செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நேரம் வரும்போது தமது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மட்டு வாழ் மக்கள்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில் சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர். அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர். மஹிந்த அரசு தமிழ் விரோத செயற்பாட்டாளர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை செய்து, மக்களை படுகொலை செய்து சின்னாபின்னப்படுத்தி, கொடுமைகளை புரிந்தது. அதன் பின்னர் பிரதேச வேறுபாடுகளை முன்வைத்து தமது தேச விரோதப்போக்கிற்கு நியாயம் கற்பித்துகொண்டிருக்கும் கருணா பிளையான் போன்றோரை வைத்து பொம்மை அதிகாரிகளாக்கி தமது இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியும், பெரும் செல்வங்களை மக்கள் சார்பாக பெற்றும் வந்தது மஹிந்த அரசு. தாங்க முடியாத அழுத்தத்தில் ஏதோ தேர்தலில் பிள்ளையானுக்கு வாக்களித்ததன் மூலம் மஹிந்த அதனை தனது வெற்றியாக நினைத்தார். தன்னை நியாயப்படுத்திக்கொண்டார். ஆனால் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் போராட்டத்திற்கு பல ஆயிரக்கணக்கான உயிர்களை போராளிகளாகவும், மக்களாகவும் உயிர்ப்பலி கொடுத்தவர்கள். தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தவர்கள். எனினும் இவை அனைத்தையும் பிரதேச வேறுபாட்டினை கடந்து தழீழ தேச விடுதலை என்ற ஒரே இலட்சியத்திற்காகவே செய்தனர். ஆனால் ஆட்சியாளர்களும் தேச விடுதலை விரோதிகளும் அதனை கருத்தில் எடுக்காது மக்கள் அனைத்தையும் மறந்து விட்டதாகவும் அதாவது தேச விடுதலையினை , தேச உணர்வினை, பிரதேச ஒற்றுமையினை மறந்து விட்டதாகவும் தமது வலையில், தமது மாயையில் சிக்கி விட்டதாகவும் நினைத்தனர். ஆனால் மட்டக்களப்பில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்தவுக்கு எதிராக ( சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்ததன் மூலம்) பெரும் எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதன் மூலம் ஆட்சியாளர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த மட்டு மாவட்ட மக்களில் வாக்களிப்பானது மஹிந்த மீதுள்ள வெறுப்போ அல்லது சரத் மீது கொண்ட விருப்பமோ அல்லது கூட்டமைப்பின் செல்வாக்கோ என்று கூறுவதனை விட மட்டு மாவட்ட மக்கள் மீண்டும் ஒன்று பட்டு தமது பிரதேச ஒற்றுமையினையும், தாயக விடுதலையினையும் கோடிட்டு காட்டியுள்ளனர் என்றே கூறமுடியும்.

கெப்பிற்றிக்கொலாவ கிளைமோர் தாக்குதல்

கெப்பிற்றிக்கொலாவையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவை சேர்ந்த இந்திரன் என்றழைக்கப்படும் மகாலிங்கம் முத்துலிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் என்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் தான் இணைந்துகொண்டதாக அவர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேருநுவரவை சேர்ந்த காவல்துறையின் விசேட குழுவினர் சந்தேக நபரை கைது செய்து தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரித்துவருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி கெப்பிற்றிக்கொலாவையில் பயணிகள் பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு எதிராக வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிக நிதியை அவுஸ்திரேலியாவில் சேகரித்து அனுப்பியதாக மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. நேற்று அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது ஆரூரன் விநாயகமூர்த்தி, சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் எனப்படும் மேற்படி மூவரும் தாம் குற்றம் செய்ததாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என ரேடியோ அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளபோதும், மேற்படி மூவரும் 2004 க்கும் 2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் பணம் சேகரித்து அனுப்பி வந்தது குற்றச்செயல் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகளுக்கு ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்களையில் தாம் அனுப்பியிருந்ததாகவும் விநாயகமூர்த்தி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளாராம். இவர்கள் மூவரும் தமிழ் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கும் புலிகள் அமைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என இவர்களுக்கு எதிராக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் கூறியுள்ளாராம். இவ்விசாரணை தொடர்ந்து நடக்கவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான சிங்கள வியூகம்

இலங்கையில் தமிழர் இல்லையேல் அங்கே இந்தியாவுக்கென்று எதுவும் இருக்காது. பொதுவாக முழு இந்தியாவுக்கும், குறிப்பாக தென் இந்தியாவிற்கும் பாதுகாப்பு இல்லாது போய்விடும் ஆபத்து உண்டு. இலங்கையின் இனப்பிரச்சினை என்பது உண்மையில் இந்தியாவுக்கு எதிரான சிங்கள அரசியலின் வெளிப்பாடே ஆகும். வெளிப்பார்வைக்கு அது ஈழத்தமிழருக்கு எதிரானது போலத் தோன்றினாலும், சிங்கள ஆட்சியாளரின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் தமிழின எதிர்ப்பாய் வெளிப்படுகின்றது. அதாவது இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகவும், கையாளாகவும் ஈழத்தமிழர் உள்ளனர் என்று கூறி, இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தை ஈழத்தமிழர் மீது சிங்கள ஆட்சியாளர் புரிகின்றனர். எனவே உள்ளடக்கத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது, சிங்கள ஆட்சியாளரின் இந்திய எதிர்ப்பு யுத்தத்தின் ஒரு வடிவமாகவே அமைந்துள்ளது. இந்தியாவை இலங்கையில் செயலற்றதாக்க வேண்டும் என்றால், தமிழரை இலங்கையில் முற்றிலும் தோற்கடித்தாக வேண்டும் என்பதே சிங்கள அரசியல் இராஜதந்திரத்தின் மூலோபாயம் ஆகும். இதற்காக நயத்தாலும், பயத்தாலும் வேறுபல வியூகங்களினாலும் ஈழத்தமிழரை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதன் மூலம், இந்தியாவை இலங்கையில் கதியற்ற நிலைக்கு தள்ளுவதும், இந்தியாவின் எதிரிகளுடன் இறுதியில் கூட்டுச் சேர்வதுமே சிங்கள இராஜதந்திரத்தின் இறுதி இலக்காகும். இதற்காக முதலில் சர்வதேச வியூகங்களையும், அயலுறவு வியூகங்களையும், உள்நாட்டு வியூகங்களையும், தமிழினத்திற்கு உள்ளேயான உள்ளின அரசியல் வியூகங்களையும் ஒருங்குசேர வடிவமைத்து சிங்கள மயமாக்கும் இனக்கபளீகரக் கொள்கையை (Policy of assimilation) சிங்கள ஆட்சியாளர் வகுத்துள்ளனர். முழு இலங்கைத்தீவையும் முற்றிலுமாக சிங்களமயப்பட்ட இனப்பரம்பலுக்கும், ஆதிக்க வட்டத்திற்கும் உரிய தீவாக்குவதே இக்கொள்கையின் பிரதான உள்ளடக்கம் ஆகும். இனக்கபளீகரக் கொள்கையை உள்நாட்டு ரீதியில் பல வழிகளினாலும் சிங்கள ஆட்சியாளர் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். முதலாவதாக இலங்கை சிங்கள, பௌத்த தேசம் என்றும், சிங்கள – பௌத்தத்தை வளர்ப்பதும், பேணிப் பாதுகாப்பதும் அரசின் பிரதான கொள்கை என்றும் சிறிதும் நெகிழ முடியாத அரசியல் யாப்பு ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் கீழ் அனைத்தும் யாப்புக்கும், சட்டத்திற்கும் உட்பட்டே அமைய வேண்டும் என்று கூறி எத்தகைய இனவுரிமை, மனிதவுரிமை மீறல்களையும் சிங்கள ஆட்சியாளர் முதற்கண் நியாயப்படுத்துகின்றனர். ஓர் இனத்தின் மேலாதிக்கத்திற்காக மதவாத மேலாதிக்கச் சட்டத்தை எழுதி வைத்துவிட்டு, ஏனைய இனங்கள் தமது இனவுரிமையைப் பற்றிப் பேசுவதை இனவாதம், பிரிவினைவாதம் என சிங்கள அரசு முத்திரை குத்துகிறது. அதாவது ஒடுக்கப்படும் இனம் தன் இனவுரிமையைப் பற்றிப் பேசுவதை, ஒடுக்கும் இனம் பிரிவினைவாதம் என்றும், இனவாதம் என்றும் கொச்சைப்படுத்துகிறது. ஆனால் அவர்களின் யாப்பே முற்றிலும் சிங்கள, பௌத்த மேலாதிக்க இனவாதமாக உள்ளது என்பது பெரிதும் கவனிக்கத்தக்கது. அதாவது ஒடுக்குமுறையும், இனக்கபளீகரமும் யாப்பால் நியாயப்படுத்தி உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு சிங்கள, பௌத்த மேலாதிக்க இனவாதத்தினை அரசியல் யாப்பின் ஊடாக உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற சமத்துவக் கொள்கையை (Egalitarian policy) சிங்கள அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர். இது அடிப்படையில் மிகவும் அபத்தமானது, அநீதியானது, ஆபத்தானது. இதனைப் புரிந்து கொள்ள இங்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தில் கணவன் மீன், இறைச்சி போன்ற மாமிசம் மட்டும் சாப்பிடுபவனாகவும், மனைவி மரக்கறி மட்டும் சாப்பிடுபவளாகவும் இருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில், வீட்டில் மாமிசம் மட்டும் சமைக்கப்பட வேண்டும் எனக் கணவன் தனது பலத்தின் மூலம் உத்தரவிட்டு, மனைவியையும் மாமிசம் சாப்பிட வேண்டும் என்று திணித்து உணவுண்ண வைத்துக் கொண்டு, தான் வீட்டில் சமத்துவத்தைப் பேணுவதாகவும், உணவில் தனக்குள்ள சகல உரிமையும் தனது மனைவிக்கும் உள்ளதாகவும் கணவன் பெருமை பாராட்டுவது எவ்வளவு அபத்தமானதோ, எவ்வளவு அநீதியானதோ அதே போன்றது தான் சிங்களத் தலைவர்களின் 'சமத்துவ' அணுகுமுறையும். இச் 'சமத்துவ' அணுகுமுறை என்பது இனக்கபளீகரக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடேயன்றி வேறொன்றுமல்ல. இத்ததைய ஓர் அணுகுமுறையைத் தான் தற்போதைய ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸவும் கடைப்பிடிக்கிறார். ஸ்ரீலங்காவில் சிறுபான்மை என்று எவருமே இல்லை என்கிறார். இலங்கைத் தீவில் வாழும் அனைவரும் ஸ்ரீலங்கரே என்கிறார். அனைவருக்கும் சட்டத்தின் முன் சமவுரிமை உண்டு என்கிறார். அனைவரும் எங்கு செல்லவும், வாழவும் உரிமை உண்டு என்கிறார். மக்கள் அனைவரையும் தமது அரசாங்கம் சமத்துவமாக நடத்தும் என்கிறார். எமது உதாரணத்தில் மீன், இறைச்சி மட்டும் உண்ணும் கணவனாக மகிந்த விளங்குகின்றார். இவ் அணுகுமுறை மகிந்தவுக்கு மட்டும் உரியது அல்ல. அனைத்துச் சிங்களத் தலைவர்களும் இத்தகைய இனக்கபளீகரக் கொள்கையினைத் தான் கைக்கொண்டுள்ளனர். இதனை வெளிப்படுத்துவதிலும், செயற்படுத்துதிலும் இவர்களிடையே சிறு,சிறு வேறுபாடுகள் இருக்க முடியுமேயன்றி அடிப்படையில் இவர்களது கொள்கை ஒன்றுதான். ஏனெனில் இனக்கபளீகரம் என்பது ஸ்ரீலங்காவின் அரச கொள்கை. அது ஒரு அரசாங்கத்தின் கொள்கை மட்டுமன்று. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதனையே மேற்கொண்டு வந்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை பதவிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் மேற்கொண்டமை இதற்கு சாட்சியாய் அமைகின்றன. இனக்கபளீகரத்தின் ஆபத்தான அடுத்த ஏற்பாடு சிங்களக் குடியேற்றத்திலேயே தங்கியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்று, பெரியமீன் தத்துவத்தை அரசியல் யாப்பில் எழுதி வைத்துவிட்டு, பெரிய மீனான சிங்கள இனம் சிறிய மீன்களான தமிழர், முஸ்லிம்களை விழுங்குவதை இத்தத்துவம் நியாயப்படுத்துகிறது. அதாவது தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என தமிழர் கூறும் போது, தமிழர் இலங்கையில் எங்கும் குடியேற சட்டப்படி உரிமையுண்டு என்றும், அவ்வாறே சிங்களவரும் எங்கும் குடியேற சட்டப்படி உரிமையுண்டு என்றும் ஒரு 'பெரிய மீன் சட்டத் தத்துவத்தை' கூறுகிறார்கள். இதன்படி சிறுபான்மையினரான தமிழர் பெருபான்மையினரான சிங்களவரின் பகுதிகளில் குடியேறுவதனால் சிங்கள குடிப்பரம்பலில் எவ்வித மாற்றமும் ஏற்படமாட்டாது. ஆனால் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களது நிலப்பரப்பில் குடியேறினால் அந்த நிலப்பரப்பு சிங்கள மயமாகிவிடும். இதனையே பெரியமீன் தத்துவ சட்டம் எனக் கூறுகிறோம். பார்வைக்கு சட்டம் பெரிய மீனுக்கும், சின்ன மீனுக்கும் இடையே சமம் எனத் தோன்றினாலும் நடைமுறையில் அது பெரிய மீனுக்கு மட்டுமே சேவை செய்யும் சட்டமாக உள்ளது. இந்த பெரிய மீன் சட்டத்திற்கு பதிலாக சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான சட்டமே அவசியமானதும், நியாயமானதும் ஆகும். ஆனால் சிங்கள அரசியலானது சிங்கள பெரும்பான்மையினரின் எண்ணிக்கைப் பலத்தை வைத்துக் கொண்டு, அதனை ஜனநாயகம் என வர்ணித்து இனநாயகம் புரிவதன் மூலம் அளவால் சிறிய தேசிய இனங்கள் இலங்கையில் விழுங்கப்படுகின்றன. இந்த வகையில் குடியேற்றம் எனும் திட்டத்தின் மூலம் முழு இலங்கையையும் சிங்கள மயமாக்கும் மூலோபாயத்தை சிங்கள ஆட்சியாளர் கொண்டுள்ளனர். 1911 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி கிழக்கு மாகாணத்தில் ஒரு வீதம் வரையான சிங்கள மக்களே காணப்பட்டனர். ஆனால் அல்லை கந்தளாய் குடியேற்றத் திட்டத்தை 1937 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து கிழக்கு மாகாணம் சிங்கள மயமாகும் நிலை உருவாகி, சுதந்திரம் அடையும் காலத்தில் சுமாராக 5 வீதமாய் உயர்ந்து, இன்று கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 1/3 பங்கினர் சிங்களவர் என்ற ஆபத்து உருவாகிவிட்டது. இன்றைய அரசியல், இராணுவ நிலையின் போக்கின்படி இன்னும் சில வருடங்களுள் கிழக்கு மாகாணத்தில் சிங்களவரே பெரிய இனம் எனும் நிலை உருவாகிவிடும். 1930 களின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பாக ஆங்கிலேய ஆட்சியாளரின் பிரித்தாளும் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சிறுபான்மையினரை அணைத்து பெரும்பான்மையினரை ஆளவல்ல பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர் இலங்கையில் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியை ஈழத்தமிழர் 1927 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரவழைத்து மாபெரும் வரவேற்பை அவருக்கு அளித்ததுடன், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான நிதியையும் சேகரித்து காந்தியிடம் மக்கள் கையளித்தனர். இதைக்கண்ட பிரித்தானியர் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கைத் தீவையும் ஈழத்தமிழர் இணைத்துவிடுவர் என அச்சமடைந்து, ஈழத்தமிழருக்கு எதிராக சிங்கள தலைவர்களை அரவணைக்கும் வகையில், சிங்கள இனத்திற்கு சாதகமான அரசியல் ஏற்பாடுகளை ஏற்படுத்தத் தொடங்கினர். ஈழத்தமிழருக்கு எதிராக பிரித்தானியா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதற்கான பிரதான காரணம் ஈழத்தமிழர் இந்தியாவின் நண்பராக உள்ளனர் என்பதும், அதனால் இந்திய விடுதலைப் போராட்டம் இலங்கைக்கு பரவிவிடும் என்ற அச்சமுமே ஆகும். இக்காலகட்டத்தில் தமிழர் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைந்து விடக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆங்கிலேயக் கனவான் ஒருவரிடம் டி.எஸ்.சேனநாயக்கா கூறியதாகவும், அதற்கு அவர் பின்வருமாறு ஆலோசனை கூறியதாகவும் எழுதப்படாத ஒரு தகவல் ஒன்று உண்டு. அதாவது கிழக்கு மாகாணமே முக்கியமானது என்றும், சிங்கள குடியேற்றத்தை படிப்படியாக செய்வதன் மூலம் கேக் சாப்பிடுவது போல கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்கி விழுங்கலாம் எனவும், கிழக்கில்லாத வறண்ட வடக்கு இந்தியாவுக்கு தேவைப்படாது எனவும் அவர் ஆலோசனை கூறியதாக பேசப்படும் கூற்றொன்று உண்டு. இதன் பின்பு, அல்லை கந்தளாய் குடியேற்றத் திட்டத்தை அரசியல் உள்நோக்கத்துடன் டி.எஸ்.சேனநாயக்கா வடிவமைத்துக் கொண்டதாக நம்பப்படுகிறது. டி.எஸ்.சேனநாயக்காவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரும், நிர்வாக சேவை அதிகாரியுமாய் இருந்த தமிழரான திரு.ஸ்ரீகாந்தா என்பவர் இத்தகைய உள்நோக்கத்துடன் டி.எஸ்.சேனநாயக்கா செயற்பட்டார் என்றும், இப்படியொரு ஆலோசனை ஆங்கிலேயரால் அவருக்கு வழங்கப்பட்டதாக தான் அறிந்திருந்ததாகவும் தனிப்பட்ட உரையாடலின் போது அவர் கூறியதான தகவல் ஒன்று உண்டு. எனவே இந்தக் குடியேற்றத் திட்டக் கொள்கையும், சிங்கள மயமாக்கல் கொள்கையும் இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட வகையில் கருக்கொண்டிருப்பதை அவதானிக்கும் போது இதன் நீண்டகால நோக்கமும், இதற்குள் அடங்கியிருக்கும் ஆபத்தும் தெளிவாக தெரிய வருகிறது. ஆதலால் இக்குடியேற்றத் திட்டக் கோட்பாட்டை வெறுமனே ஓர் இனம் சார்ந்த உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு பிராந்திய, சர்வதேச அரசியல் வியூகப் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டியது அவசியம். கிழக்கு மாகாணத்தில் தொடங்கிய இக்குடியேற்றத் திட்டமானது தொடர்ந்து வடக்கு வரை அது விஸ்தரிக்கப்பட்டு வருவதை நாம் காணலாம். மணலாறு குடியேற்றத் திட்டத்தின் மூலம் அது கிழக்கில் இருந்து வடக்குக்கு விரிந்துள்ளதுடன், புவியியல் ரீதியாக கிழக்கையும், வடக்கையும் பிரிக்கும் திட்டச் செயற்பாடுகளையும் இது கொண்டுள்ளது. எனவே சிங்கள குடியேற்றத் திட்டங்களால் இனக்கபளீகரம் அடிப்படையில் வெற்றிகரமாகச் செயற்படுகிறது. போர் முடிந்து முற்றிலும் வடக்கு - கிழக்கு இராணுவ மயப்பட்டுள்ள சூழலில் சிங்களக் குடியேற்றம் மூலமான சிங்கள மயமாக்கல் துரித வளர்ச்சி அடைந்து வருகிறது. முதலில் கிழக்கு மாகாணம் வேகமாக சிங்கள குடியேற்றத்துக்கு உள்ளாகுவதுடன், வடக்கும் இதன் விஸ்தரிப்புக்கு பல வகைகளிலும் உள்ளாகிறது. இதனை சற்று விளக்கமாகப் பார்ப்போம். வன்னி மாவட்டங்களில் கிழக்கு கடல் கரையோரம் முழுவதும் சிங்கள மீனவக் குடியேற்றங்களை மேற்கொள்வதன் வாயிலாக ஈழத்தமிழருக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கடல் தொடர்பை முதற்கண் அறுக்க முனைகிறார்கள். அத்துடன் அக்கடற் பிராந்தியத்தை சிங்கள இன ஆதிக்கத்தின் கையில் எடுத்துக் கொள்ள முனைகிறார்கள். அதேவேளை மேற்கு கடற்கரையோரமாக காலபோக சிங்கள மீனவரை ஆயுதம் தாங்கிய மீனவர்கள் ஆக்கி, மன்னார் கடற்பரப்பை சிங்கள ஆதிக்கத்தின் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். காலகதியில் இந்த மீனவர்கள் காலபோக மீனவர்களாக அன்றி, நிரந்தர வாசி மீனவர்களாக விரைவில் மாறிவிடுவார்கள். இதன் மூலம் கிழக்காலும், மேற்காலும் ஈழத்தமிழருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடல் தொடர்பு இன்னும் சில வருடங்களில் முற்றாக அறுந்து போய்விடும். இது தமிழரைத் தனிமைப்படுத்தி இனக்கபளீகரம் செய்ய முடிவதுடன், இலங்கையில் இந்தியாவுக்கான அடிப்படை வாய்ப்புக்களை இல்லாது ஒழிக்கவும் ஏதுவாகிறது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில், வன்னியில் மக்கள் அற்றுப் போன காலமாக யுத்தத்தின் மூலமான இன்றைய காலகட்டமே உள்ளது. இது வன்னிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் அவமானமும், தோல்வியுமாகும். இவ்வாறு வன்னி வாழ் தமிழ் மக்கள் அகற்றப்பட்ட சூழலில் வன்னிப் பிரதேசம் முழுவதுமே சிங்கள இராணுவ வாழ்விடமாகி விட்டது. மக்கள் குடியகற்றப்பட்ட நிலையில் ஆகக்கூடியது 1,50,000 க்கு மேல் மக்கள் திரும்பக் கூடிய மனநிலை அங்கு இல்லை. குறைந்தது 1,00,000 இராணுவத்தினரைக் கொண்ட இராணுவ குடியிருப்புத் தளமாக வன்னியை ஆக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது. இந்த 1,00,000 இராணுவத்தினருடன் கூடவே காவல்துறையினர், கடற்படையினர் என ஆயுதம் தாங்கிய படையினரின் எண்ணிக்கை ஆக்குறைந்தது 1,25,000 த்தை எட்டும். இத்தொகை ஏறக்குறைய அங்கு குடியிருக்கப் போகும் மக்களின் தொகைக்கு சமனானது. அத்துடன் இந்த 1,25,000 ஆயுதம் தாங்கிய சிங்கள படையினருடன் அவர்களது குடும்பங்களும் உத்தியோகபூர்வமாகவும், தனிப்பட்ட ரீதியிலும் குடியமர்த்தப்படுவர். இதன் மூலம் வன்னியின் ஆயுதம் சார் படையினரின் குடித்தொகை குறைந்தது 2,00,000 த்தை இலகுவாகவே எட்டிவிடும். மேலும் அபிவிருத்தி, கீழ்கட்டமைப்பு அபிவிருத்தி என்பதன் பேரில் உள்வரவாகவுள்ள சிங்களத் தொழிலாளாரின் தொகை இன்னும் ஒரு பகுதி சிங்கள சனத்தொகையாய் அமையும். அத்துடன் அபிவிருத்தி, கைத்தொழில் திட்டங்களுக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஒப்பந்தங்களின் போது 75 வீதத்திற்கு குறையாத சிங்களவர்களிற்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை சிங்கள அரசின் ஒரு கொள்கையாக உள்ளது. இதன் மூலம் அபிவிருத்தி என்பது சிங்கள மயமாக்கலுக்கான விருத்தியாகவே அமையும். இது வன்னிக்கு மட்டுமன்றி முழு வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திற்கும் பொருந்தும். மேலும் இவை சார்ந்து உருவாகும் கடைத் தெருக்கள், சந்தைகள், சேவை மையங்கள் என்பன எல்லாம் திட்டமிட்டு சிங்கள வணிகர்களின் கைகளுக்கு அரசால் வழங்கப்படும். அத்துடன் இராணுவ, காவல் துறையினரின் ஆதரவும், சிங்கள அரச நிர்வாகத்தின் ஆதரவும் நேரடியாக சிங்களவருக்கு துணையாகவே அமைவதால் தமிழர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இலகுவில் அனாதரவாய் விழுங்கப்பட்டு விடக்கூடிய பரிதாபமே பெரிதாய் உள்ளது. இவற்றுடன் கூடவே பௌத்த நிறுவன அமைப்புகளுக்கான அபிவிருத்திகளும் கட்டிட நிர்மாணிப்புக்களும் தமிழ்ப் பிரதேசத்தை காட்சியளவில் சிங்களப் பிரதேசமாக காட்சியளித்துவிடும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்லது தொடர்புபட்டவர்கள் என்பதன் பெயரில் தமிழர் மீது எப்போதும் இராணுவ, பொலீஸ் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருப்பதால் உளவியல் ரீதியாக தமிழர் ஒடுங்கிப் போய் சிங்கள மயமாக்கலுக்கு பலியாகிவிடுவார்கள். இவற்றைத் தவிர தாம் வெற்றி வீரர்கள் என்ற மன உணர்வில் சிங்கள இராணுவ, பொலீஸ் படையினரும், சிங்கள அரச அதிகாரிகளும் தமிழர் மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவர். அத்துடன் சாதாரண பாமர சிங்கள மகனிடமும் இத்தகைய அணுமுறையே நடைமுறையில் இருக்கும். அத்தகைய சிங்கள பாமரர்கள் இராணுவ அரவணைப்பில் தமிழர் மீது ஏளனமாய் நடந்து கொள்ள முடியும். அடுத்து வெற்றி வீரர்களாய்க் காட்சியளிக்கும் சிங்களத் தலைவர்கள், தமிழ் அரசியல் தலைவர்களை நாதியற்றவர்களாய் பார்க்கவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாய் பயன்படுத்தவும் இலகுவில் துணிவர். இவ்வாறு எல்லா வகைகளிலும் தமிழினம் பலவீனப்படுத்தப்பட்டு சில ஆண்டுகளுக்கு உள்ளேயே சிங்கள ஆதிக்கத்தால் விழுங்கி இனக்கபளீகரம் செய்யப்படக் கூடிய ஆபத்து துல்லியமாய்த் தெரிகிறது. எனவே இப்பொழுது தமிழ் பேசும் மக்களின் பிரதான பிரச்சினை, இந்த இனக்கபளீகரத்தில் இருந்து உடனடி அர்த்தத்தில் எவ்வாறு தற்காப்பது என்பதே. 'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்'. அடிப்படையிலும் அடிப்படையாக சிங்களக் குடியேற்றத் தடுப்பு, அபிவிருத்தி என்ற பெயரிலான சிங்களத் தொழிளாளர் குடியிருப்பு வளர்ச்சியை தடுக்க வேண்டியவை என்பன உடனடிக் கவனத்திற்குரிய விடயங்களாய் காணப்படுகின்றன. ஈழத்தமிழரின் முக்கியத்துவத்தை சனத்தொகை அளவால் பார்ப்பதை விடவும், கேந்திர முக்கியத்துவ அளவால் அவர்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இலங்கையை ஒரு சிறிய தீவு என்று அளவால் பார்க்காமல் வர்த்தக, இராணுவ, கடல்வழி கேந்திர மையமாக அதனை பார்ப்பது போலவே, ஈழத்தமிழரையும் அவர்களது சனத்தொகை எண்ணிக்கையால் பார்க்காமல் அவர்களுக்கு இருக்கும் கேந்திர முக்கியத்துவத்தால் பார்வையிடவேண்டும். பல நூற்றாண்டு கால வரலாற்றை நோக்கும் போது காலத்திற்கு காலம் வெளியரசுகளின் அல்லது வல்லரசுகளின் நலன் சார்ந்து ஈழத்தமிழர் தொடர்ந்து பலியாகும் கதை நீண்டு செல்கின்றது. ஆனால் ஈழத்தமிழருக்கு ஏற்படக் கூடிய முழுத் தோல்வி இறுதியில் இந்தியாவின் பாதுகாப்பிலும், அதன் பொருளாதார நலன்களிலும் பேரடியை ஏற்படுத்தக் கூடியதாய் அமைந்துவிடும். தற்போது படிப்படியான தோல்வியில் இந்தியாவுக்கு நேரடியாக தாக்கம் ஏற்படக் கூடிய அளவிற்கு இந்தியாவின் எதிரிகளின் வளர்ச்சி காணப்படவில்லை. ஆனால் தமிழரின் முழு நீளத் தோல்வியில் இந்தியாவின் எதிரிகள் முழு நீளமாய் இலங்கைத் தீவில் தலையெடுப்பது தெரிய வரும் போது இந்தியாவுக்கு மாற்று வழி இருக்காது. ஆதலால் வெள்ளம் தலைக்கு மேல் ஏற முன்னர் இந்திய தலைவர்களும், ஈழத்தலைவர்களும் அணைக்கட்டத் தவறினால் ஈழத்தமிழரின் அழிவில் இந்தியாவின் அழிவும் தலையெழுத்தாய் அமையக் கூடிய ஆபத்து உண்டு. தமிழர் தோற்கடிக்கப்பட்டால் சிங்கள ஆட்சியாளர் இலங்கையை எந்நேரத்திலும் இந்தியாவுக்கு எதிரான களமாக்கக் கூடிய ஆபத்து பெரிதாய் உள்ளது. இன்றைய தற்காலிக மனோநிலையில் நின்று பார்க்காது, எதிர்கால சூழலில் வைத்து சிந்தித்தால் இது தெளிவாய்த் தெரிய வரும். ஈழத்தமிழர் பிரச்சினையை வெறுமனே ஒரு மொழிப் பிரச்சினையாக அல்லது இனப் பிரச்சினையாக மட்டும் பாராது, இந்திய உபகண்ட பிரச்சினையாய், பிராந்திய அமைதிக்கான பிரச்சினையாய், சர்வதேச அரசியல் பொருளாதாரத்தோடு நெருங்கிய தொடர்புள்ள பிரச்சினையாய், மொத்தத்தில் உலகளாவிய அரசியல் பொருளாதாரப் பிரச்சினையின் ஒரு பகுதியாய் அதனைப் பார்வையிடுவதே மிகவும் சரியான கண்ணோட்டமாய் அமையும்.

நலம்புரி முகாமில் இருந்த போராளிகள் காணமல் போயுள்ளனர்

வவுனியா தடுப்பு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு என தடுத்து வைக்கபட்டு இருந்த போராளிகளில் பன்னிரண்டு பேரை அங்கு வந்த இரரணுவம் மேலதிக விசாரணைக்கு என முகாமுக்கு வெளியே அழைத்து சென்றுள்ளனர். எனினும் அழைத்து செல்லபட்டது தொடர்பாக உறவினருக்கோ பாதுகாவலர்களுக்கோ அறிவிக்காமல் இருந்த நிலையில் போராளிகளை பார்க்க சென்ற உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக அறிய முடிகிறது.

பிரபாகரன் எங்கே குழப்பம்

குழப்பமான செய்திகளால் உண்மை மறைக்கப்படுகிறதா.. பிரபாகரன் தொடர்பான உண்மைகள் வெடித்துப் பறக்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன.. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைர் வே. பிரபாகரனின் மரணச்சான்றிதழை சிறீலங்கா அரசு தமக்கு தரவில்லை என்று நேற்று சி.பி.ஐ வெளியிட்ட தகவல் உலக நாடுகளில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்று அதற்கு எதிர் மாறாக ப.சிதம்பரம் இன்று வெளியிட்ட அறிக்கையில் மரணச்சான்றிதழ் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே இந்த விவகாரத்தில் இப்போது இந்திய அதிகார வர்க்கமே குழம்பிப் போயிருப்பதைக் காண முடிகிறது. அல்லது குழப்பமான நிலையை உருவாக்க இப்படிக் கூறப்பட்டதா என்பதும் சிந்திப்பதற்குரியதே. பிரபாகரன் உயிருடன் இருந்தால் சி.பி.ஐ சொல்லியதுதானே என்று சமாளிக்க முடியும், இல்லையாயின் சிதம்பரம் சொல்லிவிட்டாரே என்று கூற முடியும். இரு தலைக் கொள்ளியெறும்பு போல இந்த விவகாரம் இந்திய இலங்கை அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன. சில இரகசியங்களை வெளியிடுவேன், உயிருக்கு பயப்பட மாட்டேன் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டது பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் குழப்பமான அறிக்கைகளே உண்மைக்கும் பொய்க்கும் பேதம் காண முடியாத சூழலை உருவாக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இது கூறப்பட்டதா என்பதும் சிந்தையைத் தூண்டுகிறது. இது குறித்து இன்று வெளியான செய்தி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐயின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழுக்காகத் தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ?

எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ? நம்மினம் செய்த தவறு தமிழராய்ப் பிறந்ததா? சும்மா நிலத்தில் எரிகின்ற சருகுகளா நாங்கள்? அம்மா! என்று அலறிடினும் கேட்க ஆளில்லையோ? ஐயகோ! கொடுமையிலும் கொடுமை தாயகத்திலே தீயிலே பொசுங்குவதும் தீயினையே அணைப்பதும் கூக்குரலும் கொலைவெறிக் களமுமாக நம்தேசம்! எக்காளமிடும் சிங்களத்துக்கே துணைபோகும் உலகம்! ஏனிந்த அவலம்? எமக்கிந்தக் கொடு'ர வாழ்க்கை? வானைப் பிளக்கும் கொத்தணிக் குண்டுகளின் கோரம்! இனியும் பொறுமையில்லை இனஅழிப்பைப் பார்த்திட என்றே எழுந்தனர் வான்புலிவீரர் எம்மினக் காப்பாளர் தற்கொலைப் படைக்குள் தம்மையே நுழைத்து அற்புதச் செயலாய் வான்மீதிலே இறக்கை அடித்து பறந்தனர் மாவீரர் ரூபனும் சிரித்திரனும் சிரித்தவாறே சுற்றி வளைத்து இலக்கை எய்திட இரையாகினரோ! வதைபடும் நம்மின மீட்புக்காக வான்புலிகளாகி சிதைத்தனர் எதிரிகளின் கற்பனைக் கோட்டைகளை இதைவிட மிகப்பலம்! இன்னுமின்னும்! வருமென்பதை பதியமிட்டே சிங்களமனதில் பதித்தவருக்கு வீரவணக்கம்! வான்புலியாகி வானமதிற் கலந்திட்ட தியாகிகளே! உன்னினங் காக்க இன்னுயிரை நேரங்குறித்து ஈந்த அன்னைமண் மைந்தர்களே! தீயிலும் ஒளிரும் மணிகளே! இன்றிங்கே இறைஞ்சுகிறோம் மலரோடு சுடரேற்றியே!

தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பரப்பப்படுகிறது- ஜெனரல் பொன்சேகா குற்றச்சாட்டு;

வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்பதை மாத்திரமே காரணம் காட்டி, நாட்டில் அரசாங்கம் இனவாதத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பிரிவினைக்காக பிரபாகரன் நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போன்று, தற்போது தெற்கில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமையதிகாரியும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார். தேர்தலில் தோல்வியடைந்தமை குறித்து நாம் கவலை அடையவில்லை. ஆனால், உண்மையான மாற்றத்திற்காகவும், நிரந்தரமான சுதந்திரத்திற்காகவும் அளிக்கப்பட்ட வாக்குகள் அப்பட்டமான முறையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளன. எம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றமுடியாமல் போனதையிட்டே நாம் கவலை அடைகிறோம். இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை. தேர்தலுக்கு முன்னர் இருந்த சிறிதளவான ஜனநாயகம் கூட அற்றுப்போயுள்ளது. இருப்பினும், மக்களின் வெற்றியை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் கூறினார். மோசடியான தேர்தலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் எனும் தலைப்பின் கீழ், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கோட்டே சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜெனரல் பொன்சேகா மேற்கண்ட வாறு தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் ஸ்ரீல.சு.கட்சி மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர ஆகியோரும் சமுகமளித்திருந்தனர். இங்கு ஜெனரல் பொன்சேகா தொடர்ந்தும் கூறுகையில், நாம் எமது வெற்றியை மக்களின் வெற்றியாகவே கருதுகிறோம். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பிலான முடிவுகளை மக்கள் நம்புவதற்குத் தயாரில்லை. மக்களின் வெற்றி மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறான மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், இந்த வெற்றி கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் மக்களால் கருதப்படுகின்றது. மக்கள் எம்மை நிராகரித்து, அதன்மூலம் நாம் தோற்கடிக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், இங்கு நடந்திருப்பது தலைகீழானதாகும். மக்கள் பாரிய எதிர் பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். மாற்றம் ஒன்று வேண்டுமென முழுநாடும் காத்துக்கொண்டிருந்தது. அந்த மாற்றம் நிகழவில்லையே என்று மக்கள் கவலை தோய்ந்த வண்ணம் வேதனையுடன் உள்ளனர். இந்தத் தேர்தல் முடிவு தொடர்பில் நாம் கருத்திற்கொள்ளாதிருப்பதாகக் கூறமுடியாது. சகல விடயங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. மக்களால் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியையும், அவர்களது எதிர் பார்ப்பையும் நிச்சயமாக அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்போம். அந்த நிலைப் பாட்டில் மாற்றமில்லை. ஜனநாயக நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் ஒன்றின் வெற்றி உறுதியாகி விட்டதன் பின்னர் மாற்றுத் தரப்பினரைத் தாக்கவோ அல்லது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கோ முயற்சிக்கக் கூடாது. ஆனாலும், இன்று அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் பலவகையிலும் பழிவாங்கப்படுகின்றனர். எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற அதேவேளை, ஊடக அடக்குமுறைகளும், கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது, எனது பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. எனக்கு ஆதரவாகச் செயற்பட்ட இராணுவ உயரதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், பல அதிகாரிகள் பதவி இறக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோத்தர்கள், எனது அலுவலகப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், எனது அலுவலகத்திலுள்ள கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் பலவந்தமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இவை மிகமோசமான, அராஜகம் நிறைந்த செயற்பாடுகளாகும். உண்மையாகவே தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் அவசியமற்றவை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளே தேர்தலில் பொய் யான வெற்றிபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. எம்மீதான அடக்குமுறைகள் தொடர்பில் பொலிஸாரும் பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றனர். முறைப்பாடுகளை ஏற்கவும் மறுக்கின்றனர். இதனால் இந் நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் தீட்டியதாக என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எமது அணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனேயே நான் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அரசாங்கத்தினால் அரச ஊடகங்களில் வெளிப் படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகும். அவற்றில் எந்தவிதமான உண்மைகளும் கிடையாது. இதனை பின்னணியாகக் கொண்டு நான் வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தான் எனது மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது. எனது மருமகன் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் எனது குடும்பம் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நானே மக்களின் ஜனாதிபதியாக இருக்கின்றேன். கௌரவமும் நேர்மையும் இல்லாத ஒருவராக நான் இருக்கவில்லை என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். நான் எங்குசென்றாலும் என்னைப் பின் தொடர்கின்றனர். எனது சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளது தேர்தலுக்கு முன்பதாக அரச தொலைக் காட்சிகளில் இராணுவ ஆட்சியாளர்களை சித்திரிக்கும் திரைப்படங்கள் ஒளிபரப்பட்டன. அந்த விடயங்கள் இன்று நிஜமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றன. வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தனர். அதேபோல், சிங்களவர்களும் வாக்களித்தனர். இருப்பி னும், தமிழ்பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்ற காரணத்தால் நான் பிரிவினைக்குத் துணைபோனதாக என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிங்கள மக்களிடையே ஒருவித இனவாதப்போக்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பிரித்தெடுக்கும் நோக்கில் செயற்பட்ட பிரபாகரனே கடந்த காலங்களில் பிரிவினைவாதத்தைத் தோற்றுவித்திருந்தார். அந்தப் பிரிவினைவாதத்தை நாம் முறியடித்தோம். இருந்தாலும், இன்று தெற்கிலே பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முற்றாக நாம் நிராகரிக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலில் நாம் 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். அதுமட்டுமல்லாது, தமிழ் பேசும் மக்களிடமிருந்து ஒரு மில்லியன் வாக்குகளையும் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு பெற்ற வாக்குகள்தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் மக்கள் இதனைத் தான் இன்று பேசிக்கொண்டிருக்கின்றனர். எனவே, எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பற்கு நாம் சகலவிதத்திலும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் முதல் கட்டமாக, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையை கொழும்பில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். இது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன. எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவ்வாறான கொள்ளை இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கான மாற்று நடவடிக்கைகள் அவசியமானதாகும். அத்துடன், அடுத்து வரும் தேர்தல் விருப்புவாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேர்தலாகும். எனவே, அதில் இவ்வாறான கணினி தில்லுமுல்லுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இது தொடர்பில் என்னோடு இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது: கோத்தபாய ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார். இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

சம்பந்தரின் இணக்க அரசியல்

கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மா நாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டும்? என செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார். ஐக்கியப்பட்டு இணைந்து வேலைசெய்யவேண்டும். பிரச்சினைக்கு இணைந்து தீர்வுகாண்பதற்கு முன்வரவேண்டும். பிரிவினைவாத பிரசாரத்தை மேற்கொள்வதன் மூலமாக அபிவிருத்தியை எதிர்பார்க்கமுடியாது. அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக அமையும். பிரிவினைவாதத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நான் அன்றிலிருந்தே கோரிவருகின்றேன். என திட்டவட்டமாக குறிப்பிட்டார் சம்பந்தன் இவ்வாறுதான் விடுதலைப்புலிகளை புறம் தள்ளுவதற்காக அல்லது தமது சுய நலன்களிற்காக மக்களின் நலன் கருதி அரசாங்கத்துடன் சேருகின்றோம் அல்லது இணக்க அரசியல் என்று பலர் வரிந்து கட்டிக்கொண்டு சென்றனர். அவர்களின் அரசியல் வாழ்க்கை மக்களால் தோற்கடிகப்பட்டு வருகின்றன.சம்பந்தன் அவர்களையும் மக்கள் பல தடவை தோற்கடித்துள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் உதவியுடன் மீண்டும் மக்கள் தலைவனாகலாம் என்ற உள் நோக்கோடு வந்த சம்பந்தன் அதனை இலாவகமாக பிடித்துக்கொண்டார். இப்போது மீண்டும் தனது சுய நலனை வைத்து தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து, நம்பிக்கை துரோகம் இழைக்க முயல்கின்றார். அதாவது இணக்க அரசியல் ஊடாகத்தான் அபிவிருத்தியினை செய்ய முடியும் என ஏமாற்றும் வித்தையினை காட்ட முயல்கின்றார். தான் ஓர் பிரிவினை வாதியாக அல்லாமல் அனைவரையும் அணைத்து போகும் பாங்கு உடையவராக காட்டுகின்றார். ஆனால் சிங்கள மக்களும், சிங்கள தலைவரும் பிரிவினை வாதத்தினையும், இனவாதத்தினையும் முற்று முழுதாக ஏற்றுக்கோண்டு செயற்படுகின்றனர். அதில் வெற்றியும் பெற்றுக்கொண்டனர். ஆகவே பிரிவினை வாதமும், இனவாதமும் மேலோங்கி போயிருக்கும் சிங்கள இனத்திற்குள் இணக்க அரசியல் என்பது டக்ளஸ், கருணா, பிள்ளையான் போலவே இருக்கும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாடம் கற்றுக்கொண்ட தமிழ் விரோத செயற்பாட்டாளர்கள் தாம் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டால் மக்களால் தோற்கடிக்கப்படுவர் என்ற அடிப்படையில் மெது மெதுவாக விலகி தாம் தனித்து போட்டியிட போவதாக முணு முணுத்துக்கொண்டு இருக்கையில் சம்பந்தனோ மீண்டும் அபிவிருத்தி கருதி பிரிவினை வாதத்தினை கைவிட போவதாக அறிவித்துள்ளார். தனது சொந்த கருத்தினை தமிழ் மக்களின் உரிமைகள் மீது பிரயோகிக்க கூடாது என்பதே எமது கருத்து. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட பெரும்பாலான கூட்டமைப்பு எம்.பி.க்களின் முடிவு ஒருவரையும் ஆதரிப்பதில்லை என்று இருந்த போதும் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு எம்.பி க்களை வற்புறுத்தியும், பல அழுத்தங்களை உபயோகித்துமே ஏகமனதான முடிவு என அறிவிக்கப்பட்டது. இனி வரும் பொது தேர்தலிலும் சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, அதிகார பரவலாக்கல் என்றுதான் தனது கொள்கையினை முன்வைத்து ஏனைய உறுப்பினர்களையும் தம்பக்கம் சாய வைப்பார். இல்லாவிடில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்காது என விரட்டப்படுவார்கள். இப்போதே சிவாஜிலிங்கம் உட்பட பலருக்கு சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் தேர்தலி தனித்து போட்டியிட்டதற்காக என கூறினாலும் காரணம் அதுவல்ல. காரணம் ஏற்கனவே தாம் விரும்பிய பல புதிய உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட்டு தருவதாக சம்பந்தன் வாக்குறுதி அளித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் ஒருபக்கம் மக்கள் தமிழீழ தாயகத்திற்காக வாக்களிக்க, தாயகத்தில் சம்பந்தன் பிரிவினையே தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருப்பது மக்களை இரண்டாக பிரிக்கும் செயலாகவே இருக்கும். சிலர் கூறலாம் தாயகத்தில் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் நிலமை விளங்காது கதைக்கின்றனர் என்று. நிலமை விளங்கி செயற்படுவதனால் எதனையும் மஹிந்த தரும் சாத்தியம் உண்டா? டக்ளஸ் அவர்களும் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுயாட்சி என்றார் நடந்தது என்ன? இவ்வளவு காலமும் தான் புலிகள் விடவிலை என்று காரணம் கூறினாலும் இப்போது கூட மக்கள் ஏற்று கொள்ளவில்லையே. ஏன் கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் ஊடாக எதனை சாதித்து கொண்டு இருக்கின்றனர். ஆக குறைந்தது மீன்பிடி தடைகளை கூட கிழக்கு மாகாண தலைவர்களால் நீக்க முடிந்ததா? ஆகவே ஓவ்வொரு தடவையும் மக்களுக்கு அழுத்தங்களை கொடுத்து அவர்களை தேர்தலில் திக்கு முக்காட வைப்பதனை விட்டு விட்டு கொள்கையில் உறுதியாக இருந்து செயற்படுவதே நீண்டகாலத்தில் தமிழ் மக்களிற்கு பிரயோசனமானது. மக்களை அபிவிருத்தி செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இணக்க அரசியல் இல்லாமல் சுயாதீனமாக மக்களிற்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுடனேயே இருந்து பணி புரிவதன் மூலம் மக்களிற்கு நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும். மாறாக சம்பந்தன் மக்களிற்கு பீதிகளை உருவாக்கி ஒவ்வொருவரது கருத்துக்களையும் முடக்கி தமது கருத்தினை ஏற்றுக்கொள்ளும் பொறி முறைகளையே செய்து வருகின்றார். இது சாதாரணமாக சிங்கள அரசாங்கம் தேர்தல் காலங்களில் செய்யும் ஒன்றே என்பதனை சம்பந்தனும் அவரை அரசியலில் முதிர்ந்து பழுத்த பழம் எனக்கூறும் புத்திஜீவிகளும் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையேல் மீண்டும் யாராவது இவர்களது விடயங்களில் தலையிடவேண்டிய அசெளகரியமான சூழல் ஏற்படலாம். ஏனெனில் தாயகத்தில் மக்கள் இன்னமும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்