வியாழன், 25 மார்ச், 2010

தலைவர்கள் மேடைக்கு மட்டும்தானா?

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபனின் நினைவுதூபி உடைக்கப்பட்டதை கண்டித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட கண்டன அறிக்கை வருமாறு: யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் சிலரினால் அடித்து இடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த இடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் அரசியல் நலன்களுக்கு திலீபனின் சிலை பெருந்தடையாக அல்லது அச்சுறுத்தலாக விளங்கி இருக்க வேண்டும். இதனைத் தாங்க முடியாத சக்திகளே இந்தப் பண்பாட்டுக் கொலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் நினைவுத்தூபிகளை அழிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருந்து ஒருபோதும் நினைவுகளை அகற்றிவிட முடியாது. திலீபனின் தூபி உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், திலீபன் போன்ற போராளிகளின் இலட்சியத்தையும் போராட்ட மார்க்கத்தையும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஆவர். இவர்கள் திலீபன் போன்றவர்களுக்கும் சமூகத்தில் இடமுண்டு என்பதை ஏற்கத் துணிச்சல் அற்ற பேர்வழிகள் ஆவர். இத்தகைய சக்திகளின் அதிகார ஆதிக்கம் அரசியல் கலாச்சாரமாகவே பரிணாமம் பெற்றுவிட்டது. இவர்களே அநாகரிக காலகட்டத்தை நோக்கிச் சமூகத்தையும் வழிநடத்தப் போட்டி போடுகிறார்கள். போராட்ட காலங்களில் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைவிடங்கள், சின்னங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் வைத்திய சாலைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நாகரிக மரபு உண்டு. இதைவிட போர்க்காலங்களில் சரணாகதி அடைந்தவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் உயிர்நீத்தவர்கள் யாவரையும் கௌரவமாக நடத்தவேண்டிய பொறுப்பும் உண்டு. இதுவரையான உலக அனுபவம் இதைத்தான் வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையிலான மோதலில் கூட எல்லாளன் இறந்தபோது துட்டகைமுனு எல்லாளனுக்கு உரிய மரியாதை கொடுத்து உடலை அடக்கம் செய்ததாகவே எமக்கு வரலாறு கற்பிக்கின்றது. ஆனால், இந்த மரபு பின்னர் வந்த பௌத்த சிங்கள தலைமைகளிடம் அறவே இல்லாமல் போய்விட்டது. யுத்தக் கைதிகள் பரிமாற்றம், யுத்த தர்மம் போன்ற உயர் விழுமியங்கள் பற்றிக் குறித்துப் பேசக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட அல்லது சூறையாடப்பட்ட பண்பாட்டுச் சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென்ற கடமைப்பாடு உண்டென கருத்துரைக்கும் போக்கும் எழுச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் திலீபனின் நினைவுத்தூபி உடைப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அநாகரிக சக்திகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேகம் கொண்டு வருகின்றார்கள் என்பதையே இது அடையாளம் காட்டி வருகின்றது. போர் வெறுப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய சக்திகள் தம்மை போரியல் வெளியுள்ளவர்களாகவே அடையாளம் காட்டுகின்றனர். இவை சமாதானம், அகிம்சை சுட்டும் வாழ் புல நெறிகளுக்கு எதிரானவை. திலீபன் போன்ற குறியீடுகள் உணர்த்திய அரசியல் மார்க்க முறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்தில், திலீபன் எதை எதிர்த்து நின்றானோ அந்த அரசியல் வழிமூலம் திலீபனின் தூபி உடைப்பு நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுக் கொலை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தொடரக்கூடாத வழிமுறையும் கூட. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் அறிக்கை ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தீவிரமாக போராடிய திலீபன் தமிழ் மக்களின் கனவும் இலட்சியமும் நிறைவேறவேண்டுமானால் அதற்கு சரியான வழி தந்தை செல்வா அமரர் அமிர் போன்றோர் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியின் அகிம்சை ரீதியிலான போராட்டமே. இந்தப் போராட்டமே சரியென உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர் திலீபன். இறுதியில் ஓர் அகிம்சைவாதியாக உயிர்நீத்தார் அவர். அவ்வாறான இலட்சியத்தை கொண்டவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது காட்டுமிராண்டித்தனமான செயல் மட்டுமல்ல மன்னிக்கமுடியாத வரலாற்று துரோகமும் கூட. ஒருவரின் நினைவாக அமைக்கப்படும் நினைவு தூபிகளும் சரி சின்னங்களும் சரி உடைக்கப்படுவதென்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இவ்வாறான மிலேச்சத்தனமான செயலை தமிழர் விடுதலை கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக காந்திய வழியிலே போராடிய ஈழத்துக் காந்தியே அண்ணன் திலீபன். மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு மருத்துவ மாணவனாக இருக்கும்பொழுது தமிழ் மக்களின் அவல வாழ்வு கண்டு அவர்களது நிம்மதியான வாழ்வுக்காக அகிம்சை வழியில் போராடிய உத்தம புருசர். நீராகாரம் அருந்தாமல் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தனது உடம்பை உருக்கி உரமாக்கியவர். இலங்கைத்தீவில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாகப் பூசிக்கப்படும் உயரிய மனிதர். வணக்கத்திற்குரிய வகையிலே தமிழ் மக்களால் அவரது நினைவாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவாலயம் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கோரக் கரங்களால் சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து ஒவ்வொரு தமிழனது நெஞ்சமும் அக்கினிப் பிளம்பாகியது. மரணித்த மாவீரனது கல்லறையை காட்டுமிராண்டித்தனமாகச் சிதைத்த செயலை தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது. தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

கோரிக்கையை கண்டு சீற்றமுறும் தென்னிலங்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாப னத்தைக் கண்டு அலறியடித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் சீறிப் பாய்ந்து கருத்து வெளியிட்டிருக்கின் றது அரசுத் தரப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும், தேசிய ஒற்றுமைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு கூறியிருக்கின்றது. அரசின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் உள்ள "தமிழர்களின் தனித்துவம்', "தமிழர் தாயகம்', "தமிழர்களின் சுயநிர்ணய உரிமை' போன்ற சொற்கள் தென் னிலங்கைக்கு வேம்பாய்க் கசக்கின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையைத் தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்களின் மனதில் பெரும் கருத்தியலாக வளர்த்து, அந்த இனவாத அரசியல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் குறுகிய மனப் போக்கில் காலம் காலமாகச் செயற்பட்டு வந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு அந்தப் பேரினவாதப் பூதத்திடமி ருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாத இயலாத நிலைமை நீடிப்பதை நாம் நேரடியாக அவதானிக்கக்கூடிய தாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர் பாகக் கொழும்பு அரசுத் தரப்புக் காட்டிநிற்கும் பிரதிபலிப்புக் கூட அதனையே நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. நீதியைப் பெறுவதற்கான நியாயத்தை எட்டுவதற்கான கௌரவ வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும், தமது நீண்டகால அபிலாஷைகளையும் ஈட்டுவதற்கான ஈழத் தமிழர்களின் ஆயுத வழிப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, சிதைத்து அழிப்பதில் கொழும்பு அரசின் இராணுவ மேலா திக்கம் வெற்றிகண்டிருக்கின்றது. போரில் துவண்டுபோய் நிற்கின்றது தமிழர் தரப்பு தமிழர் தாயகம். இந்தச் சமயத்தில் கூட போர் வெற்றி மமதையில் கொழும்பு அரசு மார்தட்டுகின்றதே தவிர, ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் நீதி வழங்கும் தீர்வை முன்வைப்பதற்கான தாராண் மையை அது வெளிப்படுத்திக் காட்ட விரும்புவதாக இல்லை. "எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு' குறித்துத்தான் தென்னிலங்கை அரசும், சில சர்வதேச தரப்புகளும் பேசுகின்றனவே தவிர, சிறுபான்மையினரான தமிழர்களின் நீதி,நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்யும் தீர்வு குறித்து அத்தரப்புகள் பிரஸ்தாபிக்கின்றவையாக இல்லை. இதுவே மனவருத்தத்துக்குரிய விவகாரமாகும். ஜனநாயகத் தேர்தல் ஒன்றிலே வாக்கெடுப்பிலே பெரும் பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமையும். அது தான் ஜனநாயக விழுமியமாகும். ஜனநாயகக் கோட்பாட்டின் பண்பியல்பு அதுதான். ஆனால், அதுவே ஜனநாயகப் பெரு மதிப்பின் பின்னடைவும் கூட இழுக்கும் கூட என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு தேர்தலில், பெரும்பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பு என்கின்ற கோட்பாட்டை ஜனநாயக முறைமைக்கான அடிப் படையாக நாம் ஏற்க முடியும். அது எண்ணிக்கை சார்ந்த விடயம். ஆனால், ஒரு பிணக்கிற்கான ஒரு பிரச்சினைக்கான ஒரு சண்டை, சச்சரவுக்கான நீதி முறையான தீர்ப்பு என்பது அந்தச் சச்சரவில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் எண்ணிக்கை யில் தீர்க்கப்படுவதல்ல. நீதி, நியாயத்தின் அடிப்படையி லேயே அது தீர்க்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவும் கூட அத்தகைய நீதி, நியாயமான முறையிலேயே அமைய வேண்டும். இலங்கைத் தீவில் தமிழர்களை விட ஐந்து, ஆறு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சிங்களவர்கள் வாழக்கூடும். அதற்காக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலானது என்று கூறிக் கொண்டு ஆட் களின் விருப்பினதும் அவர்களின் எண்ணிக்கையின் அடிப் படையிலும் அமையக்கூடாது. தீர்வு என்பது எண்ணிக்கைக் கணியங்களுக்கு அப்பால் நீதியானதாக, பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நியாயம் செய்வ தாக அமையவேண்டும். இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான பௌத்த, சிங்களவர், இத்தீவின் சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுத்து, வீசி எறியக்கூடிய "பிச்சை' தான் தீர்வு என்று கருதக்கூடாது. ஜனநாயக நெறிமுறைகளின்படி எண்ணிக்கையில் அதிகமானவர்களான பெரும்பான்மையினர், இந்த இனப்பிரச் சினையில் சம்பந்தப்பட்ட எண்ணிக்கையில் குறைந்தவர்க ளான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுக்க வழங்க இரந்து அளிக்க இணங்குவதுதான் தீர்வாக அமைய முடியும் என்ற கருத்தியல் சிந்தனை முற்றிலும் தவறாகும். பாரம்பரியமாக வரலாற்று ரீதியாக காலங்காலமாக தங்களிடம் இருந்து வந்து, இப்போது பேரினத் தரப்பினால் பல வந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு, பறிக்கப்பட்டிருக்கும் தமது உரி மைகளையே தமிழர்கள் கோருகின்றார்கள். அதுவே இனப்பிரச் சினைக்கான அடிப்படை. தரப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலான விருப்பே தீர்வு என்று கருதாமல், நீதி,நியாயத்தின் அடிப்படை யில் அமைவதே தீர்வு என்ற கோட்பாட்டின் கீழ் இப்பிரச் சினைக்கு ஒரு முடிவு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நீதி, நியாயத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு விட்டுக்கொடுத்து இரக்கக்கூடிய பிச்சையே தீர்வாக முடியும் என்ற கருத்தியலில் பேரினவாத அரசுகள் இருப்பதால்தான் தமிழர் தரப்பின் உரிமைக்கான குரல் அந்த அரசுகளுக்கு இப்படி வேம்பாய்க் கசக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசு வெளிப்படுத்தி நிற்கும் கருத்துகளும் கூட அத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவை தேசிய ஒற்று மைக்கு ஆபத்தானவை என்ற அரசுத் தரப்பின் எச்சரிக்கை கூட இத்தகைய மேலாதிக்க மனப்போக்கில் அமைந்தவைதான்.

பரிந்துரைக்கின்றது சிறிலங்கா !

பலஸ்தீனத்திலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதையடுத்து சிறிலங்கா தனது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருக்கிறது. அமைதி முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் மோசமடைந்திருக்கும் கள நிலைமையினை மீண்டும் சீர்செய்வதற்கும் ஏற்ப தொடர்புடைய தரப்புக்கள் சுய கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வோடும் நடந்த கொள்ள வேண்டும் என சிறிலங்கா அழைப்பு விடுத்திருக்கிறது. அனைவரும் விரும்புவதைப்போல, இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்வு யோசனை தான் பலஸ்தீனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வினைத் தரும் என சிறிலங்காக உறுதியாக நம்புகிறது. இவ்வாறான ஒரு தீர்வு, பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை முடிவுக்குக் கொண்டுவருவதோடு - சுதந்திரமன, இறையாண்மை மிக்க, நீடித்து நிலைக்கக் கூடிய பலஸ்தீனத் தாயகம் அமைவதற்கும் வழி செய்யும். தவிர, பலஸ்தீன மக்கள் தமக்குரிய உரிமைகளை மீளவும் பெற்றுக்கொள்வார்கள். பலஸ்தீன நிலப்பரப்பினை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து நிற்பது தான் அங்கு மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காமல் தொடர்வதற்கான அடிப்படைக் காரணம் என சிறிலங்கா வாதிடுகிறது. ஆதலினால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்த இஸ்ரேலியர்களின் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இவை - தவிர காசா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். இவ்வாறு சிறிலங்கா தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிபுணர்கள் குழு அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது: பான் கி மூன்

இலங்கையில் போர் குற்றம் தொடர்பில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியார் மற்றும் இலங்கைக்கான ஐ. நா.வின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் செயற்பட்டு வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த, பான் கீ மூன், குறித்த நிபுணர்கள் குழுவுக்கான ஆட்களை தேர்வுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமது அரசியல்துறை செயலாளர் லின் பாஸ்கோ, இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அதேவேளை, குறித்த நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற ஜப்பான் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு பின்லேடன் புதிய மிரட்டல்

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் குற்றவாளி காலித் முகமத்திற்கு மரணதண்டனையை நிறைவேற்றினால், தங்களது பிடியில் உள்ள அமெரிக்கப் படையினரை கொல்வோம் என்று அல் - காய்தா இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன் புதிய மிரட்டலை விடுத்துள்ளார். பின்லேடன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே உறுதியாக தெரியாத நிலையில் அவரது பெயரில் அமெரிக்காவுக்கு மேற்கண்ட புதிய மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லேடன் பேசியதாக கூறப்படும் ஒலி நாடாவை அல் - ஜஸீரா தொலைக்காட்சி, தனது செய்தியில் ஒளிபரப்பி உள்ளது. அதில், " அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் மூளையாக செயல்பட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட காலித் முகமத் மற்றும் வேறு யாருக்காவது மரணதண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கும் தினத்தில், நாங்கள் யாரையெல்லாம் பிடித்து வைத்துள்ளோமோ(அமெரிக்கப் படையினர்) அவர்களை நாங்களும் கொல்ல முடிவெடிக்கப்பட்டுவிடும்" என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது முந்தைய அதிபரின் ( ஜார்ஜ் புஷ்) பாதையிலேயே செல்வதாக கூறியுள்ள பின்லேடன், " எங்களுக்கு எதிராக அநீதி இழைத்த வெள்ளை மாளிகை இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் அதை செய்து கொண்டுள்ளனர்.குறிப்பாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். 9/11 ல் அமெரிக்காவின் சொந்த நகரத்திலேயே அல்லாவின் உதவியால் தாக்குதல் நடத்தும்வரை, தங்களால் ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்திற்கு உள்ளாகாதவாறு, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவே அமெரிக்கர்கள் நினைத்திருந்தனர்" என்றும் அதில் தெரிவித்துள்ளார்.