சனி, 13 பிப்ரவரி, 2010

தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது:

வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தகவல் வழங்குகையில், கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.70 லட்சத்தினை கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வர்த்தகரின் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த அவருடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரின் மோட்டார் வாகனத்தை மறித்துள்ள மேற்படி கப்டன், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அவ்வியக்கத்துடனான தொடர்புகள் குறித்துமான விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்படி கைதினைத் தவிர்க்க வேண்டுமாயின் 70 லட்சம் ரூபாவினை கப்பமாக வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வர்த்தகரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வர்த்தகரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள கப்டன் உரிய பணத்தையும் எடுத்துக்கொண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபரான கப்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கப்டன் கண்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரமுகர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களின் போது பிரதான வீதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார். கைதான இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக