலாம் வரலாம். புலிகள் எந்தத் தடையும் போடவில்லை. காவலரணும் வைத்துக் காத்திருக்கவில்லை. ஆனால் 1995 இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்களப் படைகள் அங்கு பல மாற்றங்களை உண்டு பண்ணின. உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவின. பாதைகளை மூடின. காவலரண்களை அமைத்துக் கண்காணித்தன. சோதனைச் சாவடிகளைத் திறந்தன. கண்ணிவெடி வயல்களை உருவாக்கின. மனிதப் புதைகுழிகளை நிறுவின. வதை முகாம்களை நிறுவின. காணிகளை சூறையாடின. வீடுகளை இடித்துத் தள்ளின. இப்படி என்னென்ன அடக்குமுறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தங்கு தடையின்றி செய்து கொண்டே இருந்தனர் கடந்த 15 ஆண்டுகளாக. இதற்கு எல்லாம் ஒத்தூதிக் கொண்டு சிங்களத்தின் கால் பிடித்து பிழைப்பு நடத்தியவர் தான் இப்போ சிலரால் தமிழர்களின் தலைவராம் என்று சொல்லி யாழ்ப்பாணத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியுறாராம் தங்கள் தலைவர் என்று டக்கிளஸ் தேவானந்தா என்ற சிங்கள அருவடியை முன்னிறுத்தி வருகின்றனர். அவர்களின் தங்கத் தலைவர்.. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் தென்மராட்சி மக்களை மீளக் குடியேற்றுகிறேன் என்று கூட்டிப் போய் படம் எல்லாம் எடுத்து பேப்பரில போட்டார். ஆனால் இறுதியில் தலைவரின் முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில் மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். இன்றோ.. தலைவர் தனது சிங்கள அருவருடிக் கூட்டத்திடம் கெஞ்சி மன்றாடி தாங்களே பூட்டி வைத்திருந்த யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிய பாதையை திறந்து வேடிக்கை காட்டுகிறார். யாருக்கு இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றனர். இதே பாதையால் எந்த தங்கு தடையும் இன்றி 1994 இல் பிக் மச் (யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மத்தியில் நடக்கும் பிரபல கிரிக்கெட் போட்டி) போய் பார்த்தவன் என்ற முறையில்.. இந்தப் பேடிகளின் கூத்தை.. இதுதான் சமாதானம்.. சுதந்திரக் காற்று என்று மக்களுக்கு காட்ட விளையும் இந்தத் தெருக் கூத்துக்களை கண்ணுறும் போது.. வேதனை தான் மிஞ்சுகிறது. எங்கள் வீட்டில் வந்து நின்று கொண்டு எங்களுக்கே தடை போட்டுவிட்டு.. அந்தத் தடையை திறக்கிறம் என்றும் எங்களுக்கு விடிவளிக்கிறம் என்றும் வெளிக்கிட்டுள்ள இந்த விடிவெள்ளிகள்.. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகவும் சிங்களப் படைகள் தான் சீருடையிலும் சிவிலிலும் காவலுக்குத் திரிகின்றன. இதுதான் யாழ்ப்பாணத்தார் 30 ஆண்டுகளின் பின் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் மகிமையாம். கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரேபிளேன் ஓடுமாம் என்பது இதைத்தான்.

இந்திய இராணுவ ரகசியங்களை திருடியது சீனா!

இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை சீனா திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய ஏவுகணையின் பழைய தொழில்நுட்பம் மட்டுமல்லாது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை தொழில்நுட்பம் வரை அவர்கள் திருடிவிட்டார்கள் என்று அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்து உளவு நிபுணர்கள் கூறி,​​ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.​ கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க மற்றும் கனடா உளவு நிபுணர்கள்,​​ கணிப்பொறி மூலம் ஒரு நாட்டின் ரகசியங்களை பிற நாடுகள் திருடுவது குறித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.​ அவர்கள் கடந்த 6 மாதம் நடத்திய உளவு நடவடிக்கையில் இந்தியாவின் இராணுவ ரகசியங்களை சீனா திருடியது அம்பலமானது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:​ இந்தியாவின் இராணுவ ரகசியங்களை மட்டுமல்லாது அந்நாட்டின் வெளிநாட்டு உறவு ரகசியங்களையும் சீனா திருடியுள்ளது.​ இந்த ரகசியத் தகவல்கள் அனைத்தையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம்,​​ தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளன. அந்தவகையில் பெல்ஜியம்,​​ செர்பியா,​​ ஜெர்மனி,​​ இத்தாலி,​​ குவைத்,​​ அமெரிக்கா,​​ ஜிம்பாப்வே,​​ சைப்ரஸ்,​​ பிரிட்டன் ஆகிய நாடுகளின் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரக அலுவலகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த தகவல்களும் திருடப்பட்டுள்ளன. நாகாலாந்து,​​ திரிபுரா,​​ மணிப்பூர்,​​ அசாம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்டுவந்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் இராணுவ ரகசியங்களை பிற நாடுகள் திருடுவதென்பது எளிதான விஷயமல்ல.​ அதனால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ ரகசியங்களை சீனா எப்படி திருடியது என்பது தெரியவில்லை.​ இதற்கு இந்தியர்களே உடந்தையாக இருந்தார்களா என்பதும் தெரியவில்லை.​​ தவிர,​​ இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் அலுவலக கணிப்பொறியில் இருந்தும் ரகசியத் தகவல்களை சீனா திருடியுள்ளது.​ இந்த தகவல் எப்படி திருடப்பட்டது என்பதும் மர்மமாக உள்ளது.​ இதை கண்டறிய நாங்கள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம்.​ ஆனால் எங்களால் இறுதிவரை கண்டறிய முடியவில்லை என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட் தாக்குதலில் 73 காவலர்கள் பலி!

சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 73 காவலர்கள் பலியாயினர்.சடலங்களை மீட்க ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 120 பேர் கொண்ட சி.ஆர்.பி.எஃப். படையினர் இன்று காலை பாதை திறப்பு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். சிண்டல்னர், டர்மெட்லா ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது, முக்ரனா வனப்பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் கொண்ட மாவோயிஸ்ட்கள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.முதலில் காவல்படையினர் வந்த வாகனம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறந்த வெளியில் வந்த படையினர் மீது மாவோயிஸ்ட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் 6 இடங்களில் மாவோயிஸ்ட்களுக்கும், காவல்துறையினருக்கும் சண்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மாநிலத்தின் உயர் காவலதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாகத் தெரிவித்தார். மாவோயிஸ்ட்கள் நாட்டின் முதல் எதிரிகள் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார். இதையடுத்தே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதனிடையே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

நாவலடி பிரதேசம் சிங்களவர்களின் குடியேற்ற பகுதியாக மாற இருக்கின்றது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட உல்லாச பயணிகளால் கவர்ந்திழுக்கப்படும் தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கருதப்படும் நாவலடி பிரதேசம் சிங்களவர்களின் குடியேற்ற பகுதியாக மாற இருக்கின்றது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டக்களப்பு நாவலடி பிரதேசமும் ஒன்று. இந்த பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் கடலும் மேற்கு பகுதியில் வாவியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 500 மீற்றருக்கும் குறைவான அகலம் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளதால் இப்பிரதேசத்தில் சுனாமிக்கு பிறகு மக்கள் வசிப்பதற்கு அஞ்சியதாலும் கடற்கரைக்கு அண்டிய பிரதேசங்களில் குடியிருப்புக்களை அமைப்பதற்கு அரசு அங்கிகாரம் வழங்காமையாலும் இப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிறிதொரு பிரதேசமான திராய்மடு எனும் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டார்கள் இருந்தும் ஒரு சிலர் மாத்திரம் அங்கேயே குடியிருப்புக்களை அமைத்து தற்காலிகமான முறையில்தான் வசிக்கிறார்கள். இதேவேளை கடந்த வருடம் இப்பிரதேசத்தில் உல்லாச பயண விடுதிகளை அமைப்பதற்கு தகுதியானவர்களிடமிருந்து அரசினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 5 வருடங்கள் கடந்த நிலையில் மக்கள் அச்சம் இன்றி நாவலடி பிரதேசத்திற்கு வருகிறார்கள் பலபேர் அங்கேயே வசிக்கிறார்கள் இந்த நிலையில் தற்போது உல்லாச பயணிகளும் இங்கே வருவதற்கு தொடங்கி உள்ளார்கள். இதனால் சில தமிழ் தொழில் அதிபர்கள் தாங்களும் இங்கே உல்லாச பயண விடுதிகளை அமைப்பதற்கு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்கள் ஆனால் அவர்களின் அனுமதி மறுக்கப்பட்டது அதேவேளை பாரியளவிலான உல்லாச பயண விடுதிகளை சிங்களவர்களைக்கொண்டு அமைக்கவும் அதில் வேலை பார்ப்பதற்காக அதன் சுற்றுவட்டாரங்களில் சிங்கள குடியேற்றங்களையும் அவர்களை பாதுகாப்பதற்காக ஒரு கடற்படை தளத்தையும் அரசு அமைக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களினூடாக அறிய முடிகின்றது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இப்பிரதேசத்தின் நில அளவை படங்களை கச்சேரி ஊடாக அரசு கோரி இருக்கின்றது. இப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் இனிவரும் காலங்களில் தங்களது பாரம்பரிய பிரதேசத்தையே பார்க்கமுடியாதவாறு அமையப்போகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றுமொரு சுற்றுலா தளமாக விளங்குகின்ற பாசிக்குடா பிரதேசத்தின் பல பகுதிகளை ஏற்கனவே சிங்களவர்கள் (பசில் ராஜபட்ச உட்பட) சுவீகரித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு பிரதேசங்களின் எல்லை கிராமங்களில் அத்து மீறிய சிங்கள குடியேற்றங்களை திட்மிட்டு செயற்படுத்தி வருகின்ற ஸ்ரீ லங்கா அரசானது தற்போது கரையோர பிரதேசங்களிலும் அதை விஸ்தரித்து இன்னும் எங்கெல்லாம் பலாத்காரமாக தமிழர்களின் நிலங்களை அபகரிக்கப் போகின்றதோ தெரியாது

தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள்...........

பூமி உருண்டையானது. அது மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தாமும் இயங்கிக் கொண்டு, வரலாற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் தன்மை வாய்ந்தது. இந்த இயக்கத்தில் பல்வேறு நிகழ்வுகள், அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். சில நிகழ்வுகள் வியப்பை தந்திருக்கலாம். சில அச்சத்தையும், வேறு சில மகிழ்வையும் விளைவித்திருக்கலாம். இவை அனைத்தும் மாறி மாறி நிகழ வேண்டும் என்பது ஒரு நியதி. மாற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கால ஓட்டத்தில் அனைத்தும் கலந்து அடித்துச் செல்லப்படும். அவைகளின் திடமான பதிவுகள் வரலாறாய் நிலைத்து நிற்கும். அந்த அடிப்படையில்தான் பல்வேறு சம்பவங்கள் நமக்கு நினைவுகளாய் நிலைத்து விடுகின்றன. அவை நாம் விரும்பினாலும் மனங்களைவிட்டு அகன்று போகவில்லை. இது கால, சமூக கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாந்தகுலம் ஏற்று, அனுபவித்துவரும் ஒரு இயக்கவியல் கோட்பாடு. இதிலிருந்து யாராலும் மீற முடியாது. இதிலிருந்து ஒருவரும் தப்பித்துச் செல்ல முடியாது.எந்த மனிதனும் இயந்திரத்தனமாக வாழ்வதற்கு காலம் அனுமதிப்பதில்லை. அழுகையும், சிரிப்பும், கவலையும், மகிழ்வும் கலந்து தான் காலம் நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அழுத காலம் நிறைவு பெறத் தொடங்கிவிட்டது. நமது சிரிப்பின் காலம் தொடங்கிவிட்டது. நமது தேசிய தலைவரின் ஆழ்ந்த அரசியல் அறிவு, அதன் அடிப்படை நகர்வுகள் சிங்கள பேரினவாத பேயாட்டத்தின் தத்துவார்த்த தவறுகளை நன்கு அறிந்த காரணத்தால் நாம், நமது கருவிகளை களத்தில் அமர செய்துவிட்டு, அவர்களுக்குள்ளான கருவி ஏந்தலை கணித்துக் கொடுத்திருக்கிறோம். மகிந்தா அரசு தமது மமதையான செயல்பாட்டால் தமிழீழத்தின்மீது தொடுத்த கடுஞ்சமர் இன்று ஒரு எல்லைக்கு வந்துவிட்டது. எந்த ஒரு பயணமும் முடிவற்றதாக இருக்க முடியாது. எந்த ஒரு நிகழ்வும் தொடர்ந்து நிகழப்போவது கிடையாது. கால அளவில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. மகிந்தாவின் கொடுஞ்செயலுக்கான எல்லை, மகிந்தாவாலேயே வகுக்கப்பட்டுவிட்டது. தாம் எந்த அளவையால் அளந்தோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கின்ற கோட்பாட்டியல் மகிந்தாவின் வாழ்வில் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தமிழீழ வரலாற்றை பெரும் எழுச்சிக்கு உள்ளாக்கிய மகிந்தா, உள்ளபடியே நமது வாழ்த்துக்குரியவர். ஒருவேளை தமிழீழ வரலாற்றின் இந்த துயர், அத்தியாயம் படைக்கப்படாமல் இருந்தால், உலகலாவிய பெரும் ஒத்துழைப்பு நமக்கு இந்த அளவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். ஆனால் நமது சிந்தனை, தேசிய தலைவரின் வழிக்காட்டுதல், நாம் களமாடிய நேர்த்தி, நமது மாவீரர்களின் கனவு, நமக்கான தமிழ் தேசிய மண்ணை பெரும் வரலாற்று சிறப்போடு படைத்தளிக்க உறுதி அளித்திருக்கிறது. கடந்த காலங்களில் நாம், ஒன்றுப்பட்ட தேசிய இனம் என்று மிகவும் ஆர்ப்பாட்டத்தோடு அறிவித்து, தேசிய அரசியல் பேசிய மகிந்தாவின் பொய் முகம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் சிலிர்த்தெழுந்து களம்காண தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த வேண்டும் என்பதிலே சிங்கள ஜனநாயக பண்பு கொண்ட மக்கள், ஒரே அணியாய் திரண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானிலே மகிந்தாவை கண்டித்து சரத்தை விடுதலை செய்யக் கோரி, சிங்கள மக்கள் கோரிக்கை முழக்கம் செய்திருக்கிறார்கள். இது சிங்கள பேரினவாதி மகிந்தாவின் ஜனநாயக துரோகத்தை உலகநாடுகளில் அம்பலப்படுத்த பெரும் உதவிப் புரிந்தது. தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து மகிந்தா ஒரு போர் குற்றவாளி. தமிழீழ மக்கள்மீது மகிந்தா நடத்திய தாக்குதல் இன அழிப்பு நடவடிக்கை என்றெல்லாம் உயர முழங்கியபோது, அந்த குரல்களை முடமாக்கிய மகிந்தாவின் பணம், அரசியல் நிலைப்பாடுகள் இப்போது சிதறி சின்னாபின்னமாகிப் போய் கொண்டிருக்கிறது. இலங்கையிலே சரத்தை விடுதலை செய்யக்கோரி புத்தபிக்குகள் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். சரத்தை விடுதலை செய் என்று புத்த பிக்குகள் எடுத்த போராட்டத்தின் அடையாளம் மகிந்தா ஒரு கொடுங்கோலன், அடக்குமுறையாளன். அவனை எதிர்த்து யார் பேசினாலும் எழுதினாலும் அல்லது கருத்துக் கூறினாலும் அவர்களை சிறையில் அல்ல, சிரமே தறிக்க தயங்கமாட்டான் என்பதை புத்த பிக்குகளின் போராட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எந்த புத்தபிக்குகள் சிங்கள-பௌத்தத்தை உயர்த்திப்பிடித்து, சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தாங்கி, அதற்கு எதிரான நிகழ்வு நடந்தபோது, அன்பைப்பற்றி போதித்த, புத்தனின் வழி வந்தவர்கள், மனிதக்கறியை கரத்தில் ஏந்திய கொடுஞ்செயலை செய்து முடித்தவர்கள், தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள். அப்படி, சிங்கள பேரினவாதத்தின் அரணாக இருக்கக்கூடிய புத்த பிக்குகள், இன்று சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் மகிந்தாவை எதிர்த்து களம் கண்டிருப்பது, இலங்கை-சிங்கள தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை உண்டாக்கப்போகிறது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. மகிந்தாவின் வீழ்ச்சி படிப்படியாய் தொடங்கிவிட்டதின் அடையாளம்தான் இன்று மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிந்தா, சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல, தமிழின துரோகிகளை தமது பக்கத்தில் அமரச் செய்து, தமிழனை காயடிக்கும் அரசியலை செய்யப்புறப்பட்டு, அதற்கு எச்சில் துண்டுகளாக மந்திரி பதவிகளையும், பணத்தையும் வழங்கியதை வாலாட்டிக் கொண்டு, நாய் பிழைப்பு பிழைக்கும் இந்த நயவஞ்சக துரோகிகள், மகிந்தாவின் பக்கத்தில் சிரிக்க சிரிக்க நின்ற நிகழ்வுகள், இன்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எமது தேசிய ராணுவம் தமிழீழ பகுதிக்குள் நிலைக்கொண்டிருந்தவரை, தமிழீழ பகுதிக்குள் எட்டிப் பார்க்கக்கூட அச்சம் கொண்டிருந்த மகிந்தா, இன்று எமது தேசிய ராணுவம் இல்லாத தைரியத்தில் தமிழீழ மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று, மூக்கறுப்பட்டு திரும்பி இருக்கிறார். பெருமளவில் ஆள்திரட்டி மகிந்தாவை குளிர செய்யலாம் என தமிழின துரோகிகள் போட்ட திட்டம் தவிடுப்பொடியாகி இருக்கிறது. மேடையிலேயே கோபப்பட்டு வெளிப்படுத்திய மகிந்தா, தமது சரிவை உறுதி செய்திருக்கிறார். தோல்வி காண்பவர்களுக்கும், எதிர்சமர் புரிய அச்சப்படுபவர்களுக்கும் தான் கோபம் என்பது இயல்பான உணர்ச்சியாக வெளிப்படும். மகிந்தா, அச்சத்திலிருப்பதின் வெளிப்பாடுதான், மேடையின்மீது மகிந்தா பட்ட கோபம் என்பது நமக்கு தெளிவாகிறது. எமது பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். முட்டாளுக்கு மூன்று இடத்தில் மலம் என. காலில் மிதித்த மலத்தை கழுவிக் கொள்ளாமல் அதை கையிலே தொட்டு, மூக்கிலேயும் முகர்ந்து பார்க்கும் போக்கைத்தான் இப்படி ஒரு பழமொழியாக சொல்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த பழமொழி மகிந்தாவிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. காரணம், தமிழீழ மக்களை கொன்றொழித்து, பெரும் வெற்றி கண்டதாக நினைத்து, தமிழ் பகுதிக்குச் சென்று மக்களின் சலனத்தை கண்டு எரிச்சலடைந்து, மேடையிலேயே மக்களை திட்டித்தீர்த்த அந்தப்போக்க, மகிந்தாவின் முட்டாள்தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. ஆக, எந்த ஒரு ஜனநாயகத்திற்கெதிரான மனிதனாக இருந்தாலும் அவன் நிச்சயமாக ஒருநாள் மாந்த குலத்தின் காலடியில் மண்டியிட்டேத் தீருவான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அப்படி ஜனநாயகத்தை சிதைத்து, மாந்த குலத்தை ஒழிக்க முனைந்த பல கொடுங்கோலர்கள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்போதும்கூட மகிந்தாவின் மமதை, மகிந்தாவின் வீழ்ச்சிக்கு அடையாளமாக, தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கும் அடிப்படை செய்தி என்னதென்றால், உலக வரலாற்றில் மாந்த குலத்திற்கெதிரான ஆற்றல்களை ஒடுக்கிய மக்களின் பேராற்றல், மகிந்தாவிற்கெதிராக திசை திரும்ப தொடங்கியிருக்கிறது. இது, நடைபெறும் தேர்தலில் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் நாளடைவில் இது நிச்சயமாய் பெரும் எழுச்சியாய் மாறப்போகிறது. இந்த எழுச்சியை முறியடிக்க எந்த ஆதிக்க ஆற்றலாலும் முடியாது. மகிந்தாவின் முடிவுரைக்கு தொடக்கமே மகிந்தாவின் செயல்களாக அடையாளப்படுத்துகின்றன.