புதன், 7 ஏப்ரல், 2010

நாவலடி பிரதேசம் சிங்களவர்களின் குடியேற்ற பகுதியாக மாற இருக்கின்றது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட உல்லாச பயணிகளால் கவர்ந்திழுக்கப்படும் தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கருதப்படும் நாவலடி பிரதேசம் சிங்களவர்களின் குடியேற்ற பகுதியாக மாற இருக்கின்றது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டக்களப்பு நாவலடி பிரதேசமும் ஒன்று. இந்த பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் கடலும் மேற்கு பகுதியில் வாவியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 500 மீற்றருக்கும் குறைவான அகலம் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளதால் இப்பிரதேசத்தில் சுனாமிக்கு பிறகு மக்கள் வசிப்பதற்கு அஞ்சியதாலும் கடற்கரைக்கு அண்டிய பிரதேசங்களில் குடியிருப்புக்களை அமைப்பதற்கு அரசு அங்கிகாரம் வழங்காமையாலும் இப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிறிதொரு பிரதேசமான திராய்மடு எனும் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டார்கள் இருந்தும் ஒரு சிலர் மாத்திரம் அங்கேயே குடியிருப்புக்களை அமைத்து தற்காலிகமான முறையில்தான் வசிக்கிறார்கள். இதேவேளை கடந்த வருடம் இப்பிரதேசத்தில் உல்லாச பயண விடுதிகளை அமைப்பதற்கு தகுதியானவர்களிடமிருந்து அரசினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 5 வருடங்கள் கடந்த நிலையில் மக்கள் அச்சம் இன்றி நாவலடி பிரதேசத்திற்கு வருகிறார்கள் பலபேர் அங்கேயே வசிக்கிறார்கள் இந்த நிலையில் தற்போது உல்லாச பயணிகளும் இங்கே வருவதற்கு தொடங்கி உள்ளார்கள். இதனால் சில தமிழ் தொழில் அதிபர்கள் தாங்களும் இங்கே உல்லாச பயண விடுதிகளை அமைப்பதற்கு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்கள் ஆனால் அவர்களின் அனுமதி மறுக்கப்பட்டது அதேவேளை பாரியளவிலான உல்லாச பயண விடுதிகளை சிங்களவர்களைக்கொண்டு அமைக்கவும் அதில் வேலை பார்ப்பதற்காக அதன் சுற்றுவட்டாரங்களில் சிங்கள குடியேற்றங்களையும் அவர்களை பாதுகாப்பதற்காக ஒரு கடற்படை தளத்தையும் அரசு அமைக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களினூடாக அறிய முடிகின்றது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இப்பிரதேசத்தின் நில அளவை படங்களை கச்சேரி ஊடாக அரசு கோரி இருக்கின்றது. இப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் இனிவரும் காலங்களில் தங்களது பாரம்பரிய பிரதேசத்தையே பார்க்கமுடியாதவாறு அமையப்போகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றுமொரு சுற்றுலா தளமாக விளங்குகின்ற பாசிக்குடா பிரதேசத்தின் பல பகுதிகளை ஏற்கனவே சிங்களவர்கள் (பசில் ராஜபட்ச உட்பட) சுவீகரித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு பிரதேசங்களின் எல்லை கிராமங்களில் அத்து மீறிய சிங்கள குடியேற்றங்களை திட்மிட்டு செயற்படுத்தி வருகின்ற ஸ்ரீ லங்கா அரசானது தற்போது கரையோர பிரதேசங்களிலும் அதை விஸ்தரித்து இன்னும் எங்கெல்லாம் பலாத்காரமாக தமிழர்களின் நிலங்களை அபகரிக்கப் போகின்றதோ தெரியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக