புதன், 3 பிப்ரவரி, 2010

எல்லாம் கனவு மட்டுமே

எவளோ ஒருத்தி யாசிக்கிறாள் இருட்டில் இருந்து நான் யோசிக்கிறேன்… சங்கரக்குட்டி எவளோ ஒருத்தி தன்னை விரும்புவதாக கற்பனையில் உறங்கிக் கிடந்தபோதுதான் பரணில் கிடந்த பசுமாதி அரிசி மூட்டை முதுகுக் கும்பத்தில் விழுந்ததாக ஞாபகம். முள்ளந்தண்டு முறிந்துவிட்டது.. அந்த எவளோ ஒருத்தி மட்டும் அகப்பட்டால்… பற்களை நறுமிக் கொண்டபோது முதுகுவலி வானின் உச்சத்தைத் தொட்டது.. ஐயோ.. என்று அலறினார்.. வைத்தியசாலையில் இருந்த தாதி ஓடிவந்து ஊசியால் இடித்துவிட்டுப் போனாள்.. மீண்டும் துக்கம் கண்களைத் தழுவியது.. இப்போது சில கனவுகள் அங்குமிங்குமாக இடறிப் போயின.. பட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பழைய தலைவர் அ.சிங்காரலிங்கம் வந்து எதிராக வாக்குப் போடுவது போல, தமிழீழ தனியரசை தங்கத் தாம்பாளத்தில் வைத்து கொண்டுவந்து கொடுக்க அதை வாங்கவந்த சங்கரகுமாரன் வாழைப்பழத் தோலில் சறுக்கிவந்து கல்யாணத்திற்குப் பிறகு கற்புக்கரசியாக இருக்கும் மந்திரம் சொன்ன குஷ்புவின் வயிற்றில் இடிப்பதுபோலவும் பிறகு ஆரோ ஒரு நடிகையும் சங்கரக்குட்டியும் கயிற்றில் தொங்க ஏ.ரிவியின் செய்தி வர இற்றுப்போன கயிறு அறுவது போலவும் கனவுகள் நாசமறுத்தன.. சொற்ப நேரத்தில் கொசுறுக் கனவுகளில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த கனவுக்குள் நுழைந்தார். அப்போதுதான் ஆகாசத் தீவில் தேர்தல் நடக்கப் போவதும், வாக்குப் பெட்டிகள் ஏலத்தில் விடப்படுவதும் தெரிந்தது.. கறுப்புத் தொப்பி, கறுப்புக் கோட், கையில் மந்திரக் கோலுடன் ஒரு வித்தைக்காரன் வந்தான்.. ஒரு பெட்டியைத் திறந்து காட்டினான்.. அந்தோ அதற்குள் எதுவுமே இல்லை என்று சபையில் இருந்தவர்கள் கரகோஷம் வைத்தார்கள்… பின் மந்திரவாதி மந்திரக் கோலை எடுத்து பெட்டி மீது சுழற்றிக் காட்டினான்.. அண்ணா பார் அக்கா பார்.. என்று சுற்றிச்சுற்றிக் காட்டினான்… தமிழீழச் சங்கரக்குட்டி எழுந்தார்… இது மோசடி ஒரு சர்வதேச கண்காணிப்புக் குழு இல்லாமல் இதை அங்கீகரிக்க முடியாது என்று தனக்குள்ள ஏ.ரிவி அறிவை ஆதாரம் காட்டி வாதிட்டார்.. மந்திரவாதி சிரித்தான்.. ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா கண்காணிப்பாளர் அனைவரும் ஏற்கெனவே வந்து முன் வரிசையில் இருப்பதை சுட்டிக் காட்டினான்.. மந்திரவாதிக்குப் பக்கத்தில் பளபளக்கும் துடைகள் தெரியும்படி ஒரு குமரி வைன் கிளாசுடன் இருந்தாள்.. இதுவரை அவளைப் பார்த்து புகழ்ந்து கொண்டிருந்த கண்காணிப்பாளர் இப்போது தமது வரவை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் விதமாக பதிவு செய்தனர்.. மந்திரவாதி பெட்டியை திறந்து கொட்டினான்… என்ன ஆச்சரியம் ஓர் இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் கொட்டுப்பட்டன… ஊழல் மோசடி எதுவும் இல்லாத வாக்குப் பெட்டி என்று கண்காணிப்பாளர் உறுதி செய்தார்கள்… கூட்டத்தில் இருந்து சால்வை போட்ட ஒருவன் எழுந்து தனது நாட்டிலும் தேர்தல் நடைபெற இருப்பதாகவும், இரண்டு லட்சம் வாக்குப் பெட்டிகளுக்கு ஓடர் கொடுப்பதாகவும் சொன்னான்.. திடீரென பக்கத்து நாட்டு மந்திரவாதி ஒருவன் மேடையில் தோன்றினான்… அவசரப்பட வேண்டாம்.. என்று கூறிவிட்டு தனது வித்தையை ஆரம்பித்தான்.. சங்கரக்குட்டிக்கு அவனை எங்கோ பார்த்ததுபோல இருந்தது.. அடுக்கு மொழியில் மந்திர உச்சாடனங்களை அவன் நடாத்தியபோது அவையே மெய் சிலிர்த்தது. பக்காக் கில்லாடியான அந்த ஆள் சங்கரக்குட்டியின் நினைவில் வந்தான்.. பழைய காலத்தில் மந்திரவித்தைகள் செய்யும் பூசாரிகளை விரட்டியடித்துவிட்டு ஆட்சிக்கு வந்த அடுக்குமொழி செம்மலே அந்த மந்திரவாதி என்றும் தெரிந்தது.. இப்போது பூசாரிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் பூசாரியாக அவன் மாறியிருந்தான்… மந்திரவித்தை ஆரம்பித்தது.. சட்டென மின்சார வெட்டு ஏற்பட்டது… யாருமே பார்க்க முடியாத கும்மிருட்டு… வாக்காளரிடம் அவன் தலையில் அடித்து சத்தியம் வேண்டிக் கொண்டு சிறு தொகைப் பணத்தைக் கொடுத்தான்… தேர்தல் நடந்தது… பளிச்சென விளக்குகள் எரிந்தன… கில்லாடி மந்திரவாதி வாக்குப் பெட்டியை சரித்துக் கொட்டினான்… இரண்டு இலட்சம் வாக்குகள் கொட்டுப்பட்டன.. வாக்குப் பெட்டிக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் புறநானூறு கண்ட தமிழரே.. நமது கண்கட்டு வித்தை இருக்க வாக்குப் பெட்டி ஏன் வள்ளல்களே என்றான்… கண்காணிப்புக் குழு அடடா இதுவல்லவோ ஜனநாயகத்தின் வெற்றி என்று வாயை வாயை அடித்தது.. ஐ.நா செயலரின் பாராட்டு நாளை வெளியாகும் என்று யாரோ ஒரு விசுக்கோத்து முழங்கியது.. இடையில் வடதுருவத்தில் இருந்து வந்த ஓட்டை விழுந்த சங்கொன்றை எடுத்து ஊதினார்கள்… வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த நேர்வே பிரதிநிதி மேடைக்கு வந்து மறுபடியும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்றார்… சங்கரக்குட்டிக்கு மண்டை கிறுகிறுத்தது.. விரைவில் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்து சுவிசிற்கு போக வேணுமென எண்ணினார்… பக்கத்து வீட்டு நயினார்பிள்ளை ஊர்வலத்திற்கு போகாமல் இருப்பான்.. தான் ஊர்வலத்துக்குப் போய்.. நயினார்பிள்ளைக்கு துரோகிப்பட்டம் கட்ட எண்ணிக் கொண்டார்.. ஊர்வலத்துக்கு வந்த சனத்தில் ஒரு பகுதி ஏன் ஊர்வலத்துக்கு வந்தமெண்டதை மறந்து வராதவனுக்கு துரோகிப்பட்டம் கட்டத் துடிதுடிப்பதைப் பார்த்து அவருடைய தோள்கள் தினவெடுத்தன… காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியா டேய் நயினார்பிள்ளை என்று அலறினார்… மறுபடியும் மருத்தவத்தாதி ஓடி வந்தாள்.. அவளுக்கு நயினார்பிள்ளையையும் தெரியவில்லை, காக்கைவன்னியனையும் தெரியவில்லை.. மீண்டும் டோஸ்கூடிய ஊசியால் தொடையில் இடித்துவிட்டுப் போனாள்… சங்கரக்குட்டி ஆழ ஆழ போனார்.. ஆழக்கடலெங்கும் சோழ மகராசன்… ஆரோ ஒரு கவிஞர் பனாகொடவில் இருந்து பாடுவது கேட்டது… மறுபடியும் கில்லாடி மந்திரவாதி வந்தான்.. அப்போது ஈரானில் இருந்து வாக்குப் பெட்டி வாங்கிப்போனவன் ஒரு முறைப்பாட்டுடன் வந்தான்.. பத்தாயிரம் பேர் வாக்களித்த நகரத்தில் உங்கள் வாக்குப்பெட்டி இருபதாயிரம் வாக்குகளை கொட்டிவிட்டதென முறைப்பாடு செய்தான். அதையும் கண்காணிப்புக்குழு ஜனநாயகத்தின் வெற்றியாக பதிவு செய்துவிட்டதை சிலர் சுட்டிக்காட்டி அவனைச் சாந்தப்படுத்த முயன்றனர்… ஆனால் அவன் கோபம் ஆறவில்லை.. அணுகுண்டு ஒன்றைத் தடவி எச்சரித்தான்.. கோபம் வேண்டாம் கோமகனே என்றபடி எலக்ரோனிக் வாக்களிப்பு கருவியுடன் கில்லாடிக்கு கில்லாடி வந்தான்… விளக்குமாத்து சின்னத்தில் அழுத்த அழுத்த தும்புத்தடி சின்னத்தில் புள்ளடி விழும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினான்… அவையே கரகோஷத்தில் மகிழ்ந்தது.. ஈரான்காரன் அடுத்த தேர்தலுக்கு ஐந்து இலட்சம் கருவிகள் வேண்டுமென்றான்.. கண்காணிப்புக்குழு அடடா இதுவல்லோ ஊழலே நடைபெறாத தேர்தல் என்றது.. அவர்களின் வெற்று வைன் கிளாசில் யாரோ ஒருவன் ஜனநாயக பிரான்ட் சிகப்பு வைனை ஊற்றிவிட்டுப் போனான்.. ஜனநாயகத்தால் செத்த மண்டையோடுகள் ஐயோ இது எங்கள் இரத்தம் என்ற பாட்டுக்கு ஒரு குத்தாட்டம் போட்டன… அதற்கு இடையில் வந்த யாழ்ப்பாணத்து றப் வரிகள் 99 வீதமும் தேர்தலில் வெற்றியென முழக்கமிட்டன… இடையில் மறுபடியும் பங்களிப்பு என்ற கோலாட்ட ஓசையும் தூரத்தே கோரஸ் ஒலியாக புலம் பெயர் நாடுகளில் இருந்து கேட்டு மறைந்தது.. யாரோ ஒருவர் எழுந்து இராஜினாமா செய்ய எண்ணியதாகவும் இப்போது அதை மீள்பரிசீலனை செய்வதாகவும் அப்பாடலை றீமிக்ஸ் செய்தார்.. அப்போது சபையில் மீண்டும் கரவொலி பிறந்தது.. கணினியில் ஒரு புதிய புறோகிறாமுடன் ஒருவன் வந்தான்… வாக்களிப்பை எண்ணி இதற்குள் போட்டால் புதிய கணக்குகளைத் தரும் என்றான்… அடடா இது பேஷாக இருக்கிறதே… என எல்லோரும் கூத்தடித்தார்கள்… இடையில் ஒரு இன்ரசிற்றி றெயின் ஓடிவந்து கெளித்து நிற்க அதில் எல்லோரும் ஏறினார்கள்.. வேட்டைக்காரனை பகிஷ்கரிப்போம் என்று அதில் ஒரு புதிய திருக்குறள் எழுதியிருந்தது… இன்ரசிற்றி காலத்தில் வேட்டைக்காரன் வர.. அதைப் பகிஷ்கரிக்க… என்ன கோமாளிக்கூத்தடா என்று பிச்சைக்கார மாசிலாமணி யாருக்கோ ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான்.. எல்லோருடனும் இன்ரசிற்றி கிரேக்கம் வந்தது…. ஆகா உலக நாகரிகம் பிறந்த கிரேக்கம் இதுவல்லவா… மரத்தடியில் ஜனநாயகம் பிறந்த மண்ணல்லவா எல்லோரும் அதைத் தொட்டுக் கும்பிட்டனர். அங்கே மக்கள் முதல்முதலாக ஜனநாயக வாக்களிப்பு செய்த மரம் பல்லாயிரமாண்டு பழமையுடன் வானைத் தொட்டு வளர்ந்து நின்றது.. மந்திரவாதிகளையும், வாக்குப் பெட்டிகளையும், கண்காணிப்புக்களையும், ஐ.நா கட்டிடத்தையும் ஒருமுறை சுழன்று சுழன்று பார்த்தது.. ஓவென்று அலறியபடி இன்ரசிற்றிக்கு ஓங்கி அடித்தது… இன்ரசிற்றியின் பெற்றோல் தாங்கி வெடித்துச் சிதறியது.. அத்தோடு பழமைக்கெல்லாம் பழமையான கிரேக்கத்தின் ஜனநாயக மரம் தீயில் பொசுங்கி சாம்பலாகியது… ஐயோ நெருப்பு நெருப்பென்று சங்கரக்குட்டி கத்த மருத்துவத்தாதி மறுபடியும் ஊசியுடன் ஓடி வருகிறாள்… ஆமாம் இது வெறும் கனவு மட்டுமே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக