வியாழன், 18 பிப்ரவரி, 2010

பர்மாவில் பிக்குகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்று மகிந்த எச்சரிக்கை

பெளத்த பிக்குகளின் சங்க சம்மேளனக் கூட்டம் நடத்தப்பட்டால் பௌத்தர்கள் வாழும் பர்மாவில் ஏற்பட்ட சம்பவம் இலங்கையிலும் ஏற்படக் கூடும் எனவும் இந்த நிலைமையில் பௌத்த தேரர்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் அரச தலைவர் மகிந்த நேற்று முற்பகல் மல்வத்தை மாநாயக்க தேரருக்கு அறிவித்திருந்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சங்க சம்மேளக் கூட்டம் நடைபெற்றால் அங்கு புகுந்து பாரிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு பெருமளவிலான பிக்குகள் தயாராகியிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் அரசதலைவர் மகாநாயக்கருக்கு கூறியுள்ளார். பர்மாவில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படாது தடுக்க மாநாயக்க தேரர்கள் முனைப்பு காட்டவேண்டும் எனவும் மகிந்த வலியுறுத்தியுள்ளார். இதனைத்தவிர மேலும் பல பௌத்த தேரர்கள் ஊடாகவும் மாநாயக்க தேரர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்திய மகிந்த, ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் மாநாயக்க தேரர்களின் சங்க சம்மேளனத்திற்கு எதிராக பெருமளவில் ஊடகப் பிரசாரங்களை கடந்த சில தினங்களில் மேற்கொண்டிருந்தார். இந்த நிலைமையில் நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு கண்டி மாமலுவ பிரதேசத்தில் நடைபெறவிருந்த சங்க சம்மேளக் கூட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள மாநாயக்க தேரர்கள், பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள், தலதா மாளிகையின் கௌவரம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு கூட்டத்தை ஒத்திவைத்ததாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக