வியாழன், 13 ஜனவரி, 2011

புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி

17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது.1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “ரணசுறு” என்ற சீனத் தயாரிப்புப் பீரங்கிப் படகின் மீது கடற்கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் உயிர் தப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர் அப்பீரங்கிப் படகில் இருந்தார். இவருடன் இருந்த பல கடற்படை அதிகாரிகளும் மற்றும் கடற்படையினரும் இத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,

கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். "ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்" என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.

உரும்பிராயில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணற்றுக்குள் இருந்த சடலம் நேற்று மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குறித்த கிணற்றை இறைத்தபோது கிணற்றுக்குள்ளிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சறம் என்பன மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது காணாமற் போன தமது உறவினரென உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது இச் சம்பவத்தில் உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஜ் 35 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் கடந்த 3ம் திகதி காணாமற் போயுள்ளதாக அவரது சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினைச் செய்துள்ளமை. குறிப்பிடத்தக்கது மனைவி வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின்போது ஷெல்வீச்சில் பலியானதாகவும் குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் தாயாருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் கொலை: இலங்கையிடம் இந்தியா புகார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இது குறித்து, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக முறைப்படி புகார் அளித்திருக்கிறார்கள். நாகை, புதுக்கோட்டை மாவட்டங்ளைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று ஜெகதாப்பட்டினத்திலிருந்து விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது, இந்தியக் கடல் எல்லைக்குள்  இலங்கைக் கடற்படை நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பாண்டியன் என்பவர் உயிரிழந்ததாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.