செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அமைதி காக்க பான் கோரிக்கை

பொன்சேகாவைக் கைது செய்துள்ளதற்கு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அமெரிக்க அரசு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். இவர் முழுக்க முழுக்க ராஜபக்சேவின் ஆதரவாளராக மாறி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் கருத்து தெரிவிக்கையில், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது. அவரது கைது ராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது. அவரது கைது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல். அவர் கைது செய்யப்பட்டுள்ளதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பல தரப்பினருடனும் நான் பேசி வருகிறேன். சில ராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் இந்தக் கைது நடவடிக்கை. அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும். ராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்பது சட்ட விரோதமானது. நள்ளிரவில் ஒருவரை கைது செய்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உலகம் முழுவதிலிருந்தும் இதற்கு கண்டன்ம் எழுப்பப்படும். ஓய்வு பெற்ற ராணுவத் தளபதியை ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது. போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால் சாட்சியம் அளிக்க தயார் என சரத் பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்கு காரணமாக இருக்கலாம் என்றார். இலங்கை பிளவுபடும்- அமெரிக்கா பொன்சேகாவின் கைது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் போர் வெற்றிக்குப் பின்னர் பெரும் பிளவுகளுக்கு வழி ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறோம். அமெரிக்கா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம், ஜனநாயக நெறிமுறைகளுக்கு இடம்கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை தேவையற்ற ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிரீன் கார்ட் வைத்திருப்பவர் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்னஸ்டி கண்டனம்.. லண்டனில் உள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபையான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலும் பொன்சேகா கைதைக் கண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல் படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும். சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை. ராஜபக்சே, தேர்தல் வெற்றியின் பின்னரும் விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும். பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்று அது கூறியுள்ளது. எல்லோரும் அமைதி காக்க வேண்டும்- பான் இலங்கையின் கொடும் போர்க் குற்றங்கள் குறித்து உலகமே காட்டுக் கத்தலாக கத்தியபோதும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் இருந்து வரும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இந்த கைது நடவடிக்கையைக் கண்டிக்கவில்லை. மாறாக அனைவரும் அமைதி காப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பான் கி மூன் கூறுகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக் கூடாது. இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியை கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் முக்கியமானது. தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறினார் பான் கி மூன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக