திங்கள், 1 நவம்பர், 2010

நினைவு வீரவணக்கம்.

கப்டன் பிரான்சிஸ்

1948 இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த சிங்கள அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பதவிக்காலத்திலும் பதவிக்காலத்தின் முடிவிலும் தமிழ் மக்கள் உரிமைகளில் ஏதோ ஒன்றை அவர்கள் இழந்துபோய் இருப்பார்கள். இவ்வாறு 48 இல் இருந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினம் தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனங்களை உணர்ந்து தன்னை சுதாகரித்து 1972 க்குப் பின்னர் தமிழ் இளைஞர்கள் மனங்களில் சிங்களத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வுகள் மேலோங்க தொடங்கியபோது ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென பல விடுதலை இயக்கங்கள் சிங்களத்துக்கு எதிராக போராடப் புறப்பட்டன .
சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களினாலும் இன ஒடுக்கலாலும் மேலும் பாதிக்கப்பட்ட தென்தமிழீழமக்களும் தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை மிக உணர்ந்து தம்மை பல இயக்கங்களில் இணைக்கத் தொடங்கினார்கள் . இவ்வாறு ஒரு ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களின் இருப்பை இலங்கையில் உறுதிபடுத்தும் என எண்ணிய சடாச்சரபவனும் 1983 இல் இயக்கத்தில் இணைய முடிவெடுக்கிறார் .