வியாழன், 25 மார்ச், 2010

தலைவர்கள் மேடைக்கு மட்டும்தானா?

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபனின் நினைவுதூபி உடைக்கப்பட்டதை கண்டித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட கண்டன அறிக்கை வருமாறு: யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் சிலரினால் அடித்து இடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த இடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் அரசியல் நலன்களுக்கு திலீபனின் சிலை பெருந்தடையாக அல்லது அச்சுறுத்தலாக விளங்கி இருக்க வேண்டும். இதனைத் தாங்க முடியாத சக்திகளே இந்தப் பண்பாட்டுக் கொலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் நினைவுத்தூபிகளை அழிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருந்து ஒருபோதும் நினைவுகளை அகற்றிவிட முடியாது. திலீபனின் தூபி உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், திலீபன் போன்ற போராளிகளின் இலட்சியத்தையும் போராட்ட மார்க்கத்தையும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஆவர். இவர்கள் திலீபன் போன்றவர்களுக்கும் சமூகத்தில் இடமுண்டு என்பதை ஏற்கத் துணிச்சல் அற்ற பேர்வழிகள் ஆவர். இத்தகைய சக்திகளின் அதிகார ஆதிக்கம் அரசியல் கலாச்சாரமாகவே பரிணாமம் பெற்றுவிட்டது. இவர்களே அநாகரிக காலகட்டத்தை நோக்கிச் சமூகத்தையும் வழிநடத்தப் போட்டி போடுகிறார்கள். போராட்ட காலங்களில் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைவிடங்கள், சின்னங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் வைத்திய சாலைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நாகரிக மரபு உண்டு. இதைவிட போர்க்காலங்களில் சரணாகதி அடைந்தவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் உயிர்நீத்தவர்கள் யாவரையும் கௌரவமாக நடத்தவேண்டிய பொறுப்பும் உண்டு. இதுவரையான உலக அனுபவம் இதைத்தான் வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையிலான மோதலில் கூட எல்லாளன் இறந்தபோது துட்டகைமுனு எல்லாளனுக்கு உரிய மரியாதை கொடுத்து உடலை அடக்கம் செய்ததாகவே எமக்கு வரலாறு கற்பிக்கின்றது. ஆனால், இந்த மரபு பின்னர் வந்த பௌத்த சிங்கள தலைமைகளிடம் அறவே இல்லாமல் போய்விட்டது. யுத்தக் கைதிகள் பரிமாற்றம், யுத்த தர்மம் போன்ற உயர் விழுமியங்கள் பற்றிக் குறித்துப் பேசக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட அல்லது சூறையாடப்பட்ட பண்பாட்டுச் சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென்ற கடமைப்பாடு உண்டென கருத்துரைக்கும் போக்கும் எழுச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் திலீபனின் நினைவுத்தூபி உடைப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அநாகரிக சக்திகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேகம் கொண்டு வருகின்றார்கள் என்பதையே இது அடையாளம் காட்டி வருகின்றது. போர் வெறுப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய சக்திகள் தம்மை போரியல் வெளியுள்ளவர்களாகவே அடையாளம் காட்டுகின்றனர். இவை சமாதானம், அகிம்சை சுட்டும் வாழ் புல நெறிகளுக்கு எதிரானவை. திலீபன் போன்ற குறியீடுகள் உணர்த்திய அரசியல் மார்க்க முறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்தில், திலீபன் எதை எதிர்த்து நின்றானோ அந்த அரசியல் வழிமூலம் திலீபனின் தூபி உடைப்பு நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுக் கொலை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தொடரக்கூடாத வழிமுறையும் கூட. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் அறிக்கை ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தீவிரமாக போராடிய திலீபன் தமிழ் மக்களின் கனவும் இலட்சியமும் நிறைவேறவேண்டுமானால் அதற்கு சரியான வழி தந்தை செல்வா அமரர் அமிர் போன்றோர் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியின் அகிம்சை ரீதியிலான போராட்டமே. இந்தப் போராட்டமே சரியென உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர் திலீபன். இறுதியில் ஓர் அகிம்சைவாதியாக உயிர்நீத்தார் அவர். அவ்வாறான இலட்சியத்தை கொண்டவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது காட்டுமிராண்டித்தனமான செயல் மட்டுமல்ல மன்னிக்கமுடியாத வரலாற்று துரோகமும் கூட. ஒருவரின் நினைவாக அமைக்கப்படும் நினைவு தூபிகளும் சரி சின்னங்களும் சரி உடைக்கப்படுவதென்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இவ்வாறான மிலேச்சத்தனமான செயலை தமிழர் விடுதலை கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக காந்திய வழியிலே போராடிய ஈழத்துக் காந்தியே அண்ணன் திலீபன். மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு மருத்துவ மாணவனாக இருக்கும்பொழுது தமிழ் மக்களின் அவல வாழ்வு கண்டு அவர்களது நிம்மதியான வாழ்வுக்காக அகிம்சை வழியில் போராடிய உத்தம புருசர். நீராகாரம் அருந்தாமல் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தனது உடம்பை உருக்கி உரமாக்கியவர். இலங்கைத்தீவில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாகப் பூசிக்கப்படும் உயரிய மனிதர். வணக்கத்திற்குரிய வகையிலே தமிழ் மக்களால் அவரது நினைவாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவாலயம் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கோரக் கரங்களால் சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து ஒவ்வொரு தமிழனது நெஞ்சமும் அக்கினிப் பிளம்பாகியது. மரணித்த மாவீரனது கல்லறையை காட்டுமிராண்டித்தனமாகச் சிதைத்த செயலை தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது. தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக