வியாழன், 25 மார்ச், 2010

அமெரிக்காவுக்கு பின்லேடன் புதிய மிரட்டல்

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் குற்றவாளி காலித் முகமத்திற்கு மரணதண்டனையை நிறைவேற்றினால், தங்களது பிடியில் உள்ள அமெரிக்கப் படையினரை கொல்வோம் என்று அல் - காய்தா இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன் புதிய மிரட்டலை விடுத்துள்ளார். பின்லேடன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே உறுதியாக தெரியாத நிலையில் அவரது பெயரில் அமெரிக்காவுக்கு மேற்கண்ட புதிய மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லேடன் பேசியதாக கூறப்படும் ஒலி நாடாவை அல் - ஜஸீரா தொலைக்காட்சி, தனது செய்தியில் ஒளிபரப்பி உள்ளது. அதில், " அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் மூளையாக செயல்பட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட காலித் முகமத் மற்றும் வேறு யாருக்காவது மரணதண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கும் தினத்தில், நாங்கள் யாரையெல்லாம் பிடித்து வைத்துள்ளோமோ(அமெரிக்கப் படையினர்) அவர்களை நாங்களும் கொல்ல முடிவெடிக்கப்பட்டுவிடும்" என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது முந்தைய அதிபரின் ( ஜார்ஜ் புஷ்) பாதையிலேயே செல்வதாக கூறியுள்ள பின்லேடன், " எங்களுக்கு எதிராக அநீதி இழைத்த வெள்ளை மாளிகை இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் அதை செய்து கொண்டுள்ளனர்.குறிப்பாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். 9/11 ல் அமெரிக்காவின் சொந்த நகரத்திலேயே அல்லாவின் உதவியால் தாக்குதல் நடத்தும்வரை, தங்களால் ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்திற்கு உள்ளாகாதவாறு, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவே அமெரிக்கர்கள் நினைத்திருந்தனர்" என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக