புதன், 3 பிப்ரவரி, 2010

உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை-சோமவன்ச

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 26 ம் திகதி நடைபெற்றது. அதன் பின்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி சுமார் 18 இலட்சம் மேலதிக வாக்குளினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். எனினும் இந்த தேர்தல் முடிவுகள் சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தல் முடிவுகள் இல்லை என குற்றம் சுமத்தும் எதிர்கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து பல்வேறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தன. இந்நிலையில் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கணனியின் தொழில்நுட்பத்துடன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் அதேவேளை இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம், பொதுக்கூட்டம் என்பவற்றை நடத்தியது. மோசடி ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டம் என்பன இடம்பெற்றன. கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள லிப்படன் சுற்றுவட்டத்றிகருகில் இன்று மாலை 3.15 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினால் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமார் 30 நிமிடம்வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக ஹைப்பார்க் விளையாட்டரங்கை நேர்க்கி நகர்ந்தது. பொதுக்கூட்டம் நடத்துவதற்காக குறித்த விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரார்கள் கோஷமிட்டப்படி வந்தனர். இதன் போது மோசடியான ஜனாதிபதி முடிவுகளை ஏற்கமாட்டோம், பொய் குற்றம் சுமத்தி சட்டவிரோதமாக கைது செய்துள்ளவர்களை விடுதலை செய், ஊடக சுதந்திரத்தில் கை வைக்காதே, சதித்திட்டங்களைத் தீட்டி அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதை நிறுத்து, மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு இடியமீன் சிந்தனையா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இவர்கள் ஒருபுரம் வந்து சேர கொழும்பு கொம்பனிவீதியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ம் இடம்பெற்றதுடன், அவர்களும் கோஷமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள விளையாட்டரங்கை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உட்பட கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலும் அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பொதுச்செயலாளர், பாராளுமன்றக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அவரது கட்சியைச் சேர்நதவர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர, ஜனாதிபதி வேட்பாளர்களான விக்ரமபாகு கருணாரத்தன, சரத் மனமேந்திர உட்பட பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த பொதுக் கூட்டத்தில் பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில் இலங்கை வரலாற்றிலேயே இந்த மாதிரியாக ஒரு தேர்தல் முடிவைக் கொள்ளைக் கொண்டதை கண்டிருக்க முடியாது என குறிப்பிட்டார். அத்துடன் தேர்தலுக்கு முந்தைய தினங்களில் இடிஅமீன் ஹிட்லர் ஆகியவர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்து சரத்பொன்சேக்கா வெற்றி பெற்றால் நாடு இவர்களின் ஆட்சியைப் போல் மாறும் என குறிப்பிட்டதாகவும் பாராளுமன்றக்குழுத் தலைவர் கூறினார். ஆனால் நாட்டில் தற்போது இடிஅமீனினை நேரடியாகக் காணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், இடியமீனைப் போலவே மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த அரசை கவிழ்க்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டு மக்களின் உரிமைகளை, அவர்களின் உன்மையான வெற்றியைப் பெற்றுக் கொடுக்க கட்சிப்பேதத்தினை மறந்து எதிர்கட்சிகள் ஒன்றினைந்துள்ளதாக கூறினார். மக்கள் வழங்கிய ஆணையை பிழையான நபர்கள் கையாள்வதைத் தடுப்பதற்காக இன்று கொழும்பில் ஒன்று திரண்டுள்ள மக்களை இலங்கையின் சகல பகுதிகளுக்கும் கொண்டு சென்று மக்கள் புரட்சியை ஏற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பயணத்தில் தமது உயிருக்கு அச்சுருத்தல் வருமாயின் அந்த அச்சுருத்தலை ஏற்று தாம் மரணிக்கவும் தயார் என குறிப்பிடும் சோமவன்ச அமரசிங்க தமது மார்பு மரணத்தைக் கண்டு ஒடுவதில்லை எனவும் மாறாக மரணத்திற்கு முன்வரும் மார்பு எனவும் குறிப்பிட்டார். எனினும் இப்பாடியான ஒரு நிலைமை ஏற்பாடுமாயின் அதற்கு அரசாங்கமே பொறுப்புகூறவேண்டும் எனவும், இந்த நிலைமை அரசையே மாற்றியமைக்கும் படி மாறும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த ஜெனரல் சரத்பொன்சேக்கா இந்த நாட்டில் தானே ஜனாதிபதி என மீண்டும் ஒருமுறை தெரிவித்தார். மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி தான் என குறிப்பிட்ட அவர் இலங்கை அரசின் லாவகமான சூழ்ச்சி மற்றும் மோசடியால் தனது வெற்றி பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தனக்கு விசுவாசமாக செயற்பட்ட இராணுவத்தினரை கைது செய்வதுடன் பலருக்கு கட்டாய ஒய்வு கொடுக்கப்படுவதை தான் அறிவதாகவும், இதற்கு முன்னால் இவர்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என தனக்கு தெரியாது எனவும், மக்கள் அலை மேலே எழுந்தது போல் உள்ளார்த்தமாகவும் தனக்கான ஆதரவு அலை வீசியுள்ளதை உணர்வதாக அவர் இதன் போது குறிப்பிட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் கைது செய்யப்படுவதாக குறிப்பிடும் அவர், தன்னிடம் கடமையாற்றிய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த கைதிற்கு தான் பயப்படபோவதில்லை என குறிப்பிட்ட அவர் தன்னை கைது செய்து சிறையிலடைத்தாலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனாலும் பயப்படவேண்டாம் மக்களே நான் பெற்ற இந்த வெற்றியை கொள்ளையிட்ட இந்த அரசிடமிருந்து அந்த வெற்றியை மீளப்பெற்றுக்கொள்வோம் என தெரிவித்த அவர், இதனால் உயிரைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுமாயின் உயிர்தியாகம் செய்தேனும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். எச்சரிக்கைகளை மீறி இன்றைய தினம் போராட்டம் நடத்தப்படும் ‐ எதிர்க்கட்சிகள்:‐ எச்சரிக்கைகளை மீறி இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் நியாயம் கிட்ட வேண்டும் எனவும் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நேரம் முதல் ஆளும் கட்சி பேரணிகளை நடத்தி வருவதாகவும், அரசாங்கமே இந்த சட்டத்தை மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், சட்ட ரீதியான முறையில் ஏழு தினங்களுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும், இதில் சட்ட சிக்கல்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியான சத்தியக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சகல கட்சி தலைவர்களின் பங்களிப்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டால் அதற்கு எதிராக எவ்வாறு செய்றபடுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவுதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமாதானத்தை சீர் குலைக்க முயற்சி செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைப் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். கலகத் தடுப்பு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக