வியாழன், 13 ஜனவரி, 2011

மீனவர் கொலை: இலங்கையிடம் இந்தியா புகார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இது குறித்து, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக முறைப்படி புகார் அளித்திருக்கிறார்கள். நாகை, புதுக்கோட்டை மாவட்டங்ளைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று ஜெகதாப்பட்டினத்திலிருந்து விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது, இந்தியக் கடல் எல்லைக்குள்  இலங்கைக் கடற்படை நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பாண்டியன் என்பவர் உயிரிழந்ததாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சினை குறித்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் உடனடியாக எடுத்துச் சென்றிருப்பதாகவும், இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் படைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு இலங்கை அதிகாரிகளை இந்தியா வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடல் பரப்பில், இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக் குறித்து இந்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறியுள்ள செய்தித் தொடர்பாளர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது என்றும், 2008-ம் ஆண்டு இரண்டு அரசுகளுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவாசம் அவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் இந்தியா தனது கவலைகளை முறைப்படி தெரிவித்துள்ளது.
இதில், இலங்கைக் கடற்படைக்குத் தொடர்பில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த பிரசாத் காரியவாசம், இந்தியாவின் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார். அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுததினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக