வியாழன், 30 டிசம்பர், 2010

ஜனவரி மாதம் புதிய கட்சிகள்

தற்போது தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்துக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள புதிய கட்சிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம், ஜனவரி மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஜுன் மாதம் புதிய கட்சிகளை பதிவு செய்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இதன் போது 85க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் விண்ணங்களை வழங்கி இருந்ததாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகளை நாடுகடத்த கூடாது .சர்வதேச மன்னிப்புச் சபை

அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு நாடுகடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்கானிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக த ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை புலனாய்வுத்துறையின் தகவல் அடிப்படையில், இலங்கை தமிழ் அகதிகள் பயங்கரவாதத் தொடர்பு கொண்டவர்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீசாலையில் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் போராளியா ??.

யாழ்ப்பாணம் மீசாலையில்  சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்தவரென்பதுடன் நலன்புரி நிலையத்திலிருந்து அண்மையில் விடுவிக்கபட்டவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மீசாலை வடக்கை சேர்ந்த இவர் கடந்த காலத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது இடம பெயர்ந்து சென்று கிளிநொச்சி உருத்திரபுரத்திற்கு சென்று அங்கு விவசாய செய்து வந்துள்ளார். உருத்திரபுரத்திலேயே தொடர்ச்சியாக அவர் கடந்த காலங்களில் வசித்ததுடன் வன்னியில் இடம் பெற்ற யுத்தகாலத்தில் அங்கிருந்து இடம் பெயர்ந்து அதன் பின்னர் வவுனியாவிற்கு இராணுவக் கட்டுப்பட்டு பகுதிக்குச்சென்றார்

யுத்த குற்றவாளி சவேந்திர சில்வாவை பாராட்டும் வகையில் அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும்;, 58ம் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு, அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்பு செய்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இவ்வாறு காணித் துண்டொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கு தடை

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு  ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம்  சாட்சியங்களை திரட்டியிருந்தனர் இந்த நடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த சில ஊடகவியலாளர்களுக்கு தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பி.பி.சீ ஊடகவியலாளர் மற்றும் உள்நாட்டு ஊடகவிலாளர்கள் சிலருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான பொருட்கள் கடத்தல்

வவுனியா நகருக்கு அருகேயுள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முகாம்வாசி ஒருவர், உணவுப் பொருட்கள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதை மக்கள் பலர் பார்த்திருப்பதாக கூறினார். இதனால் தமக்குறிய உணவு கிடைக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.  இது பற்றியும், அனாதைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பாதணிகள், தொப்பிகள், பைகள் போன்றவற்றில் சொற்ப அளவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை கடத்தப்பட்டதாகவும் தமக்கு புகார் வந்துள்ளதாக வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது குறித்து அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தம்பி பசிலின் வேண்டுதலை அண்ணா மஹிந்த புறக்கணித்தார்.

வெளி நாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பசில் இராஜபக்‌ஷ தனது அமைச்சிற்கு முழு நேர அமைச்சு செயலர் ஒருவரை தருமாறு கேட்டுள்ளார். தற்போது திறைசேரி செயலர் டி.பி. ஜயசுந்தரவையே மஹிந்த பசிலின் பொருளாதார அமைச்சுக்கு பகுதி நேர செலராக நியமித்துள்ளார்.பசில் இராஜபக்‌ஷ கண் மண் தெரியாமல் பெருவாரியாக பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்றார் இதில் பங்குகள் சரியாக மஹிந்தவிற்கு போய் சேரவில்லை. கோத்தபாயவை விட பசில் இராஜபக்‌ஷவே பணம் சுருட்டுவதில் வல்லவராம். இதனை அறிந்த மஹிந்த தானே  டி.பி,.ஜெயசுந்தரவை நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் கொல்லப்பட்டவர் ஈழத்தமிழர் (படம்)

அமெரிக்காவில்  பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்  ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ர இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை  சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிர் பிரிந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்