வியாழன், 13 ஜனவரி, 2011

புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி

17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது.1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “ரணசுறு” என்ற சீனத் தயாரிப்புப் பீரங்கிப் படகின் மீது கடற்கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் உயிர் தப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர் அப்பீரங்கிப் படகில் இருந்தார். இவருடன் இருந்த பல கடற்படை அதிகாரிகளும் மற்றும் கடற்படையினரும் இத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் “ரணசுறு” மற்றும் “சூரய” ஆகிய இரு பீரங்கிப் படகுகள் அழிக்கப்பட்டன.33 ஆண்டுகளாக கடற்படையில் பணியாற்றும் இவர் நான்காவது கட்ட ஈழப்போரின் போது வடபகுதிக் கடற்படைத் தளபதியாக இருந்ததுடன் கடற்படையில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கேசன்துறைக்கு வடக்கே 19 பேருடன் சென்ற கடற்புலிகளின் முதலாவது படகை மூழ்கடித்த தாக்குதலில் இவர் பங்கெடுத்துக் கொண்டதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பட்டத்தைப் பெற்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றதுடன் இந்தியா மற்றும் பிரித்தானியாவில் அதிகமான பயிற்சிகளை இவர் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக