சனி, 13 பிப்ரவரி, 2010

மூளையில் ‘சிப்’?

உலகில் முதல் முறையாக ஒரு வயது சிறுவனுக்கு மூளை அருகே ‘சிப்’ பொருத்தி காது கேட்கும் அறுவை சிகிச்சை செய்து மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: சென்னையை சேர்ந்த சிறுவன் கவுசிக் (2), பிறந்த போதே காதின் உள்நரம்பு இல்லை. லட்சத்தில் ஒரு குழந்தைக்குதான் இதுபோன்ற பாதிப்பு இருக்கும். இதற்கு ‘ஆடிட்டரி பிரெய்ன் ஸ்டெம் இம்பிளான்டேஷன்’ என்ற நவீன அறுவை சிகிச்சையில் தீர்வு காணலாம். ஆனால், இதுவரை 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை உலகில் முதல் முறையாக சிறுவன் கவுசிக்குக்கு செய்ய முடிவு செய்தோம். காதில் உள்நரம்பு இல்லாததால், ‘பல்சா டிவைஸ்’ என்ற ‘சிப்’, மூளையின் அடிப்பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இது காதின் வெளிப்புறத்தில் மாட்டப்பட்டிருக்கும் கருவி மூலம் இயங்கும். சிறுவன் ஒரு வயதாக இருக்கும்போது கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 9 மாதமாக மின்தூண்டல் மூலம் கேட்கும் திறன் பெற பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது கவுசிக்குக்கு முழு அளவில் காது கேட்கிறது. இந்த கருவியின் மதிப்பு ரூ.9.50 லட்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக