செவ்வாய், 20 ஏப்ரல், 2010

எரிமலையே ஏன்.....................!

எல்லோரும் வந்து தங்கிவிட்டுப்போக இந்தியா தர்ம சத்திரம் அல்ல என வாய்துடுக்கு சுப்பிரமணியசுவாமி சொல்லியிருக்கிறார். இந்த கோமாளி எப்போதெல்லாம் வாய் திறக்கிறாரோ அப்போதெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் கலவரம் வெடிக்கிறது. எமது தாய் மண்ணுக்கு, எமது தாய் வருவதற்கு இந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எங்கு வலிக்கிறது என்று புரியவில்லை. நாங்கள் இந்தியாவை நம்பி, எமது தாய் இங்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைக்கவில்லை. எங்கள் தமிழ்நாட்டை நம்பித்தான் இந்த சிகிச்சைக்காய் அவரும் இங்கு வந்தார். ஆனால் எங்கள் தாயைப் பார்த்து, எல்லோரும் தங்கிவிட்டுப்போக இந்த மண் தர்ம சத்திரம் அல்ல என்று சொன்னால், நாங்கள் சொல்கிறோம், நீ எங்கள் மண்ணில் வருவதற்கு எங்கள் தமிழ் மண் ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. வந்தாரை வாழ வைத்த எமது தமிழினம் வக்கற்றுப் போனதால் சுப்பிரமணிய சுவாமி போன்றோருக்கு வாய்துடுக்கு வான்வரை நீள்கிறது. தமிழனுக்கு சுரணை இருக்காது என்கின்ற தைரியம் இப்படியெல்லாம் பேச வைக்கிறது. ஆனாலும்கூட, அதையும் கேட்டுக் கொண்டு எமது இனம் அமைதி காக்கிறது என்றால், எமது இனத்தில் இருந்த மானம் எங்கே போனது? கவரிமான் போன்று மானத்தோடு வாழ்ந்த மாவீரர்கள் அல்லவா நாம். தமிழர்களின் முகவரியை உலகிற்கு சொன்ன ஆற்றல் வாய்ந்த தமிழ் குல முதல்வன் எமதுதேசிய தலைவன் இந்த மண்ணிற்கு வர காரணமான அந்த மகத்துவம் மிக்க தாயை, கண்டவர்கள் எல்லாம் என்று சொல்வதற்கு சுவாமிக்கு எங்கிருந்து தைரியம் புறப்பட்டு வந்தது. இதற்கு, நமக்குள் இருக்கும் ஒரே காரணம், நாம் இந்தியர் என்கின்ற தேசிய அடையாளத்தை சிலுவையை சுமப்பதுபோல் சுமந்து கொண்டிருப்பதுதான். தேசிய இனம், தமிழினம் என்கின்ற அடையாளத்தை நாம் பெற்றுக் கொள்ளும்போது, நாம் தமிழர்களுக்கு விரோதமாக எதைப் பேசினாலும் தமிழர்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்கின்ற இயல்பான அச்ச உணர்வு சுவாமி போன்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும். நாம் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதால்தான், கண்ட நாய்கள் எல்லாம் நமது இனத்தை இவ்வளவு தவறாக விமர்சிப்பதற்கு உள்ளாக்கப்படுகிறோம். ராஜீவ்காந்தி என்று இறந்தாரோ, அன்றிலிருந்து உடை மாற்றாமல், உணவு உண்ணாமல், குளிக்காமல், மூலையில் உட்கார்ந்து முனங்கிக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியவராக சுப்பிரமணியசுவாமி இருக்கிறார். அதனால் ஈனசுவரத்தில் அடிக்கடி முனகுகிறார், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது தேசிய பயங்கரவாதம் என. இதன் அடுத்தக்கட்ட நிகழ்வுதான் கண்டவர்கள் எல்லாம் இந்த மண்ணில் கால் மிதிக்கக்கூடாது என்கின்ற சொற்கள். தமிழ் தேசியத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். இது ஆரம்ப நிலைதான். ஒருவேளை இப்படிப்பட்ட சொற்கள் தொடருமேயானால், அவையே ஒருகாலத்தில் நம்மை அடிமைகளாக ஒடுக்குவதற்கு அடித்தளமாக அமையலாம். இந்த நிலையிலிருந்து நம்மை மீண்டெழுவதற்கு தயாராக ஒவ்வொரு அசைவும் அமைய வேண்டும். அதற்கு முதலில் நாம், நமக்குள் நமது இன அடையாளத்தை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்கின்ற அடிப்படை கட்டமைப்பை உளரீதியாக உணரவேண்டும். நமக்குள் இருக்கும் சாதிய அடையாளங்களை தகர்த்தெறிய வேண்டும். அப்படி சாதிய அடையாளங்கள் நம்மேல் சுமையாக இல்லாதபோது, நாம் தமிழர் என்கின்ற உணர்வு நமது எண்ணங்களில் மேலோங்க தொடங்கிவிடும். நமக்குள் சாதிய சீரழிவு சிந்தனை ஒழிக்கப்படும்போது, நாம் தமிழர் என்ற ஓர்மை பண்புக்குள் நிலைநிறுத்தப்படுவோம். இந்த நிலையைத்தான் தமிழீழத்திலே நமது தேசிய தலைவர் மேற்கொண்டார். சாதியத்தை வேரறுப்பதிலே தான் நமது தமிழர் இனப்பண்பு ஓங்கி வளரும் என்பதை அவர் தெள்ளத்தெளிவாக உணர்ந்த காரணத்தினால், தமிழீழ மண்ணில் சாதியம் எரித்தழிக்கப்பட்டது. அங்கே தமிழர் பண்பு நலன் போற்றி பாதுகாக்கப்பட்டது. சாதியம் இல்லாத தமிழர் நலன் தமிழ் தேசிய அடையாளத்தை உலகிற்கே பெரும் கதிராய் பறைசாற்றியது. ஆகவே தான் தமிழ்நாட்டில் நமக்குள் இருக்கும் சாதிய அடையாளத்தை தகர்த்து, தமிழர்கள் என்கின்ற ஒரே குடையின்கீழ் வரும்போது, இங்கே நமக்கெதிரான ஆணவ சக்திகள் அடியோடு அடித்து நொறுக்கப்படும். அடக்குமுறை ஆற்றல்கள் கொடும் தீயில் எரிக்கப்படும். நாம் பிரிந்திருப்பதுதான் மற்றவர்களுக்கு பெரும் துணை புரிகிறது. எந்த நிலையிலும் தமிழன் ஒன்றிணைய மாட்டான் என்கின்ற தைரியம் மற்ற இனத்தவர்களுக்கு இருக்கின்ற காரணத்தால், வந்தேறிகள் நம்மைப் பார்த்து வரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு துணிவு வந்திருக்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்கப்போவது நீ, நான் என சுட்டிக்காட்டாமல் நாம் இணைந்து பணியாற்றுவோம். தமிழர்களுக்கான ஒரு நாடு இருந்திருக்குமேயானால், இப்படி ஒரு தமிழ் தாய், மருத்துவத்திற்குக்கூட வரமுடியாத அளவிற்கு மறுதலிக்க முடியுமா? எப்படி இது சாத்தியம். இதற்கு ஒரே காரணம், நாம் இந்தியாவின் அடிமைகளாக இருப்பதுதான். நமக்கான உரிமையை நாம் கையேந்தி யாசிப்பதால்தான். நான் தமிழன் என்ற மனப்போக்கு நமக்குள் உயர்ந்தோங்கட்டும். நாம் தமிழர்கள் என்கின்ற பக்குவம் நமக்குள் செழித்தோங்கட்டும். நமக்கான ஒரு நாடு என்கின்ற உறுதி நமக்குள் எப்போதும் நிலைத்திருக்கட்டும். உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும், அவன் நம் இனத்தை சார்ந்தவன் என்கின்ற உணர்வு நமக்குள் அடிப்படையாய் இருக்கும்போது, எங்கே யாருக்கு என்ன தீங்கு என்றாலும், அங்கே நமது கரம் நீளும். நமது மொழி பேசும் அடையாளத்தை நாம் புரிந்து கொள்வோம். நமது மொழிக்கு சாதி இல்லை என்று துணிந்து சொல்வோம். காரணம் சாதி என்ற சனியன்தான் நம்மை தடுமாற வைக்கிறான். சாதியத்திற்கெதிரான சமர் தமிழர்களின் முதல் சமராக இருக்கட்டும். இதைத்தான் நமது தேசிய தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்தார் என்று சொல்வதைவிட, தமிழீழ மண்ணில் அவர் செய்து முடித்தார். தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு சாதியமே குறுக்கே இருப்பதால், சாதியத்தை உடைத்தெறிய வேண்டும் என்கின்ற உறுதி தேசிய தலைவரின் மனங்களிலே ஆழமாக இருந்த காரணத்தால், அங்கே அசைக்க முடியாத பேராற்றலை, உலகையே அசைத்துப் பார்க்கும் பேரோசையை அவரால் எழுப்ப முடிந்தது. அந்த நிலை தமிழ் மண்ணிற்கு வராதா? என்றால் வரவைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ், தமிழர் என்கின்ற உணர்வு கொண்ட இளைஞர்களின் கரங்களிலே அது ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. விமான நிலையத்திலே அன்னையர் தடுக்கப்பட்டதை அந்த நிமிடமே நாம் உறுதியோடு எதிர்த்து, உலகிற்கே சொல்லி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம். அடுத்த நிமிடமே உலக ஊடகங்களில் அதை தெளிவுப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் அடுத்தவன் மனைவியை அபகரித்த செய்தியைத்தான் எட்டுக் காலங்களில் போட்டு மகிழ்கிறது. நடிகைக்கு நடந்த திருமணத்தை வண்ணத்தில் அச்சிட்டு, வாசல்தோறும் வீசுகிறது. கள்ளக்காதலை கடைகளில் தோரணமாய் தொங்கப்போட்டு விற்கிறது. அடித்துக் கொலை செய்வதை அடுக்கடுக்காய் வர்ணித்து எழுதுகிறது. சாமியார்களின் லீலைகளை பலநாட்கள் பிடித்துக் கொண்டு தொங்குகிறது. எங்கெல்லாம் சாமியார்களின் இருட்டறை இருக்கிறதோ, அங்கெல்லாம் தம் கரங்களை பாய விடுகிறது. தம் கண்களை மேய விடுகிறது. இதுதான் ஊடகம். பார்வதி அம்மையார் தடுக்கப்பட்டார் என்கின்ற செய்தியை, ஒருவேளை தமிழ் ஊடகங்கள் நினைத்திருந்தால், தமிழகத்திலே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உறுதுணை புரிந்திருக்கலாம். ஆனால், அது ஐபிஎல் விளையாட்டை பார்த்து, அங்கலாய்த்து, மகிழ்ந்து களிகூர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே ஒரு மனிதநேயம் செத்துக் கொண்டிருப்பதை, செத்துக் கொண்டிருப்பது என்ற வார்த்தைக்கூட சரியானதல்ல, மாந்தநேயம் கொல்லப்பட்டதை குறித்து அக்கரை செலுத்தாத ஊடக தர்மம் இங்கே ஊஞ்சலாடுகிறது. தமிழனுக்கென்று ஊடகம் இல்லை. தமிழனுக்கான ஊடகம் இல்லை. ஆகவேதான் ஊடகங்களும் அவை வர்த்தகத்திற்கு துணைபோய் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் எழுச்சியை அடக்கச் செய்ய, தமிழர்களின் மனசாட்சியை உலுக்கி எழுப்புவதை தவிர்க்க செய்ய, அவை நடிகைகளின் அறைகுறை ஆடைகள் புகைப்படங்களை அட்டவணைப்போட்டு தருகிறது. சாமியார்களின் லீலைகளை வரலாறு என வாசித்துக் காட்டுகிறது. இதெல்லாம் நாம் பிரிந்திருப்பதால் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்கிறது. இப்படிப்பட்ட தமிழர் விரோத போக்குகளை துடைத்தெறிய, அழித்தொழிக்க நமக்குள் எழ வேண்டிய ஒரே நிகழ்வு, நாம் தமிழர்களாக ஒன்றிணைவதுதான். தமிழர்களாக ஒன்றிணைவதிலேதான் நமது நலன் காக்கப்படும். ஒருவேளை நாம் இப்போது இணைவது நமக்கு பயன்தராமல் போகலாம். ஆனால் நம்முடைய சந்ததி பெரும் சிறப்புடன் வாழ அது பேருதவி புரியும் என்பதை புரிந்து கொள்வதற்கான காலங்களைத்தான் வரலாறு நமக்கு சொல்லித்தருகிறது. தொடர்ந்து போராட வேண்டிய தருணம் பக்கத்தில் வந்திருக்கிறது. எப்படிப் போராட வேண்டும் என்பதை சொல்லித்தரும் அற்புதம் தமிழ் மண்ணிலே நிகழ்ந்திருக்கிறது. நாம் தொடர்ந்து அடக்கப்படுவதற்கு ஆடு மாடுகள் அல்ல. பாபாசாகேப் அம்பேத்கர் சொல்வதைப் போன்று, அவர்கள் சிங்கங்களை பலிகொடுக்க மாட்டார்கள், ஆடுகளை தான் பலிகொடுப்பார்கள். நாம் ஆடுகள் அல்ல. புலிகள் என்பதை நமது எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை புலிகள் என அழைக்க நமக்குள் துணிவு வர வேண்டும். அது நமது இனத்தை, நமது மொழியை, நமக்கான உரிமையை, நமது அடையாளத்தை, நமது மகிழ்வை, நமது வாழ்வை உறுதி செய்யும். அந்த உறுதி நிறைந்த செயலுக்காக உழைக்கும் களத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். அதை செய்வதற்கு தவறக்கூடாது. இப்போது ஒருவேளை நாம் தவறிழைத்தால், எப்போதுமே நம்முடைய எதிர்கால வாழ்வு இருளாகக்கூடிய வாய்ப்பு வந்துவிடும். நமது துணிவு, நமக்குள் புதைந்துள்ள பேராற்றல், இந்த சமூகத்திமீது நம் தமிழ் இனத்தின்மீது நமக்குள் உள்ள அக்கரை, நமக்குள் உள்ள அன்பு வெளிப்படுவதற்கான நிகழ்வுகளாகத்தான் காலம் நமக்கு சில நிகழ்வுகளை நடத்திக் காட்டுகிறது. இதன்மூலம் பாடம் கற்போம். நாம் தமிழர்கள் என்பதை உயர்த்திப் பிடிப்போம்.

புலனாய்வு பிரிவு உயர்பதவிகளில் மாற்றம்..

காவல்துறை புலனாய்வுபிரிவு உயர்பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை உயர்பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நான்கு பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் நான்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 64 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வந்த பிரதிக் காவல்துறை மா அதிபர் நந்தன முணசிங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் வடமேல் மாகாண பிரதிக் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தயா சமரவீர புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய பல முக்கிய அதிகாரிகள் வேறும் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசின் ..................?

தமிழர்களைக் கொன்றுகுவித்த சிறீலங்கா படைகளுக்கான இந்திய அரசின் படைத்துறை உதவியின் ஒரு கட்டமாக, சிறீலங்கா காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட இருப்பதுடன், இவ்வாறு பயிற்சி பெறும் காவல்துறையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியத் தலைநகர் டெல்லியைச் சென்றடைந்துள்ளனர். சிறீலங்கா காவல்துறை உயர் அத்தியட்சகர் எல்.ஆர்.விஜயசிங்க தலைமையில் சென்றுள்ள காவல்துறையினர் 50 பேருக்கு முக்கியஸ்தர்களைப் பாதுகாப்பது பற்றிய பயிற்சி 3 மாத காலத்திற்கு வழங்கப்படவுள்ளது. ஹர்யானா மாநிலத்தில் வழங்கப்படவுள்ள இந்தப் பயிற்சியைப் பெறும் சிறீலங்கா காவல்துறையினர் நேற்று டெல்லி வானூர்தி நிலையத்தின் ஊடாகப் பயணித்துள்ளனர்.. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அகவை முதிர்ந்த தாயாரால் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து, சிகிச்சைக்காக உள்நுழைய அனுமதி மறுத்துள்ள இந்திய அரசு, மறுபுறத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த சிறீலங்கா படைகளுக்கு படைத்துறை உதவிகளை வழங்கி வருகின்றது.

அணையாத் தீபம் அன்னை பூபதி!

தேசபக்தி எனப்படுவது அடிமனதில் எழுகின்ற ஒரு தீ. அது ஒரு மனிதனை ஆட்கொண்டு விட்டால் இலட்சியத்துக்காக உயிரைத் தருவதற்கும் கூட அவன் தயங்குவதில்லை. அவ்வாறு தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தேசத்தையும் அதன் கௌரவத்தையும் காப்பவர்கள் தேசபக்தர்கள் எனக் கருதப்படுகின்றனர். அவர்கள் தேசத்தினாலும், தேச மக்களாலும் என்றென்றும் நினைவு கூரப்படுவர். விடுதலைப் போராட்டம் ஒன்று நடைபெறுகின்ற தேசத்தில் தேசப்பற்றாளர்களுக்கான கௌரவம் அபரிமிதமாக இருக்கும். அது தேசப்பற்றாளர்களைக் கௌரவிப்பதாக மட்டும் அமையாது, புதிய தேசப்பற்றாளர்கள் உருவாவதற்கான உந்து சக்தியாகவும் அமைந்து விடுகின்றது. அத்துடன், தேசத்தின் மீது காதல் கொண்டோருக்கு தமது பணியை மென்மேலும் விஸ்தரிப்பதற்கான உத்வேகத்தையும் தருகின்றது. தேசப் பற்றாளர்களாக விளங்குபவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியது அவசியமல்ல. அதேவேளை, அவர்களின் செயற்பாடுகள் ஆயுதப் போராட்டத்துக்குச் சற்றும் குறைவானதல்ல. ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குக் குறி வைப்பதற்கு முன்னதாகவே தேசப் பற்றாளர்களை அகற்றிவிட எதிரி துடிப்பதில் இருந்தே இவர்களின் பணி எதிரியின் இருப்புக்கு எத்துணை இடைஞ்சலாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். உலகப் பந்தின் ஒரு மூலையில் உள்ள இலங்கைத் தீவிற்குள் மட்டுப் பட்டதாகவே ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதிலும் அது பல சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏனைய விடுதலைப் போராட்டங்களுக்கு பல முன்மாதிரிகளைத் தந்திருக்கின்றது. போராளிகளின் செயற்பாடுகளில் மட்டுமன்றி தேசப் பற்றாளர்களின் அர்ப்பணிப்பில் கூட பல முன்மாதிரிகள் படைக்கப் பட்டிருக்கின்றன. அதிலொன்றே ‘அணையாத் தீபம்” அன்னை பூபதியின் தியாகமும் எனலாம். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் நலனுக்காக உயிர் ஈந்தோரை நினைவு கூரும் முகமாக தாயக மக்களால் பிரதி வருடமும் ஏப்ரல் 19 இல் அனுட்டிக்கப்படும் ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினத்தை” ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. * ஈழத் தமிழினத்தின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் ஒளியேற்றிய தீபங்கள் பற்பல. அவற்றின் தியாகங்கள் விலை மதிக்க முடியாதவை. அவை ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்துவமானவையும் கூட. அத்தகையவற்றுக்குள்ளும் ஈண்டு குறிப்பிடத்தக்க தீபங்கள் ஒருசில உள்ளன. அந்த வரிசையில் வரும் அணையாத தீபங்களுள் ஒன்றே ‘அணையாத் தீபம்” அன்னை பூபதி. ஈழ தேசிய விடுதலைப் போரட்டத்தில் யுத்த களத்தில் தீரமுடன் போராடி தம்முயிர் ஈந்த மாவீரர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகம். அவர்களுள் தமது அடையாளத்தை இறுதிவரை வெளியிடாது ஆகுதியாகிய கரும்புலிகளும் அடக்கம். எதிரியோடு சரிக்குச் சமமாக ஆயுதமேந்தி – தற்காப்புக்கும், தாக்குதலுக்கும் வாய்ப்புள்ள ஒரு களத்தில் – போராடி வீரமரணம் எய்தியோரின் தியாகம் ஒருவகையினதென்றால் நிராயுதபாணியாக, தற்காப்புக்கு எத்தகைய வாய்ப்பும் அற்ற அகிம்சைக் களத்தில், மனவுறுதி ஒன்றை மாத்திரமே ஆயுதமாகக் கொண்டு மாண்புடன் போராடி மடிந்தோர் வேறு வகையினர். இவர்களின் தியாகம் ஒரு வகையில் முன்னைய வகையினரை விட ஒருபடி உயர்ந்தது எனலாம். உலகப் பொதுமையான இந்தப் போராட்ட வடிவத்தை சகல விடுதலை அமைப்புக்களையும் போன்றே ஈழ தேசிய விடுதலைப் போராட்டமும் உள்வாங்கிக் கொண்டது. அதன் அடையாளமாக இன்றும் எம்மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதியும், ‘தியாக தீபம்” திலீபனும் ஆவர். ஒரு போராளியாக ஆயுதப் பயிற்சியைப் பெற்று, ஒரு மக்கள் தலைவனாகப் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்துடன் உண்ணா நோன்பிருந்து தன்னை வருத்தி திலீபன் செய்த தியாகம் மகத்தானது, தன்னிகரற்றது. வாழ்வின் வசந்தத்தில் இருந்த அவன், பூரண வாழ்க்கையை வாழ்ந்து, அனுபவிக்க வேண்டியவை அனைத்தையும் அனுபவிக்க முன்னரேயே கொண்ட இலட்சியத்துக்காக உயிரைத் துறந்திருந்தான். ஆனால், அன்னை பூபதியோ சாதாரண குடும்பப் பெண்மணியாக இருந்து கொண்டே தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர். பெரும்பாலான தாய்மாரைப் போன்று தேச விடுதலைப் போராட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் இருந்துவிட்டுப் போகாமல் காத்திரமான பங்காளியாக மாறி தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்து மரணம் என்பதன் விளைவைத் தெரிந்து கொண்ட பின்னரும் கொண்ட இலட்சியத்துக்காக வைராக்கியத்துடன் இருந்து தனது வாழ்வைத் தியாகம் செய்தவர். அவர் தனது தேசப்பற்றை நிரூபிக்கத் தெரிவு செய்திருந்த களம் மிகவும் வித்தியாசமானது, அதே நேரம் அது சவால் நிறைந்ததாகவும் இருந்தது. பேரினவாதம் தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய நிலையில் சிங்களப் பேரினவாதத்தின் அடிமைத் தளையில் இருந்து விடுபடும் நோக்குடனேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டது. தேசியம், தாயகம், தன்னாட்சி ஆகிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவென சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள் ஒரு காலகட்டத்தில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைக்குத்; தள்ளப் பட்டார்கள். தமிழ் மக்களின் நலன் பேணும் நோக்கில் செய்து கொள்ளப் பட்டதாக வர்ணிக்கப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் சிங்களப் பேரினவாதிகளின் குள்ளநரித் தனத்தால், தமிழ் மக்களின் நலனை மறுதலித்து தனது வல்லாதிக்க நலனை மேம்படுத்தும் சிந்தனையின் பால் இந்தியாவைத் தூண்டியது. இதன் விளைவாக தமிழ் மண்ணில் மீண்டும் ஒரு இரத்தக் களரி உருவானது. தமது தந்தையர் நாடான இந்தியாவை ஒரு இரட்சகராகப் பார்த்து வந்த தமிழ் மக்களுக்கு, இந்தியாவுக்கு எதிரான ஒரு ஆயுதப் போராட்டம் என்பது ஜீரணிக்க முடியாத விடயமாக இருந்தது. இந்திய இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிலை கொண்டிருந்த சுமார் 3 வருட காலத்தில் இந்தியா தொடர்பிலான அடையாளச் சிக்கல் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இருந்து வந்ததை மறைப்பதற்கில்லை. அவ்வாறான ஒரு சூழலிலேயே அன்னை பூபதி இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் களமிறங்கினார். அன்னையர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி டேவிட் அன்னம்மா உண்ணா நோன்பில் குதித்து, அவர் இந்திய இராணுவத்தினாலும், கைக் கூலிகளாலும் பலவந்தமாக அகற்றப்பட்ட நிலையிலேயே அன்னை பூபதி துணிவுடன் உண்ணா நோன்பில் ஈடுபட முன்வந்தார். சாகும்வரை தனது உறுதியில் இருந்து தளராது அவர் மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழீழப் பிரதேசமெங்கும் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. அவரது போராட்டத்தை ஒட்டி தாயகம் முழுவதிலும் பல்வேறு எழுச்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. எனினும், அவரின் கோரிக்கைகளை இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையில் 1998 ஏப்ரல் 19 ஆம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்தை மரத்தின் கீழே அவரின் ஆவி பிரிந்தது. அகிம்சையைப் பேசிக் கொண்டே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகப் பாரிய அடக்குமுறை மற்றும் நாசகாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்திய வல்லாதிக்கத்தின் சுயரூபம் அன்று மீண்டுமொருமுறை வெளிப்பட்டது. அதேவேளை, தமிழீழம் ஒரு உன்னதப் பெண்மணியை இழந்து கண்ணீர் வடித்தது. அன்னை பூபதி உண்ணா நோன்பிருந்த காலகட்டத்தில் அவரின் மனவுறுதியைக் குலைக்கவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்தியப் படைகளும் அவர்களின் கைக்கூலிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இச் செயன்முறையில் அவர்கள் சாம, தான, பேத, தண்ட முறைகளைப் பாவித்தனர். ஆயினும், இவை எவற்றுக்கும் அன்னை பூபதி மசியவில்லை. மாறாக, அவரின் மனவுறுதி மேலும் அதிகரிக்கவே செய்தது. தங்கள் முயற்சியில் தோற்றுப்போன எதிரிகள் ஈற்றில் அன்னை பூபதி மீது சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டனர் அவரின் உன்னத தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் கட்டுக் கதைகளைப் பரப்பினர். இன்றும் கூட அவர்கள் ஓய்ந்துவிட வில்லை. * தேச விடுதலைப் போராட்டத்திலே ஒரு பொதுமகன் எத்துணை உட்சபட்ச தியாகத்தைப் புரிய முடியும் என்பதற்கு அன்னை பூபதி ஒரு சிறந்த உதாரணம். அவரின் தியாகம் ஈடிணையற்றது. அது அன்னையர் குலத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கே பெருமை சேர்க்கின்றது. * ஆனால், முள்ளிவாய்க்காலின் பின்னான இன்றைய காலகட்டத்தில் எமது உறவுகள் தமது கடமையை மறந்தவர்களாக, சுயநலமிகளாக, மனம்போன போக்கில் வாழ முனைவதைப் பார்க்கிறோம். சாதாரண மனிதர்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் வரை ‘இப்படித்தான் வாழவேண்டும்” என்ற கோட்பாட்டை விடுத்து ‘எப்படியும் வாழலாம்” என்ற கோட்பாட்டுடன் வாழ நினைப்பதைப் போன்று தென்படுகின்றது. பைபிளில் கூறப்படுவதைப் போன்று ‘அவர்கள் அறியாமற் செய்கிறார்கள்! அவர்களை மன்னியும்!” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிட முடியாத அளவிற்கு ஆபத்தான போக்கு இது. சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு வாழ்வது இயற்கையின் இயங்கியலே ஆயினும், கொண்ட கொள்கையையும், இலட்சியத்தையும் சமரசம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. அன்னை பூபதியைப் போன்ற நாட்டுப் பற்றாளர்கள் எந்த இலட்சியத்தை எட்ட வேண்டும் என்பதற்காகத் தமது இன்னுயிர்களைத் துறந்தார்களோ, அந்த இலட்சியம் பற்றிய நினைவை மறந்தவர்களாகவே இன்று எம்மவர்கள் வாழ நினைக்கிறார்கள். கடந்த 3 தசாப்தங்களாக தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாக விளங்கி வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பலம் நிர்மூலமாக்கப் பட்டமையின் விளைவாகவே இந்நிலை உருவாகியுள்ளது. * தமிழ் மக்களின் அரசியல் பலமாக இதுவரை விடுதலைப் புலிகளே விளங்கி வந்தார்கள். அந்தப் பலத்தை தமிழ் மக்கள் மீளவும் தமது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கூடாக அன்னை பூபதி போன்ற நாட்டுப் பற்றாளர்கள் கண்ட கனவை நனவாக்க முடியும். இதுவே, அவரைப் போன்று தேசத்துக்காக உயிர் துறந்த நாட்டுப் பற்றாளர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.