வியாழன், 25 மார்ச், 2010

கோரிக்கையை கண்டு சீற்றமுறும் தென்னிலங்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாப னத்தைக் கண்டு அலறியடித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் சீறிப் பாய்ந்து கருத்து வெளியிட்டிருக்கின் றது அரசுத் தரப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும், தேசிய ஒற்றுமைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு கூறியிருக்கின்றது. அரசின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் உள்ள "தமிழர்களின் தனித்துவம்', "தமிழர் தாயகம்', "தமிழர்களின் சுயநிர்ணய உரிமை' போன்ற சொற்கள் தென் னிலங்கைக்கு வேம்பாய்க் கசக்கின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையைத் தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்களின் மனதில் பெரும் கருத்தியலாக வளர்த்து, அந்த இனவாத அரசியல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் குறுகிய மனப் போக்கில் காலம் காலமாகச் செயற்பட்டு வந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு அந்தப் பேரினவாதப் பூதத்திடமி ருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாத இயலாத நிலைமை நீடிப்பதை நாம் நேரடியாக அவதானிக்கக்கூடிய தாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர் பாகக் கொழும்பு அரசுத் தரப்புக் காட்டிநிற்கும் பிரதிபலிப்புக் கூட அதனையே நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. நீதியைப் பெறுவதற்கான நியாயத்தை எட்டுவதற்கான கௌரவ வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும், தமது நீண்டகால அபிலாஷைகளையும் ஈட்டுவதற்கான ஈழத் தமிழர்களின் ஆயுத வழிப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, சிதைத்து அழிப்பதில் கொழும்பு அரசின் இராணுவ மேலா திக்கம் வெற்றிகண்டிருக்கின்றது. போரில் துவண்டுபோய் நிற்கின்றது தமிழர் தரப்பு தமிழர் தாயகம். இந்தச் சமயத்தில் கூட போர் வெற்றி மமதையில் கொழும்பு அரசு மார்தட்டுகின்றதே தவிர, ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் நீதி வழங்கும் தீர்வை முன்வைப்பதற்கான தாராண் மையை அது வெளிப்படுத்திக் காட்ட விரும்புவதாக இல்லை. "எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு' குறித்துத்தான் தென்னிலங்கை அரசும், சில சர்வதேச தரப்புகளும் பேசுகின்றனவே தவிர, சிறுபான்மையினரான தமிழர்களின் நீதி,நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்யும் தீர்வு குறித்து அத்தரப்புகள் பிரஸ்தாபிக்கின்றவையாக இல்லை. இதுவே மனவருத்தத்துக்குரிய விவகாரமாகும். ஜனநாயகத் தேர்தல் ஒன்றிலே வாக்கெடுப்பிலே பெரும் பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமையும். அது தான் ஜனநாயக விழுமியமாகும். ஜனநாயகக் கோட்பாட்டின் பண்பியல்பு அதுதான். ஆனால், அதுவே ஜனநாயகப் பெரு மதிப்பின் பின்னடைவும் கூட இழுக்கும் கூட என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு தேர்தலில், பெரும்பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பு என்கின்ற கோட்பாட்டை ஜனநாயக முறைமைக்கான அடிப் படையாக நாம் ஏற்க முடியும். அது எண்ணிக்கை சார்ந்த விடயம். ஆனால், ஒரு பிணக்கிற்கான ஒரு பிரச்சினைக்கான ஒரு சண்டை, சச்சரவுக்கான நீதி முறையான தீர்ப்பு என்பது அந்தச் சச்சரவில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் எண்ணிக்கை யில் தீர்க்கப்படுவதல்ல. நீதி, நியாயத்தின் அடிப்படையி லேயே அது தீர்க்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவும் கூட அத்தகைய நீதி, நியாயமான முறையிலேயே அமைய வேண்டும். இலங்கைத் தீவில் தமிழர்களை விட ஐந்து, ஆறு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சிங்களவர்கள் வாழக்கூடும். அதற்காக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலானது என்று கூறிக் கொண்டு ஆட் களின் விருப்பினதும் அவர்களின் எண்ணிக்கையின் அடிப் படையிலும் அமையக்கூடாது. தீர்வு என்பது எண்ணிக்கைக் கணியங்களுக்கு அப்பால் நீதியானதாக, பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நியாயம் செய்வ தாக அமையவேண்டும். இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான பௌத்த, சிங்களவர், இத்தீவின் சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுத்து, வீசி எறியக்கூடிய "பிச்சை' தான் தீர்வு என்று கருதக்கூடாது. ஜனநாயக நெறிமுறைகளின்படி எண்ணிக்கையில் அதிகமானவர்களான பெரும்பான்மையினர், இந்த இனப்பிரச் சினையில் சம்பந்தப்பட்ட எண்ணிக்கையில் குறைந்தவர்க ளான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுக்க வழங்க இரந்து அளிக்க இணங்குவதுதான் தீர்வாக அமைய முடியும் என்ற கருத்தியல் சிந்தனை முற்றிலும் தவறாகும். பாரம்பரியமாக வரலாற்று ரீதியாக காலங்காலமாக தங்களிடம் இருந்து வந்து, இப்போது பேரினத் தரப்பினால் பல வந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு, பறிக்கப்பட்டிருக்கும் தமது உரி மைகளையே தமிழர்கள் கோருகின்றார்கள். அதுவே இனப்பிரச் சினைக்கான அடிப்படை. தரப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலான விருப்பே தீர்வு என்று கருதாமல், நீதி,நியாயத்தின் அடிப்படை யில் அமைவதே தீர்வு என்ற கோட்பாட்டின் கீழ் இப்பிரச் சினைக்கு ஒரு முடிவு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நீதி, நியாயத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு விட்டுக்கொடுத்து இரக்கக்கூடிய பிச்சையே தீர்வாக முடியும் என்ற கருத்தியலில் பேரினவாத அரசுகள் இருப்பதால்தான் தமிழர் தரப்பின் உரிமைக்கான குரல் அந்த அரசுகளுக்கு இப்படி வேம்பாய்க் கசக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசு வெளிப்படுத்தி நிற்கும் கருத்துகளும் கூட அத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவை தேசிய ஒற்று மைக்கு ஆபத்தானவை என்ற அரசுத் தரப்பின் எச்சரிக்கை கூட இத்தகைய மேலாதிக்க மனப்போக்கில் அமைந்தவைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக