செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நேரம் வரும்போது தமது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மட்டு வாழ் மக்கள்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில் சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர். அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர். மஹிந்த அரசு தமிழ் விரோத செயற்பாட்டாளர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை செய்து, மக்களை படுகொலை செய்து சின்னாபின்னப்படுத்தி, கொடுமைகளை புரிந்தது. அதன் பின்னர் பிரதேச வேறுபாடுகளை முன்வைத்து தமது தேச விரோதப்போக்கிற்கு நியாயம் கற்பித்துகொண்டிருக்கும் கருணா பிளையான் போன்றோரை வைத்து பொம்மை அதிகாரிகளாக்கி தமது இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியும், பெரும் செல்வங்களை மக்கள் சார்பாக பெற்றும் வந்தது மஹிந்த அரசு. தாங்க முடியாத அழுத்தத்தில் ஏதோ தேர்தலில் பிள்ளையானுக்கு வாக்களித்ததன் மூலம் மஹிந்த அதனை தனது வெற்றியாக நினைத்தார். தன்னை நியாயப்படுத்திக்கொண்டார். ஆனால் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் போராட்டத்திற்கு பல ஆயிரக்கணக்கான உயிர்களை போராளிகளாகவும், மக்களாகவும் உயிர்ப்பலி கொடுத்தவர்கள். தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தவர்கள். எனினும் இவை அனைத்தையும் பிரதேச வேறுபாட்டினை கடந்து தழீழ தேச விடுதலை என்ற ஒரே இலட்சியத்திற்காகவே செய்தனர். ஆனால் ஆட்சியாளர்களும் தேச விடுதலை விரோதிகளும் அதனை கருத்தில் எடுக்காது மக்கள் அனைத்தையும் மறந்து விட்டதாகவும் அதாவது தேச விடுதலையினை , தேச உணர்வினை, பிரதேச ஒற்றுமையினை மறந்து விட்டதாகவும் தமது வலையில், தமது மாயையில் சிக்கி விட்டதாகவும் நினைத்தனர். ஆனால் மட்டக்களப்பில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்தவுக்கு எதிராக ( சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்ததன் மூலம்) பெரும் எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதன் மூலம் ஆட்சியாளர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த மட்டு மாவட்ட மக்களில் வாக்களிப்பானது மஹிந்த மீதுள்ள வெறுப்போ அல்லது சரத் மீது கொண்ட விருப்பமோ அல்லது கூட்டமைப்பின் செல்வாக்கோ என்று கூறுவதனை விட மட்டு மாவட்ட மக்கள் மீண்டும் ஒன்று பட்டு தமது பிரதேச ஒற்றுமையினையும், தாயக விடுதலையினையும் கோடிட்டு காட்டியுள்ளனர் என்றே கூறமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக