புதன், 3 பிப்ரவரி, 2010

நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்?

கதிர்கள் அறுத்த வயல்வெளி,தேங்கி நிற்கும் மழைதுளிகளில் தெரிகிறது வானம். நாரைகள் நடைபயில காளைகள் வீறு நடைபோட்டன. கலப்பையும் கையுமாக வயலில் பிரசாத். தம்பி டேய் .. உன்ட தங்கச்சி பெரியபிள்ளையாயிட்டாளாம். வரம்பில் நின்று பசுபதி உரத்து சொன்னார். அப்பிடியா ..? பிரசாத்துக்கு மகிழ்ச்சி. டே...சிவலை நீதான் குழப்படி. நான் வரும் வரை இதிலே நிற்கவேணும். என்ன கறுப்பா பார்க்கிறாய்? நீ நல்ல பெடியன். அண்ண போயிட்டு வாறன். இரு மாடுகளையும் பார்த்து சொல்லிவிட்டு வீடு செல்கிறான். தந்தை குடிகாரன். தாய் இல்லை.ஆனாலும் அம்மாவி்ன் இடத்தை நிரப்ப அங்கே பலர் இருந்தனர். மல்லாவி மலர் அக்கா. மாங்குளம் மணியம் சித்தி,அக்கராயன் அன்னம் ஆச்சி,வன்னேரி வதனம் மாமி, இவர்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து வந்தவர்கள். பிரசாத்தின் காணியில் குடும்பம் குடும்பமாக கொட்டில் அமைத்து குடி இருக்கின்றனர். பிரசாத் வருகிறான். வேப்பம் குழை வாசலில். தந்தை கள்ளுப்போத்தலோடு முற்றத்தில். அங்கு மாறி இங்கு மாறி வதனம் மாமி ஓடித்திரிகிறாள். கால்முகம் கழுவி வாசற்படி மிதிக்கிறான். பொங்கல் பானை அடுப்பில். அடுப்படியில் அன்னம் ஆச்சி. ஓலைப்பாயில் ஒதுக்குப்புறமாக தங்கச்சி. வெள்ளை துணியால் முக்காடு. பக்கத்தில் வருகிறான். வெற்றிலை பாக்கு நெல்லுடன் ஆயிரத்து ஒரு ரூபா அண்ணனின் கைவிசேடம். தலைதொட்டு ஆசிர்வதித்தவன் சுவரில் மாட்டப்பட்டிருந்த தாயின் படத்தை பார்க்கிறான். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா போல வருமா? நெஞ்சம் நெகிழ்கிறது. * * * பிரசாத் நில்லு நானும் வாறன். வழி மறித்த பசுபதி ஏறுகிறார் ஈருளியில். அவன் வேகமாக ஓட்டத்தொடங்கினான். கள்ளுத்தவறணை கடந்தது தம்பி..தம்பி..நிறுத்தடா.உனக்கு ஞாபகம் வரும் எண்டு நினைச்சன் வர இல்ல ஈருளி நின்றது. பிடரி சொரிந்தவாறு பிரசாத்தின் சட்டைபையை பார்க்கிறார். அண்ண..இதுதான் வேண்டாம் எண்டுறது. சாமத்திய வீட்டை சாட்டி வாங்கினியள்.அந்த கொண்டாட்டமும் முடிஞ்சுது. தம்பி..தம்பி என்னடா..?பதினொண்டுதானே கழிஞ்சது முப்பத்தொண்டு முடிய இல்லைதானே.அதுவரைக்கும் என்னோட சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளுமன். ச்ச..உயிரை வாங்கிறியள் அண்ண...இந்தாங்கோ நூறு ரூபா. எடுத்து அவரிடம் கொடுத்தான். சரி கண்ணா போயிட்டு வா செல்லம். சொன்ன பசுபதி தவறணை பக்கம் திரும்புகிறார்.பிரசாத்தின் ஈருருளி சூரியின் ஈருருளி திருத்தும் கடையை நோக்குகிறது.அங்கே அவர் துருப்பிடித்த சில்லுக்கு மண்ணெண்னை தடவிக்கொண்டிருந்தார். பிரசாத் இறங்காமல் வீதியில் நின்ற படியே என்ட சயிக்கிளும் கழவி பூட்டவேணும். எப்ப கொண்டு வரலாம். சூரிக்கு கதை சொன்னபடி அவரது வீட்டையும் காணியையும் அலசுகிறான். சோபா விழுந்த தென்னோலைகளை அடுக்கி கொண்ட நின்றாள். ஈருருளி மணிச்சத்தம். நிமிர்ந்து பார்க்கிறாள்.நேற்று குடுத்து விட்ட கடிதம் கிடைச்சதே..?பிரசாத் கைகளால் பேசினான். அவளுக்கு விளங்கவில்லை. அரை லூசு பொழுதுபட மாட்டுபட்டியடிக்கு வாறன். வா கதைப்பம். அவள் மீண்டும் என்ன..? என்று கையால் கேட்டாள். அந்த வேலிக்கரைக்கு போ.. நான் அதால வாறன். அவனது கைகளும் வாயும் மெளனமாக போராடியதை சூரி கண்டு விட்டார். என்ன தம்பி உங்க ஆரோட கதைக்கிறீர். அது வந்து .... தென்னையில் சோமு. பசுபதி அண்ண கள்ளுக்கு வாறதா சொல்லிவிட சொன்னவர் அதுதான்...பிரசாத் மழுப்பினான். அப்ப நாளைக்கு சையிக்கிள் கொண்டு வாறன். ஈருருளி இறக்கை விரி்த்தது. * * * அண்ண பயிரை பார்த்தியளே. சும்மா கலகலக்குது.வளர்பிறைக்கு தங்கச்சிமார் தலைகுனிவினம். பிரசாத் தனது வயலைப்பார்த்து பெருமிதம் அடைந்தான். பசுபதி விடுவாரா என்ன ? அட போடா. என்ட பெடிச்சியள்தான் முதல் வெட்கப்படுவாள்கள்...அவரும் அதற்கு மேலாக. இருவரும் பேசிக்கொள்ள இடையில் நின்ற காளைகள் இரண்டும் தலையசைத்து ஆமா போட்டன. சிவலை ஒற்றை காலை தூக்கி அடிப்பதும் பிரசாத்தை பார்ப்பதுமாக நின்றது. சரி கதையை முடிப்பம். சிவலைக்கு பொறுமை இல்லை. கிடுகும் ஏத்தவேணும். பிரசாத் வண்டில் ஏறத்தயாராகினான். ஓமடா தம்பி நானும் கூட வாறன் பசுபதியும் ஏறிக்கொண்டார். காளைகள் இரண்டும் கால்களை எட்டி எட்டி வைத்தன. சலங்கை சத்தம் சரமாரி. பிரதான வீதியில் வண்டில ஏறுகிறது. தீர்த்த மாட செல்வது போல திரள்திரளாக மக்கள். ஆடு மாடுகளும் தமது சொந்த பந்தங்களுடன். மாட்டு வண்டில்கள்,ஈருருளிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. இடையிடையே பாரவூர்திகள் உறுமின. பக்தர்கள்தான் நேர்த்திக்கடனுக்கு தூக்கு காவடி எடுப்பார்கள்.கோழிகளுமா ? பாவம் உழவு இயந்திரங்களில் தலை கீழாக தூங்கியபடி கூடவே அதன் கூடுகளும்.கோணாவில்,பூனகரி,முட்கொம்பன் எல்லாமே இடப்பெயர்வு. வானத்தில் வண்டு சத்தம். கிபிர் வருவதற்கான அறிகுறி. படுபாவி இங்கையும் இருக்க விடான் போல. பிரசாத் வண்டிலை அந்த மரத்தின் கீழ் விடுகிறான். சிங்கள விமான படையின் ஆளில்லா வேவு விமானத்தை வன்னி மக்கள் வண்டு என்றுதான் அழைப்பார்கள். அதன் ஒலி கிட்டத்தட்ட கருவண்டின் சத்தம் மாதிரி. அது வந்து ஜந்து நிமிடம் கூட ஆகவில்லை. வந்தது கிபிர். அந்த இடம் அல்லோலகல்லோலம். அண்ண இறங்கி ஓடுங்கோ.. சொன்னபடி குதிக்கிறான்.அதற்கு முன்பே பசுபதி ஆளில்லை. * * * இராணுவம் ஊடுருவி முறிகண்டி காட்டில் நிலை கொண்டுவிட்டது. அயல் கிராமங்களில் பரபரப்பு. சூரிவீடும் சும்மாவா இருக்கும். இனி இங்க இருக்கிறது கஸ்ரம். அடுத்தடுத்து கிபிர் அடி. ஆட்டிலறியும் வேலியால் வரவா. கூரையில் வரவா என்பது போல அங்கையும் இங்கையும் விழுந்து வெடிக்குது.மூட்டை முடிச்சுக்கள கட்டி வையுங்கோ. சொன்ன சூரி தன் வழுக்கல் தலையை தடவுகிறார். இதற்கிடையில்" வீட்டுக்கொரு வீரர் நாட்டை காக்க முன் வாருங்கள்."தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்பு மையத்தில் இருந்து ஓர் கடிதம். மாவீரர், போராளி அல்லாத குடும்பங்கள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது. சூரி வீட்டில் மூத்த பிள்ளை சோபா. வயது பத்தொன்பது அவளுக்கு கீழே நான்கு பேர். போகவேண்டியவள் சோபாதான். பொழுதுபட்டால் வாசற்படி தாண்டாதவள் எப்படி எதிரியை இரவில் கண்காணிப்பது. சோளகம் அடித்தால் அவ்வளவுதான் சோளம் பயிர்போல் உடம்பு. கடிதத்தை கண்டவுடனே காற்றில் படபடக்கும் கடதாசியானாள். சூரி யோசிக்கிறார். நல்ல விசயந்தான் எத்தின பிள்ளைகள் தாமா முன்வந்து போராடி விதையாயிட்டுதுகள் எத்தின பிள்ளைகள் களத்தில நிக்குதுகள். ஆட்கள் இல்லாதபடியால்தானே கேட்கிறாங்கள். சூரியின் மனம் உருகியது. சிந்தித்தார் உதித்தது உபாயம். * * * வீழ்ந்து வெடித்த குண்டு போராளிகளின் பயிற்சி முகாம் சுக்குநூறு. பொதுமக்களும் சிலர் கொல்லப்பட்டதோடு காயமும் அடைந்தனர். விமானம் சென்று விட்டது. விழுந்தும் உருண்டும் புரண்டும் கிடந்த மக்கள் தலை நிமிர்ந்து நின்றனர். வாய்க்காலுக்குள் .அமிழ்ந்திருந்த பிரசாத் எழுந்து வருகிறான். தலை முதல் கால்வரை எல்லாமே ஈரம் வண்டிலை பார்க்கிறான். கறுப்பன் மரத்திற்கு கீழே ஒதுங்கியபடி அவனை கண்டு கத்தியது. சிவலையை காணவே இல்லை. பயத்தில் எங்கோ ஓடிவிட்டது. அங்கும் இங்கும் தேடுகிறான். பாலத்துக்குள் இருந்து பசுபதி சாரத்தை சிரைத்தவாறு முழங்கைகளில் காயம். கிபிர் தாக்குதலில் அல்ல. பாலத்தின் குழாய் உரசி. பிரசாத்துக்கு சிரிப்பு உடைந்த குடத்தில் இருந்து வரும் நீர் போல. கையால் வாயை மூடுகிறான். எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினியள் காணாது போடா..மடப்பயலே..இறங்கடா வண்டிலால எண்டு சொல்லியிட்டுதான் பாய்ஞ்சனான். கிபிர் சத்தம். அதைவிட சனத்தின்ர கூக்குரல்கள். அதால உனக்கு கேட்கயில்ல. இருவரும் பேசுகின்றனர். இதனிடையே நெரிசல் நிறைந்த அவ்விடத்தில் ஒரு பெண்ணின் அலறல். அங்கு நின்றவர்கள் திரண்டனர். அது பொம்பிளையள் சாமாச்சாரம்.ஆண்கள் விலகுகின்றனர். பிரசவம் நடைபெறுகிறது. கூடி நின்ற பெண்கள் தாவணிகளால் மறைக்கின்றனர். அந்த பிள்ளைக்கும் வீதியில் பிறக்கின்ற தலை எழுத்தது. இனிமேல் உள்ள காலம் என்னென்னவெல்லாம் நடக்கப்போகுதோ ? பசுபதியர் நெஞ்சை தடவுகிறார். களைத்து வந்த சிவலை தான் வந்து விட்டேன் என பிரசாத்தை உரசுகிறது. * * * பகலவன் விடைபெறும் நேரம். மாட்டுப்பட்டியை நோக்கி நாய் குரைத்தது. வீட்டினுள் இருந்த சோபாவின் தாய் வெளியே வருகிறாள். குரைத்த நாய் பட்டிப்பக்கமாக ஓடியது. அவளும் அதுக்கு பின்னால். இந்த மனிசி எதுக்கு வருது. பேசாமல் மாடுகளுக்க மறைவம். பிரசாத் பதுங்குகிறான். நாயோ விடவில்லை அவன் கிட்டே சென்று உரத்து உரத்து குரைத்தது. சோபாவின் தாய் குனிந்து குனிந்து பார்க்கிறாள். ஆள் ஒன்று குந்தியிருப்பதை கண்டு விட்டாள்.இருள் கவிழும் நேரமாகையால் அடையாளம் தெரியவில்லை. மாடுபிடிக்க கள்ளன் வந்திருக்கிறான் ஓடி வாருங்கோ உரத்த குரலில் கணவனையும், பிள்ளைகளையும் அழைத்தாள். ஓடுவதா ? விடுவதா ? பிரசாத்துக்கு இரு மனம். ஓடினால் உண்மையாகவே கள்வனாகிவிடுவன். எல்லாம் அந்த வெட்டுக்கோம்பையாலதான் வாறது. சோபா மேல் கோபம் வந்தது. அங்கே எல்லோரும் கூடி விட்டனர். சூரியின் கையில் பெரியதொரு கிழுவங்கதியால். என்ன கள்ளன் எண்டு நினைச்சிட்டீங்களே..நான் பிரசாத் எங்கட மாடு ஒண்டை காண இல்ல. அதுதான் தேடி வந்தனான். சொன்னவாறு சூரிக்கு பக்கத்தில் வருகிறான். அட நீரே ? நல்ல காலம் கிழுவங்கதியால வாங்கப்பார்த்தீ்ர்.. சரி மாடு நிக்குதே.. சூரி கேட்கிறார். இல்ல..இங்க வராது விட்டால் பெரும்பாலும் கந்தசாமியற்ற பட்டிக்குத்தான் போயிருக்கும். அங்க போய் பார்ப்பம். பிரசாத்தின் பதில். அதுசரி தம்பி...போராளியாக இணையசொல்லி உமக்கும் கடிதம் வந்ததே..? ஓம் கிடைச்சது. போகத்தானே வேணும். நாங்கள் ஒதுங்கியிருந்தால் நாட்டை காக்கிறது ஆர்? அவனுடைய வீர வசனத்தின் முன்னால் சூரியி்ன் வாய் மெளனமானது. கண்ணாடி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சோபாவின் முகம். அவன் பேச்சை கேட்டு கண்கள் உருண்டு புரண்டன. * * * தவில் அடிப்பதுபோல ஊரெங்கும் மக்கள் தம் கூரைகள், வளைகள் கழற்றும் சத்தம். நாதஸ்வர ஓசைக்கும் பஞ்மில்லை. எறிகணைகள் தொடர்ந்து கூவிய வண்ணம் இருந்தன. சந்தைக்கு சென்ற வதனம் மாமி திரும்பி வருகிறாள். கச்சேரி, பள்ளிக்கூடங்கள், நிறுவனங்கள், கடைக்காரர் எல்லாருமே பொருட்கள் ஏத்துறாங்கள்... மாமி அழாத குறையாக. இடப்பெயர்வு என்றால் சும்மாவா? தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான தெரியும். எல்லோர் முகங்களும் மாலை நேர பூக்களாகின.இனியென்ன நாங்களும் வெளிக்கிட வேண்டியதுதான். வதனம் மாமி சுளகு பெட்டிகளை தட்டி அடுக்கினாள். அன்னம் ஆச்சியின் தனித்தேட்டம் ஒரு மூட்டை முடிச்சில் அடங்கியது. மணியம் சித்தப்பா குடும்பம் தடல்புடல்பட்டது. குஞ்சு குருமன்கள் தலையில் ஒவ்வொரு முடிச்சுப்பை. கால் நடையாக உடனே வெளியேறினர். தங்கச்சியை தந்தையின் சையிக்கிளில் அனுப்பி வைத்த பிரசாத் மின்னல் வேகத்தில் செயற்பட்டான். வதனம் மாமியாக்களோடு அன்னம் ஆச்சியும் உழவு இயந்திரத்தில், பிரசாத்துக்கு கையசைத்தனர். பொருட்களால் வண்டில் நிரம்பியது. சிவலைக்கும் கறுப்புக்கும் நிலைமை விளங்கிவிட்டது போல தமக்குரிய இடங்களில் வந்து நின்றன. வருமானம் தரும் தென்னந்தோப்பு, பழங்கள் தரும் மா, பலா, வாழைகள், வீட்டை அழகொளிரச் செய்த மலர்ச்செடிகள் பிரசாத் வெளிக்கிடுவதை கண்டு சோர்வுற்றன. வளர்பிறை பார்த்து தேதி குறித்து அப்பா, அம்மா ஆசையால் கட்டுவித்த வீடு. அவன் தொட்டிலில் ஆடியதும் அதிலேதான். இப்போ வெறுமையாக மனதில் பாரம். கண்களில் ஈரம் பிரசாத் வண்டிலில் ஏறுகிறான். * * * காடு, மேடு, பள்ளம் எதுவும் மிச்சம் இல்லை. வட்டக்கச்சி, தர்மபுரம், விசுவமடு மக்கள் வெள்ளம். மடு தொடங்கி திருவையாறு. புளியங்குளம் இருந்து இயக்கச்சி. இடப்பெயர்வு என்றால் கொல்லைத்தெருவும் எஞ்சுமா? சோபாவின் வீட்டை பிரசாத் கண்டு பிடித்துவிட்டான். புல்வெளியில் மாட்டுப்பட்டி அதுக்கு சற்று தொலைவில் உள்ள கொட்டில்களில் ஒன்று. பக்கத்தில் பசுபதியரின் கொட்டில். மண்வீட்டு வாசம் அறியாதவரும் மழை பெய்தால் ஒழுகும் ஓலை கொட்டில்களில். கீழ்த்திசை அடிவானில் சூரியன். பால் கறக்கும் குடம் இடையில். சோபா பட்டிக்குள் செல்கிறாள். புல்வெளிகளில் பட்டுத் தெறிக்க வெள்ளொளி அவள் அழகை நூறு வீதமாக்கியது. பிரசாத்தை கண்ட அவள், ஆயுதம் தூக்குற போராளி நாட்டை காக்கிற வீரர் ஊரை விட்டே ஓடிவந்திட்டார். கண்ணா ! பார்த்து ரெண்டு கேள்வி கேளடா..சிறிய வெள்ளை கன்றை தடவியபடி சொல்கிறாள். களத்துக்கு போனால் கட்டபொம்மன்தான் முன் வைச்ச அடி பின் வைக்கமாட்டான் . கண்ணா....! அவவுக்கு விளக்கமாக சொல்லு என்றான் பிரசாத். சோபா உள்ளம் பூரிப்படைந்தது. ஆனாலும் தற்போது போர்ச்சூழல் அவன் போராளியானால் தனது நிலை என்னாகும். மனம் சோர்வடைகிறாள். இயக்கத்துக்கு போறது எண்டு முடிவு எடுத்தாச்சா..? போய் ஏதாச்சு..... அவள் மேற்கொண்டு பேசவில்லை. நீ யோசிக்காத நான் போனால் தங்கச்சிக்கு ஆர் ஆறுதல். நிலைமை தெரிஞ்சு இயக்கம் விலக்கழிப்பு கடிதம் தந்திட்டு எண்டாலும் பதினைஞ்சு நாள் பணிக்கு போகவேண்டி வரும். இருவரும் பேசிக்கொண்டிருக்க பசுபதியர் இலக்கு வைக்கிறார். பசுபதியண்ண வாறார் பிறகு சந்திப்பம். அவசரமாக கூறியவன் ஈருருளியை திருப்புகிறான். * * * விசுவமடு பாதுகாப்பு வலயம். மார்கழி திங்களில்(2008) அரசாங்கத்தின் அறிவிப்பு. வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தை அடித்து சென்ற கதை. வட்டக்கச்சி வட்டாரமும் வாலை கிளப்பியது. விசுவமடுவோ பாரந்தாங்காமல் விம்மியது. வாய்க்கால் ஓரங்களும் சதுப்பு நிலங்களும் மக்கள் குடியிருப்புகளாக மாறின. மார்கழி மாதம் மயிர் நனையாத தூரல். அது ஒரு காலம். இந்த மார்கழி வானம் இம்மக்களுக்கு என வாரி இறைத்தது. வெள்ளத்தால் குடிசைகள் அடித்து செல்லப்பட, குழந்தைகள் உருட்டி செல்லப்பட, இளசுகள் பழசுகள் செய்வதறியாது தி்ண்டாடினர். ஓடி வந்த மக்கள் கால் ஆறவில்லை. விசுவமடு நீக்கப்பட்டு உடையார்கட்டு தொடக்கம் தேவி புரம் வரை பாதுகாப்பு வலயம். அரசாங்கத்தின் இரண்டாவது அறிவிப்பு தை மாதம்(2009) வெளியானது. மக்கள் நகர்கின்றனர். கொட்டும் மழை....ஓடும் வெள்ளம்....சேறு....சுரி....எல்லாம் கடக்கின்றனர். நெடுந்தூர, குறுந்தூ எறிகணைகளின் கொண்டாட்டம். கும்மாளங்கள் அளவு கணக்கில்லை. சாகிறவர்கள் தப்புகிறவர்கள் தப்ப எடுக்கின்றனர் ஓட்டம். பசுபதியர் தவளுவதும் எழுந்து ஓடுவதுமாக சூரி குடு்ம்பம் உருள்வதும் புரள்வதும் நடப்பதுமாக . பிரசாத் தங்கையை விடாமல் பிடித்து கொண்டான். இருவரும் விழுந்து படுப்பதும் எழுந்து நடப்பதுமாக. இப்படித்தான் எல்லா மக்களும். பட்டாசு சத்தம் போல மக்கள் கூட்டங்களுக்கு இடையிடையே எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அவலக்குரல்கள் அந்த யமனுக்கும் கேட்டிருக்கும். பசுபதியரின் தலையில் ஒரு முண்டமில்லாத தலை வந்து மோதியது. கண்டதும் தேகம் பதறியது. தொண்ணூறு பாகையில் காய்ச்சல். வண்டு சுத்துறான். வெளிச்சம் போடாதையுங்கோ. ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு மக்களின் எச்சரிக்கை. இருட்டில் உறவுகள் சிதறுண்டு முன்பின்னாக தவளுகின்றனர். * * * சுதந்திபுரத்தில் புற்தரை கொண்ட சிறிய காணித்துண்டு. பசுபதி, சூரி குடும்பங்கள் காப்பகழிகள் வெட்டி அதற்குமேல் கொட்டில் அமைத்து இருந்தனர். பாதுகாப்பு வலயம் என்ற பெயர்தான். அங்கேயும் விமானப்படை தன் சாகசத்தை காட்டியது. எறிகணைகளும் முழங்கின. தங்கச்சி பசுபதி வீட்டில். பிரசாத் காணாமல்போன தந்தையை தேடி செல்கிறான். இருவாரங்கள் ஆகியும் அகப்படவில்லை. புலிகளின் குரல் உறவுப்பாலம் அறிவித்தலிலும் கொடுத்துப்பார்த்தான். அவரோ வரவில்லை. குடிகாரன் என்றாலும் பி்ள்ளைகளுக்கு அவர் தொந்தரவு கொடுப்பதில்லை. அப்பாவை காணாமல் தங்கச்சி ஒப்பாரி. பிரசாத்துக்கு பத்து வயதின் பின்புதான் அவள் பிறந்தாள். அதனால் செல்லம் அதிகம். அவளை ஆற்றுப்படுத்தி பார்த்தான். அவளோ கேட்கவில்லை அப்பாவை கூட்டி வா. விடாப்பிடியாக நின்றாள். மக்கள் ஓடிவந்த சாலைகளில் அநாதரவாக கிடக்கும் சடலங்களை எடுத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அடக்கம் செய்யுதாம். பிரசாத்தின் காதிலும் அந்தச்செய்தி. அப்பாவும் ஒரு ஆளாய் இருக்குமோ? அவனுக்கு நா வறண்டது. உங்கட அப்பாவுக்கு ஒண்டம் நடக்கயில. அவர் உயிரோட இருக்கிறார். உங்கள தேடி கட்டாயம் வருவார். சோபா தேற்றுகிறாள். ஆறுதல் அடைந்தவன் பசுபதியரின் கொட்டிலுக்கு வருகிறான். அங்கே அவர் வானொலிப்பெட்டியை முறுக்கி கொண்டிருந்தார். அண்ண..நான் களப்பணிக்கு போறன். சண்டை உக்கிரம் எப்ப திரும்புவன் எண்டு...சொல்ல ஏலாது. தங்கச்சியை கவனமாக பாருங்கோ. ம்....இன்னொரு விசயம். நான் சோபாவை... பிரசாத் வார்த்தையை நீட்டித்தான் தெரியும்..தெரியும்...நீ சூரியிண்ட கடைப்பக்கம் அடிக்கடி போய் வரவே எனக்கு விளங்கியிட்டு. சரி அவளையும் இடக்கண் வலக்கண் பார்க்கச் சொல்லுறாய் அப்பிடித்தானே. பசுபதியர் சொல்ல அவன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு தலையாட்டினான். * * * மாசி மாதம் தேதி பன்னிரண்டு இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு. அரசாங்கத்தின் மூன்றாவது அறிவிப்பு. புது மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பாதுகாப்பு வலயம். பசுபதியருக்கு பொங்கி வந்தது கோபம். வானொலிப்பெட்டியை தூக்கி மண்மூடைக்குமேல் வீசினார். இந்த மனிசன் ஏன் அதைப்போட்டு உடைக்குது மனைவி பாக்கியம் கத்தினாள். வாயைப்பொத்து. அங்க போ, இஞ்ச வா எங்களை ஆரெண்டு நினைச்சாங்கள். மனைவி மறுபடியும் புறுபுறுத்தாள். கதைக்காத எண்டு சொன்னனான். பல்லைக்கடித்தபடி பசுபதியர் அவளை நெருங்கினார். ஓடிஓடி களைத்த மக்கள் இப்படித்தான் ஒருவர் மீதுள்ள கோபத்தை இன்னொருவர் மீது சாதித்து தொட்டதுக்கு எல்லாம் சண்டை வந்து விடும். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்பிரதேசத்துக்குள் முடங்கினர். களப்பணிக்கு போன பிரசாத் ஒரு மாதம் ஆகியும் வீடுதிரும்பவில்லை. பசுபதி,சூரி குடும்பங்கள் முள்ளிவாய்க்கால் சென்ற கதை. தங்கச்சி காயப்பட்டு கப்பலில் வவுனியா அனுப்பிய விடயம். காப்பகழிக்குள் எறிகணை வீழ்ந்து வதனம் மாமி குடும்பம் சிதறிய சம்பவம். விசுவமடுவில் இருந்து ஓடி வந்தபோது தந்தை இறந்த உண்மைச்செய்தி. எதுவுமே அவனுக்கு தெரியாது. பசுபதியின் கொட்டிலுக்கும், சூரியின் கொட்டிலுக்கும் உள்ள இடைவெளி ஒரு அடி மட்டுமே. ஒரு நாள் சோபா பசுபதியரின் காப்பகழிக்குள் ஓடிவந்தாள். கண்ணீர் ஆறாக. அவள் பின்னால் சூரி. பசுபதியர் இருவரையும் மாறிமாறி பார்க்கிறார். ஒண்டில் நாட்டில பிரச்சனை இல்லாம இருக்கவேணும் அல்லது வீட்டில பிரச்சனை இல்லாம இருக்கவேணும். ரெண்டிலும் எண்டால்.....பட்டினிக்களைப்பில் பசுபதியர் கொதித்தார். அண்ண....நான் பின்தளப்பணிக்கு போறன் இப்ப போறவங்கள் திரும்புறதில்ல. எனக்கும் அப்பிடி நடந்தால்.... அதுக்கு முதல்....சூரி கண்களை துடைக்கிறார். எண்ட மருமகன் பெடியன் பக்கத்திலதான் இருக்கிறான். நல்லவன். அவனுக்கும் பிள்ளைமேல விருப்பம். கலியாணம் செய்து வைச்சா எண்ட மனமும் ஆறும். கடமையும் முடிஞசதாகுது. இவள் மாட்டாளாம். பிரசாத் எழுதின கடிதங்களை காட்டுறாள் அவன் செத்து 1 மாதம் ஆகியிட்டண்ண...சூரி வாய்விட்டு அழுதார். பசுபதியருக்கு வார்த்தையே வரவில்லை. * * * கடும்போர் ஓய்ந்தது. வைகாசி மாதம் மூன்றாம் வாரம்(2009) முள்ளிவாய்க்கால் இராணுவத்தின் கையில். எறிகணைகள், துப்பாக்கி ரவைகளுக்கு இரையான மக்கள் ஆங்காங்கே வீழ்ந்தும் சிதறியும் கிடந்தனர். எஞ்சியவர்களை இராணுவம் பேரூந்தில் ஏற்றிக்கொண்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்து ஒரு பாரவூர்தி பொருட்களோடு வெளியேறிய பசுபதியரின் கையில் இப்போ ஒரு சொப்பின் பை மட்டும். மீதி இருந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டன. காலில் காயம் ஊன்று கோலின் உதவியோடு பிரசாத் மக்களோடு மக்களாக வருகிறான். பிரசாத் நில்லு....உன்னை இல்லை எண்டெல்லோ கதைச்சாங்கள்.....பசுபதியர் கட்டியணைத்து அழுகிறார். அவனோ பட்ட பாலைமரம்போல் அப்படியே நின்றான். ஒவ்வொரு சம்பவங்களையும் விடாமல் சொன்னவர் கண்ணீரையும் மூக்கையும் துடைத்துவிட்டு மேலும் தொடர்ந்தார். சோபாவுக்கு கலியாணம் முடிஞ்சுதடா. தகப்பண்ட பரிதாபத்தை பார்த்து அவள் சம்மதிச்சுட்டாள்....களத்துக்கு போன சூரி உயிரோட திரும்பவில்ல. ஓலமிட்டு கத்தினார். உறவுகளை இழந்தவர்களின் ஒப்பாரிகளோடு அவர் குரலும் சேர்ந்தது. போர்க்கள கோலம். உறவுகளை இழந்த துயரம். அதிர்ச்சி, ஏக்கம் எல்லாமே அவன் மனதை தெளிவாக்கியது. பசுபதியரின் தலையை வருடி கண்ணீரை துடைக்கிறான். எதுவுமே எங்கட கையில் இல்லை அண்ண...எது நடக்குமோ அதுதான் நடக்கும். இருவரும் பேரூந்தில் ஏறுகின்றனர். சில நாட்களின் பின் நலன்புரி நிலையத்தில் சோபாவை சந்திக்கிறான். அவனை கண்டதும் நிலைதடுமாறினாள். அவனோ மலர்ந்த முகத்துடன் உன்னில எந்தப்பிழையும் இல்ல. நீ கவலைப்படாமல் சந்தோசமாக இருக்கவேணும். இப்ப நான் உன்மேல வைச்சிருக்கிறது அன்பு மட்டுந்தான். காதல் இல்ல இருவர் மனங்களில் இருந்தும் மாயத்திரை விலகுகிறது. பிரசாத் ஊனமடைந்த ( போரினால்) தன் தங்கையை தாய் போல் கவனித்து வருகிறான். பள்ளியில் படிக்காத பாடம் அனைத்தும் காலம் அவனுக்கு கற்று கொடுத்து விட்டது. இப்போ அவன் ஒரு ஞானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக